(ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்காக நடந்த காரைக்குடி அரங்கில் வாசிக்கப்பட்ட/வாசிக்க உத்தேசித்த எனது கட்டுரை. விஷ்ணுபுரம் தளத்திலும் வெளியாகி உள்ளது.)
அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே
நீ அன்னையாகி வருக.
காலமே உனக்கு வணக்கம்
வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும் சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது..