(காந்தி இன்று தளத்தில் வெளியான எனது தமிழாக்கத்தின் மீள்பதிவு)
(Decolonization and Development – Hind Swaraj Revisioned எனும் மகரந்த் பரஞ்சபேயின் முக்கியமான நூலில் ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரையின் மொழியாக்கம்)
ஹரிலால்- உங்களை தீவிரமாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம்தான் என்ன? சொல்லுங்கள்..
காந்தி (மவுனம்)
ஹரிலால்- (வலியுறுத்தும் விதமாக) நீங்கள் சொல்லித்தானாக வேண்டும், ஏனெனில் அந்த கேள்விக்கான விடையை அறிய வேண்டியே நான் என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்..
காந்தி- என்னை நீ பெரிதாக பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை.
ஆஷிஸ்- இது இந்தக் கேள்விக்கான விடையல்ல.. அவர் உங்களை தீவிரமாக பொருட்படுத்த வேண்டும், ஆனால் அவரால் அப்படி செய்ய இயலாது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும்
காந்தி – ஏன்?
ஆஷிஸ்- ஏனென்றால் அவர் உங்கள் மகன். அவர் உங்களை எதிர்த்தாக வேண்டும். பிள்ளைகள் எப்போதும் தங்கள் அப்பாக்களைக் கொல்கின்றனர். ஆனால் அப்பாக்களைக் குறித்து இறுக்கமான, நிலையான பிம்பம் ஒன்றை இலக்காக வைத்துக் கொள்ள முடிந்தால்தான் அதைக் கலைக்கவும், தகர்க்கவும் கூட இயலும்.
காந்தி- ஆனால் அவனை நான் என் மகனல்ல என்று துறந்துவிட்டேன். அவன் என் மனதை நோகடித்துவிட்டான். ஒரு பாபியின் வாழ்வை வாழ்ந்தான்.
ஆஷிஸ்- மகன்கள் தந்தைகளின் மனதை நோகடிப்பது இயல்பானதே... அவர்கள் எதிர்த்துதான் ஆக வேண்டும். ஆனால் கலகக்காரர்கள் எப்போதுமே அமைதியாக இருக்கப் போவதில்லை. காந்திய உலக பார்வை எதிர்க்கப்படும்போது, ஹரிலால் மிக முக்கியமான தரப்பைப் பற்றி பேசக்கூடும். அதை அவர் சற்று அரைகுறையாக சரிவர செய்யாமல் போகலாம், ஆனாலும் அவருள் உங்கள் உலகப் பார்வைக்கு மாற்றான வலுவான அறிவுதள விவாதம் எழுவது சாத்தியம்தான்.
காந்தி – மது, மாது, மாமிசம் – இவைகள் எதையும் நமக்கு சொல்லாது. ஆனால் இவைதான் அவனுடைய பொறுக்கித்தன கலகம். இதை நீ கலகம் என்று அழைப்பாயா? அதன் மேற்பரப்பிற்கு அப்பால் அதற்கு வேறு ஏதும் பொருள் இருக்கிறதா என்ன?
ஆஷிஸ்- உங்கள் ஒழுக்கவிதிகளின் உலகை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அது தெரிவிக்கிறது. அவரால் உங்களுக்கு புரிகின்ற மொழியில் உங்களிடம் சொல்ல இயலாமல் இருக்கலாம், கொஞ்சம் அங்கேயும் இங்கேயுமாக அரைகுறையாக அவர் உங்களுடன் உரையாட முற்பட்டிருக்கலாம். ஒரு தலைமுறையையே வளர்த்து எடுத்தவர் எனும் வகையில், அவர் சொல்ல வருவதை பொருள் விளக்கிக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு ஆகும். நீங்கள் கடுமையாக எதிர்ப்பீர்கள் என்றறிவேன், ஆனால் என் பிரிய மகாத்மாவே, நீங்கள் சிந்திக்கக் கூடியவர். ஆனால் ஹரிலால் அப்படியல்ல. நீங்கள்தான் அவருடைய குரலாகவும் ஒலிக்க வேண்டும். அல்லது உங்கள் சகோதரர்களுக்கு (இங்கு உங்கள் மகனுக்கு) நீங்கள் பொறுப்பாக முடியாது என வாதிடப் போகிறீர்களா?
ஹரிலால்- (கோபமாகவும் பிடிவாதமாகவும்) நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என புரியவில்லை. என் தந்தை ஒரு போலியான மகாத்மா என்பது மட்டுமே எனக்கு தெரியும். என்னிடம் பல குறைபாடுகள் உண்டு, ஆனால் என்னிடம் போலித்தனம் கிடையாது. நான் என்ன செய்கிறேனோ அதை எல்லோர் முன்னும் எவரையும் ஏமாற்றாமல் செய்கிறேன். மறுபுறம், என் தந்தை ஒன்றும் அத்தனை நேர்மையானவர் அல்ல.
ஆஷிஸ்- மேலும் விளக்கவும்...
ஹரிலால்- எனது தந்தை தன்னை ஒரு துறவி என்று பிரகடனப்படுத்திக் கொள்கிறார். ஆனால் அவர் எந்தெந்த தீமைகளை எதிர்த்து போராடினாரோ அவைகளுடன் சமரசம் செய்துகொண்டார். அவருடைய அகிம்சை லிபரல் அரசை எதிரியாக கொண்டதால் பலனளித்தது, ஆனால் அவர் அதை சர்வரோக நிவாரணியாக அறிவித்தார். அவர் தன்னை பிரம்மச்சாரி என்று அழைத்துக் கொண்டார். ஆனால் அதை நிரூபணம் செய்ய, தனது நெருங்கிய சொந்த பந்தங்களுடனான பாலியல் பரிசோதனைகள் அவருக்குத் தேவையாய் இருந்தன, தன்னைச் சோதனைக்குட்படுத்த அவரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர்கள் அதற்கு பயங்கரமான விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற சாத்தியம் இருந்தும். அரசியலிலும் அவர் துறவியாக அறியப்பட்டவர்தான், ஏனெனில் வெகு சிலரே அவருடைய அரசியல் சாமர்த்தியத்தைப் பற்றி அறிந்திருந்தனர். முப்பதுகளில் சுபாஷ் சந்திர போஸை எப்படி காங்கிரசின் தலைமை பதவியிலிருந்து விரட்டியடித்தார் என்பது நினைவில் இருக்கிறதா?
இவை எல்லாவற்றையும்விட, நவீனத்துவ உலக பார்வைக்கு நேரெதிரான உலகப் பார்வையை விற்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை மறக்க கூடாது. எவ்வித சிரமமும் இன்றி, வலி ஏதும் இன்றி அலுங்காமல் குலுங்காமல் கடந்த காலத்து பொன்னுலகிற்கு மக்களைத் தன்னால் அழைத்து சென்றுவிட முடியும் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினார். அவர் சொல்வதை கேட்டு, நுகர்வு கலாசாரத்தையும் வரையரையற்ற கேளிக்கை வாழ்வையும் அனைவரும் விட்டுவிடப் போவதாக அவருக்கு ஒரு நினைப்பு. ஆனால் அவரேகூட அக்காலகட்டத்திய ரசனைகளுடனும், பெருந்திரள் அரசியலின் தேவைகளுடனும், ஊடகங்களுடனும், அதி நவீனர்களான ஜவகர்லால் நேரு போன்றவர்களுடனும் பலமுறை சமரசம் செய்துகொண்டவர்தான்.
