Monday, October 28, 2013

தற்செயல்களின் ரசவாதம்


(ஆம்னிபஸ் கட்டுரையின் மீள்பதிவு) 

முற்றிலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம் இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும் அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம் கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள் மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய  சிறுகதைகளை வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான வாசிப்பனுபத்தை அளித்தது.





அரிதாகவே சில கதைகளை நாம் மீண்டும் மீண்டும் வாசிக்க நேரிடும். நேரமின்மையோ அல்லது தரமின்மையோ, ஏதோ ஒன்று கதைகளை மீண்டும் வாசிக்க விடுவதில்லை. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்குள் மூன்று முறை ஒரே தொகுப்பை மீள மீள வாசித்துக் கொண்டிருக்கிறேன். உயிர்மை வெளியீடாக வெளிவந்திருக்கும் யுவனின் பத்து சிறுகதைகளின் தொகுப்புதான் நீர்ப்பறவைகளின் தியானம்... 

யுவனின் கதையுலகம் ஒரு முனையில் மட்டும் வாய் பிளந்து நம்மைப் பார்த்து வசீகரத்துடன் சிரித்து தொலைக்கிறது. உள்ளுக்குள் உருவாகி நிற்கும் பத்மவியூகத்தை உடைத்து வெளிவர இயலாமல் கதைகளுக்குள் முட்டி மோதிக்கொண்டு திரிய வேண்டியதுதான். யுவன் அவ்வப்போது தன் கதை பாத்திரங்களைப் பற்றிச் சொல்லும்போது, இவர் ஜி.நாகராஜனின் கதைகளில் இருந்து எழுந்து வந்தவர், இவர் புதுமைப்பித்தனின் உலகிலிருந்து எழுந்து வந்தவர் என்று குண விசேஷங்களைக் கோடிட்டு காண்பிப்பார். ஒருகால் அப்படி யுவனின் கதையிலிருந்து எழுந்து வரும் பாத்திரமாகத்தான் வாசகனும் வெளிவர இயலுமோ என்னமோ!

 யுவன் ஒரு அபாரமான கதைசொல்லி. கதைக்களம் வேறாயினும் யுவன் எழுத்தை கி.ராவின் கதை சொல்லும் பாணியுடன் ஒப்பிடத் தோன்றுகிறது. கிராவும் சரி யுவனும் சரி நாட்டுப்புற வாய்மொழி கதையாடல் மரபை கையாள்வது காரணமாக இருக்கலாம். வழமையான வாய்மொழி கதையாடல் மரபிலிருந்து ஒரு புள்ளியில் யுவன் வேறுபடும் தருணம் என எனக்குப்பட்டது, அக்கதைகளின் மீதான கேள்விகளையும் கதைக்குள் அவரே எழுப்பிவிடுவதுதான். நான்காவது கனவு, கிறக்கம் ஆகிய கதைகளில் அவர் இதைக் கச்சிதமாக கையாள்கிறார்

அந்நியம் சிறுகதையில் வேற்றூரில் இருந்து ஒரு கிறுக்கன் வருகிறான். பாவா எனப் பெயரிட்டு அவனை காபந்து செய்கிறாள் வயதில் மூத்த சீனியம்மாள். அவளுடைய வேட்கையை அவனைக்கொண்டு தீர்த்துக்கொள்ள முயல்கிறாள். இறுதியில் பாவா எப்படி மர்மமாக ஊருக்குள் வந்தானோ அப்படியே வெளியேறுகிறான். சீனியம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாகிக் கிடக்கிறாள். பாவா நினைவுக்கு வர காரணமானவர் மலாவி நாகநாதன். தொழிலுக்காக மலாவி தேசத்தில் வசிக்கிறார். அவரிருக்கும்போதே உள்ளூர் கொள்ளையர்கள் அவருடைய வீட்டைச் சூறையாட வருகிறார்கள். அமைதியாக இருளில் அவரே சென்று மறைந்துகொண்டு  உயிர் அச்சத்தில் ஒத்துழைக்கிறார். ஒரு பெட்டி நிறைய பணம் இருக்கிறது, கொள்ளைக்கு வந்தவனுடன் பேசுகிறார். அதற்குள் பாஸ்போர்ட் இத்யாதிகள் இருப்பதால் அதை மட்டும் விட்டு விடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறார். அவர்களும் விட்டுச் செல்கிறார்கள். இரு வேறு கதைகளை இணைக்கும் அந்தச் சரடு எங்கிருக்கிறது? 

பாவாவுக்கு சீனியம்மாவும் அந்த ஊரும் அந்நியம்தான்.  தனது வேட்கையை தீர்த்துக்கொள்ள தான் ஆதரித்த அந்த அந்நியனை பயன்படுத்திக்கொள்ள முனைகிறாள் சீனியம்மா. நாகநாதனும் மலாவிக்கு அந்நியன்தான். சில செய்கைகளுக்கு பாஷைகளை மீறிய அர்த்தம் இருக்கிறது என்கிறார் நாகநாதன். மோட்டார் ரூமில் சீனியம்மாளின் செய்கையை பாவா பொருட்படுத்துவதில்லை, அவளுக்கு ஒத்துழைக்காமல் விலகி மருகுகிறான். ஊருக்குள் சீனியம்மாள் தன் கடைசி தம்பி மாதிரி என சொல்லிக்கொண்டாலும் அவள் செய்கை வேறு செய்தியைத்தான் அளிக்கிறது. கதையின் இறுதியில் “பாவாவை ஆழமாக நினைவூட்டியது நாகநாதனின் முகம் அல்ல. தன் இயல்புக்கு விரோதமாக – அல்லது அவனுடைய இயல்புக்கு இசையத்தானோ என்னவோ- இவருடைய பெட்டியை வைத்துவிட்டுத் திரும்பிப்போன, முகம் தெரியாத அந்த ஆப்பிரிக்கனின் முகம்தான்.” என்று முடிகிறது. இவனுடைய இந்த இயல்புக்கும் பாவாவின் இயல்புக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.       

மன நோயிலிருந்து மீண்ட பத்திரிக்கையாளரின் நினைவுகள் வழியாக பயணிக்கிறது இடம் பெயர்தல். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மதியைப் பற்றிய கதையும் அண்டைய வீட்டுக்கு குடிவந்த முதிர்கன்னி வெங்கலக்ஷ்மியின் கதையும் இணையாக பயணிக்கின்றன. சோட்டானிக்கரை பகவதியே இவர்களுக்கான மைய இணைப்பாக எனக்கு தோன்றுகிறாள். காம வேட்கையால் வெங்கலக்ஷ்மி உலர்ந்துக் கொண்டிருந்தாள். குற்ற உணர்வு ஒரு இருள் திரண்ட உருவமாக இவனிடமும் இவனுடைய காமம் பசித்திருப்பவளுக்கு உணவாக அவளிடமும் இடம்பெயர்கிறது.

வெங்கலக்ஷ்மியின் காமத்திற்கு கதைசொல்லி வீழ்ந்தது போலவே மற்றொரு கதையான காணாமல் போனவனின் கடிதங்கள் கதையில் சிவச்சந்திரன் அவனுடைய மேலதிகாரியின் இளம் மனைவியிடம் வீழ்கிறான். ரெட்டைமங்கலம் பற்றியும் அங்கு ராணுவத்தில் பணிபுரிந்து மரித்தவர்கள் பற்றியும் சிவச்சந்திரன் எழுதுகிறான். பாகிஸ்தான் போரும், ஆறு விரல்களும் அத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. அன்னியம் கதையின் பாவாவிற்கும் ஆறு விரல்கள்தான். நான்காவது கனவில் வனஜாட்சியின் மகனும் பாகிஸ்தான் போரில் மரிக்கிறான். ஆறு விரல், இரட்டையர்கள், மரணம் போன்றவைகளைக் கொண்டு யுவன் ஒரு அமானுஷ்ய வெளியை கட்டமைக்கிறார்.         

இரண்டே அறை கொண்ட விடு சிறுகதையில் முதுபெரும் எழுத்தாளர் வடிவாம்பாள் நூற்றாண்டு விழாவிற்கு எழுத்தாளர் கிருஷ்ணன் செல்கிறார். அங்கே அவருடைய வாசகர் பாண்டித்துரையைச் சந்திக்கிறார். அவருடன் ரா தங்கலுக்கு அவருடைய கிராமத்திற்குச் செல்கிறார். அங்கே அவருடைய தாயாரும் இவருமாக ஒரே கதையின் இரு பாதிகளை அவருக்கு விவரிக்கிறார்கள். நாதஸ்வரத்தில் ஒருகாலத்தில் கோலோச்சிய குருவித்துறை சகோதரர்கள் பற்றிய கதை. இத்தொகுப்பில் உள்ள எளிமையான கதைகளில் ஒன்று என்று இதை சொல்லலாம். இரு சகோதரர்களும் தாலியறுத்த வேற்று சாதியை சேர்ந்த ஒரே  பெண்ணின் மீது நாட்டம் கொள்கிறார்கள். மூத்தவர் நாண்டுக்கொண்டு சாகிறார். இரண்டு அறைகள் என்றாலும் அவை ஒரு வீட்டை சேர்ந்தவை, ஆனால் இரண்டுமே ஒரே திசையில் தனித்தனி வாசல்களுடன் நிற்கின்றன.

பால்ய சிநேகிதன் மருந்து, கிராமத்து கதை சொல்லி முனியன், ரிச்சர்ட் ஃபெயின்மான். ஹிப்னாடிசம் என விரிகிறது யுவனின் அடுத்த கதை கிறக்கம். இக்கதையில் வரும் கதைசொல்லி முனியன், பள்ளி பருவத்தில் வாசித்த தேவனின் சிறுகதை தொகுப்பொன்றில் திண்ணையில் அமர்ந்து கதை கதையாகச் சொல்லும் மல்லாரி ராவ் எனும் கிழவரை எனக்கு நினைவுபடுத்தினார். ஒரு ஜமீன்தாரின் வாரிசு காட்டுக்குள் தொலைந்து மீள்கிறான், அங்கு ஒரு பெண்ணுடன் இருக்கிறான், அவள் ஒரு மர சட்டகத்தை அவனுக்கு அளிக்கிறாள்,  வீடு திரும்பும் அவன் மாதக்கணக்கில் ஒரு அறைக்குள் அடைபட்டு தன் பிம்பத்தைக் கண்டு உண்ணாமல் உறங்காமல் இறக்கிறான். கிளிமூக்கு கிரிஜா கிராமத்துப் பேரழகி ஆனால்  தன்னிடம் வம்பு செய்யும் சண்டியனை மணக்கிறாள். உளவியல் பேராசிரியர் ஹிப்னாடிசம் பற்றியும் மன அடுக்குகள் பற்றியும் உரையாற்றுகிறார். இறுதியாக கதைசொல்லியின் நண்பன் மருந்து மேடை ஏறுகிறான். மீண்டும் வருகிறான். ஆனால் உண்மையில் மேடையில் இருந்தது யார்? யாரை அவன் கண்டான்? மற்றவர்கள் யாரைக் கண்டிருப்பார்கள்? எனும் கேள்வியுடன் கதை முடிகிறது. அந்த இளவரசன் உண்மையில் நோக்கியது அவனுடைய பிம்பத்தைத்தானா? எனும் கேள்வியும் உடன் எழுகிறது.  

நான்காவது கனவு விற்பனை மேலாளராக நாடெங்கும் அலைந்து திரிந்தவரின் நாட்குறிப்பிலிருந்து மீண்டும் நிகழ்கிறது. அரசியல் மரணம் ஒன்று நிகழ்ந்தபோது ஆந்திர மாநில கடப்பை அருகே ரயிலில் மாட்டிக்கொள்ளும் கதைசொல்லி, தற்செயலாக ஒரு குடிலில் தத்ரூபமான ஆணுருவத்தின் வெண்பளிங்குச் சிலையை காண்கிறார். அந்தச் சிற்பம் தன் மூதாதையருடையது என்று  அதன் கதையைச் சொல்கிறார் ஒரு பெரியவர். ராஜஸ்தானத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வரும் சிற்பி அங்கு ஒரு வெண் பளிங்கு பெண் சிற்பத்தை செய்கிறார். ராஜகுமாரி தினமும் அவர் சிற்பம் வடிப்பதை வேடிக்கை பார்க்கிறார். சிற்பம் கண் திறந்தால் போதும் எனும் நிலையில், நான்கு சாமங்கள் நீளும் கனவுடன் முடிகிறது கதை. சிற்பிக்கும் ராஜகுமாரிக்கும் உள்ள உறவைப் பூடகமாக சொல்லிச் செல்கிறது கனவு. தலைமை சிற்பி வந்தேறியான இவருக்கு கிடைக்கும் மரியாதையை சகிக்க முடியாமல் இவருடைய சிற்பத்தை ரகசியமாக வடிக்கிறார். ஆக அந்த சிலை இடம் மாறியதும் கனவின் ஒரு பகுதியாக வருகிறது. கனவும் நினைவும் முயங்கும் சித்திரத்தை இக்கதை அளிக்கிறது. 

இத்தொகுப்பின் தலைசிறந்த கதை என நீர்ப்பறவைகளின் தியானத்தையே சொல்வேன். கற்பனையின் அசாத்தியமான பாய்ச்சலும் அபாரமான ஒருங்கிணைவும் அமைந்த கதை. தனியாக இக்கதைக்காக மட்டும் ஒரு நீள் கட்டுரை எழுதுவதே கதைக்கு நியாயம் செய்வதாக இருக்கும். குடும்ப கஷ்டம் தாங்க முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட ரமணன் பற்றிய விவரிப்புடன் துவங்குகிறது கதை. ரமணன் எடுத்துப் போட்டு கதைசொல்லி வாசிக்க நேர்ந்த ஒரு வெளிநாட்டு பத்திரிக்கையைப் பற்றியும், அதில் சென்ற இதழில் இடம்பெற்ற முக்கிய கட்டுரையின் எதிர்வினைகளைப் பற்றியும் விரிகிறது. எதிர்வினைகளில் மூன்று கடிதங்களை மட்டும் மொழியாக்கம் செய்கிறார் கதைசொல்லி. அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் இருக்கும்  ஃபிரெஞ்சு பேராசிரியர்  தன் மனைவியின் புற்றுநோய் அனுபவங்களை விவரித்து எழுதுகிறார். தான்சானியா பொறியாளர் ஒருவர்  தன் தந்தையை இழந்து சித்தப் பிரமையில் சிக்கிய தாயை மீட்ட கதையை எழுதுகிறார். இந்திய அரசியல்வாதிக்கும் அவருடைய மனைவிகளில் ஒருவருக்கும் பிறந்து, திபெத்திற்கு சென்று லாமாவானவர் எழுதும் கடிதம் மூன்றாவது. அடிக்குறிப்புகள், பெட்டி செய்திகள் என பல உள் மடிப்புகளைப் பொதித்து வைத்துள்ளார் யுவன். யுவன் மொழியாக்கம் செய்த ஜென் கவிதை தொகுப்பு ‘பெயரற்ற யாத்ரீகன்’ வாசித்திருக்கிறேன். எனக்கு மீண்டும் அதை வாசித்த நிறைவு இக்கதையை வாசித்தபோது ஏற்பட்டது. முன்னுரையில் ‘கவிதை எழுதத் தொடங்கிய நாட்களில், ஒன்றுக்கு மேற்பட்ட படிமங்களைக் கோக்க முற்படும்போது, முற்றிலும் புதியதொரு வாசிப்பனுபவம் உருவாவதை உணர்ந்திருக்கிறேன். அதேவிதமாக. புனைகதையிலும் நிகழ்த்திப் பார்ப்பதே என் ஆவல்.’ என்று எழுதுகிறார், அது இக்கதையில் பூரணமாக நிகழ்ந்து கதையை வேறோர் தளத்திற்கு கொண்டு சேர்க்கிறது.     

