Thursday, August 22, 2013

தடங்கலுக்கு வருந்துகிறேன்


"உங்க வலைப்பூ முகவரி சொல்லுங்க?" 

"www.gandhitoday.in" 

"இது இல்ல, உங்களுக்குன்னு ஒன்னு இருக்குமே ..அது"

"இல்லை இப்ப கொஞ்ச நாளா அங்க நான் ஒன்னும் பெருசா எழுதுறது இல்லை.."

"அப்படியா..இது காந்திய தான எனக்கு யாருன்னு காட்டும்..உங்கள எப்படி தெரிஞ்சுக்குறது?"
---
இப்படியாக ஒரு உரையாடல் ஜூன் மாத விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் ஏற்காடு முகாமில் எனக்கும் பசுமைப் புரட்சியின் கதை எழுதிய சங்கீதா ஸ்ரீராமுக்கும் நடைப்பெற்றது. யோசித்து பார்த்தேன்.நெசந்தான். இதுவே மீண்டும் வலைப்பூவுக்கு வர முதல் காரணம்.  


உலகத்தை ஒரு சுற்று சுற்றி வந்த மாதிரி ஒரு நெனப்பு. நெனப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆனா இன்னும் தரைல தானே நடக்கென். சொந்த வலைப்பூவில் எழுதுவது என்பது வீட்டு திண்ணையில் உட்கார்ந்து வம்படிப்பது போல் ஒரு அலாதியான சுகம், மனதிற்கு ஒரு நெருக்கம். வெளியே எழுதித் திரிவது என்பது தயார் செய்துக்கொண்டு பேச்சு போட்டிக்கு செல்வது போல். உழைப்பைக் கொடுக்க வேண்டும், கவனம் கிடைக்கலாம். இடைப்பட்ட காலகட்டத்தில் வாழ்க்கையில் எத்தனையோ மாறிவிட்டது. திருமண வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தாகிவிட்டது. இரண்டு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. அதுவும் அவை இசைஞானியின் கையால் வெளிவந்தது பெரும் பாக்கியம். காந்தி இன்று தளம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதற்கான அங்கீகாரமும் கிட்டியது. தொடர்ந்து வாசித்து வாசிப்பை பகிர ஆம்னிபஸ் வந்தது. அங்கும் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்வனத்திலும் அவ்வப்போது எட்டிப் பார்த்துகொண்டிருக்கிறேன். உருப்படியாக ஒரு ரெண்டு சிறுகதை கூட எழுத வந்துவிட்டது. நான் பெரிதும் மதிக்கும் ஆசான் ஜெ அவர்களின் ஆசிகளும், நல்ல நட்பு சூழலும் வளர்ந்திருக்கிறது. ஆனால் இத்தனைக்கும் பின்னர் மீண்டும் அதே இடத்தில் நிற்பது போல் இருக்கிறது. என்னை துரத்தும் கேள்விகள் இன்னும் துரத்திக்கொண்டே தானிருக்கின்றன, முன் எப்பொழுதையும் காட்டிலும் அதி தீவிரமாக. இளைப்பாற நேரமில்லை. ஒருகணம் நின்றாலும் அவை என்னை விழுங்கிவிடுமோ எனும் அச்சம் இருக்கிறது. ஆனால் இந்த பயணம் ஒரு தெளிவையும் கொடுக்கிறது. விடைகள் அல்ல, கேள்விகளே முக்கியம். கேள்விகளே நம்மை தேடச் செய்கின்றன, விடைகள் நம்மை தேங்கச் செய்கின்றன. கொஞ்சம் நிதானம் கைக்கூடியதாக கூட தோன்றுகிறது. இந்த ஒன்னு ஒன்னரை ஆண்டுகால வெளிப் பயணத்தின் வழி சேகரித்த செல்வங்கள் எல்லாம் ஆங்காங்கு சிதறிக் கிடக்கின்றன. ஒன்னும் அவசரமில்லை தான். இருந்தாலும் எல்லாத்தையும் ஒன்றாக கோர்க்க வேண்டும். ஆகவே கொஞ்ச காலத்திற்கு தினம் ஒரு பதிவா எல்லாத்தையும் இங்க வந்து கொட்டிடலாம்னு இருக்கேன்.  

இந்த வலைப்பூ தொடங்கிய ஜோரில் நான் கண்ட வலையுலகம் இன்று இல்லை என்பதாகவே எனக்கு படுகிறது. எல்லோரும் ஃபேஸ்புக்கில் பிசியாக இருக்கிறார்கள். நமக்கு அது ரொம்ப தோது படலை. அளவோட பயன்படுத்திக்கலாம். அங்க மார்கேட்டுல இறையுற மாதிரி ஒரே சந்தடி அதான் இங்கயே திரும்பிட்டேன்.     

தடங்கலுக்கு வருந்துகிறேன். மீண்டும் நானே வருவேன். 

2 comments: