Thursday, June 26, 2014

ஒற்றன்

(சொல்வனம் இணைய இதழில் ஒற்றன் குறித்து வெளிவந்த வாசிப்பு கட்டுரை -,நரோபா)

ஒற்றனை சில மாதங்களுக்கு முன்னர் முதல்முறை வாசித்திருந்தேன், பின்னர் அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற விருப்பத்தில் மற்றுமொருமுறை மீள்வாசிப்பு செய்தேன். ஆனால் அப்போதும் எழுத முடியவில்லை. மிகவும் பிடித்திருந்தது என்று சொல்வதை தாண்டி எனக்கு எழுத எதுவுமே இல்லையோ என்று தோன்றியது. அமியின் எழுத்தின் நுண்மைகளை எப்படி விமர்சன கட்டுரையில் கடத்துவது என ஒரு திகைப்பு. வெறும் கதைசுருக்கமாக ஆகிவிடுமோ என்றொரு பயம். மேலும் இதுவே நான் வாசித்த அமியின் முதல் நாவலும் கூட ஆகவே அவருடைய பிற படைப்புகளுடனான ஒப்புமைகளையும் எழுத முடியாது.

அண்மைய சொல்வனம் அசோகமித்திரன் சிறப்பிதழில் வந்த கட்டுரைகளையும் அவருடைய நேர்காணலையும் வாசித்தேன்.

சிறப்பிதழ் கட்டுரைகள் வாசித்தபின்னர் மீண்டுமொருமுறை ஒற்றன் வாசித்தேன். அ.மியின் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக துலக்கம் பெற்றது. குறிப்பாக திலீப் குமாரின் நேர்காணல் அசோகமித்திரனின் உலகிற்கு கச்சிதமான அறிமுகம் என்றே எண்ணுகிறேன். விரிவாக சில மேற்கோள்கள் வழியாக விவாதிக்க வேண்டிய நேர்காணல் அது.

இயல்புவாத எழுத்தாளர் எனும் அடையாளத்தை கடலூர் சீனு அவருடைய அமானுஷ்ய கதைகளை பற்றி எழுதிய கட்டுரை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. அந்த சட்டகங்களை அவர் மீறி செல்லும் புள்ளிகளை தொட்டுகாட்டுகிறது. அசோகமித்திரன் எழுத்து குறித்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்துகள் திலீப்குமாரின் நேர்முகத்தில் சில பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. அவற்றில் எனக்கு நெருடலாக இருக்கும் கருத்துகளை சூட்ட விரும்புகிறேன்: :

“அசோகமித்திரன் தன் எழுத்தில் நாடகீய உச்சங்களையும் அலங்காரங்களையும் தவிர்த்தவர். எளிமையான, இயல்பான தமிழில் கதை சொல்பவர். மிக மென்மையான உணர்வுகளைப் பேசியவர் என்ற காரணங்களுக்காக அசோகமித்திரனை மதிக்கிறார் திலீப் குமார்.

“அசோகமித்திரனின் எழுத்தில் யாருடைய தாக்கமும் இருக்காது. தாக்கம் இருந்தாலும், வடிவ அளவில் எங்காவது இருந்தாலும் இருக்கலாமே தவிர, உள்ளடக்கத்தில் அப்படி எதையும் பார்க்க முடியாது. குறியீட்டுத்தன்மை கொண்ட கதைகளை அவரிடம் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி ஒரு குறியீடு இருப்பதே எழுதி முடித்தபின்னர் எங்காவது தெரிய வரலாம். அப்படி எதுவும் எழுத வேண்டும் என்று வலிந்து முயற்சிக்கவே மாட்டார். எதையும் உரக்கச் சொல்லவே மாட்டார், மௌனத்தில்தான் உணர்த்துவார்”.

அயோவாவில் வசதியான அறையில் குடியிருக்கும் போது மழைகால மெட்ராஸ் அவருக்கு நினைவுக்கு வருகிறது. ‘என் அறையில் எல்லா வசதிகளுடன் சௌகரியமாயிருப்பதே பெரும் பாவம் போலத் தோன்றியது,’ என்று உணர்ச்சி வசபடுகிறார். இப்பகுதிகள் உட்பட நாவலில் சில பகுதிகளை வாசிக்கும் போது, இயல்பானதொரு வேகம் இருப்பது புலப்படுகிறது, சே வுடன் தனது நட்பை விவரிக்கும் பகுதிகள், வாழ்க்கையின் மீது பிடிப்பற்று மரணத்தை பற்றி கனா காணும் பகுதிகள், சாலையில் உறைபனியில் சறுக்கி விழுந்து எவரும் அதை பொருட்படுத்தாத தருணம், கண்ணாடி அறையின் பீரோவில் ஒடுங்கி உயிரை கையில் பிடித்து கொண்டு அமெரிக்க விஜயத்தை எண்ணி மறுகும் தருணம், என சிலபகுதிகளில் பொதுவாக அவருடைய எழுத்துடன் அடையாளபடுத்தபடும் இயல்புகளை மீறி ஒருவித கட்டற்ற பெருக்கு வெளிபடுவதாக எண்ணுகிறேன்.

a.mi[படம் : திரு. சேது வேலுமணி]

அமி தன் அனுபவ வட்டத்திற்கு அப்பால் எதையும் மிகைபடுத்தி சொல்வதில்லை என்பதொரு பரவலான நம்பிக்கை. ஒற்றனின் முதல் அத்தியாயத்தில் விமானத்திற்காக லவுஞ்சில் காத்திருக்கும் சித்திரம் வரும். ‘லவுஞ்சு ஒரு ராட்சச திமிங்கலத்தின் உட்புறம் போலிருந்தது. நான் திமிங்கலத்தின் உட்புறத்தை பார்த்ததில்லை. ஆனால் ஏனோ அப்போது திமிங்கலத்தின் நினைவு தான் வந்தது’ என்று எழுதுகிறார். மிஸ்ஸிசிப்பி நதியை படகில் கண்ட போது ‘அக்கரையே தெரியாத மிஸ்ஸிசிப்பி ஆறு அங்கிருந்து சிறிது தொலைவில் தெரிந்தது. அக்கரை தெரியாததற்கு இன்னொரு காரணம் ஆற்றுப் பரப்பைப் பனிப்படலம் மூடியிருந்தது.’ சட்டென்று கற்பனை வீச்சில் ஒன்றை சொல்லிவிட்டு அதற்கடுத்தகனம் தான் எதையோ மிகையாக சொல்லிவிட்டோமோ எனும் பிரக்ஞை எழுந்து, அதை தர்க்கப்படுத்திகொள்ள முயல்கிறார்.

குறியீடுகளை வலிந்து முனைந்து உருவாக்குவதில்லை என்பதும் அவருடைய படைப்புக்களை பற்றி சொல்லப்படும் மற்றொரு கருத்து. நாவலின் இறுதி அத்தியாயத்தில் ஊர் திரும்புவதை பற்றி எழுதுகிறார். ‘நெடுங்காலப் பழக்கம் காரணமாகப் பார்த்து அல்லது கேட்ட மாத்திரத்தில் நான் அறியக்கூடும் பறவைகள் அல்ல அவை. சில மாதங்களே அவற்றை கேட்டிருக்கிறேன். ஓரிடத்தின் உயிரினங்களை அறிய சில மாதங்கள் போதுமா? ஒருவேளை போதுமோ என்னவோ, நான் அப்பறவைகளின் பெயர்களை அறிய முயன்றதில்லை. ஆனால் நிறையக் கூர்ந்து கேட்டிருக்கிறேன். அவை என்ன சொல்ல முயல்கின்றன என்று கூட அவ்வப்போது தெரிய வருவதாகத் தோன்றிற்று.” ஏதோ ஒருவகையில் அயோவாவின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இவ்வரிகளுக்குள் கடத்தி செல்கிறார் என்றே எண்ணுகிறேன். இதுவுமே கூட துருத்திக்கொண்டு நிற்கவில்லை. இயல்பாக பொருந்திபோகிறது. ஒரு படைப்பாளியின் இயங்கு தளத்தை அப்படி எளிய வாய்ப்பாடுகளாக சுருக்கிவிட முடியாது என்பதற்கு இவை சில உதாரணம்

மேலும், நாடகீய தருணங்கள் எத்தனைக்கு எத்தனை நுட்பமாக, அதிக இரைச்சல் இன்றி சித்தரிக்கபடுகிறதோ அத்தனைக்கு அத்தனை கூர்மையாக இருக்கும் என்றொரு நண்பர் பகர்ந்தது நினைவுக்கு வருகிறது. இது அனைவருக்கும், எல்லா தருணங்களுக்கும் பொருந்தும் விதி அல்ல. ஏனெனில் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் நாடகீய தருணங்களை நாம் அனைவரும் ஒரேபோல் எதிர்கொள்வதில்லை. ஹெமிங்வே பாணி எழுத்து இவருடையது என விமர்சகர்கள் சூட்ட கேட்டிருக்கிறேன். கிழவனும் கடலும் மொழியாக்கம் நாவலை வாசிக்கும் போது அனிச்சையாக நினைவுக்கு வந்தது. ஆனால் மினிமலிஸ்ட் எழுத்து பாணி என்பதை தாண்டி பெரும் ஒற்றுமைகள் ஏதுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அதற்கான காரணம் அவர்களுடைய ஆளுமையில் இருக்கலாம். ஹெமிங்வே ஓர் ஆர்பாட்டமான எழுத்தாளர், அமி அதற்கு நேர்மாறான நிறைவும் அமைதியும் கொண்டவர்.

அசோகமித்திரனின் படைப்புலகத்தை அறிமுகம் செய்யும் சில மேற்கோள்கள்கள் திலீப் குமாரின் நேர்காணலில் இருந்து சூட்டுவது அவசியமாகும்.

“அசோகமித்திரன் துவக்கத்திலிருந்தே தடுமாற்றம் இல்லாமல் எழுதி வருகிறார். ஆரம்ப நாட்களில் இருந்தே சக மனிதர்கள் மீதிருக்கும் அக்கறை அப்படியே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. யாரையும் அலட்சியப்படுத்த மாட்டார். இந்த இயல்பு அவரது கதைகளிலும் வெளிப்படுகிறது. ஒரு கருணையுடன்தான் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும், கழிவிரக்கமே இல்லாமல் அனைத்தையும் சொல்ல வேண்டும், இன்னொரு மனிதனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறார். அவரது இன்சைட்டே அப்படிதான் இருக்கிறது.

“வாழ்க்கையை கண்ணியமாக எதிர்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்ற கேள்வி அவருக்கு முக்கியமான ஒன்று. தன் கண் முன்னால் இருக்கும் ஒருத்தர் படும் கஷ்டங்களைப் பேசும்போதும், அவர் அந்தக் கேள்வியைத்தான் கேட்டுக் கொள்கிறார் – இந்த நிலைமை நமக்கு வந்தால் நாம் இவர்கள் அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வோமா என்று.”

Asoka_Mitran_Books_Novelotran

இம்மேற்கோள்கள் எனக்கு ஒற்றனை மற்றுமொரு கோணத்தில் திறந்து காட்டியது. சக மனிதர்களின் மீது, குறிப்பாக வெளிச்சம் படாமல் ஒண்டி வாழும் மனிதர்களின் மீதும் கூட அக்கறையும் வாஞ்சையும் தான் அமியின் படைப்புலகம். இப்படி சுருக்குவது ஆபத்தானது தான் ஆனால் இது மிக முக்கியமான பார்வை. அந்த அக்கறை தான் எவருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் தென்னமெரிக்க கவிஞன் வெண்டுராவுடன் நட்பு பாராட்ட வைக்கிறது, அவனுக்காக ‘அவனுடைய ஊரில் அவன் மிகவும் புகழ்பெற்ற கவிஞனாக இருக்கக்கூடும். எப்போதும் அவனை சுற்றி பத்து பேர் இருந்துகொண்டு பேசி சிரித்து உற்சாகமாக இருக்கக்கூடும். இங்கே அவனுக்கு கிடைத்ததெல்லாம் நான்தான்’ என்று கவலையடைய வைக்கிறது, அவன் எடுக்கும் வாந்தியை சுத்தபடுத்த வைக்கிறது. கே மார்ட் கடையில் வாங்கி திருப்பிகொடுத்த அந்த பாழாய் போன தட்டச்சு இயந்திரம் வேறு எவரையும் சென்று சேர்ந்திட கூடாது என்று விசனப்பட வைக்கிறது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த வாஞ்சை அவருக்கு நன்மை செய்வதில்லை. எவரிடமும் நட்பு பாராட்டாத அபே குபெக்னாவை அவரிடம் கொண்டு சேர்த்து மூக்கில் குத்துப்பட வைக்கிறது. எளிய மனிதர்களின் மீதான அக்கறை தான் அவரை பீதியுடன் கண்ணாடி அறையில் ஓர் இரவை கழிக்க வைக்கிறது.

அண்மையில் அமெரிக்க கவிஞர் ஆடனின் மறுபக்கம் பற்றி ஒரு அற்புதமான கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ஆடனின் மனிதாபிமானத்திற்கு எடுத்துகாட்டு. ஆடனின் நுண் உணர்வுக்கும், சக மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்கும் மிகச்சிறந்த சான்று. அக்கட்டுரையில் ஒரு நிகழ்வை சூட்டுகிறார்.

இலக்கியச் சந்திப்புகளில் அவர் பேராளுமைகளிடமிருந்து தப்பி, அறையில் உள்ளவர்களில் மிகவும் எளிய நபரைத் தேடிச் சென்று சந்திப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு டைம்ஸ் ஆஃப் லண்டன் இதழில் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து கடிதம் எழுதினார்:”அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், என் ஆங்கில ஆசிரியர் கிராமப்புறத்தில் இருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்ன ஒரு இலக்கியக் கூடுகைக்காக லண்டன் அழைத்து வந்தார். அங்கே சென்றதும் அவர் என்னைத் தனியாக விட்டுவிட்டு தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்று விட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு நாகரிகம் தெரியாது, நளினமாக நடந்து கொளத்த தெரியாது. என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல் அங்கிருந்தேன். ஆடன் என் நிலையை உணர்ந்திருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து, ‘இங்கிருக்கும் எல்லாரும் உன்னைப் போன்ற தடுமாற்றத்தில்தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஏய்க்கிறார்கள். நீயும் ஏய்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.”

இந்நிகழ்வு எனக்கு அமியை நினைவுபடுத்தியது. ஒற்றனில் அயோவா சிட்டியில் உதவிக்கு அமர்த்தப்பட்ட மாணாக்கன் தான் பர்ட். சமூக அந்தஸ்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கபெற்ற விருந்து ஒன்றில் ஒரு மூலையில் அவனும் அவன் நண்பனும் ஒடுங்கிகிடக்கிறார்கள். பர்ட் கொஞ்சம் கவிதையும் எழுதுவான், ஆனால் இத்தகைய இளம் கவிஞர்கள் கவனம் அடைவது அத்தனை எளிதல்ல. அவனிடம் அவ்விருந்தில் வேலை மெனக்கெட்டு அந்தரங்கமாக கவிதையை பற்றி விவாதிக்கிறார். படைப்பாளிகள் எளிய மனிதர்கள் தான், அவர்களுக்குள் அசூயை இருக்கும், கோபமும், கொந்தளிப்பும், உணர்ச்சி பெருக்கும் இருக்கும். இந்த சமநிலையும் அக்கறையும் படைப்பளிக்கும் உதார குணங்களா என்று தெரியவில்லை, எதையுமே எழுதவில்லை என்றாலும் கூட இவர்களுக்கு இவ்வக்கறை இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் நுணுக்கமாக பின்தொடர்கிறது அவருடைய மனம். சிறு சிறு சங்கடங்களையும் கவனிக்கிறது. வரிசையில் நிற்கும் பெண்ணின் காலத்தால் பிந்திய புகைப்படம் அவளுக்கு எழுப்பும் சங்கடத்தை உணர்த்துகிறார். ‘எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணை பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்ப படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்.’ எத்தனையோ வகையான மனிதர்கள் அமியை நம்புவதும் நட்புடன் அணுகுவதும் நாடுவதும் ஏன்? பொதுவாகவே அவருக்கு இருக்கும் இந்த அக்கறையும் அன்பும் தான் காரணம் என்று தோன்றுகிறது. எவருடனும் ஒட்டாமல் இருக்கும் பெரு நாட்டு எழுத்தாளர் பிராவோவுடன் நட்பாக இருக்க முடிகிறது. சாதாரண உதவியாளனாக இருக்கும் பர்ட்டுடன் நட்பு பேண முடிகிறது. போலந்து விமர்சகன் வபின்ஸ்கி பற்றி ‘எப்போதும் தனியனாகத்தான் இருப்பான் என்று பிற போலந்து எழுத்தாளர்கள் கூறுவார்கள். ஆனால் அயோவா சிட்டியில் அவன் பெரும்பாலும் என்னுடனேயே இருப்பான்.’ இப்படி சொல்கிறார் அமி. “நீ ஒருவன் தான் நாங்கள் ஆங்கிலம் பேச முயலும் போது எங்களை சங்கடபடாமல் இருக்கும்படி காதுகொடுத்து கேட்கிறாய்” என்கிறார் ஒரு தென்னமெரிக்க எழுத்தாளர்.

oOo

பதினான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த சிறுநாவல், நாவல் எனும் வடிவில் மிக முக்கியமான முயற்சி. அசோகமித்திரன் தன்னுடைய முன்னுரையில் இதை எவ்வகை புதினமாக அடையாளபடுத்துவது எனும் தன்னுடைய குழப்பத்தை பதிவு செய்கிறார். இந்த புதினம் ஒரு களம், ஒரு நாயகன், ஒரு காலகட்டத்தில் இயங்குவதால் நாவலே இதற்கு நெருக்கமான வகைப்பாடாக இருக்கும் என்கிறார். தன்னளவில் ஒவ்வொரு பகுதியுமே சிறுகதைக்குரிய நேர்த்தி கொண்டவைதாம். ஆங்கில பத்திரிக்கைக்கு பயனகட்டுரையாக இவர் எழுதி அனுப்பிய பகுதி தவறுதலாக சிறுகதை எனும் தலைப்பின் கீழ் வெளியான வகையில் உருவானது தான் ஒற்றன் என்றும் பதிவு செய்கிறார் அசோகமித்திரன். ஆக நாவல், சிறுகதை, பயண/அனுபவ பதிவு என எப்படியும் வாசிக்க இடமுண்டு. என்னளவில் நான் வாசித்தவகையில் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மற்றும் அண்மையில் ஜெயமோகன் இணையதளத்தில் வாசித்த புறப்பாடு தொடர் ஆகியவைகளை இதே வகைபாட்டிற்குள் கொண்டுவரலாம் என தோன்றியது.

அசோகமித்திரனின் இந்நாவலில் ஒரு மெல்லிய அங்கதமும் ஏதோ ஒரு இழப்புணர்ச்சியும் அடிநாதமாக ஓடிக்கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு புகைப்படம் காலமாற்றத்தை சொல்லிவிடுகிறது. எத்தனையோ விஷயங்களின் சாட்சியாகவும் மாறிபோகிறது. ஏழு வருட காலத்தில் புயலும், வெள்ளமும், இழப்புகளும், மரணமும், அன்பும் கோபமும் வந்து போவது போல் ரேஷன் கார்டு தொலைந்துவிடுகிறது, கழுத்து சுளுக்கி கொண்டுவிடுகிறது. எத்தனை பிரம்மாண்டமான விஷயங்களுடன் அத்தனை முக்கியமற்ற நிகழ்வுகளும் கடந்து போகின்றன. அமி இப்படி சொல்வது அவருடைய எழுத்தின் இயல்பு. வாழ்க்கையின் சிறு சிறு சலனங்களையும் கவனிக்கிறார். நினைவுகூர்கிறார். ஷூ வாங்கிபோனதை, பேருந்துக்காக பதைபதைப்புடன் காத்திருந்து சரக்கு வண்டியில் ஏறியதை, பேனா கடிகாரம் தொலைந்து தேடியதையும் வெகு நுட்பமாக பதிவு செய்கிறார்.

அன்னிய தேசத்தில் வசிக்கும் ஒருவர் சந்திக்கும் இரு முக்கிய பிரச்சனைகள் என்று உணவையும் வீட்டு நினைவுகளையும் குறிப்பிடலாம். எழுபதுகளில் தொலைபேசி என்பது எத்தனை அபூர்வமானது. தன் வீட்டிற்கு தொலைபேச முயலும் அனுபவத்தை சொல்கிறார். ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சாக தொடர்பு கிட்டி இறுதியில் அயோவாவில் பேசும் வாய்ப்பு கிட்டும் போது ‘ஹலோ, நீதானா..?’ என்று மாறி மாறி கேட்டுகொண்டிருப்போம் என்கிறார். அமிக்கு கைவரும் இருண்ட நகைச்சுவைக்கு இது ஓர் நல்ல உதாரணம்.

பூண்டு, இலாரியா, ஒற்றன், மகா ஒற்றன், கண்ணாடி அறை ஆகிய அத்தியாயங்கள் மேலான வாசிப்பனுபவத்தை எனக்களித்தது. அமியின் எழுத்துக்களில் மெல்லிய நீரோட்டமாக ஒருவித நகைச்சுவை ஓடிக்கொண்டே இருப்பதை உணர முடிகிறது. அதிர்ந்து சிரிக்க இயலாத, விளக்கவும் முடியாத, ஒரு புன்னகை மனதிற்குள் விரிகிறது. ஜிம் பார்க்கரின் வீட்டை தேடி செல்கிறார். அவரை ஒரு மெதடிஸ்ட் பாதிரியாரின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். ‘நான் கிறிஸ்தவ மதத்தில் சேருவதற்கு இன்னும் என்ன தயக்கம் என்று கேட்டார். நான் ஜிம் பார்க்கர் முகவரியை கொடுத்து, “இந்த இடத்திற்கு எப்படி செல்வது?” என்று கேட்டேன்” என்று எழுதுகிறார். எழுத்தாளர்களை ஒரு விழாவில் பாட சொன்ன போது குத்துமதிப்பாக தமிழ் மொழியின் எழுத்துக்களைதான் ராகம் போட்டு பாடுகிறார்.அதையே தான் அவருடைய தோழரும் செய்கிறார்.

பூண்டு, அம்மாவின் பொய்கள் ஆகிய இரண்டு அத்தியாயமும் உணர்ச்சிபூர்வமான முடிவுகள் கொண்டவை. அபேயிடம் குத்துபட்டபோது கூட கோபப்படாத டகராஜான் (அப்படித்தான் ஜப்பானிய கஜுகோ அழைக்கிறார்) சூசியின் கணவரின் கொலைவெறிக்கு பயந்து பதுங்கி உயிர்பிழைத்து வந்த போது தான் கோபப்பட்டு ஜிம் பார்க்கரை பிடித்து உலுக்குகிறார்.

பெரு நாட்டு எழுத்தாளன் பிராவோ ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை உருவாக்குகிறான். தன்னுடைய நாவலின் முக்கிய பாத்திரங்கள், எதிர்கொள்ளும் முக்கிய கட்டங்கள் என அத்தியாய வாரியாக வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த நாவலையும் தன்னுடைய வரைபடத்திற்குள் அடைக்கிறான். அவனுடைய மகத்தான சாதனையை கண்டு வியக்கிறார். அடுத்த அத்தியாயம், ஏன் அடுத்தவரியை கூட தன்னால் திட்டமிட முடியாத போது, இப்படி ஒருவன் இலக்கியத்தை துல்லியமான தொழில்நுட்பமாக மாற்றி வைத்திருக்கிறான் என்று வியக்கிறார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், இறுதிவரை அவனால் அந்த நாவலை முடிக்கவே முடியவில்லை. அதற்கு பின்னரும் பல நாவல்களை எழுதியிருக்கிறான். படைப்பூக்கம் குறித்து மிக ஆதாரமான கேள்வியை இப்பகுதி எழுப்புகிறது.

மகா ஒற்றன் அத்தியாயத்தில் ‘கலாச்சார வேறுபாடுகள் மனித உறவுகளில் எப்படி விளைவுகள் ஏற்படுத்திவிடுகின்றன என்று துக்கபட்டுக் கொண்டிருந்தேன்.’ என்று எழுதுகிறார். இந்தநாவளின் சாராம்சமும் கூட இது தான் என தோன்றுகிறது. ‘பூண்டு’ அத்தியாயத்தில் சே எனும் கொரிய நண்பருடன் அறையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த அனுபவமும் இதே சிக்கலை தான் கையாள்கிறது. உக்கிரமான பூண்டு நெடிக்காக தொடக்கத்தில் கொபப்படுகிறார், சே உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் கொட்டிவிட்டு அம்மாவின் மரண செய்திக்காக காத்திருக்கிறான். எந்த பூண்டு பெரும் இடைஞ்சலாக இருந்ததோ, அதன் நெடி அப்போது அவருக்கு பழகி இருந்தது. காப்பியில் அடிக்கும் பூண்டு நெடிகூட பழகிவிட்டது. அதை நல்ல ஔடதம் என்று கூட நம்ப தொடங்கினார். ஒரு நுட்பமான மனமாற்றத்தை இதனூடாக சொல்லி செல்கிறார்.

“அசோகமித்திரனைப் படிக்கும்போது, சென்ற தடவை படித்தபோது எதையோ தவற விட்டுவிட்டோம் என்ற உணர்வோடு படிக்க நேர்கிறது. அவரை மீள்வாசிப்பு செய்யவும், அவரைப் புதிதாகக் கண்டடையவும் ஒரு வாய்ப்பு அவரது எழுத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.”

என்று திலிப் குமார் சொல்கிறார். அதை நினைவுகூர்ந்து இந்தக் கட்டுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும். இன்னும் கூட இந்நாவலை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது எனும் உணர்வே இறுதியில் மேலிடுகிறது.


No comments:

Post a Comment