ஒரு சாமானிய எழுத்தாளனைப் பற்றி கொள்ளும் எரிச்சல்களை பகடியுடன் பதிவு செய்கிறது யுவனின் அடுத்த கதை ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள்’. இக்கதைக்குள் வரும் கதையின் தலைப்புதான் ‘தற்செயல்களின்  ரசவாதம்’. யதார்த்தத்தில் நாம் நினைவுகளை எப்படி மீட்டெடுக்கிறோமோ அப்படித்தான் யுவனும் கதையாக்குகிறார். யதார்த்தத்தில் நினைவுகள் தனித்து இருப்பதில்லை, ஏதோ ஒன்றுடன் பிணைந்துதான் , இருக்கின்றன, அல்லது அப்படித்தான் நம் மனம் அவைகளை நினைவாக்கி சேமித்து வைத்துள்ளது. கறுப்பு கொண்டக்கடலை எனக்கு ஏன் ஒவ்வொரு முறையும் உச்சிக்குடுமியுடன் திரியும் அரிமளம் சிவன் கோவில் குருக்கள் ராஜம் மாமாவை நினைவுறுத்த வேண்டும்? 

சுவர்ப்பேய் கதையில் ராஜூ வாத்தியார் நினைவு அவ்வையார் பற்றிய பாடத்தையும், வெட்டவெளியில் இருந்த குட்டிச்சுவர் பற்றியும் முத்தச்சியைப் பற்றிய நினைவையும் கதைசொல்லிக்கு கிளர்த்துகிறது. யுவன் சொல்வது போல் ‘வியர்த்த உடம்புடன் மணல்தரையில் புரண்டு எழுந்த மாதிரி .....பல்வேறு உபரி நினைவுத் துகள்கள் ஒட்டிக்கொண்டு வரத்தானே செய்கின்றன.’ 

யுவன் கடிதங்கள் வழியாக கதை சொல்லும் முறையை இத்தொகுப்பில் பல கதைகளில் கையாண்டுள்ளார். கடிதங்கள் உரையாடலில்  காட்டமுடியாத அன்யோன்யத்தையும் அந்தரங்கத்தன்மையையும் கொண்டுவருகின்றன என்பதும் காரணமாக இருக்கலாம். ராஜுவாத்தியாரின் கதையை மகளிர் பத்திரிக்கையில் வரும் வாசகர் கடிதமாக சொல்லிச் செல்கிறார் யுவன். முனி இருக்கும் சுவர் கட்டக் கட்ட இடிந்து விழுகிறது, அவ்வைப்பாட்டி பாடி அதை  நிறுத்துகிறாள். வீடுபுகுந்து வரும் திருடன் வாத்தியாரின் மனைவியுடன் வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறான். ராஜு வாத்தியாரின் மனைவியின் உள்ளத்தில் உள்ள பள்ளம் அடிவயிற்றைப் பிளக்கும் சூரனால்தான் கடைசியில் நிறைகிறது.    


சித்தியின் சடலத்தைக் காண ரயிலில் செல்லும்போது சலபதி ராவ் எனும் எழுத்தாளனைச் சந்திக்கிறான் கதைசொல்லி பார்த்தசாரதி. சலபதி ராவ் எழுதிய ஒரு சிறுகதை தொகுப்பு அவனுக்கு கல்லூரி காலத்தில் பாடமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. அதிலுள்ள ஒரு கதையான விஷகோப்பைக்கு முன் எனும் கதை அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறது. ஒரு வயலின் வித்வானின் சீடரான லட்சுமண ரெட்டி குருவின் மகள் மீது ஈர்ப்பு கொள்கிறார், ஊனமுற்ற அப்பெண் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டு அவதிப்படுகிறாள், பிறந்த வீட்டிற்கே திரும்பும் அவள் லட்சுமண ரெட்டி மீதான தனது காதலை வெளிப்படுத்துகிறாள்,  ஆனால் அவளை ஏற்க மறுக்கிறார் ரெட்டி. பின்னர் அங்கிருந்து கதை இக்கதைக்கு தூண்டுதலான சலபதி ராவின் வாழ்வனுபவத்துக்கு தாவுகிறது, இறுதியில் ஒரு சிறிய சந்தேகத்துடன் முடிகிறது.     
                  
யுவன் தன் கதைகூறும் முறைகளைப் பற்றியும் அதன் இயங்குதளத்தைப் பற்றியும் கதைகளின் ஊடாக தெளிவாகவே முன்வைக்கிறார். கதைகளுக்குள் கதைகளைப் பற்றிய விமர்சனங்கள்கூட உண்டு.
இத்தொகுப்பின் முன்னுரையில் யுவன் எழுதுகிறார்.
“ ஞாபகங்களிலிருந்து கற்பனைக்கு நகர்வதும், சிந்தனையின் ஒரு தெறிப்பைப் பற்றிக்கொண்டு ஞாபகத்தின் அடியாழத்தில் எதையோ தேடிச் செல்வதுமான இருவழிப் போக்குவரத்து பிறப்பிக்கும் சம்பவத் தொடர்களே என் கதைகள்”
  
  “ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோத்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்.”
காணாமல் போனவனின் கடிதங்கள் எனும் கதையில் எழுத்தாளர் கிருஷ்ணனுக்கு அவருடைய நண்பர் சிவச்சந்திரன் கடிதங்கள் எழுதுகிறார். 

“வாஸ்தவத்தில், இந்த மாதிரிக் கதைகளில் எழுதுகிறவனுக்கு உள்ளதைவிட, வாசிக்கிறவருக்கு மிக அதிகமான சுதந்திரம் இருக்கிறது. இரண்டாம் வாசிப்பில் உட்கதைகளை வாசகர் தம் இஷ்டப்படி வரிசைமாற்றிக்கூட வாசித்துக்கொள்ளலாம்.

உன்னுடைய கதைகளில் நீ உருவாக்கும் உதிரிக்கதைகள் உத்தியின் சிறப்பம்சம் அது. மொத்தத் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் தமக்குப் பிடித்த கதைகளை உருவி  தமக்குப் பிடித்த மாதிரியான முழுக்கதை வேறொன்றை சிருஷ்டித்துக்கொள்ளலாம்.” 

உண்மையிலேயே இக்கதைகளை வேறு மாதிரி அடுக்கிக் கொள்ள முடியும். இதுவே வாசகனை கிறங்கடிக்கச் செய்கிறது. சிவச்சந்திரன் எழுதும் கடிதத்தில் “ வாலிபத்தின், முன்வயோதிகத்தின், சொற்சேகரிப்பைக் கால்வாயாக கொண்டு பாய்வது பால்யத்தின் சுனைதான்” என்று வருகிறது. யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான எழுத்தாளர்களின் இயங்குதளமும் இதுவே.           

ஒட்டுமொத்தமாக கதைகளின் வழியாக யுவன் ஒரு வாழ்க்கைப் பார்வையை சொல்லிச் செல்வதாக எனக்கு தோன்றியது. இக்கூறுகள் இக்கதைகளை ஒட்டுமொத்தமாக இணைக்கின்றன. ஒரு நாவலாக வாசிக்கக்கூட இடமுண்டு. எனது புரிதலை விரிவாக்கிக்கொள்ள சில மேற்கோள்களை சுட்டுவது அவசியம் என்பதால்...

அந்நியம் சிறுகதையில் மலாவி ரிடர்ன் நாகநாதன் சொல்கிறார் 
“இப்படித்தான் சார் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமே எதாவது விஷயங்கள் அடுத்தடுத்து நடந்துருது பாருங்க, சாதாரண திருட்டு சமாசாரம், உள்ளுணர்வு அது இதுன்னு ஒருமாதிரி அமானுஷ்யமான எடத்துக்கு போயிருதா இல்லியா’

இடம் பெயர்தல் கதையில் மதியினுடைய சகோதரிக்கு பேய் பிடித்துவிடுகிறது, அப்போது அவர்கள் ஒரு சாமியாரைக் காண குடும்பத்துடன் சென்று வருகிறார்கள். அங்கே அவர்களுக்கு நேர்ந்த அமானுஷிய அனுபவம் பற்றி மதி சொல்வதையும் பார்க்கலாம்.

“எங்களுக்கெல்லாம் பார்க்கக் கிடைக்கிற உலகத்திலே எங்களை மாதிரி சாதாரணர்கள் பார்க்க ஏலாத பல அடுக்குகள் படிஞ்சிருக்குதெண்டு உணர்ந்தனான்..’

அதே கதையில் வெங்கலக்ஷ்மியை சந்தித்த தருணத்தைப் பற்றி எழுதுகிறார் -“இப்போது யோசிக்கையில், அந்தச் சந்திப்புக்கான முன்னேற்பாடுகள் சகலமும் வேறேதோ இடத்தில் வேறு யாராலோ தீர்மானிக்கப்பட்டவை மாதிரித் தோன்றுகிறது.” 

அடுத்த கதையான இரண்டே அறை கொண்ட வீடு சிறுகதையில் பாண்டித்துரை எழுத்தாளர் கிருஷ்ணனிடம் நாதஸ்வர வித்வான் பெரிய சீனிச்சாமியின் அகால மரணத்தைப் பற்றி கூறும் போது சொல்கிறார் –“லேசிலே புரியாத ஏதோவொரு கணக்கு இருக்கு இதுக்கெல்லாம் பின்னாலே ண்டு தோணுது.”


“எதிர்காலம் அவ்வளவு ஒன்றும் புகை மூட்டமானது அல்ல போலும் கிருஷ்ணா, மிகத் துல்லியமான கணக்குகள் மூலம் எட்டிப்பார்த்தால் எதிர்காலம் எல்லாப்புறமும் திறந்து கிடக்கும் வெட்டவெளிக் கட்டாந்தரைதான் என்று தோன்றுகிறது” – சிவச்சந்திரன் கிருஷ்ணனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து 

“யோசித்துப் பார்க்கும்போது, அமானுஷ்யம் என்று ஒன்றே கிடையாதோ என்று தோன்றுகிறது” – என்றுதான் அவருடைய நான்காவது கனவு சிறுகதை துவங்குகிறது.  


இக்கதைகளில் வேறு இரு விஷயங்கள் நம் கவனத்தைக் கோருகின்றன. ஒன்று மனம் சார்ந்து அவர் முன்வைக்கும் கூரிய அவதானிப்புகள் மற்றொன்று சில நுட்பமான உவமைகள். 

“தோலில் ஒரு ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டால், பின்னர் அதன் தழும்பு நிரந்தரமாகத் தங்கிவிடுவதில்லையா. அந்தத் தழும்பில் சில நேரம் அரிப்பு ஏற்படுவதும் சகஜம்தானே. அது மாதிரித்தான்.’ என்று panic attacks பற்றி அவர் கொடுக்கும் சித்திரம் அபாரம்.     
மற்றொரு தருணத்தில் “சூடான பதார்த்தம் வைத்தால் நிறம் வெளிறிய வாழையிலைபோல முகம் வெளுத்திருந்தது.”

“பொட்டலின் ஓரத்தில் புத்தம் புதிய வைக்கோல்போர் அசைய மறந்துவிட்ட மஞ்சள் யானைபோல நின்றது.” போன்ற அற்புதமான சித்திரங்களை அளிக்கிறார் யுவன். 
.  

யுவன் தன் கதைகளின் வழியாக செய்வதெல்லாம் இதுதான் – அன்றாடத்திற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நம்மை லேசாக உலுப்பி எழுப்புகிறார். பொதுவாகவே அசாதாரணமானவைகளுக்கும் அமானுட அனுபவங்களுக்கும் மனம் ஏங்கும், ஆனால் அதற்கென்று நாம் தனியாக எதையும் தேடித் திரியவேண்டியதில்லை. ஒரு நிமிடம் ஓட்டத்திலிருந்து இளைப்பாறி இந்த உலகின் இயங்குமுறையை கவனிக்கத் தொடங்கினால் போதும், நமக்கு வசப்படாத பிரம்மாண்டம் ஒன்று இங்கேயே அமானுஷ்யமாக ஒளிந்துக் கொண்டு எதையெதையோ இயக்கிக் கொண்டிருப்பதை உணர முடியும். 

தன் கதைகளில், தேர்ந்த தடையவியல் நிபுணரைப் போல் அந்த பிரம்மாண்டத்தின் துண்டுகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொதிந்து வைத்திருக்கிறார். வாசகன் அவைகளைப் பொருக்கி எடுத்து பொருத்திப் பார்த்தால் அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு மிரண்டு போவான். அந்த புரியாத பிரம்மாண்டத்தின் மீது வாசகன் கொள்ளும் அச்சமும், வியப்பும், மிரட்சியுமே யுவனின் கதைகளை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகின்றன, அவருடைய எழுத்துக்களுக்கு ஒருவித காலாதீத தன்மையை அளித்துவிடுகின்றன.    

ஒரு குறிப்பிட்ட கட்டங்களுக்குள் இயங்கும் சு டோ கு போலத்தான் யுவனின் இயங்கு தளம் என்று தோன்றுகிறது. இத்தனை கட்டங்கள்தான், இந்த எண்கள்தான், போன்ற சட்டங்களை அவருடைய எழுத்து மீறுவதில்லை என்றாலும், ஒவ்வொரு முறையும் சுவாரசியம் குறைவதில்லை, அந்த கட்டங்களுக்குள் புதிதாக ஏதோ ஒன்றை நிகழ்த்திக் காட்டிக்கொண்டே இருக்கிறார். ஏற்கனவே அவிழ்த்த புதிரை நாம் மீண்டும் அணுகும்போது அது புதிதாகவே புலப்படுகிறது. புதிரை அவிழ்க்கும் வேகத்துடன், உற்சாகத்துடன் அவருடைய கதையை அணுகி, கதைகளுக்குள் உள்ள அந்தச் சரடை கண்டெடுப்பது ஒரு அலாதியான அனுபவம். 

யுவனின் கதையில் ஒரு பாத்திரம் சொல்வதுபோல் - 
“எல்லாக் காரியங்களுக்கும் பின்னால ஒரு அபத்தமான தர்க்கம் வந்து ஒக்காந்துக்கிடுது பாத்தீங்களா?..” 
-சுகி 

நீர்ப்பறவைகளின் தியானம் 
சிறுகதை
உயிர்மை வெளியீடு 

1 comment: