புத்தகங்கள்

Pages

Thursday, August 29, 2013

வாசுதேவன் சிறுகதை- சில எதிர்வினைகள்

இக்கதைக்கு வந்த எதிர்வினைகளை ஒட்டுமொத்தமாக தொகுத்து வைத்துள்ளேன். அவை பாராட்டுகிறதா நிராகரிக்கிறதா என்பது முக்கியமல்ல. கதையை வாசித்து காழ்ப்பின்றி ஆற்றப்படும் அத்தனை எதிர்வினைகளும் முக்கியமானதே, ஆக்கப்பூர்வமானதே. ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்வினைகளையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு முழுமையான சித்திரம் கிட்டுவதாக தோன்றுகிறது.


Tuesday, August 27, 2013

வாசுதேவன் - சிறுகதை



பட்டணத்து அரவங்கள் வந்தடைய முடியாத புறநகர்ப் பகுதியில் அவர்களின் வீடு இருந்தது. மின்சார ரயில்கள் கணப்பொழுதில் ஓடி மறையும் ஒரு ரயில்வே கேட்டில் மணிக்கணக்காக காத்து நின்றுதான் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியும். பொறுமையிழந்து மெல்ல வண்டியை விட்டிறங்கி, வண்டியை ஒருபக்கம் சாய்த்து நானொரு பக்கம் சாய்ந்து கேட்டின் அடிப்புறம் வழியாக புகுந்து வெளிவந்தேன். இளங்கோ இறங்கிச் சென்று மறுவாயிலில் காத்திருந்தான்.

“மாப்ள இடம் சரியா நெனவிருக்கா…? எங்கயோ பொட்டலுக்கு நடுவுல கூட்டிட்டு போனாய்ங்க.”

“அவர் ஃபோன் நம்பர் இருக்குல... வேணும்னா கேட்டுக்குவோம்”

“ பிசாத்து காசு முன்னூறு ரூவாக்காக எவ்ளோ தூரம்டா வர்றது? ச்ச. நாய் பொழப்புடா மாப்ள, பொணத்துக்கெல்லாம் வைத்தியம் பாக்க வேண்டியதாப் போச்சு”

திரும்பிப் பார்த்து முறைத்தேன். சரளை கற்கள் குத்தீட்டிப் போல் நீட்டிக்கொண்டிருக்கும் அந்தச் செம்மண் சாலையில் சென்று கொண்டிருந்த போது, தற்செயலாக அவன் வாய்விட்டு சொன்னதைத்தான், நானும் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

பணம்கூட பிரச்சனையில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் எங்கள் துறைத் தலைவரின் ஏவலாட்கள் மட்டுமே. பயிற்சிக் காலத்தை ஒழுங்காக முடித்துக்கொண்டு ஊர் திரும்ப வேண்டும். நோயாளிகள் தப்பித்தவறிகூட எட்டிப் பார்க்காத புறநோய்ப் பிரிவு கொண்ட மருத்துவமனை எங்கள் கல்லூரியுடையது. அனுபவ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமே என வேண்டி விரும்பி நாங்களாக சென்றுதான் அவ்வட்டாரத்தில் பெரும் புகழோடு இருக்கும் அவரிடம் பணி செய்ய ஒப்புக் கொண்டோம். காலையும் மாலையும் அங்கேயே தவம் கிடந்தோம். காலப்போக்கில் சலிக்கத் தொடங்கியது. சம்பளமில்லாத அடிமைகளாக சிக்கிவிட்டதால் சக்கையாக வேலை வாங்கினார். மருத்துவ நுட்பங்களைக் கற்றுக் கொண்டோமா என்றால் அதுவுமில்லை. நோயாளிகளை அண்ட விடமாட்டார். மருந்துகள்கூட பட்டிகளைப் பிய்த்து மொத்தமாக புட்டிகளில் அடைத்து, வரிசை எண் போட்டு வைத்திருப்பார். எல்லாவற்றிலும் ஒரு ரகசியத்தன்மை. எரிச்சலாக வந்தது. எண்ணெய் தேய்த்து விடுவது, பிழிச்சல், கிழிகள் செய்வது எங்கள் வேலை. அத்துடன் துண்டுச் சீட்டில் அவர் எழுதிக் கொடுக்கும் எண் கொண்ட மருந்துகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். இன்னும் மூன்று மாதங்கள்தான் எங்கள் பயிற்சிக் காலம் என்பதால் சகித்துக் கொண்டு வெளியேறிவிடலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தபோதுதான் இங்கு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

“மாப்ள... இந்த வீடுதான்னு நெனக்கிறேன்...வெளியே அந்த ஆர்ச் வளவு இருக்கு பாரு” .

கை கால்களில் பாயும் ரத்தமெல்லாம் வற்றி வயிற்றுக்குள் வடிந்து புரண்டு புரண்டு பாய்ந்தோடுவது போலிருந்தது. அச்சமா? அருவருப்பா? சொல்லத் தெரியவில்லை. உருக்குலைந்து துருப்பிடித்த இரும்புக் கம்பி மீது அடர்நீல சங்குப்பூ  செடி சாய்ந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு நானும் இளங்கோவும் இறங்கிச் சென்றோம். சாம்பல் நிற நாட்டு நாயொன்று ‘வள்ளென’ பாய்ந்து வந்தது. கதவருகே பம்மி நின்றுவிட்டோம்.

மண்ணில் எதையோ கொத்திக் கொண்டிருந்த வரதராஜன் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து நின்றார்.

“வாங்க தம்பி… வாங்க... இப்பத்தான் சார் ஃபோன் பண்ணாரு.” களைக்கொத்தியை கீழே போட்டுவிட்டு, முண்டா பனியனில் கை துடைத்துக்கொண்டு கைலியை உதறியபடியே எங்களை நோக்கி வந்தார்.
“உள்ற வாங்க தம்பி...”

“இல்ல... நாயி”

கதவை அவரே திறந்துவிட்டப்படி, “அது இப்படிதான் சும்மா கத்தும்...ரே லோப்ல போரா” என்று அதட்டினார்.

“உள்ற  வாங்க... நான் பாத்துக்குறேன்”

மெல்ல வீட்டிற்குள் நுழைந்தோம். நடுத்தர வர்க்கத்துச் சிறிய வீடுதான். வர்ணங்கள் உதிர்ந்து ஆங்காங்கு உலர்ந்த சிமிண்ட் சர்மம் புலப்பட்டது. முன்பகுதியில் சிறிய தோட்டம் போட்டிருந்தார்கள். வெண்டைக்காய், மணத்தக்காளி, கர்ப்பூரவல்லி, இன்னும் விதவிதமான பூச்செடிகள் தென்பட்டன. நல்ல வளமான செம்மண் நிலம். சுற்றுச் சுவரோரம் நான்கு தென்னை மரங்கள் இருந்தன. மாமரங்களும் பலாமரங்களும்கூட இருந்தன.
“உக்காருங்க தம்பி... வாசுவ தயார் செஞ்சுட்டு கூப்புடுறேன்... காபி கொண்டாரச் சொல்லட்டா?”

“இல்லை, வேணாம் சார்”

“ஏன்?”

“காப்பி, டீ சாப்புடுறதில்ல”

இடைமறித்து இளங்கோ, “சார் பூஸ்ட் ஹார்லிக்ஸ்ன்ன ஓகே” என்றான்.
“சரி தம்பி... பூஸ்ட் தரச் சொல்லுறேன்... இருங்க... அம்மாயி, வாலிக்கி பூஸ்ட் ஈமா” என்று கூறியபடி வேறோர் அறைக்குள் மறைந்தார்.

எதிர்ச்சுவற்றில் பல கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப் புகைப்படங்கள் தொங்கின. அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒற்றைக் கோட்டு நாமம், காதில் கடுக்கன், அடர்ந்த தொங்கு மீசை என ஒருவரின் படமிருந்தது. பரட்டைத் தலையும் உடலை இறுகப் பற்றியிருக்கும் பூப் போட்ட சட்டை, பட்டுப் புடவை மற்றும் வைர ஆரமும் அணிந்த ஒரு பெண்ணுடன் அவர் நிற்கும் படம் அடுத்து இருந்தது. வரதராஜனை அந்த அம்மாளின் முகத்தைக் கொண்டுதான் கண்டுபிடிக்க முடிந்தது. ஏறத்தாழ இதேபோலொரு புகைப்படத்தில் இருக்கும் அப்பாவின் தோற்றம் நினைவில் எழுந்து அமிழ்ந்தது. 

வண்ணத் திருமணப் புகைப்படத்தில் வரதராஜன் சஃபாரி அணிந்து ஒரு பக்கம் நின்றிருந்தார். ஆறேழு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கலாம். அநேகமாக மகளுடைய திருமணமாக இருக்க வேண்டும். இரண்டு இளைஞர்கள் பேண்ட் சட்டை அணிந்து காணப்பட்டனர். இதிலொருவன் வாசுதேவனாக இருக்கக்கூடும். அதற்கடுத்தாற்போல் பட்டதாரி கோலத்தில் ஒரு வண்ணப் புகைப்படம் தென்பட்டது. கண்ணாடி அணிந்த சிரித்த முகம். என் வயதிருக்கும். சிரிக்கையில் அழகாக கன்னத்தில் குழி விழுந்தது. மின்னல் போல சடாரென்று சென்ற வாரம் அங்கு வந்தபோது நான் பார்த்த வாசுதேவனின் முகம் நினைவுக்கு வந்தது. நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. என் வாழ்வில் நான் அப்படியான ஒரு முகத்தை பார்த்ததே இல்லை.

சரியாக ஒரு வாரத்திற்கு முன், நானும் இளங்கோவும் எங்கள் பேராசிரியருடன், வாசுதேவனின் தந்தை வரதராஜனின் அழைப்பின் பேரில் இங்கு வந்திருந்தோம். பேராசிரியர் தொலைக்காட்சிகளில் தோன்றி அவ்வப்போது ஆயுர்வேதம் குறித்து உரையாற்றுவது வழக்கம். அவ்வகையில் இப்பகுதியில் ஓரளவிற்கு புகழ் பெற்றிருந்தார். எதற்காக வருகிறோம் என்பதெல்லாம் அப்போது எங்களுக்கு தெரியாது. காரில் வரும்போது பேராசிரியருடன் வரதராஜன் மேற்கொண்ட உரையாடலை கவனித்து சில விஷயங்களை கிரகித்துக் கொண்டோம்.

வரதராஜன், சென்னையின் புறநகர்ப்பகுதியிலுள்ள பிரபலமான சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளுமுண்டு. அதிலொருவன் தான் நாங்கள் காணச் செல்லும் வாசுதேவன். வாசுதேவனுக்கு இப்போது முப்பத்தியிரண்டு வயது. நான்கு வருடங்களாக சுய நினைவின்றி இருக்கிறான். பல மருத்துவ முறைகளை முயற்சி செய்தாகிவிட்டது. ஆனால் இதுவரை எதிலும் பயனில்லை. இறுதி நம்பிக்கையாக அவர்கள் ஆயுர்வேதத்தை நாடி எங்கள் பேராசிரியரிடம் வந்திருக்கிறார்கள்.

வீட்டின் உள்ளறை ஒன்றில் ஆஸ்பத்திரி மடக்கு கட்டிலில் கிடந்தது அந்த உருவம். ஒரு கணம் மனம் அதிர்ந்தது. வெறும் எலும்புகளை மட்டும் கொண்டு மூட்டிய உடல். எலும்புகளுக்கு மேல் தோலை யாரோ உருக்கி ஊற்றியது போலிருந்தது. சதை என்ற ஒன்று இல்லவே இல்லை. இரண்டு நாசிகள் வழியாகவும் குழாய்கள் உள்ளே சென்றன. புறங்கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்குத் தோதாக நிரந்தரமாக நாள ஊசி குத்தப் பட்டிருந்தது. கண்கள் குழியின் ஆழத்திற்குள் தத்தளித்துக் கொண்டிருந்ததை மூடிய இமைகளுக்கு மேல் புலப்படும் அசைவுகள் காட்டிக் கொடுத்தன. கன்னங்கள் உள் பக்கமாகச் சப்பிப் போயிருந்தன. மொட்டையடித்து இரண்டு நாள் ஆன மாதிரி ஒட்ட வெட்டப்பட்ட தலை மயிர். அதுவும் தாறுமாறாக வெட்டப் பட்டிருந்தது. அநேகமாக வரதராஜனின் வேலையாக இருக்கும். வலது பக்கம் மண்டையோட்டின் ஒரு பகுதியைக் காணவில்லை. அங்கு ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. இரண்டு கோரைப் பற்கள் இருந்தால் ஆங்கில சினிமாக்களில் வரும் உயிர் குடிக்கும் உயிரற்ற ஃஜோம்பி என சொல்லிவிடலாம். இளங்கோ அந்தப் பகுதியை தொட்டுப் பார்த்தான். “மெதுக்குன்னு இருக்குடா... மூளைய தொட்டுட்டேனோ?” என காதில் கிசுகிசுத்தான்.

“அது, தலையில ப்ரெஷர் அதிகமாயிடுச்சுன்னு இந்த மண்டையோட்டு எலும்ப எடுத்துட்டாங்க, இங்கிருந்து அந்த மூளை திரவம் நேரா குடலுக்கு போற மாதிரி ட்யூப் போட்ருக்காங்க” என்றார் வரதராஜன்.

“வாசு…வாசு…இங்கப்பாருப்பா… இங்க பாரு... கண்ணு முழிச்சி பாருப்பா... கண்ணு தெரிச்சி சூடுப்பா... டாக்டர் ஒச்சினாரு...”

அனிச்சையாக கைகால்கள் அசைந்தன.

“டாக்டர்ன சூடுப்பா… கொஞ்சம் சூடுப்பா”

இடது குச்சிக்கை கட்டிலின் விளிம்பில் நின்று கொண்டிருந்த என்னைத் தீண்டியது. கையை உதறிக்கொண்டு பின்வாங்கினேன். ஒரு அமானுஷ்யமான ஒலி வாசுவிடமிருந்து எழுந்தது. அடிவயிற்றிலிருந்து கிளர்ந்தெழும் கேவல். புறா குனுகும் ஒலியையொத்திருந்தது.

வரதராஜன் கீழே இருந்த சக்சன் எந்திரத்தை அழுத்தினார். ஒரு குழாயை எடுத்து வாய் வழியாக உள்ளே சொருகினார். கபத்தை மெல்ல அந்த எந்திரம் இழுத்தது. மெல்ல நெஞ்சை நீவிவிட்டார்.

“ஒகட்டிலேதுப்பா ஒகட்டிலேது… அது புது ஆளுங்க இல்லையா... அதான் பதட்டப்படுறான்... நாம சொல்றது எல்லாம் அவனுக்கு கேக்கும் சார்... பழகப் பழக சரியாயிடும்”

என்னால் அங்கு நிற்க முடியவில்லை. இன்ன உணர்வு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ளியது. நான் அந்த அறையை விட்டு வெளியேறி முன்னறை சோஃபாவில் சென்றமர்ந்தேன். உள்ளே பேராசியரும் வரதராஜனும் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இளங்கோவும் உள்ளே இருந்தான்.

“என்ன தம்பி... வந்துட்டிங்க?” என்றார் அந்த வீட்டு அம்மா.

வியர்த்திருந்தது .“இல்ல... ஒருமாதிரி காத்து இல்லாம இருந்துது அதான்”.

ஃபோனை எடுத்துக்கொண்டு பேசும் பாவனையுடன் வேக வேகமாக வீட்டைவிட்டு வெளியேறி பேராசிரியரின் காருக்கருகே நின்றுகொண்டிருந்தேன். படபடப்பும் வியர்வையும் அடங்குவதாகத் தெரியவில்லை.

வாசுதேவன், பூமியின் நாயகன். பூவுலகத்தை காப்பவன். அலகிலா விளையாட்டு புரியும் லீலா வினோதன். அழிவற்ற பரம்பொருள். நல்ல அவல நகைச்சுவை. காலடி விழும்தோறும் சிதறும் எறும்புக் கூட்டம் போல் மனம் சிதறிச் சிதறிக் கூடியது. பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து இளங்கோவும் பேராசிரியரும் பேசிக்கொண்டே வெளியே வந்தார்கள். வரதராஜனும் அவருடைய மனைவியும் வாசல்வரை வந்து வழியனுப்பியபோதும்கூட நான் அவர்களை கண் கொண்டு பார்க்கவில்லை.

“தம்பி... உங்களத்தான்... ஏதோ பதட்டமா இருக்குறாப்ல தெரியுது... ஃபோன்ல ஏதாவது செய்தியா? எதுவா இருந்தாலும் பாத்து நிதானமா போங்க” புண்ணுக்குள் விரல் விட்டது போலிருந்தது அந்த அம்மையாரின் கரிசனம்.

எங்களிடம் சிகிச்சை செயல் திட்டத்தை விளக்கிக்கொண்டே வந்தார் பேராசிரியர். எதுவும் என்னுள் போய்ச் சேரவில்லை. சிகிச்சை செய்ய இவர் ஏன் ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அங்கு என்ன இருக்கிறது? உயிருள்ள பிணம்.

எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு கார் விரைந்தது.
“மாப்ள, இவருக்குன்னு வந்து வாய்க்குறானுங்க பாரு. ..பாத்திய அங்க கொண்டு போய் இறக்கி வெக்க சொல்லிருக்கார்... பிழிச்சலாம், நவரக் கிழியாம், வஸ்தியாம், மூக்குக் குழாய் வழியா தங்க பஸ்மமாம், என்னென்ன எல்லாம் வில ஜாஸ்தியோ எல்லாத்தையும் அடுக்கிட்டாரு நம்மாளு... எங்க பிள்ளைய காப்பாத்தி கொடுத்தா போதும், என்ன வேணாலும் செய்ங்க அப்டினுட்டாரு அந்த ஆளு... நாளுக்கு ஆயிரத்தைந்நூறு ரூபா சொல்லிருக்கார்... உனக்கும் எனக்கும் சேத்து முன்னூறு தராராம்... எல்லாம் காசுடா”

“அவருகிட்ட சொல்லி பாப்போம்டா... இது சரி வராது...”

“பேசிப் பாரு... அதெல்லாம் அவருக்கும் தெரியும்டா... தெரியாமையா? அந்தாளா வந்து சிக்குறார்... எதுக்கு விடணும்னு நெனப்பார்... வண்டில அவரு பேசுனத நீ கேக்கலையா? நீ எங்கயோ பாத்துக்கிட்டு வரும்போதே நெனைச்சேன்..யாரோ ஒருத்தன் இப்படி தான் இருபத்து மூணு வருஷம் கழிச்சி கோமாவுலேந்து கண்ணு முழிச்சானாம் அமெரிக்காவுல, ஃப்ரான்சுல பத்து வயசு பையனா கோமாவுல போனவன் அப்புறம் பதினெட்டு வருஷம் கழிச்சி முழிச்சானாம்... அதனால நம்பிக்கையோட செய்யனும்னு சொல்றாரு”

“இதெல்லாம் எங்கயோ, யாருக்கோ நடக்கிறதுடா... அவனுங்க எல்லாம் ஆயுர்வேத ட்ரீட்மென்ட்  எடுத்து  தான் கண் முழிச்சாங்களா? எனக்கு அவனத் திரும்பிப் பாக்க போகனும்னாலே என்னமோ செய்யுது... நீ வேணும்னா கணேஷ கூட்டிட்டுப் போ”

ஒரு வாரம் கழித்து நானே இங்கு வந்து நிற்கிறேன். கணேஷுக்கு வேறு இடத்தில் வேலை கொடுத்திருந்தார். பட்டணத்தின் மறுகோடியில் உள்ள வேறொரு நோயாளிக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டும்.

“டே குடிடா” இளங்கோ பூஸ்ட் குடித்துவிட்டு என்னைப் பார்த்துச் சொன்னான்.

வரதராஜன் கையை கைலியில் துடைத்தபடியே வெளியே வந்தார்.

“வாங்க தம்பி... போலாம்”

ஒரே மடக்கில் ஆறிய பூஸ்டைக் குடித்துவிட்டு எழுந்தோம்.

“ரே வாசு... இக்கட சூடுப்பா...”

ஒன்றும் அசையவில்லை. குச்சிக்கால்கள் இரண்டும் வலப்பக்கமாக மடிந்து கிடந்தன. நானும் இளங்கோவும் எண்ணெய் சூடு செய்தோம். அன்று அபியங்கமும் கிழியும் செய்ய வேண்டும்.

எண்ணெய் கிண்ணத்தில் விரல் விட்டு பார்த்தார். “பார்த்துப்பா..ரொம்ப சூடாக்க வேணாம்” என்று வாசுவை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் வெளியேறினார்.
ஏதோ நினைவு வந்தவராக மீண்டும் அறைக்குள் வந்து, “தம்பி, திடீர்னு சளி ஒரு மாதிரி அடைக்கும், சத்தம் போடுவான் , அப்ப இந்த சக்சன் போட்றுங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் மறைந்தார். சுவற்றில் ரமணரும், அரவிந்தரும், இன்னும் இன்ன பிற நவீன குருமார்களும் புகைப்படங்களாக வாசுதேவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருதார்கள்.

அருகிலுள்ள மரப்பாத்தியில் வாசு படுத்துறங்கிய விரிப்புடன் சேர்த்து தூக்கி வைத்தோம். ஆறடி வளர்ந்த எலும்பாலான குழந்தை. எடையற்று இருந்தான். முதல் ஸ்பரிசத்தில் ஏதோ ஒன்று பிசுபிசுவென்று ஒட்டுவது போலிருந்தது. மெல்ல தயங்கித் தயங்கி எண்ணெயை எடுத்து மெதுவாக கரங்களில் தடவினோம். மூங்கில் கழிகளுக்கு நீவி விடுவது போலிருந்தது. அவனுடைய முகத்தைப் பார்க்காமல் வேலை செய்ய பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு இது எப்படி இருக்கும்? வலிக்குமா? சுடுமா? சுகமாக உறக்கம் வருமா?

காலைப் புரட்டும் போதுதான் கவனித்தோம் சப்பைக்கு கீழ் படுக்கைப் புண் உண்டாயிருந்தது. கதவை திறந்து கொண்டு வரதராஜன் வந்தார்.
“தம்பி முடிஞ்சுருச்சா? அவனுக்கு பசிக்கும்... கஞ்சி கொடுக்கணும்...”

“நீங்க கொடுங்க... இன்னும் கிழி பாக்கியிருக்கு... ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்... கொஞ்சம் பவுடர் போடுங்க, அப்பப்ப திருப்பிப் படுக்க வைங்க. .. கீழ புண்ணு இருக்கு” என அவரிடம் புண்ணிருக்கும் பகுதியை சுட்டிக் காட்டினேன்.
“அய்யய்யோ... கவனமாதான் இருந்தோம்... எப்படியோ வந்துடுச்சு...  பாத்துக்குறேன்’”
மூக்குக் குழாய் வழியாக கஞ்சியை ஊற்றினார்.
“வாய் வழியா சாப்ட்டு பல வருஷம் ஆச்சு, ருசிய மறந்திருப்பான்...”. நிதானமாக கடைசி துளி வரை ஊற்றி முடித்துவிட்டு “சரி நீங்க வேலைய பாருங்க..” என்று சொல்லிவிட்டு சடாரென்று வெளியேறினார்.

கிழி செய்து முடித்து துடைத்து விட்டு மெதுவாக தூக்கி மீண்டும் படுக்கையில் கிடத்தினோம். போர்வையும் கோமணமும்தான் வாசுவின் உடை. கிழி செய்து முடித்தால் குளிரும். போர்வையைப் போர்த்திவிட்டு வியர்வை வழிய வெளியே வந்தோம்.

“முடிஞ்சுருச்சா? அங்க கைகால் கழுவிக்கலாம்...போங்க” என்றார் அம்மா.
கிளம்பினோம். மீண்டும் நாளைக் காலை இதே நேரத்திற்கு வருவதாக சொல்லிச் சென்றோம். அத்தனை அருவருப்பாக தோன்றவில்லை இப்போது. ஆனால் நம்பிக்கையில்லை. உண்மையில் இவன் உயிர் வாழ்ந்து என்ன பயன் என எனக்கு விளங்கவில்லை. உண்மையில் அவனை மீட்டிட முடியும் எனத் தோன்றவில்லை. இத்தனை செலவு செய்து சிகிச்சை செய்வது வீண் என்பதே எண்ணம். இப்படியே காத்துக் கொண்டிருப்பதில் என்ன பொருள்? எஞ்சியிருப்பவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும், செல்வத்தையும் உறிஞ்சுவதைத் தவிர வேறு என்ன பயனுள்ளது இந்த உயிருக்கு? உண்மையில் என் உயிருக்கு என்ன பயன்? அல்லது பிறக்கும் மரிக்கும் எந்த உயிருக்கும்தான் என்ன பயன் இருந்திட முடியும்? விளங்கவில்லை. சுவாசம் ஒருமாதிரி தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. மெல்ல கேள்விக் களைகளை ஒவ்வொன்றாக கெல்லி எறிந்து கொண்டிருந்தேன். வீரியத்துடன் புதிது புதிதாக அவை எழுந்து வந்தபடியே இருந்தன.

மறுநாளும் சென்றோம். கலக்கம் கொஞ்சம் குறைந்தது. ஒவ்வாத விஷயங்களுக்கும் மனம், வேறு கதியில்லை எனும்போது மெல்ல சமரசமடைந்து பழகிக் கொள்கிறது. ஒருவாரம் இப்படியே வருவதும் போவதுமாக கழிந்தது. மெல்ல எனக்கும் வாசுவுக்கும் ஒருவித பரிச்சயமும் நட்பும் மலர்ந்தது. உடல் ரீதியாக எந்த மாற்றமும் அவனிடம் தென்படவில்லை. அவ்வப்போது தன்னிச்சையாக கைகால்கள் அசையும். சில முனகல் ஒலிகள் எழும். வாய் மட்டும் திறந்து மூடும். இளங்கோவும் இப்போது புலம்புவதில்லை. அவனும் ஏறத்தாழ இதே மனநிலைக்கு வந்துவிட்டான். நொட்டை சொல்லாத வாடிக்கையாளர் இக்காலத்தில் கிடைப்பதரிது என எண்ணியிருக்கக்கூடும். நாளடைவில் வாசு சொல்பேச்சு கேட்கும் விளையாட்டுப் பொருள் ஆனான். உற்சாகமாகக் கிளம்பி வரத் தொடங்கினோம். தினமும் வரதராஜன் தவறாமல் “என்னப்பா சரியாயிடுமா? ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?” என்று கேட்பார். கொஞ்சம் காலம் பிடிக்கும் பார்க்கலாம், என்பது போல் பட்டும் படாமல் எதையாவது சொல்லிச் செல்வோம்.

பத்து பதினோரு நாள் கழிந்திருக்கும். அன்று வஸ்தி கொடுத்தோம். கஷாயம் செய்து ஆசனவாய் வழியாக மருந்தைச் செலுத்தினோம். ஒரு நிமிடம் கூட மருந்து தங்கவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்தது. கை சுத்தம் செய்து கொண்டு கிளம்பும்போது வரதராஜன் வந்தார்.

“தம்பி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்... சத்த நேரம் இருக்க முடியுமா?”
சோஃபாவில் அமர்ந்தோம். அந்த வீட்டு அம்மாவும் வந்து எங்களுடன் கூடத்தில் அமர்ந்தார். மெல்ல பேசத் தொடங்கினார்.

“தம்பி தப்பா எடுத்துக்காதீங்க… வாசுவப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு… இவன மாதிரி ஒரு புள்ள கிடைக்கமாட்டான் தம்பி... முன்னாடி கெடக்குற செடியெல்லாம் அவன் நட்டது தான்... பாத்துப் பாத்து தண்ணீயூத்துவான்... இப்ப அவனுக்கு நாங்க தண்ணியா ஊத்திகிட்டு கிடக்கோம்... எங்க புள்ள வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நடக்கக்கூட வேண்டாம், எங்ககூட பேசுனா போதும்... உங்க கைலதான் இருக்கு தம்பி” கண்களில் நீர் முட்டியது அவருக்கு.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருகணம் நான் உண்மையில் நம்புவதைச் சொல்லிவிடலாமா என்றுகூட தோன்றியது.
“சார் எங்களால என்ன முடியுமோ அதச் செய்றோம்.. மீதி எல்லாம் அந்த கடவுள் கையிலதான்” என்று முந்திக்கொண்டு சொன்னான் இளங்கோ.
“புரியுது, நான் உங்கள குற சொல்லல... ஏதோ தோணுச்சு சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிப் பாருங்க தம்பி... நாம சொல்லுறது அவனுக்கு கேக்கும்... நல்லதா நாலு வார்த்தைய மனசார நினைச்சுக்கிட்டே நம்பிக்கையோட செஞ்சு பாருங்க… தப்பா எடுத்துக்காதீங்க... அவன உங்க அண்ணனா நெனைச்சு செஞ்சு பாருங்க... அவன் நிச்சயம் நல்லா வருவான்..”

மௌனமாக அமர்ந்திருந்தோம். மெல்ல எழுந்து நின்று கிளம்பினோம். “சரி வர்றோம்... நாளைக்கு பாப்போம் சார்”.

வண்டியில் அமர்ந்த பின் இளங்கோ சொன்னான் “மாப்ள.. அவுங்க பாவம்டா. ரொம்ப நம்புறாங்க. பூஸ்ட் குடிச்ச வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாதுடா. ஒரு மாதிரியா இருக்கு... எதுவும் நடக்காதுன்னு சொல்லிரணும்டா. எதையாவது செஞ்சுக்குவாய்ங்க”

“வாசுகூட மனசு ரொம்ப நெருக்கமா ஆயிட்டிருக்குற மாறி இருக்குடா.. உனக்கு அந்த மாதிரி எதாவது தோணுதா? ரொம்ப நாள் பழகுன மாதிரி ஒரு ஃபீலிங்..”
சற்று நேரம் மெளனமாக இருந்தான். “எனக்கு அவன் மேல எல்லாம் எதுவும் தோணலடா. ஆனா அவன் அப்பன் ஆத்தாள நெனைச்சாதான் ஒரு மாதிரியா இருக்கு.. அவன் போய்ட்டானா அவிங்களுக்கு செய்யுறதுக்கு எதுவுமே இருக்காதுல?”
பேச்சு கொடுத்தால்தான் என்ன? ஒருவேளை ஆழ்மனதில் அவனுக்கிருக்கும் உயிர் இச்சையைத் தூண்டி விட முடியுமோ என்னவோ. அவர் சொல்வதிலும் ஒரு நியாயமிருப்பதாக தோன்றியது. இளங்கோவிடம் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் முதல் நான் மானசீகமாக அவனுடன் பேசத் தொடங்கினேன். “குட்மார்னிங் வாசு”. “நீங்க சீக்கிரம் குணமாயிருவீங்க... பழையபடி கைய அசைக்க முடியும்... கால அசைக்க முடியும்... வேலைக்குப் போகலாம்... அம்மாவும் அப்பாவும் உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க...” “எல்லாம் சரியாயிடும்”. மீண்டும் மீண்டும் மந்திரம் போல் மனம் அதையே உச்சரித்துக் கொண்டிருந்தது. “எல்லாம் சரியாயிடும்... எல்லாம் சரியாயிடும் நண்பா... எல்லாமே சரியாயிடும்” கண்களிலிருந்து நீர் தளும்பி வாசுவின் தோள் பட்டையில் வழிந்தது. எந்த அசைவும் இல்லை. எதுவுமே சரியாகாது. ஒருவேளை வாசுவிற்கும் இது தெரிந்திருக்கக் கூடும்.

நான்கைந்து நாள் கழிந்தது. வாசுவின் அறையிலிருந்து வரதராஜனுக்கு பதிலாக அவனுடைய அம்மா வெளியே வந்தார். பூஸ்ட் கலந்து எடுத்து வந்து கொடுத்தார்.
“தம்பி... சாப்பிடுங்க...”
“வாசு எங்களுக்குச் செல்லப் பிள்ள. .. தவமிருந்து பொறந்தவன். இப்பக்கூட அவன் கிட்ட மனசு விட்டு பேசிட்டு தான் வர்றேன். பாரமெல்லாம் கரைஞ்சுடும்… பேசுறத கேக்க யாருக்கு தம்பி இப்ப பொறுமை இருக்கு... வாசு கேப்பான். தினம் நான் அவன்கிட்ட கதையெல்லாம் சொல்லுவேன். கஷ்டமெல்லாம் சொல்லுவேன். கண்ணத் திறந்து ஒருநாள் அவன் கவலைப் படாதம்மான்னு சொல்லுவான். அது மட்டும்தான் என் நம்பிக்கை...” குரல் நெகிழ்ந்தது.

“எங்க வீட்டுல முதமுதல்ல டிகிரி வாங்கினது வாசுதான். எஞ்சினியர் ஆனான். நல்லா சம்பாதிச்சான். ஒரு ஆக்சிடென்ட்ல விழுந்து தலையில அடி பட்டுடுச்சு. உசுரு பிழைச்சதே பெருசு. பாக்காத வைத்தியமில்ல..போகாத சாமியில்ல.. எல்லாம் அவன் சேத்து வெச்ச காச வெச்சு தான். சின்னவன் டிப்ளமா முடிச்சுட்டு கார் கம்பனில வேலைக்கு இருக்கான். அவனுக்கும் கல்யாணமாயி சம்சாரம் முழுகாம இருக்கா..அவனையும் கேக்க முடியாது. மூத்த பொண்ணு வீட்டுக்காரர் பி.எஸ்.ஃப்ல வேலை பாத்து போன வருஷம் அஸ்ஸாம்ல இறந்துட்டாரு. அவ பேங்குல வேல பாக்குறா. மூணு வயசு குழந்தைய வெச்சுகிட்டு ஊர் ஊரா திரிஞ்சுகிட்டு இருக்கா. எங்ககிட்ட இருக்குறத பிரட்டி தர்றோம். நீங்கதான் ஏதாவது செய்யணும், உங்களையும் எங்க பிள்ளையா நெனைச்சு கேக்குறோம்” என்று சொன்னபோது அந்த அம்மாவின் குரல் தழுதழுத்தது.

இனியும் மறைப்பதில் புண்ணியமில்லை. தோன்றுவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். முதற்கட்ட சிகிச்சை இன்னும் நான்கு நாளில் முடிவுக்கு வந்துவிடும். இளங்கோ என்னையே பார்த்தான்.

தயங்கியபடியே மெதுவாக பேசத் தொடங்கினேன். “அம்மா... கொஞ்சம் நான் சொல்லுறத கவனமா கேளுங்க... கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா எனக்கு தோணுறத இப்பயும் சொல்லாம விட்டுறக் கூடாது. வாசுவோட பிரச்சனைக்கு எந்த வைத்தியமும் சரியா வரும்னு எனக்கு தோணலை.”

 “இத்தன நாளு வந்துட்டு போனதெல்லாம் இத சொல்லத்தானா தம்பி? என்னதான் செய்ய முடியும்? அதையாவது சொல்லுங்க... அவனுக்கு வலிக்குதா எரியுதா எதுவுமே தெரியல”

“அம்மா... நல்லதுக்குதான் சொல்லுறேன். தப்பா எடுத்துக்காதீங்க. எவ்ளோ நாள் உங்களால இத செய்ய முடியும்... எனக்குத் தெரியல. யோசிச்சுக்குங்க. சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக் கூட மூச்சு நின்னுடும். அதான் அவர் நிலைமை”. படபடப்பாக இருந்தது. இத்தனை நாளாக மனம் இந்தப் பதிலை தான் யோசித்து சேமித்து வைத்திருக்கிறது போலும். தங்கு தடையின்றி குதித்து வந்துவிட்டது.

வரதராஜன் வாசலில் வரும் சத்தம் கேட்டது. அழுகை சட்டென்று நின்றது. எழுந்து சென்று கதவை திறந்துவிட்டு வீட்டுக்குள் மறைந்தார்.

வெளியே வந்தவுடன் இளங்கோ சீறினான்
“என்னமோ அன்பு, நட்புன்னு அன்னிக்கு பேசிக்கிட்டு திரிஞ்ச? நீ என்ன சொல்லிட்டு வந்துட்ட தெரியுதா? சரியான கிறுக்கன்டா நீ” அவன் கண்களும் லேசாக கலங்கியிருந்தது.
அடுத்து வந்த மூன்று நாட்களும் அந்த அம்மா எதுவுமே எங்களிடம் பேசவில்லை. வரதராஜனும்கூட சரியாக பேசாதது போலிருந்தது. மறு நாளுடன் எங்கள் முதல் சுற்று சிகிச்சை முடிவுக்கு வருகிறது. எல்லாம் எடுத்து வைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தோம். வாசுவை பாத்தியிலிருந்து கட்டிலுக்குக் கிடத்தினோம். அப்போது அவன் கண்களை திறந்து ஒரு நொடி சிமிட்டியது போலிருந்தது. பிரமையா எனத் தெரியவில்லை. உற்று நோக்கினேன் எந்த மாற்றமும் தெரியவில்லை. மனம் கனத்திருந்தது.  நண்பனிடம் பிரியா விடை பெறும் உணர்வு ஒரு மாதிரி நெஞ்சை பிழிந்துக் கொண்டிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக வரதராஜன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
“தம்பி... கொஞ்சம் பேசணும்.”

“நீங்க அன்னிக்கு வாசுவப் பத்தி சொன்னத அவ என்கிட்டே சொன்னா. நாளையோட முடிச்சுக்கலாம். அடுத்த சுத்து எல்லாம் வேணாம். இது சரியா வரும்னு தோணலை. எனக்கு கொஞ்சம் பயமாருக்கு. அவன் திருப்பி பேசணும், நிக்கணும் நடக்கணுங்கற ஆசகூட இப்ப எனக்கு போய்டுச்சு. நாங்க பேசுறத கேட்டுகிட்டு அவன் இப்படியே வேணாலும் கிடக்கட்டும். தயவு செஞ்சு அவன இப்படியே விட்டு வைங்க அது போதும். எங்க காலம் வரை நாங்க என்னமோ பண்ணிக்குறோம்” குரல் ஒரு மாதிரி தாழத் தொடங்கியது.

“ரெண்டு மூணு நாள் கழிச்சு ஃபோன் செய்றேன், வந்து பாத்திய தூக்கிட்டு போய்டுங்க’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்றார்.

இறுதிநாள் அன்று. வரதராஜன் வீட்டில் கூடுதலாக சலசலப்பு கேட்டுக் கொண்டிருப்பது போலிருந்தது. சிகிச்சை முடித்து அவனைக் கட்டிலில் கிடத்தினோம். எனது உணர்வை வாசு உணரக்கூடும். ஒரேயொரு சமிக்ஞை போதுமெனக்கு, நம் நட்புக்கு அடையாளமாக. மனம் ஏங்கியது. புதிதாக ஒரு படுக்கைப்புண் கிளம்பியிருப்பதை கவனித்தோம். சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். கிளம்பும் போது அவன் கரங்கள் என் கரங்களைப் பிடித்து இழுத்தன. அல்லது இழுத்தது போலிருந்தது.

வெளியே வந்தபோதுதான் கவனித்தோம் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு பெண்ணும் அவருடைய பெண் குழந்தையும் வந்திருந்தனர். அந்த குட்டிப்பெண் பொம்மைகளை எல்லாம் பரப்பி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.

“இது வாசுவோட அக்கா. வசுமதி. பேங்க்ல வேல பாக்குறா. வீட்டுக்காரர் எல்லை காவல் படையில இருந்தாரு” என்றார் வரதராஜன்.
“தெரியும் அம்மா சொன்னாங்க” வணக்கம் வைத்தோம்.
“அவளுக்கு இங்க ட்ரான்ஸ்பர் கிடைச்சுருக்கு. அதான் குழந்தையையும் கூட்டிக்கிட்டு இங்கயே வந்துட்டா...” என்றார்.
அவரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தோம்.

“மாப்ள, ஒரு மாதிரி நிம்மதியா இருக்குடா... கஷ்டமாவும் இருக்கு. ஒரு மாசம் இப்படியே பழகிட்டோம்ல” என்று சொல்லிக்கொண்டு வந்தான் இளங்கோ.

மனம் அமைதியில் நிலைத்தது. அரித்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கேள்விக்கு மனம் விடையை உணர்ந்தது போல். பிரபஞ்ச நியதிகள் எல்லாம் இதுதான் என்று தெளிவாகத் துலக்கமடைந்துவிட்டது போல் தோன்றியது. ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு நோக்கமிருக்கிறது, என் வாழ்விற்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நிம்மதியாக உறங்கினேன்.

மூன்று நாட்களுக்குப் பின்னர் இளங்கோவிடமிருந்து அழைப்பு வந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு உடனே வரதராஜனின் வீட்டிற்கு போனேன். வாயிலில் நான்கைந்து பைக்குகளும்,  இரண்டு மூன்று கார்களும் நின்றன.
வரதராஜன் வெற்றுடம்புடன் முற்றத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தார். நான்கைந்து பேர் அவரை சுற்றி அரைவட்டமாக மவுனமாக நின்றிருந்தனர். இளங்கோ ஒரு மூலையில் தென்னமரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.

“பாத்திய ஏத்திட்டு வர சொன்னாருடா, அதான் வந்தேன்... பாத்தா வாசு காலேல போய்ட்டானாம்” இளங்கோ தணிந்த குரலில் சொன்னான். என்னென்னவோ காட்சிகள் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தன. மெல்ல வாசு வைத்திருக்கப்பட்ட அறைக்கு அருகே சென்றோம். அந்த அம்மா சுவரோரம் சாய்ந்து கண்களை அகல விரித்து எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். வாசுவின் அக்கா “இட்ட போட்தீவேரா“ என்று அழுது அரற்றிக் கொண்டிருந்தாள்.

“ரெண்டு மூணு தடவ கண்ணு முழிச்சிப் பாத்தானாம். கையக்கூட பிடிச்சானாம். காலேல பெருசா சத்தம் போட்டானாம்..பக்கத்துல யாருமில்லயாம்..இந்தக் குழந்த மட்டும் ஏதோ விளையாடிகிட்டு இருந்துச்சாம்… கபம் அடைச்சுருக்கும் போல.. சக்சன் போடுறதுக்குள்ள போய்ட்டானாம். பாவம்” என்று யாரோ கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

எல்லாரும் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த போது சோஃபாவிற்கு அருகே ஏதோ சத்தம் கேட்டது. அந்தக் குட்டிப் பெண் குழந்தை கூடைநிறைய விளையாட்டு சாமான்களை கொட்டி கொண்டிருந்தாள். பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்து கொண்டிருந்தாள்.

“யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா” சீறிக்கொண்டு எழுந்தாள் வாசுவின் அக்கா.
அதட்டிய அம்மாவின் குரலை காதில் வாங்காமல் அவள் தனக்குள் சிரித்து திளைத்தபடி தன்போக்கில் விளையாடிக் கொண்டிருந்தாள்.


Friday, August 23, 2013

அரவிந்த் கேஜ்ரிவால் -ஒரு நேர்காணல்

காந்தி இன்று காந்திக்கான தளமாக உருமாறுவதற்கு முன்னர் நான் மொழியாக்கம் செய்த நேர்காணல் இது. ஆகஸ்ட் 23, 2011 அன்று வலையேற்றப் பட்டது. கேஜ்ரிவால் டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதை கனவாக கொண்டவர், ஹசாரேயை அதற்காக பயன்படுத்திக் கொண்டவர் போன்ற குற்றசாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்தது வரை கூட அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. நேரடி தீவிர அரசியலில், தேர்தல் அரசியலில் ஈடுபட தொடங்கியவுடன் கொஞ்சம் சோர்வடைய துவங்கினேன். எனினும் ஜனநாயகம் என்பது அப்படித்தான். பல்வேறு தரப்பு மக்கள் தொடர் பேரங்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு. ஒன்று திரட்டி தன் மக்கள் தரப்பின் குரலை ஒலிக்க செய்து, அதன் மீது கவனம் குவிய செய்வதே ஜனநாயகத்தில் ஒரு நல்ல கட்சியும் தலைமையும் செய்யக் கூடியது. அந்தவகையில் நேரடி அரசியல் செயல்பாடு என்பதை புரிந்து கொள்கிறேன். வருத்தங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் கூட தேசிய - மாநில கட்சிகளின் இளைஞர் சக்தியின் அடையாளமாக சுட்டிக் காட்டப்படும் பெரும்பாலான ஆளுமைகளைக் காட்டிலும் அரவிந்த் பலவகையிலும் தகுதியானவர், திறமையானவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை நேரில் நேர்காணல் செய்ய வேண்டும் எனும் அவா எனக்குண்டு. இந்தப் பேட்டியில் அவருக்கிருக்கும் தெளிவு என்னை ஆச்சரியப்படவைத்தது. குறிப்பாக முற்றதிகாரம் மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து தீவிரமான சிந்தனைகளை இப்போது வாசிக்கும் போது கூட எழுப்புகிறது. டெல்லி தேர்தலில் ஏதேனும் மாற்றம் வருமா என பொருத்திருந்து பார்ப்போம். காந்தி - இன்றில் இரு பகுதிகளாக வந்த நேர்காணலை ஒரே பதிவாக இங்கே அளித்துள்ளேன். இப்போது மீண்டும் வாசித்து சிலப்பல திருத்தங்களை செய்துள்ளேன்.

Thursday, August 22, 2013

தடங்கலுக்கு வருந்துகிறேன்


"உங்க வலைப்பூ முகவரி சொல்லுங்க?" 

"www.gandhitoday.in" 

"இது இல்ல, உங்களுக்குன்னு ஒன்னு இருக்குமே ..அது"

"இல்லை இப்ப கொஞ்ச நாளா அங்க நான் ஒன்னும் பெருசா எழுதுறது இல்லை.."

"அப்படியா..இது காந்திய தான எனக்கு யாருன்னு காட்டும்..உங்கள எப்படி தெரிஞ்சுக்குறது?"
---
இப்படியாக ஒரு உரையாடல் ஜூன் மாத விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் ஏற்காடு முகாமில் எனக்கும் பசுமைப் புரட்சியின் கதை எழுதிய சங்கீதா ஸ்ரீராமுக்கும் நடைப்பெற்றது. யோசித்து பார்த்தேன்.நெசந்தான். இதுவே மீண்டும் வலைப்பூவுக்கு வர முதல் காரணம்.