காந்தி – நான் ஒழுக்க விதிகளை நிலையாகக் கடைபிடித்து வாழவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் அதற்கு முயன்றேன், ஆனால் அம்முயற்சியில் தோற்று விட்டேன். ஹரிலால், நீ சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆஷிஸ்- (பொறுமையின்றி காந்தியிடம் கூறுகிறார்) நீங்கள் எளிதாக விட்டுக் கொடுக்கிறீர்கள். நீங்கள் காந்தியாகவே இருந்தாலும்கூட, நீங்கள் சிறந்த காந்தியர் அல்ல. அப்படி இருக்க வேண்டும் என்பதும் இல்லை. மானுடத்திற்கு எதிரான நிலைபாடுகளை காட்டிலும் போலித்தனம் மேல். அடுத்த தலைமுறைக்கு அவசியமான அற மதிப்பீடுகளை போலித்தனம் உயிர்ப்புடன் வைக்கிறது, ஆனால் மானுடம் மீதான வெறுப்பு அதையும் கூட செய்வதில்லை. காந்தியம், இந்த சொல்லை கொஞ்ச நேரம் பயன்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள் மகாத்மா, காந்தியம் என்பது உங்களை மீறி, உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமாக விரியும் வாழ்க்கை நோக்கு. மனிதாபிமானமுள்ள உலகத்திற்கான வரைமுறையற்ற வளர்ச்சியை, முன்னேற்றத்தை, அனைத்தையும் பகுக்கும் அறிவியலை, அதீத ஆணாதிக்கத்தை விமரிசனத்துக்குள்ளாக்கும் ஒரு சமூகத்திற்கான, மானுட குலத்தின் தொடர் தேடலின் ஒரு பகுதி. இன்னும் சொல்வதனால், மகாத்மாவின் முக்கியத்துவமேகூட இக்காலகட்டத்தில் வெகுவாக குறைந்துவிட்டதாக ஒருவர் தர்க்கம் செய்ய இடமுண்டு.
காந்தி- (அதிர்ச்சியுடன்) இது உண்மையாக இருக்க முடியாது. நான் வாழ்ந்த வாழ்க்கை எனது சிந்தனைகளுக்கான கருவி மற்றும் அவைகளைக் கொண்டு சேர்க்கும் வாகனம் என்றே நான் எப்போதும் நம்பியிருக்கிறேன். நீ ஒரு வங்காளி. நான் வங்காள மொழியில் எழுதிய ஒரே உருப்படியான வாக்கியம் என்பது ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என்பதுதான்.
ஹரிலால்- (அவருடைய தந்தையை நோக்கி வேகமாக) – ரிச்சர்ட் கிரேனியரின் புகழ் பெற்ற கட்டுரையின்படி- அது ஒரு மோசமான செய்தி, ஏனெனில் உங்கள் வாழ்க்கையே பிழைகளால் ஆனது.
ஆஷிஸ்- கிரேனியரை மறந்துவிடுங்கள். கிரேனியரின் வாதத்தின்படி, பிளாடோ ஓரினசேர்க்கைக்கு ஆதரவாக இருந்தார், இளம் சிறார்களை எப்படி இம்சிப்பது என்பதற்கான வழிமுறைகளை வகுத்திருக்கிறார் என்பதற்காக பிளாட்டோவின் கொள்கைகளை பொருட்படுத்தக் கூடாது என்கிறார். பிளாட்டோ அவருடைய கொள்கைகளை துல்லியமாக கடைபிடித்தவர் என்று கிரேனியர் கருதுகிறாரா? அல்லது அப்படி கடைபிடித்திருந்தால்தான் அவரை பொருட்படுத்தி வாசிக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்குகிறாரா? குழந்தைகளை கொடுமையாக நடத்திய மில்டனையும் பீத்தொவனையும் நாம் பொருட்படுத்துவதா வேண்டாமா? அல்லது அவர்களுடைய கலை கலப்படமானது என புறந்தள்ள வேண்டுமா? அடிமைகளை வைத்திருந்த தாமஸ் ஜெஃபர்சன்னை என்ன செய்வது? ஜனநாயக அரசாங்கத்தைப் பற்றி அவர் எழுதிய அற்புதமான கட்டுரைகளை ஏற்றுகொள்வதா வேண்டாமா? தால்ஸ்தாயின் வாழ்க்கை அவருடைய எழுத்திற்கும் அவர் நம்பிய வாழ்க்கை தத்துவத்திற்கும் சரியான உதாரணம் அல்ல, ஆகவே கிரேனியர் தால்ஸ்தாயை அப்படியே எளிதாக ஒதுக்கிவிடுவாரா?
கிரேனியர் இருவேறு அளவுகோல்களை பின்பற்றுகிறார். வெள்ளையர்களுக்கு ஒன்றும், கறுப்பர்கள் மற்றும் பிற நிறத்தவர்களுக்கு ஒன்றும்.
காந்தி – நீங்கள் சொன்னது போல், நான் ஒன்றும் சிந்தனையாளன் எல்லாம் இல்லை. ஆனால் என்னுடைய பார்வையில், வாழ்வுக்கும் எண்ணங்களுக்கும் இடையில், வாழ்வுக்கும் அரசியலுக்கும் இடையில், ஏதோ ஒரு தொடர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது. ஆக பிளாட்டோவிற்கு நீங்கள் பொருத்தும் விதிமுறைகள் எனக்கு பொருந்தாது. எனது வாழ்க்கைக்கு நான் பொறுப்பேற்க வேண்டும். ஹரிலால் சொல்வதும் நீங்கள் குறிப்பிடும் அமெரிக்க விமர்சகர் சொல்வதும் சரிதான். இப்போது யோசிக்கும்போது, என்னுடைய எண்ணங்களில் அடிப்படையிலேயே ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.
ஆஷிஸ்- உங்கள் நிலைப்பாடுகளுக்காக சடாரென்று உள்சுருண்டு உங்களை காத்து கொள்வது எனக்கு அலுப்பை தருகிறது. உங்கள் உருவகத்தின் தூய்மை எங்கள் தலைமுறைக்கு ஒரு பொருட்டேயல்ல, தாத்தா. எங்கள் உலகத்துடன் போராடி வாழ்வதைப் பற்றியே நாங்கள் கவலை கொள்கிறோம். உங்கள் தனி வாழ்வில் உள்ள அசலான அல்லது கற்பனையான முரண்களை ஏற்றுகொள்வதெல்லாம் எங்களுக்கு தேவையற்றது. எங்கள் தந்தையர்களின் தலைமுறையில், பி.ஆர்.நந்தா போன்ற பல ஆளுமைகள் அதைச் செய்ய பல பத்தாண்டுகளாக முயன்றுள்ளனர்.
எங்களுக்கு இதில் தேவையானதைப் பற்றி பேசுவதாக இருந்தால், நீங்கள் பிரதிநித்துவம் செய்த சக்திகள் உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமானவை எனும் வாக்கியத்துடன்தான் தொடங்க வேண்டும். மேலும், நீங்கள் அடையாளப்படுத்திய, எதிர்பார்த்த எதிரிகள் முன்பை காட்டிலும் எப்படியோ பூதாகாரமாக வளர்ந்து நிற்கிறார்கள். இந்த போராட்டத்தில், உங்கள் திட்டமிடல்கள், உங்கள் எண்ணங்கள், சர்ச்சைக்குரிய உங்கள் வாழ்க்கை ஆகிய அனைத்துமே ஒரு மகத்தான வழிகாட்டி நூலாக திகழ்கின்றன. எங்கள் தேவைகளுக்கு ஏற்ப உங்களை வாசிக்கும் உரிமையை நாங்கள் எங்களுடனே வைத்திருக்கிறோம். அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் இருந்து கிழக்கு ஐரோப்பா வரை, எங்கெல்லாம் உங்களை கவனமாக வாசித்திருக்கிறார்களோ, மணிலாவிலிருந்து ரங்கூன் வரை, அத்தனை ஆழமாக பொருட்படுத்தவில்லை என்றாலும் கூட, ராணுவ தோட்டாக்களை எதிர்நோக்கும்போது கையில் உங்கள் பெயர் பொருந்திய பதாகைகளை தாங்கி மக்கள் எங்கெல்லாம் நிற்கிறார்களோ, அந்த எல்லா இடத்திலும் ஒரே கதைதான்.
ஹரிலால் – உங்கள் வாதம் முழுமையடையவில்லை ஆஷிஷ். நந்தா உங்கள் தந்தையர் தலைமுறையை சேர்ந்தவர் எனும்போது, நானும் அதே தலைமுறையை சேர்ந்தவன் ஆகிறேன். நந்தாவின் காந்திய வாசிப்பிற்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறதோ அதேயளவு எனது வாசிப்பிற்கும் உண்டு. ஒரு மகனாக இன்னும் நெருக்கமாகவே அவரை நான் அறிவேன். இந்த மனிதரைப் பற்றிய எனது புரிதல் வேறு மாதிரியானது.
ஆஷிஸ்- நான் உங்கள் தரப்பு குரலொன்று எழ வேண்டுமென்று கோரியிருக்கிறேன். எதிர்தரப்பிர்கான இடம் எப்போதுமே இருக்க வேண்டும். ஈடிபிய கலகம் என்பது இயற்கையின், அல்லது உங்களுக்கு ஒப்புதல் என்றால், பண்பாட்டின் உறுதிபடுத்தும் வழிமுறையாகும். முரணியக்கம், அல்லது உங்களுக்கு ஏற்புடைய பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையில் நிகழும் ‘எதிர்மறை விமர்சனம்’ என்பது அறிவு தளத்திலும் தார்மீக தளத்திலும் ஒரு சமூகம் தன்னை சுய திருத்தங்கள் மற்றும் விமர்சனங்களின் வழியாக புதுப்பித்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாகும். ஆனால் எனது தலைமுறைக்கும் ஓட்ட வேண்டிய ஈடிபிய பேய்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஜவஹர்லால் நேரு தொடங்கி ஹரிலால் காந்தி வரை, உறுதியான பல ஆளுமைகள் புனைந்திருக்கும் காந்திகளை நாங்களும் எதிர்த்தாக வேண்டும். காந்தியின் கலகக்கார பிள்ளைகளே எங்கள் அறிவுத்தள பெற்றோர்களாகவும் ஆகிப் போனார்கள். அவர்களின் அகத்தை அச்சுறுத்தும் பூதங்களிடம் நாங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது
காந்தி- தயவு செய்து ஜவஹரையும் ஹரிலாலையும் ஒரே தளத்தில் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். ஹரிலால் எவரையும் பொருட்படுத்தி ஆழமான விமர்சனங்களை வைத்தவனில்லை, என்னையும்கூட விமர்சித்தவனில்லை. அவன் என்னை எதிர்க்க வெறுமே பாபங்கள் நிறைந்த வாழ்வை வாழ்ந்து மறைந்தான்.
ஆஷிஸ்- ஆனால் அந்த எதிர்ப்பிற்கு பண்பாட்டு ரீதியாக அர்த்தம் உள்ளது, எனதருமை தாத்தாவே. நீங்கள் விரும்பிய வாழ்க்கைக்கு நேரெதிரான வாழ்க்கையை ஹரிலால் வாழ்ந்தான். நேருவும் இத்தகைய ஒரு வாழ்வைத்தான் வாழ்ந்தார், ஆனால் சற்றே அடக்கி வாசித்து, அதற்காக வருந்தும் பாவனையுடன் வாழ்ந்தார். ஹரிலால் அதையே நாடகீயமாக, படாடோபங்களுடன் வாழ்ந்தார். நீங்கள் எதை எதிர்த்து போரிட்டு, சில வேளைகளில் வெல்ல முடியாமல் தவிக்கிறீர்கள் என்பதை அவர் துல்லியமாக கணித்திருந்தார். அவர் உங்களுடைய எதிர் அறங்களை தழுவியதன் வழியாக அவற்றைத் தம் தர்க்க எல்லைகளை நோக்கி அழுத்தினார். உங்கள் தோல்வியடைந்த சுயத்தை அவரால் உருவகிக்க முடிந்தது, வேறு சிலர் உங்களுடைய ஒரு பகுதியை அவர் வென்றார் என்றுகூட சொல்வதுண்டு.
தாத்தா, சமூகத்தின் விமர்சகராக நீங்கள் எங்களுக்கு எந்த அளவிற்கு முக்கியமானவரோ அதேயளவு குறியீட்டு ரீதியாகவேணும் ஹரிலாலும் முக்கியத்துவம் வாய்ந்தவரே. சற்றே அபத்தமாக இருந்தாலும், அவர் காந்தியத்தின் மீதான நவீன இந்திய விமர்சனத்தை முன்வைப்பவர்களின் பிரதிநிதியாவார்.
காந்தி- (குழப்பத்துடன்) தேவையற்ற குறுக்கீடாக தோன்றலாம் ஆஷிஸ். ஆனால் நீங்கள் ஏன் என்னை தாத்தா என்று அழைக்கிறீர்கள் என புரியவில்லை?
ஆஷிஸ்- ஏனெனில் ஒரு தலைமுறையின் முரண்பாடுகள் அதற்கடுத்த தலைமுறையில் களையப்படுவதே இயல்பு. சொந்த பிள்ளைகளின் முரண்பாடுகளைக் காட்டிலும் பேரப் பிள்ளைகளின் முரண்பட்ட நடைமுறைகள் வழியாக உங்களை ஏற்பதையோ அல்லது நிராகரிப்பதையோ பொறுமையுடன் எதிர்கொள்ள இயலும். அதேபோல் பேரப் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகளை காட்டிலும் உங்களை எளிதாகப் புரிந்துகொள்ள இயலும். காலத்தால் பதப்பட்டு, அதிக விமர்சனங்கள் இன்றி, பிழைகளைப் பொறுத்து ஏற்றுக்கொள்ள இயலும். ஆகவே உங்கள் உள் முரண்பாடுகள் ஓரளவிற்கு மேல் என்னை ஈர்ப்பதில்லை என்பது ஒன்றும் விபத்தில்லை, ஆனால் உங்கள் அற பார்வை என்னை ஈர்த்துக்கொண்டேதானிருக்கிறது.
ஹரிலால்- (கோபத்துடன்) ஆனால் அவருடைய அந்த அற பார்வைதான் பிழையானது என்கிறேன் நான். பொது வாழ்விலும் சரி, தனி வாழ்விலும் சரி அவர் ஒரு அரசியல்வாதிதான். அவர் செய்துகொண்ட சமரசங்களை அவருடைய ரசிகர்கள் கண்டுகொள்வதில்லை.
ஆஷிஸ்- அதுவும்கூட ஒரு வித அர்த்தப்படுத்திக் கொள்ளல்தான். எங்களைப் பொறுத்தவரையில், அரசியலும் வீடுபேற்றை அடைய ஒரு முக்கியமான வழிமுறைதான் என்று அங்கீகரிப்பதுதான் முக்கியம். அர்னால்ட் டோய்ன்பீயின் வார்த்தைகளை நினைவில் கொள்ள வேண்டும் - “இனி வருங்காலங்களில் மானுட குலம் அவர்களுடைய தேவதூதர்களிடம், நீங்கள் எங்கள் அரசியல் சாக்கடையில் வந்து வாழ்வதற்குத் தயாரா என்று வினவும்”. அரசியலில் இந்த புத்திசாலி மகாத்மா அடைந்த வெற்றி என்ன என்பது இரண்டாம் பட்சம் தான். அவர் அரசியலில் இறங்கி, அதை மானுடத்தின் முக்கியமான அவசியமாகக் கருதி, தன் காலத்திற்கேற்ப யுக தர்மத்தை விளக்கிகொள்ள முனைந்ததே, மதச்சார்பின்மையின் பெயராலும் பகுத்தறிவின் பெயராலும் செயற்கையாக அறத்திலிருந்தும் ஆண்மீகத்திலிருந்தும் அரசியலைப் பிரித்து வைத்திருக்கும் நவீன யுகத்தில், மிக முக்கியமான அறிவார்ந்த எதிர்ப்பாகும்.
(காந்தியை நோக்கி திரும்பிய வண்ணம்) ஹரிலால் முன்மொழிந்த உதாரணத்தையே எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சுபாஷ் சந்திர போஸை நிச்சயமாக அறிவீனமான ரகசிய ஃபாசிஸ்டாக கருதியிருக்க மாட்டீர்கள். ஆனால் போசின் தேசியம், ஆண்மையை வெளிப்படுத்தும் அதீத முனைப்புகள், ஐரோப்பிய மைய சமூக கட்டமைப்பு, ஏகாதிபத்திய மேற்குலகத்துடன் அவர் மேற்கொண்ட முதிரா சமரசம், மற்றும் சுயத்தை அழிக்கும் ஐரோப்பிய அறிவுப் பகுப்புகளை அகப்படுத்திக் கொண்டமையின் தோல்வி (self defeating internalization of european categories) ஆகியவற்றை கருத்தில் கொண்டிருப்பீர்கள். நீங்கள் போஸை எதிர்த்துதான் ஆக வேண்டும், அதை நீங்கள் அரசியல் ரீதியாக முன்னெடுக்க முடிவு செய்தீர்கள். உங்கள் கணிப்பு சரியா தவறா என்பதெல்லாம் ஐம்பத்தைந்து வருடங்கள் கழிந்த பின்னர் எனக்கு எவ்வகையிலும் ஆர்வமூட்டுவதாக இல்லை.
ஹரிலால்- (நிதானமிழந்து) நவீன மேற்குலகத்தையும் நவீனத்துவத்தையும் நீங்கள் ஏதோ புற்று நோய் போல் கருதி பேசி வருகிறீர்கள். அதற்கு என்னுடைய தந்தை முன்வைத்த மாற்று என்ன? சமூக புற்றுநோய்களை அகற்றுபவர்களாக கருதிக்கொள்ளும் அவருடைய இளம் தொண்டர்கள் முன்வைக்கும் மாற்றுதான் என்ன? இந்த ஆஷிஸ் நந்திகளும், மகரந்த் பரஞ்சபேகளும் உருப்படியாக சொல்வதற்கு ஏதாவது உண்டா? வெறுமே கச்சிதமான வரையறைகள் அற்ற சத்தியாகிரகம், கிராம சமூகம், அறம், ராமராஜ்ஜியம், சுய உதவி, சுய ராஜ்ஜியம், அறிவு தள காலனிய தாக்க நீக்கம் போன்ற உலர்ந்து மட்கிய கடந்த காலத்து கனவுகளை பற்றி காற்றுடன் பேசி என்ன பயன்?
ஆஷிஸ்- ஹரிலால், உங்கள் தந்தையின் கருத்துகள் என்னவென்று நாம் அறிவோம். அவருடைய கருத்துகளால் நிலைகுலைந்த உங்கள் தலைமுறையினர் ஒன்று அவரை கிறுக்கன் என்று முத்திரை குத்தி புறந்தள்ளினார்கள், அல்லது நவீனத்துவத்துடன் அவரை இணைத்து அவரையும் மறைமுகமான நவீனத்துவர் என பறைசாற்றினார்கள். இரண்டாவதை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில்- அதாவது, உங்கள் தந்தை நவீனத்துவத்திற்குள் இருந்து கொண்டே தன்னை வேறு ஏதோ ஒன்றாக கற்பிதம் செய்து கொண்டு நவீனத்துவத்தை விமர்சனம் செய்தவர் என்று அவரை நீங்கள் வாசித்தால்- அவருடைய கொள்கையை விமர்சிக்கும் உங்களை நிலை பிறழ்ந்தவர் என்றோ கிறுக்கன் என்றோதான் மதிப்பிட வேண்டியிருக்கும். ஆனால் நான் உங்களுக்கு சரிசமமான வாய்ப்பை அளிக்க விரும்புகிறேன், உங்கள் எதிர்ப்புகளை வெறும் கிறுக்குத்தனம் என்றோ பிறழ்நிலை என்றோ புறந்தள்ள என்னால் இயலவில்லை. என்னளவில் நான் உங்களை, என்ன செய்கிறோம் என்பதை அறியாமலேயே காந்தியின் அருகில் இருந்தவாரே நவீனத்துவம் காந்தியின் மீது கொள்ளும் ஐயத்தை கடத்திச் சென்ற, காந்திய உலக பார்வையின் மீது விமர்சனங்கள் கொண்ட, தெளிவான தீர்க்கமான விமர்சகராகவே கருதுகிறேன்.
அப்படியென்றால் இயல்பாகவே நான் முதல் தேர்வை ஏற்கிறேன் என்று பொருளாகும். காந்தி ஒரு கிறுக்கர். ஆனால் அவசியமென்றால், பல லட்சகணக்கான மக்களை போன்று அவருடைய கிறுக்குத்தனத்தை அரசியல் விவாதத்திற்கு அடித்தளமாக கொள்கிறேன்.
