புத்தகங்கள்

Pages

Tuesday, August 21, 2012

நூறாண்டுகாலத் தனிமை..

நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் ஆம்னிபஸ் தளத்தில் வெள்ளிகிழமை தோறும் நான் வண்டி ஒட்டுகிறேன்.

அங்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளிவந்த பதிவு ..




தனிமையே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாற்றமில்லாத , சமரசமில்லாத தனிமை. அதிலிருந்து தப்பித்துகொள்ளவே மனிதன் காவியங்களையும், கவிதைகளையும் உருவாக்குகிறான்.- விஷ்ணுபுரம்

மார்கஸ் ஒரு பேட்டியில், தனிமை என்பது ஒட்டுமொத்த மானுடகுலத்தின் பிரச்சனை , அதை ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் வெளிப்படுத்துகிறார்கள் என்கிறார். இவரது "நூறாண்டு காலத் தனிமை". மனிதர்கள் மீது கவிந்திருக்கும் அந்த மாற்றமற்ற தனிமையை, அதன் மகத்துவத்தை, அதன் குரூரத்தை நம் முன் அப்பட்டமாக நிறுத்துகிறது.   ஒரு நகரம் கருவாகி , உருவாகி , வளர்ந்து, முதிர்ந்து இறுதியில் உதிரும் கதை. இதிலுள்ள அங்கதம் வாழ்வைப் பற்றிய மிகக் கூர்மையான, தீவிரமான அவதானிப்புகளை அடிப்படையாக கொண்டது. தொடர்ந்து வாழ்வின் அபத்தங்களை நுட்பமான கற்பனையுடன் சொல்லிச் செல்வது. விஷ்ணுபுரத்து சுமத்திரனின் அங்கதமும் திருவிக்ரமனின் தீவிரமும் இணைந்து ஒரு காவியத்தை உருவாக்கியிருந்தால் அது இப்படித்தான் இருந்திருக்கும்.


முழுவதுமாக வாசிக்க..

Sunday, July 22, 2012

காலமே உனக்கு வணக்கம்



(ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்காக நடந்த காரைக்குடி அரங்கில் வாசிக்கப்பட்ட/வாசிக்க உத்தேசித்த எனது கட்டுரை. விஷ்ணுபுரம் தளத்திலும் வெளியாகி உள்ளது.) 

அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே 
நீ அன்னையாகி வருக.
காலமே உனக்கு வணக்கம்


வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய   மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும்  சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது.. 

Saturday, May 19, 2012

மருத்துவ அறம் - விவாதம்




இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை, கடந்த சில மாதங்களாகவே இதை பற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் தோன்றி எழுத தொடங்கும் போதெல்லாம், அந்தரத்தில் விட்டுவிட்டு மற்ற வேலைகளை காண சென்றுவிடுவேன். ஆனால் செருப்பில் ஏறிய முள்போல மனசாட்சியை குத்திக்கொண்டே இருந்தது. உச்சகட்டமாக அண்மையில் என்னை உலுக்கிய ஓர் இழப்பு, உண்மையில் நிலைகுலைய செய்தது. இதை எழுதுவதால் பலத்த எதிர்ப்புகளையும், விரும்பத்தகாத விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அறிந்தும் எனக்குள் ஒலிக்கும் அந்தராத்மாவின் குரலுக்கு நான் செவி சாய்த்திட வேண்டிய அவசியத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன். 

ஆயுர்வேதத்தில் சமஸ்க்ருத பகடி ஒன்று உண்டு " வந்தனம் வைத்ய ராஜனே, யமராஜனின் சகோதரனே, யமனும் சரி வைத்தியனும் சரி ஈவிரக்கமற்றவர்கள் தாம், ஆனால் யமன் உயிரை மட்டுமே விழுங்குவான் ,வைத்தியனோ செல்வத்தையும் சேர்த்து விழுங்குவான் " .பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தகைய போக்குகள் இந்திய மருத்துவத்தில் நிலவி வந்ததில் ஒன்றும் வியப்பில்லை.சரக சம்ஹிதையில் மருத்துவர்களை இரண்டாக வகுக்கிறார் பிரானாபிசார மற்றும் ரோகாபிசார .ரோகாபிசார வைத்தியன் நம் ஆயுளை நீட்டிக்க கூடியவன்,பிணிகள தீர்ப்பவன் ,நேர்மையானவன் ,அவனால் அந்த நோயை குணப்படுத்தமுடியும் என்றால் மட்டுமே அதை கையில் எடுப்பவன்.பிரானாபிசார வைத்தியன் இதற்கு நேர்மாறான குனங்களைக்கொண்டவன் நம் உயிரை பறிப்பவன் .

Sunday, February 12, 2012

அவ்வா


எப்பொழுதோ ஓர் முறை பழைய நினைவுகள் மிக மோசமானவை, நம்மை அவை தின்றுவிடும் என்று ஒருமுறை நேர்பேச்சின் பொழுது ஜெயமோகன் சொன்னார்.அப்பொழுது நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், பழைய நினைவுகளை அசைப்போடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவே  இருக்கின்றன என்றேன்.நோஸ்டால்ஜியா ரொம்ப கொடூரமானது , ஒரு நினைவு அத ஒட்டி பல நினைவுகளை எழுப்பும், ஒரு நினைவு பின்னலுக்கு உள்ள நாம சிக்கிக்குவோம் , இப்படி வெளிவரமுடியாத நினைவு சுழல்ல திணறுவோம், தன்னிரக்கம் வரும், ஏக்கம் வரும், நம்ம நேரத்த அது முழுசா தின்றுவிடும் என்றார் ஜெ.

ஆம் அது உண்மைதான் , நினைவுகள் காலில் சிக்கிய காட்டுக்கொடிகள், ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்து அலைகழிக்கிறது . இடுகாட்டில் கொண்டு போய் இறக்கி வைத்து முட்டி பானையில் தண்ணீர் ஊற்றி மாமா மும்முறை சுற்றி தலைக்கு பின்னால் தூர எரிந்து ,அது பட்டென்று உடைந்தது.நெஞ்சில் விராட்டியை வைத்து தர்பையால் கற்பூரத்தை பற்றவைத்தார்,அவ்வா எரிய தொடங்கினால்.