(ஆம்னிபஸ் கட்டுரையின் மீள்பதிவு)
முற்றிலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம் இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும் அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம் கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள் மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய சிறுகதைகளை வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான வாசிப்பனுபத்தை அளித்தது.