காந்தி இன்று காந்திக்கான தளமாக உருமாறுவதற்கு முன்னர் நான் மொழியாக்கம் செய்த நேர்காணல் இது. ஆகஸ்ட் 23, 2011 அன்று வலையேற்றப் பட்டது. கேஜ்ரிவால் டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதை கனவாக கொண்டவர், ஹசாரேயை அதற்காக பயன்படுத்திக் கொண்டவர் போன்ற குற்றசாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்தது வரை கூட அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. நேரடி தீவிர அரசியலில், தேர்தல் அரசியலில் ஈடுபட தொடங்கியவுடன் கொஞ்சம் சோர்வடைய துவங்கினேன். எனினும் ஜனநாயகம் என்பது அப்படித்தான். பல்வேறு தரப்பு மக்கள் தொடர் பேரங்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு. ஒன்று திரட்டி தன் மக்கள் தரப்பின் குரலை ஒலிக்க செய்து, அதன் மீது கவனம் குவிய செய்வதே ஜனநாயகத்தில் ஒரு நல்ல கட்சியும் தலைமையும் செய்யக் கூடியது. அந்தவகையில் நேரடி அரசியல் செயல்பாடு என்பதை புரிந்து கொள்கிறேன். வருத்தங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் கூட தேசிய - மாநில கட்சிகளின் இளைஞர் சக்தியின் அடையாளமாக சுட்டிக் காட்டப்படும் பெரும்பாலான ஆளுமைகளைக் காட்டிலும் அரவிந்த் பலவகையிலும் தகுதியானவர், திறமையானவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை நேரில் நேர்காணல் செய்ய வேண்டும் எனும் அவா எனக்குண்டு. இந்தப் பேட்டியில் அவருக்கிருக்கும் தெளிவு என்னை ஆச்சரியப்படவைத்தது. குறிப்பாக முற்றதிகாரம் மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து தீவிரமான சிந்தனைகளை இப்போது வாசிக்கும் போது கூட எழுப்புகிறது. டெல்லி தேர்தலில் ஏதேனும் மாற்றம் வருமா என பொருத்திருந்து பார்ப்போம். காந்தி - இன்றில் இரு பகுதிகளாக வந்த நேர்காணலை ஒரே பதிவாக இங்கே அளித்துள்ளேன். இப்போது மீண்டும் வாசித்து சிலப்பல திருத்தங்களை செய்துள்ளேன்.
-------------------------------
ஊடகத்தை தொடர்ந்து கவனித்து வரும் எவரும் இவரின் தீர்க்கமான குரலை கேட்காமல் இருக்க முடியாது .அவர் ஹரியானாவை சேர்ந்த 42 வயது அரவிந்த் கேஜ்ரிவால் .முனைப்போடு தொடர்ந்து ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும் இவர் ,இந்தியாவில் பெறும் மாற்றத்தை உருவாக்க போராடுகிறார் .
அரவிந்த் ஒரு ஐ.ஐ .டியில் படித்த மெக்கானிக்கல் பொறியியலாளர் ,அவர் 1995 ஆம் ஆண்டு இந்திய வருவாய் துறையில் (indian revenue service-IRS) இனைந்து, ஐந்தாண்டுகளில் அந்த பணியை துறந்தார். டெல்லி வருமானவரி துறையில் கூடுதல் ஆணையராக அவர் பனி புரிந்து கொண்டிருந்த சமயத்தில், மக்களுக்காக "பரிவர்தன் "( பொருள் -மாற்றம் ) எனும் சிறிய பதிவு செய்ய படாத அமைப்பை ஒத்த மனமுடைய நண்பர்களோடு இனைந்து தொடங்கினார். சில சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் இனைந்து பல ஆயிர மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான குடும்ப அட்டை பெறுதல், புதிய மின் இணைப்புகளை பெறுதல் ஆகியவைகளை லஞ்ச லாவண்யமின்றி பெறுவதற்கு உதவினர். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தும் அதன் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் பல்வேறு கோணங்களில் இந்த அமைப்பு ஆய்வு செய்து வருகிறது .மத்திய அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமை சட்டத்திற்காக போராடியதில் இவருக்கும் ஒரு முக்கிய பங்குண்டு .2006 ஆம் ஆண்டு வளரும் தலைமை பண்புகளுக்கான ராமன் மகசேசே விருது பெற்றார் கேஜ்ரிவால் .
தொடர்ந்து சமூக நலனுக்காக பணியாற்றிவரும் இவர் சில நேரங்களில் குடும்பத்திற்கு என்று நேரம் ஒதுக்க முடியாமல் போவதால் வருந்தவும் செய்கிறார் .அரவிந்த் அவரது மனைவி (இவரும் ஒரு IRS,அரவிந்தின் சக ஊழியரும் கூட) மற்றும் அவரது இரண்டு குழந்தைகளுடன் டெல்லியிலிருந்து சற்று தொலைவில் வசிக்கிறார் .
ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழுக்காக நாம் அவரை மார்ச் மாதம் முதல் வாரங்களில் சந்தித்தோம் ,அதாவது சாதாரண குடிமகன் கூட ஊழலுக்கு எதிராக போராட வழிவகை செய்யும் ஜன லோக்பால் சட்டத்தை அமல்படுத்த கோரி தனது உண்ணாவிரதத்தை அண்ணா தொடங்கிய ஒரு மாதத்திற்கு முன் .
பலவருடங்களாக இழுத்தடிக்கப்படும் இந்த சட்டம், நிறைவேறுமா எனும் நிராசையில் உழன்ற அரவிந்த் மற்றும் அவரது சகாக்கள் இந்த ஜன லோக்பால் சட்ட வரையறையை வகுத்தனர் .பரிவர்தன் அமைப்பில் அவரது அனுபவமும் இதற்கு கணிசமாக உதவியது .ஊடகங்களை அவர் சந்திக்கும் முன்னர் நாம் அவரிடம் கேட்டது "இந்தியா மட்டுமல்லாது ,உலகெங்கிலும் உள்ள இந்தியர்களிடமிருந்து இத்தகைய ஒருமித்த ஆதரவை எதிர்பார்த்தீர்களா?" "உண்மையில் ,இல்லை" "அதனால் தான் என்னவோ இத்தகைய ஆதரவு பெறும் ஊக்கத்தை அளிக்கிறது "
ரீ .டை - "உங்களது பிரதான போராட்டம் ஊழலுக்கு எதிராக ,இத்தருணத்தில் ஊழல் குற்றசாட்டுக்களில் சிக்கியுள்ளவர்களான தபால் துறை தலைவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, காவல்துறை உயரதிகாரி, வருமானவரி துறை அதிகாரி போன்றவர்கள் அடக்கம், இது எத்தகைய முரண் அல்லவா ?"
அ.கே -இதற்கு காரணம் நமது அமைப்புகள் ஊழலுக்கு துணை நிற்பது தான், மேலும் அவர்கள் நேர்மையற்றவர்களாகவும்,சக்திமிக்கவர்களாகவும் உருவாகிவருகின்றனர்,இவர்களுடைய இத்தகைய நடத்தை நம்மை நோக்கி, நம் சமூகத்தை நோக்கி பெறும் சவலாக விரிகிறது, "நாங்கள் இப்படி தான் இருப்போம், உன்னால் முடிந்ததை செய்து பார்" எனும் அறைக்கூவல், நமது இன்றைய தேவை நேர்மையை ஊக்குவிக்கும், மற்றும் ஊழலை கைகழுவும் ஒரு அமைப்பே ஆகும் .
ரீ .டை -உங்களது ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் உங்களது மாணவ பருவத்திலயே தொடங்கியதா ?
அ.கே-இல்லை அப்பொழுது எனக்கு படிப்பை தவிர வேறு எதிலும் நாட்டமில்லை, அதனாலயே நான் ஐ.ஐ.டி காரக்பூர் செல்ல முடிந்தது .
ரீ.டை - மேலும் நீங்கள் ஏன் பெரும்பான்மையான ஐ.ஐ.டி காரர்கள் போல் வெளிநாடு செல்லவில்லையா ?
அ.கே- ஆம், ஒரு வகுப்பின் 80-90% ஐ.ஐ.டி மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது உண்டு, நான் டாட்டா குழுமத்தில் இணைந்தேன் ஆனால் வெறும் பொறியியல் படிப்புகள் உதவாது என்று உணர்ந்தேன், என் முன் மூன்று வாய்ப்புக்கள் இருந்தன, மேலாண்மை துறை, வெளிநாடு, அல்லது சிவில் சர்வீஸ், நான் சிவில் சர்வீசை தேர்ந்தெடுத்தேன், முன்னனுபவம் எதுவும் இல்லை என்றாலும், மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் எனும் உந்துதல் இருந்தது, அதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன்.
ரீ.டை -பின்னர் உங்கள் பொதுவாழ்க்கை எப்படி தொடங்கியது ?
அ.கே- நேர்முக தேர்வு அழைப்புக்காக காத்திருந்த சமயம்,டாட்டாவில் எனது வேலையை துறந்து, ஒரு ஆறு மாதம் இந்தியா முழுவதும் பயணித்தேன்,கொல்கத்தா சென்று வரிசையில் நின்று மதர் தெரசா அவர்களை சந்தித்து "நான் உங்களோடு பணிபுரிய விரும்புகிறேன்" என்று தெரிவித்தேன் ,எனது கரங்களை பற்றிக்கொண்டு "காளிகாட்டுக்கு சென்று செயல் படு " என்றார் .
ரீ.டை - அங்கு நீங்கள் செய்த பணி என்ன?
அ.கே- கொல்கத்தா முழுவதும் அலைவோம் ,எங்கும் என்னை சுற்றி வறுமை நிறைந்து இருந்தது, நோய்மை மலிந்து இருந்தது, பலரையும் காண்போம், உடலெங்கும் ஆறாத புண்களோடு சாலைகளில் தவிப்பதை கண்டிருக்கிறேன்.அவர்களை காளிகாட்டிற்கு கொண்டுவந்து அந்த புண்களுக்கு சிகிச்சை செய்வோம்,சிலர் இறக்க கூடும்,மதர் தெரேசா அவர்களின் விருப்பபடி அவர்களை உரிய கௌரவத்தோடு உயிர் துறக்க விடுவோம், அவர்களுடன் எப்போதும் நாங்கள் யாரேனும் இருப்போம் .
ரீ.டை - வேறு எங்கு பயணம் செய்தீர்கள் ?
அ.கே- மதர் தெரேசா அவர்களின் இடத்தில் இரண்டு மாதங்கள் கழிந்தது,அதற்கு முன்பே போடோலாண்டின் உட்பகுதிகளுக்கு சென்றுள்ளேன், பின்னர் நான் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்தேன், சிறிது காலத்தில் நேரு யுவ கேந்த்ரா அமைப்பிலும் இனைந்து ஹரியானா முழுவதும் பயணித்தேன், பின்னர் நேர்முக தேர்வுக்கான அழைப்பு வந்ததும் வீட்டிற்கு திரும்பினேன், என் வாழ்வின் இந்த பகுதியை நான் நேசித்தேன், நான் ஐ.ஆர் .எஸ் இல் இணைவதற்கு முன் பல்வேறு மக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களோடு உரையாடி இருக்கிறேன் ,
ரீ.டை -உங்களது இந்த பயணத்தை உங்கள் தந்தை வகுத்தாரா ?
அ.கே- இல்லை, அவர் பெரிதும் கவலை பட்டார், நான் அந்த காலங்களில் அவர்களின் தொடர்பு வட்டத்திலிருந்து விலகி இருந்தேன், அப்பொழுது செல்போன்களும் இல்லை, நேற்று வரை நன்றாக தானே இருந்தான் இப்பொழுது என்ன ஆயிற்று திடிரென்று ? என்று வருந்தினார்.
ரீ.டை -உங்களது ஐ.ஆர்.எஸ் நாட்களை பற்றி சொல்லவும்
அ.கே- இத்தகைய பயணங்களுக்கு பின் இது எனக்கு ஒரு திடீர் மாற்றமாக உறைத்தது, எனக்கு ஏதுவான துறை இது இல்லை என்றே எண்ணிவந்தேன், பயிற்சி காலத்தின் பொழுது அதாவது 1995 ஆம் ஆண்டு ,இதில் நான் மகிழ்ச்சியாக இருக்கபோவதில்லை,நான் இந்த வேலைக்கு தகுதி இல்லாதவன் என்றும் இதை தொடர வேண்டுமா என்றே நான் எனது பேராசிரியர்களிடம் கூறி வந்தேன், அவர்கள் இந்த பணியில் தொடர்ந்து நீடிக்க சொல்லியும், அவசரப்படவேண்டாம் என்றும் அறிவுரித்தினர் .
ரீ.டை - அப்பொழுதே இது ஒரு ஊழல் மலிந்த அமைப்பு என்பதை புரிந்துகொண்டீர்களா ?
அ.கே-இல்லை, நான் ஐ.ஆர்.எஸ் ஆக எனது பணியை முழுவதும் நேசித்தேன், நான் வேலைசெய்த வருமானவரி துறை நல்ல வாய்ப்புக்களை கொடுத்தது, நான் அதில் என்றுமே ஊழலுக்கு பலியாகவில்லை
ரீ.டை - நீங்கள் பலிகடா ஆகவில்லை என்று கூறுகிறீர்கள், நீங்கள் சொல்ல வருவது என்ன, புரியவில்லை
அ.கே- மற்ற துறைகளை பற்றி தெரியவில்லை, ஆனால் எனது துறையான வருமான வரி துறையை பொறுத்த வரை, நாம் நேர்மையாக இருந்தால் நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. பொதுவில் அரசாங்க பணியில் நேர்மையாக இருந்தால் அவர்கள் பலிகடா ஆக்கப்படுவார்கள் என்று ஒரு நம்பிக்கை உண்டு. எனக்கு நல்ல பணி கிடைத்தது, நிறைவாகவே செய்தேன், நான் அந்த பணியில் மகிழ்ச்சி இல்லாமல் அங்கிருந்து வரவில்லை, நான் அந்த பணியை முழுமூச்சுடன் நேசித்தேன் .
ரீ.டை -நீங்கள் இந்த அமைப்பில் உள்ள ஊழலின் பால் வெறுப்பு கொண்டு இங்கிருந்து வெளியில் வந்ததாக நான் எங்கோ வாசித்தேன் ..
அ.கே- இல்லை, நான் எங்கும் ஊழல் திளைத்து இருப்பதை கண்டேன், மேலும் அரசின் ஒரு பங்காக இருந்து கொண்டே இந்த ஊழலுக்கு எதிராக எதுவும் செயலாற்ற முடியாது என்பதையும் நான் உணர்ந்தே இருந்தேன். நான் பல்வேறு வழிகளில் ஊழலுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் கொள்ள தொடங்கினேன்,ஆனால் அது எனது சகாக்களுக்கோ, சீநியர்களுக்கோ தெரியாது .
ரீ.டை - ஒரு உதாரணத்திற்கு ,நீங்கள் என்ன மாதிரி செயலாற்றி வந்தீர்கள் ?
அ.கே- ஐ .ஆர் .எஸ் வட்டத்தை தாண்டி எனக்கு பல நண்பர்கள் உண்டு, 2000 ஆம் வருடம் ஒரு டின்னரின் பொழுது "பரிவர்தன்" தொடங்குவதாக முடிவு செய்ய பட்டது, எனது மாமாவும் சகோதரனும் அவர்களால் ஆனதை நன்கொடையாக அளித்தனர், ஒரு 50,000 ரூபாய் கொண்டு டெல்லி முழுவதும் துணி பதாகைகளும், துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டது ,அதில் "வருமானவரிதுறையில் எந்த லஞ்சமும் கொடுக்காதீர்கள்,உங்களுக்கு எதுவும் சிக்கல் என்றால் பரிவர்த்தனை தொடர்பு கொள்ளுங்கள், நாங்கள் இலவசமாக தீர்த்து வைக்கிறோம் " என்று எழுதினோம், அத்தோடு எங்களது தொலைபேசி எண்களையும், மின் அஞ்சல்களையும் கொடுத்தோம் .
ரீ.டை - இப்படி துவங்குவதற்கு,ஏதும் குறிப்பிட்ட சம்பவங்களோ, காரணங்களோ பின்புலத்தில் உண்டா ?
அ.கே- இல்லை, ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டம் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும் இல்லையா, அதனால் வருமான வரித்துறையில் தொடங்கினோம்,ஏனெனில் நான் அத்துறையில் இருந்தேன் அதன் விதிகள்,நடைமுறைகள்,முடுக்குகள் அனைத்தும் எனக்கு அத்துபடி, வேறொரு துறை என்றால் அதன் விதிகள், கொள்கைகள் பற்றிய புரிதல் தேவை படும் இல்லையா?
ரீ.டை - உங்களது சக ஊழியர்களுக்கு இது எப்பொழுது தெரிந்தது ?
அ.கே-இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நான் அதிகம் விடுப்பு எடுக்க தொடங்கினேன், ஊதிய இழப்புடன் உள்ள விடுப்புகள் கூட போக போக எடுக்க தொடங்கினேன், சில தன்னார்வலர்கள் தொடர்ந்து இயங்கி வந்தனர், நான் வெறுமே பின்புலத்தில் உதவிகளை செய்து வந்தேன்.
ரீ.டை - இந்த செயல்பாட்டின் விளைவுகள் எவ்வாறு அமைந்தது ?
அ.கே- மக்கள் எங்களை நோக்கி வர தொடங்கினர், ஒரு 18 மாதங்களில் 800 கேஸ்களை முடித்தோம். பின்னர் வருமானவரிதுறையில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்களை கோரி பொது நல மனு ஒன்றையும் நாங்கள் தாக்கல் செய்தோம், அதே சமயத்தில் மின்சார துறையிலும் இதை தொடங்கினோம். வருமான வரித்துறை சிக்கல்கள் அதிகமாக தங்களை தாங்களே தற்காத்துகொள்ளும் வல்லமை கொண்ட உயர் வர்கத்தினருக்கோ, உயர்-மத்திய வர்கத்தினருக்கோ வரும் சவால்கள், மேலும் இங்கு ஊழலானது இரு பக்கங்களிலும் நிறைந்து இருப்பது ஆகும். ஆனால் மின்சார துறை அனைத்து வர்கத்தினருக்கும் பொதுவானது, சேரியில் வாழும் ஒருவர் எங்களிடம் வந்து அழுது முறையிட்டார், ஒரே ஒரு மின்விசிறியும் சில விளக்குகளும் உள்ள அவரது மின் இணைப்பிற்கு 8 லட்ச ரூபாய் கட்டணம் வந்துள்ளது, இதற்கு காரணம் அங்கு நடந்த எளிய தவறு தான், ஆனால் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, நாங்கள் இந்த பிரச்சனையை முடித்து வைத்தோம், அவரது கட்டணம் 800 ஆக குறைக்கப்பட்டது. இம்மாதிரியான ஆட்கள் எங்களை தேடி வந்தார்கள்,பின்னர் பொதுவிநியோக துறையை நோக்கி திரும்பினோம், ஆனால் இப்படியே எத்தனை காலம் இது தொடர்வது என்று ஐயம் ஏற்பட்டது, இதற்கு நிரந்தர தீர்வு தான் என்ன ? முன்னர் மக்கள் சில குண்டர்களை நம்பினர், இப்பொழுது எங்களை, ஒரு வேளை பரிவர்தன் நாளை இல்லாமல் ஆகிபோனால், இவர்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுவர். இது தான் எனது கவலையாக இருந்தது, அப்பொழுது டெல்லி அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தை நிறைவேற்றியது -2001 ல் .
ரீ.டை -நீங்கள் அதற்காகவும் குரல் கொடுத்தீர்களா ?
அ.கே-இல்லை, ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு நாங்கள் போராடி இருக்கிறோம், டெல்லி அரசு இயற்றிய இந்த சட்டத்தை பற்றி எதேச்சயாக ஒரு நாளிதழில் சிறு செய்தி குறிப்பாக கண்டேன், அரசு இதிலும் சிறிய நாடகம் ஆடியது, சட்டத்தை நிறைவேற்றிய அரசு,அதை அனைத்து துறைகளுக்கும் அறிவிக்கவே இல்லை, நாங்கள் இந்த சட்டத்தை பயன்படுத்தி சில துறைகளில் விண்ணப்பித்தோம் ,ஆனால் அவர்களோ "இப்படி ஒன்று இருப்பதே தெரியாது" என்று கைவிரித்தனர், பின்னர் நாங்கள் தர்ணாவில் ஈடுபட்டு, முதல்வருக்கு கடிதங்கள் எழுதி பின்னர் அனைத்து துறைகளுக்கும் உரிய முறையில் தெரியபடுத்தபட்டது .
ரீ .டை - நீங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை எப்படி பயன்படுத்தினீர்கள்?
அ.கே - தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்துவது என்பது நமது அடிப்படை உரிமையில் ஒன்றாகும், இந்திய அரசியலமைப்பு சட்டம் எண் 19 ன் நீட்சியாகும். அசோக் குப்தா என்று ஒருவர் எங்களை தொடர்பு கொண்டார், புதிய மின் இணைப்பு கேட்டு இரண்டாண்டுகளுக்கு முன் விண்ணப்பித்த அவரிடம் 50,000 லஞ்சம் கேட்கப்பட்டது, "நான் அவர்கள் கேட்டதை கொடுக்கமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன், நான் இப்பொழுது என்ன செய்வது என்று சொல்லுங்கள், நீங்கள் இந்த மாதிரி சிக்கல்களை தீர்த்து வைக்கிறீர்கள் என்று அறிந்தேன்" என்று சொன்னார் ,நாங்கள் "மன்னிக்க வேண்டும், இந்த பிரச்சனையை எங்களால் எதுவும் செய்ய முடியாது, இதை நாங்கள் எடுத்துகொள்ள போவதில்லை" என்று சொன்னோம். ஆனாலும் நாங்கள் எங்களின் முதல் ஆர்.டி. ஐ முயற்சியை அங்கு தொடங்கினோம், சில அடிப்படை கேள்விகளை கேட்டு மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தோம், ஒரு 10 நாட்களிலையே குப்தாவிற்கு மின் இணைப்பு கிட்டியது .
ரீ.டை - அப்பொழுது எப்படி உணர்ந்தீர்கள் ?
அ.கே - இந்த சட்டம் மிகவும் சக்திவாய்ந்தது என்பதை புரிந்து கொண்டோம், இந்த சட்டத்தை பற்றி மக்களிடம் எடுத்து சென்று,இதை எப்படி பயன்படுத்துவது என்று கற்றுகொடுத்தால், மக்கள் நேரடியாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும், நடுவில் எங்கள் தலையீடு தேவைப்படாது, மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சி கிடைக்கும் .
ரீ.டை - நீங்கள் "பரிவர்த்தனை " தொடங்கிய பின் உங்களுக்கு அதிக சவால்கள் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன், அதாவது உங்கள் ஆட்கள் ஏதேனும் அரசு அலுவலங்களுக்குள் வருவதை அவர்கள் விரும்பி இருக்க மாட்டார்கள் இல்லையா ?
அ.கே - அநீதிக்கு எதிராகவும் ,ஊழலுக்கு எதிராகவும் நாம் குரல் கொடுக்கும் பொழுது,போராடும் பொழுது நாம் பலரின் பயங்கர வெறுப்புக்கு இலக்காகிறோம், இது அனைவரும் அறிந்ததே, தொடர் தாக்குதல்கள், சில வன்முறை சம்பவங்கள் கூட நடந்தேறியுள்ளன, அதுவும் பொது விநியோக முறைகளில் உள்ள முறைகேடுகளை நோக்கி நாங்கள் திரும்பிய பொழுது அவர்களின் எதிர்வினை வன்மம் மிகுந்ததாக இருந்தது ,ஒரு ரேஷன் கடைக்காரார் எங்கள் ஆட்களில் ஒருவரின் கழுத்தை கீறிய சம்பவம் கூட நடந்தது .
ஆனால் இவை அனைத்தையும் காட்டிலும், மிக பெரிய தடையாக நான் உணர்ந்தது, மக்களின் அவநம்பிக்கை மற்றும் விட்டேந்தி மனப்பான்மை தான். அதை எப்படி தகர்ப்பது என்பதே மிக பெரிய சவால் .நாம் நம் மக்களை வெவ்வேறு போராட்டங்களில் எப்படி பங்குகொள்ள செய்வது? தடைகளை பற்றி யோசிக்கையில் இதுவே மிக பெரிய தடையாகும் "நீங்களும் இதில் பங்குகொள்ளலாமே ? நிச்சயம் இது உங்களுக்கு உதவும்" என்று மக்களை நோக்கி சொல்வதே அது .
ரீ .டை - நீங்கள் ஒரு பொது நல ஆய்வு அமைப்பு ஒன்றை துவக்கி நடத்தி வருவதாக அறிகிறோம் ..?
அ.கே - ஆம், எனக்கு 2006 ல் மகசேசே விருது கிடைத்தது, அதில் வந்த பரிசு தொகை சுமார் 50,000$ களை கொண்டு ஒரு அமைப்பை உருவாக்கினோம், இங்கு சரியான முறையில் இந்த துறையில் ஆய்வுகள் இதுவரை நடைபெறவில்லை என்பதை உணர்ந்தோம் .ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தகவல் ஆணையர்கள் கொடுக்கும் பல ஆயிரம் ஆணைகளை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் .மேலும் சுய நிர்மாணம் குறித்தும் பெரிய அளவில் ஆய்வுகள் செய்து வருகிறோம் .
ரீ.டை- இப்பொழுது வரை நீங்கள் பல கேஸ்களை ஆய்வு செய்து இருக்கிறீர்கள் ,இதன் மூலம் நீங்கள் அறிந்து கொண்டது என்ன ?
அ.கே - ஒவ்வொரு ஆண்டும் பல புதிய விஷயங்கள் எங்களுக்கு புலப்படுகிறது. நாங்கள் நன்றாக பணிபுரிந்த தகவல் ஆணையர்களையும், குடிமகன்களையும் ஒவ்வொரு வருடமும் கௌரவித்து வருகிறோம். எங்களது மற்றொரு ஆய்வு - சுய ஆளுகை தொடர்பானது, பஞ்சாயத் ராஜ். அரசியல் அதிகார பரவலாக்கம் முழுவதுமாக நடந்து, முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மக்களிடம் வருவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாகும். சொல்வதற்கு எளிதாக இருந்தாலும், இதை நடைமுறையில் அமல்படுத்துவது எப்படி? அதனால் ஆளுகை தொடர்பாக உலக வரலாற்று பின்னணியிலும், நமது இந்திய பின்புலத்திலும் ஆய்வுகள் மேற்கொள்கிறோம், இப்பொழுது தான் "ஸ்வராஜ் " எனும் ஒரு புத்தகத்தை முடித்து உள்ளோம் - அதில் அரசில் என்னென்ன சீர்திருத்தங்கள் தேவை என்பதை பற்றி விவாதித்து உள்ளோம். முடிவெடுக்கும் அதிகாரம் படிப்படியாக நம் மக்களுக்கு சென்றடைய வேண்டும்,அதிகார வர்க்கமும்,அரசியல்வாதிகளும் அந்த முடிவை செயல்படுத்தும் துணை அமைப்புகளாக இருக்க வேண்டும். நாங்கள் சில சட்ட வரையறை மாதிரிகளை உருவாக்கி உள்ளோம், இந்த சுட்டியில் அதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம் ,
www.lokrajandolan.org .
ரீ.டை - இத்தகைய சுய ஆளுகை ,நடைமுறையில் மிகுந்த சிரமம் இல்லையா?
அ.கே - இல்லை, இதுவே மிக சுலபமான ,நடைமுறையில் சாத்தியமான முறையாகும். இன்றைய நமது ஜனநாயகம் இயங்கும் முறை மிகுந்த சிக்கலானது. ஒரு எளிய உதாரணம், நாங்கள் ஜார்கண்ட் மாநிலத்தில், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் - அங்கு எத்தனை பள்ளிகள் உள்ளன, எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டு விண்ணப்பித்தோம் .
பல பள்ளிகளிலும் சுமார் 800-900 மாணவர்களும், ஆனால் அங்கு ஒரே ஒரு ஆசிரியரோ, அல்லது அதுவும் இல்லாத நிலையே அங்கு உள்ளது .
இன்றைய சூழலில் மக்கள், கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி மந்திரிக்கும் தயவு செய்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புங்கள் என்று கோரிக்கை எழுப்ப முடியும், ஆனால் கல்வி துறை இயக்குனருக்கோ, அமைச்சருக்கோ வேறு பல சிக்கல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது இருக்கும், அதை விடுத்து எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு பள்ளிக்கு ஆசிரியர் நியமனம் செய்யமாட்டார்கள், அப்படியே செய்தாலும் அதற்கு லஞ்சம் பெறுவார்கள் .
மைய்யபடுத்தபட்ட அதிகார அமைப்பு மூலம் ஆசிரியர்கள் நியமனம் என்பது ஆசிரியர்களின் தகுதிகளை காட்டிலும் அவர்கள் கொடுக்கும் லஞ்ச தொகையால் நிர்ணயிக்கபடுகிறது, நாங்கள் முன்வைப்பது என்னவென்றால், இதை ஏன் மாநில தலைமைதான் செய்ய வேண்டும் என்கிறோம்? சட்டபூர்வமான அந்த கிராமத்து பஞ்சாயத்து அமைப்பு அமர்ந்து பேசி அவர்களுக்கு எத்தனை ஆசிரியர்கள் தேவைபடுவார்கள் என்று முடிவெடுத்து வேலையில் அமர்த்தட்டுமே ?
ரீ.டை - இது மீண்டும் கல்வித்துறை இயக்குனருக்கே செல்லுமா ?
அ.கே - இல்லை, ஒரு ஆசிரியர் அவரது பணியை சரியாக செய்யவில்லை என்றால் அவரை அந்த கிராம சபையே பணி நீக்கம் செய்யலாமே, அவர்களின் பிள்ளைகள் தானே அங்கு பயில்கிறார்கள்,ஏன் ஆசிரியர்களை ராஞ்சியோ, லக்நோவோ இல்லை டெல்லியோ பணியில் அமர்த்த வேண்டும் ?
இப்பொழுது நகரங்களையே எடுத்து கொள்ளுங்கள், நான் கெளசாம்பியில் உள்ளேன், எனது பகுதியில் சுமார் 4000 குடும்பங்கள் வசிக்கின்றன, சுமார் 1.3 கோடி ரூபாய் வீட்டுவரியாக வசூலிக்க படுகிறது, ஆனால் நல திட்டங்கள் பற்றி நாங்கள் சொல்வது எதுவுமே காதில் விழுவதில்லை, இவர்களுடைய செயல்பாடு சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன், நான் ஆர்.டி.ஐ மூலம் எனது வீட்டிற்கு முன் உள்ள சாலை ஏன் இப்படி மேடுபள்ளங்களாக இருக்கிறது என்று கேட்டேன். சொல்லபோனால் அது சாலையே இல்லை, மேலும் எங்கள் - கெளசாம்பி பகுதிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் என்ன செலவுகள் செய்யப்பட்டுள்ளன என்று கேட்டேன். உண்மையில் நான் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளானேன், எனது வீட்டிற்கு முன் சாலைக்கு 42 லட்சம் செலவு செய்ததாக அதில் இருக்கிறது ,ஆனால் அங்கு சாலையே இல்லை !
ரீ-டை- அப்படி என்றால் அந்த பணம் எங்கு சென்றது ?
அ.கே- அவர்கள் ரசீதுகள் மற்றும் அளவீடுகளின் நகல்களை எனக்கு அளித்தனர் ,அதை வைத்துகொண்டு நான் இனி என்ன செய்ய முடியும்? ஆர்.டி. ஐ இங்கு ஸ்தம்பித்து நின்றுவிடும், இதற்கு மேல் செல்ல முடியாது .இதன் மொத்த செயல்பாட்டில் நமது கட்டுப்பாடில் சில விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம் முதலில் எங்கள் பகுதியில் வசூலிக்கப்படும் இந்த பணம் எங்கு செல்ல வேண்டும் என்பதை முடிவெடுக்கும் உரிமை வேண்டும், பிறகு இராண்டாவதாக வேலைகளில் எங்களுக்கு திருப்தி ஏற்பட்டால் ஒழிய ஒப்பந்தகாரர்களுக்கு பணம் முழுவதும் கொடுக்க கூடாது .
அரசு இந்த 1.3 கோடிகளில் ஒரு 30 லட்சத்தையாவது மக்களின் தேவைகளுக்கேற்ப அவர்களின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டால் மக்கள் மகிழ்ந்து இருப்பார்கள் .பிறகு மற்றுமொரு பிரச்சனை, அதிகாரிகள் எல்லார் வீடுகளிலும் வீட்டு வரி வசூலிக்கவில்லை என்பது தெரிந்தது, ஆய்வாளர் நமது பகுதிக்கு வந்து நம் மக்களுக்கு எவ்வண்ணம் வரி கட்டாமல் தப்பிப்பது என்பதை கற்றுகொடுத்துவிட்டு செல்வார்கள். பத்து வருடங்களாக வரி கட்டாத குடும்பங்களை கூட நாங்கள் சந்தித்தோம், ஏன் என்றால் ஆய்வாளர் வந்து "எனக்கு ஒரு 2000 கொடுங்கள் உங்களது கோப்பை கானமலடித்துவிடுகிறேன் " எனும் உத்திரவாதம் அளிக்கிறார்கள். பின்னர் நாங்கள் வீடுவீடாக சென்று நூறு சதவிகித வரியை வசூலித்தோம்.
ரீ.டை- ஆக இந்த பணத்தை நீங்கள் அரசாங்கத்திற்கு திருப்பி அளித்தீர்களா ?
அ.கே -நாங்கள் அவர்களிடம் சொன்னது " அனைவரின் காசோலைகளும் எங்களிடம் உள்ளது, எங்களுக்கு முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படவில்லை என்றால் நாங்கள் யாரும் வீட்டு வரி செலுத்தபோவதில்லை" கொஞ்ச காலம் கழித்து நகராட்சி ஆணையர் எங்கள் பகுதிக்கு வந்தார் "அரவிந்த்ஜி நமக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு கொள்வோம்,நானும் கையெழுத்து இடுகிறேன்,அந்த உரிமையை உங்களுக்கே தருகிறேன் தயவு செய்து இப்பொழுது காசோலைகளை கொடுத்து விடுங்கள்,நாங்கள் நம்பிக்கையோடு காசோலைகளை கொடுத்தோம், ஆனால் மறுநாளே அவரது நிலைப்பாடு அப்படியே மாறியது "இதற்கு எனக்கு அதிகாரம் இல்லை"என்றார்,மக்கள் மீண்டும் சோர்வடைந்துவிட்டனர்.
எங்கள் பகுதியில் பல சாலைகள் பொத்தலாக இருக்கின்றன, அனைத்து சாலைகளையும் சீர் செய்ய சுமார் 30-40 லட்சம் தேவைப்படும் என்று கணக்கிட்டோம், ஆனால் அரசோ அந்த சாலைகளை சீர் செய்துவிட்டதாக கணக்கு காண்பிக்கிறது. ஆக மக்களிடம் இந்த முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் ,பிராந்திய பிரச்சனைகளுக்கு சரியாக முன்னுரிமை அளிக்கப்படும், மேலும் செலவீனங்கள் வெகுவாக குறையும் ,ஊழலும் இல்லாமல் போகும்.
பாகிஸ்தானோடு நமது உறவு எப்படி இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் உரிமையை நான் கோரவில்லை,நமது அன்றாட தேவைகளான குடிநீர், சாலைகள், ஆசிரியர், மின்சாரம் போன்றவற்றை பற்றியே பேசுகிறேன். இன்று இந்த தேவைகளை எல்லாம் எடுத்து சொல்ல சரியான தளங்கள் இல்லை, எங்கோ சம்பந்தமே இல்லாமல் ஓரிடத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நம்மீது திணிக்கப்படுகிறதே என்பதே என் வருத்தம்.
ரீ.டை - இந்த மாற்றங்கள் மாறினால் நிச்சயம் ஊழல் குறையும் ..
அ.கே- ஊழலே மிக பெரிய பிரச்சனை என்று நாங்கள் எண்ணினோம், அதை தீர்க்க வேண்டும் என்று முயற்சித்தோம், ஆனால் உண்மையில் ஊழல் உள்ளே இருக்கும் நோயின் ஒரு அறிகுறியே என்பதை புரிந்துகொண்டோம் .உணமையான நோய் என்பது - மக்களுக்கு இந்த அமைப்பில் சுத்தமாக அதிகாரம் என்பதே இல்லை என்பதே, அவர்களின் கருத்துக்களுக்கு எந்தவித முக்கியத்துவமோ மதிப்போ இல்லை .
ரீ .டை - உலகெங்கிலும் நடக்கும் ஊழலை கண்காணிக்கும் அமைப்பான "டிரான்ஸ்பறேன்சி இன்டெர்நேஷனல்" போன்ற அமைப்புகளின் கூற்று படி, அதிக ஊழலில் ஈடுபடும் நாடுகள் அனைத்துமே ஏழ்மையில் மூழ்கி உள்ளதே, ஏன் இப்படி ?
அ.கே-இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருங்கியது என்பதே என் கருத்து, ஊழல் மலிந்து இருப்பதாலையே நாம் ஏழ்மையில் இருக்கிறோம், ஒன்றுக்கு மற்றொன்று உணவாக ஆகி வளர்கிறது. இது கோழியையும், முட்டையையும் போல, ஏழ்மை மக்களை பலவீனமாக்குகிறது, அதனால் அது மேலும் ஊழலை உருவாக்குகிறது .
ரீ.டை -நீங்கள் மக்களுக்காக இவ்வாறு தொடர்ந்து செயல்பட்டுவருகிரீர்கள், நீங்கள் வித்தியாசமானவர் தான், உங்கள் நட்பும் சொந்தமும் உங்களை எப்படி பார்க்கிறார்கள் ?
அ.கே- உண்மையில், சிலருக்கு மின் இணைப்பு பெற்று தருவது, சிலருக்கு பணத்தை மீட்டு தருவது போன்ற எளிய காரியங்களை செய்வதை பார்த்து, பலரும் எனக்கு மூளை குழம்பிவிட்டது என்றே எண்ணினார்கள். மகசேசே விருது பெற்ற பின் என்னுடைய மாமா ஒருவர் சொன்னார் "இவன் அதிகமாக படித்து தன்னை கெடுத்து கொண்டான் என்றே எண்ணினேன், ஆனால் அவனுக்கு விருது கிடைத்துள்ளது, ஏதோ உருப்படியாக செய்து வருகிறான் என்றே தோன்றுகிறது "
ரீ .டை -இந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கிறது ?
அ.கே -நம் மக்கள் துவளாமல் உற்சாகத்தோடு செயல்படும் வரை எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகவே இருக்கிறது .
-சுகி
No comments:
Post a Comment