இறுதியாக, உங்கள் தந்தையின் எந்த கருத்தும் செயல்படாமல் போனாலும், நவீனத்துவத்தின் மீது அவர் முன்வைத்த விமர்சனங்கள் காலம் கடந்து நிற்கும். ஏனெனில் நவீனத்துவம் பிறந்து நானூறு ஆண்டுகள் ஆகின்றன. நானூறு வருடங்கள் தாக்குபிடித்த வெவ்வேறு வரலாற்று காலகட்டங்கள் சோர்வடைந்ததைப் போன்று நவீனத்துவமும் சோர்வடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஹரிலால், உங்கள் தந்தையின் நவீனத்துவத்தின் மீதான விமர்சனங்கள் நவீனத்துவம் இன்னும் மக்களின் மனங்களையும் உடல்களையும் பூரணமாக ஆக்கிரமித்திடாத சமூகத்தில் வாழும் எங்களை, வருங்காலத்திற்கு தயார் செய்துகொள்ள அனுமதிக்கிறது. உலக உருண்டையின் இப்பகுதியில் நவீனத்துவத்தின் மொழியை அறியாத பெரும்பான்மை மக்கள் வாழ்ந்து வருவதால் முழுமையான நவீன சமூகத்தை காட்டிலும் ஒரு பின் நவீனத்துவ சமூகத்தை கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை அதிகமாக்குகிறது. இயல்பாகவே நவீனத்துவத்தைக் கடந்து நோக்கும் நவீனத்துவம் அல்லாத சில அமைப்புகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம். மேற்கிலோ செயற்கையாக, போலித்தனமான பின் நவீனத்துவத்தை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய உலகின் நிலையற்ற தன்மையை உணர்ந்துதான் இருக்கிறார்கள். ஆனால் அதன் பிடியை முறித்துக்கொண்டு வெளிவர அவர்கள் தயாராக இல்லை, ஏனெனில் அவர்கள் அறிந்த ஒரே உலகம் அதுமட்டும்தான்.
ஹரிலால்- ஆனால் உண்மையில் வேறோர் உலகத்தை கட்டமைக்கும் சாத்தியம் நம்மிடையே உள்ளதா என்ன? வெறும் விமர்சனங்களால் என்ன பயன்?
ஆஷிஸ்- விமர்சனங்கள்தான் இங்கு முக்கியமானவை. ஏனெனில் எந்த உலக பார்வையும், எந்த கொள்கையும், மாற்றத்தை கொணரும் எந்த கோட்பாடும் இந்த தருணத்தில் திருப்திகரமான மாற்று வழிகளை முன்வைக்காத காரணத்தினால் தார்மீகமாக அப்படியே ஏற்றுகொள்ள படமாட்டாது என்று நம்மை ஒப்புக்கொள்ள செய்கிறது. நம் அற உணர்வை மழுங்கடிக்காமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது, மாற்று வழிகளை மேலும் முனைப்புடன் தேட செய்கிறது. மேலும் நாமறிந்த மாற்றுகளை தக்க வைத்துக்கொள்ள போராட வைக்கிறது, ஏனெனில் அவைகளை கொண்டுதான் நாம் நம் வருங்காலத்தை கட்டமைக்க முடியும்.
காந்தி- (ஆசிஷை நோக்கி சிரித்த வண்ணம்) நீங்கள் கூறிய கடைசி கருத்துடனாவது என்னால் ஒத்துப்போக முடிந்ததை எண்ணி மகிழ்கிறேன்.
ஹரிலால் –(மகிழ்ச்சியுடன் அதே வேலை கொஞ்சம் ஐயத்துடன்) வெவ்வேறு தருணங்களில் ஆஷிஸ் இதையே சொல்லி வருவதை நான் கேட்டிருக்கிறேன்.
ஆஷிஸ்- சி.பி ஸ்னோ ஒருமுறை குறிப்பிட்டது போல் ‘அனைவருக்கும் அவரவர் தேய்மொழிகளைப் பயன்படுத்த அனுமதியுண்டு’. எது எப்படியோ, நாம் நம்முடைய விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும். மகரந்த் பரஞ்சபே காத்திருக்கிறார். அவர் வேறுவிதமான மொழியில் உரையாடக் கூடியவர். நம் விவாதங்களால் அவர் குழம்பிவிடவில்லை. நாம் அவரை கூர்ந்து கேட்போம். தாத்தா, நீங்கள் தயாரா?
-சுகி
No comments:
Post a Comment