புத்தகங்கள்

Pages

Monday, September 9, 2013

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'

ஜெயமோகன் நடத்தும் இலக்கிய முகாம்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து சென்றுவருகிறேன். இணையம் வழி உரையாடும் நண்பர்களை நேரில் சந்தித்து உரையாடுவது நல்ல அனுபவம். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வழக்கமாக நடைபெறும் ஊட்டியில் இல்லாமல் ஏற்காடில் நடைபெற்றது. கம்பன், வில்லி பாரதம் மட்டுமின்றி சிறுகதை விவாத அரங்கும் கவிதை விவாத அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்கால இந்திய மாற்றுமொழி சிறுகதைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உரையாற்ற வேண்டும் என எனக்கு என் பங்கு பணி பிரித்து கொடுக்கப்பட்டது. மாற்றுமொழி சிறுகதைகளை தொடர்ந்து அதிகம் வாசிப்பவன் இல்லை நான். மே மாத இறுதியில் திருமணம் வேறு, ஆனாலும் இது ஒரு பெரிய வாய்ப்பு என்பதால் விட்டுகொடுக்க மனம் ஒப்பவில்லை. நண்பர் நட்பாசிடம் சொல்லி ஏதேனும் புத்தகங்களை சென்னையிலிருந்து வாங்கி அனுப்புங்கள் என கேட்டுக்கொண்டேன். என்னிடம் இருந்த மகாஸ்வேதா தேவி சிறுகதை தொகுப்பில் எனக்கு எதையும் தேர்வு செய்ய பிடிக்கவில்லை. வம்சி வெளியீட்டில் வெளிவந்த இரு மொழியாக்க தொகுப்புக்களை அனுப்பினார், அவற்றில் பால் சக்காரியாவின் தொகுப்பும் ஒன்று. மற்றொன்று சூர்ப்பனகை எனும் தொகுப்பு. அவற்றில் பால் சக்காரியாவின் தொகுப்பை தேர்வு செய்தேன். அத்தொகுப்பில் இரு கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எனினும் இக்கதை அகத்திற்கு நெருக்கமாக இருந்தது.   ஆகவே இக்கதையை தேர்வு செய்தேன். இது ஒரு சிறுகதையே அல்ல என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இக்கட்டுரை பலரையும் சென்று சேர்ந்தது என்றே எண்ணுகிறேன். ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை.

Tuesday, September 3, 2013

காந்தியின் மதம்

காந்தியின் மதம் காந்தி இன்று இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரை. எழுதப்பட்ட போது. இக்கட்டுரையின் பேசு பொருள் குறித்து காரசராமான விவாதம் நண்பர் நட்பாசுடன்  நிகழ்ந்தது நினைவுக்கு வருகிறது. மதச்சார்பின்மை, போலி மதச்சார்பின்மை என ஆக்ரோஷமாக விவாதித்தோம். மதச்சார்பின்மை என்பதே ஒரு ஐரோப்பிய இறக்குமதி என்றார். காந்தியின் மதச்சார்பின்மை என்பது பன்மையை அங்கீகரித்து ஏற்றுகொள்வதன் விளைவு, அது இந்த மண்ணிலும் மரபிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனும் புரிதலை நாங்கள் ஒரு மாதிரியாக இறுதியில் அடைந்தோம், அதுவே போலி மதச்சார்பின்மைவாதிகளிடம் இருந்து காந்தியை தனித்து காட்டுகிறது.

--------------------------- 

பிபன் சந்திரா , நேஷனல் புக் ட்ரஸ்டின் தலைவராவார். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். அவர் 2003 ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில், மகாத்மா –மதச்சார்பின்மை, மதவெறி எனும் தலைப்பில் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரையை தமிழில் அ.குமரேசன் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் சிறிய நூலாக வெளியிட்டுள்ளது.

Sunday, September 1, 2013

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே

நண்பர் ஒருவர் நாகராஜனின் குறத்திமுடுக்கு குறுநாவலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். எப்போதோ ஆம்னிபஸ் இணையதளத்தில் நாளை மற்றொரு நாளே குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது, அதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.  
--------------------

நண்பர்களுடனான விவாதத்தின்போது, ஒரு நண்பர் சொன்னார், ‘ஒரு நாள் பிறருடைய புலன்களுக்குச் சிறைபடாத ‘ஹாலோ மேன்களாக’ மாறும் வாய்ப்பு கிட்டினால் நாம் செய்யும் முதல் காரியமே நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மிகையான மகானுபாவ பிம்பங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை நமக்கு காட்டிவிடுவதாக இருக்கும்’. அவரை கோபமாக எதிர்த்து விவாதித்து மறுத்தேன், ஆனால் நம் லட்சிய பிம்பங்களைக் கலைக்கும் இந்த அவநம்பிக்கை செருப்பில் ஏறிய முள்ளாக என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தின் தரை நிழல்போல அற்பத்தனங்களும், சல்லித்தனங்களும் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை போலும்.  அவற்றைத் தாண்டி வருவதும், அழித்து எழுவதும் சாத்தியமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் புரிந்து ஏற்றுகொள்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை.