இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை, கடந்த சில மாதங்களாகவே இதை பற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் தோன்றி எழுத தொடங்கும் போதெல்லாம், அந்தரத்தில் விட்டுவிட்டு மற்ற வேலைகளை காண சென்றுவிடுவேன். ஆனால் செருப்பில் ஏறிய முள்போல மனசாட்சியை குத்திக்கொண்டே இருந்தது. உச்சகட்டமாக அண்மையில் என்னை உலுக்கிய ஓர் இழப்பு, உண்மையில் நிலைகுலைய செய்தது. இதை எழுதுவதால் பலத்த எதிர்ப்புகளையும், விரும்பத்தகாத விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அறிந்தும் எனக்குள் ஒலிக்கும் அந்தராத்மாவின் குரலுக்கு நான் செவி சாய்த்திட வேண்டிய அவசியத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன்.
ஆயுர்வேதத்தில் சமஸ்க்ருத பகடி ஒன்று உண்டு " வந்தனம் வைத்ய ராஜனே, யமராஜனின் சகோதரனே, யமனும் சரி வைத்தியனும் சரி ஈவிரக்கமற்றவர்கள் தாம், ஆனால் யமன் உயிரை மட்டுமே விழுங்குவான் ,வைத்தியனோ செல்வத்தையும் சேர்த்து விழுங்குவான் " .பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தகைய போக்குகள் இந்திய மருத்துவத்தில் நிலவி வந்ததில் ஒன்றும் வியப்பில்லை.சரக சம்ஹிதையில் மருத்துவர்களை இரண்டாக வகுக்கிறார் பிரானாபிசார மற்றும் ரோகாபிசார .ரோகாபிசார வைத்தியன் நம் ஆயுளை நீட்டிக்க கூடியவன்,பிணிகள தீர்ப்பவன் ,நேர்மையானவன் ,அவனால் அந்த நோயை குணப்படுத்தமுடியும் என்றால் மட்டுமே அதை கையில் எடுப்பவன்.பிரானாபிசார வைத்தியன் இதற்கு நேர்மாறான குனங்களைக்கொண்டவன் நம் உயிரை பறிப்பவன் .
தூத்துக்குடியில் ஓர் பெண் மருத்துவர் அவருடைய மருத்துவமனையிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம் ,எந்த மருத்துவருமே தன்னிடம் வரும் நோயாளியின் உயிரை பறிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.அவருடைய மருத்துவமனையில் நிகழும் மரணம் அவருடைய பெயருக்கும் புகழுக்கும் மேலும் வரும்படிக்கும் இழுக்கு ஏற்படுத்திவிடும் என்பதை அவர்கள் முழுவதுமாக உணர்ந்தே இருக்கிறார்கள்.என்னுடைய தாத்தா ஓர் கிராமத்தில் சித்த வைத்தியர் சில்லறை காசுகளுக்கு வைத்தியம் பார்த்து வாழ்ந்து வந்தவர் ஊர் பெரியவர்கள் வருடந்தோறும் நெல்லும் புத்தாடையும் கொடுத்து ஆதரித்து வந்தார்கள்.அந்த சில்லறை காசுகள் கூட கொடுக்க முடியாத ஏழைகள் தங்கள் அன்பின் வெளிப்பாடாக தோட்டத்தில் விளைந்த வெள்ளரிகளையும்,கத்திரிகளையும் மனம் நெகிழ்ந்து கொடுப்பார்கள். ஒருபோதும் திரும்ப முடியாது என்பதை நானும் அறிவேன், அப்படி திரும்ப வேண்டும் என அறிவுறுத்தவும் இல்லை.
பள்ளி காலத்தின் இறுதியில் மருத்துவ படிப்பு மகத்தான லட்சிய கனவு. ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் தொலைகாட்சிகளில் தான் மருத்துவராகி ஏழை மக்களுக்கு சேவை புரிய போகிறேன் என்று கபடமற்ற அந்த கண்களில் ஒளி மின்ன பேட்டி அளிப்பதை நாம் பார்த்துக்கொண்டு தானிருக்கிறோம். ஆனால் ஐந்தரை வருட கல்வியை முடித்து வெளியே வரும்போது அந்த கபடமற்ற லட்சிய வாதம் வெறும் அபத்தமாக மாறிவிடுகிறது எதனால் என்பதை இன்றுவரை என்னால் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
நோயாளிகள் நுகர்வோராகவும் மருத்துவர்கள் நிறுவனங்களாகவும் மாறி வருகிறது. மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே உள்ள உறவு மேம்பட்ட அனைத்து மானுட உறவுகளைப்போல் நம்பிக்கையையும் உண்மையையும் கோருகிறது. இன்று நம்முன் உள்ள முக்கியமான சிக்கல் என நான் கருதுவது- முதலில் மருத்துவம் தொழிலா சேவையா என்பதை தெளிவாக வரையறுக்க வேண்டும். மருத்துவம் சந்தித்து வரும் அனேக அற பிறழ்வுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் இந்த வரையறையின் தெளிவின்மை தான் காரணம்- சேவை என்று விளம்பரத்திற்கு அடியில் உள்ள அப்பட்டமான வியாபார நோக்கம் என்று நோயாளிகள் மருத்துவ நிறுவனங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள், மாறி வரும் பொருளியல் சூழலுக்கு ஏற்ப தரமான மருத்துவ சேவைகளை வழங்கும்போது இத்தகைய செலவீனங்கள் பிடிக்கும் என்று தெரிந்து தான் மக்கள் இதை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று மருத்துவர்கள் பதிலுரைக்கிரார்கள்.
இந்த கட்டுரையில் நான் சொல்லும் செய்திகள் முற்றிலும் என்னுடைய அனுபவம் சார்ந்தவை, எங்கோ யாரோ எழுதியதை நான் பேசவில்லை. கொஞ்சம் அதிர்ச்சியாக கூட இருக்கலாம், ஒருவகையில் இது எனக்கு சுயபரிசோதனையும் கூட.
உலக அளவில் மருத்துவ அறம் மிக முக்கியமான பேசுபொருள்.அண்மையில் பெங்களூரில் பிரபலமான ஆயுர்வேத ஆய்வு கூடத்தில் பணிபுரியும் மூத்த தாவரவியல் நிபுணரை சந்திக்க நேர்ந்தது.அசோக அரிஷ்டம் என்பது அனேக ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்து, பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்தாக அறியப்படும் மருந்து. பொது மக்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் சாதரணமாக பயன்படுத்தும்- பரிந்துரைக்கும் மருந்து."சார் ,இந்தியால அசோக மரம் மேற்கு தொடர்ச்சி மலைல மட்டும் தான் இருக்கு அதுவும் பாதுக்காக்கப்பட்ட வன பகுதிக்குள்ள ஒரு அறுநூத்தி சொச்ச மரமிருக்கும், எந்த மரத்தோட பட்டைகளும் உரிக்க அனுமதி இல்லை, பல பேரு அத பாத்திருக்க கூட மாட்டாங்க, தனியார் தோட்டங்களிலோ ,பண்ணைகளிலோ பெருசா எதுவும் இல்லை ஆனா வருஷத்திற்கு க்வின்டால் கணக்குல அசோகாரிஷ்டம் உற்பத்தியாகுது விற்பனையும் ஆகுது,ஜனங்க எத குடிக்கிறாங்க என்ன ஆராங்கன்னு யாருக்கும் கவலை இல்லை " மிகுந்த அதிர்ச்சி அளித்த செய்தி இது.
மிக பிரபலமான ஓர் நோயறியும் நிறுவன முகவர் என்னை அண்மையில் சந்தித்தார் , எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க அவர்கள் நிறுவனம் ஆறாயிரம் வசூலிப்பதாக சொன்னார், எழுதிக்கொடுக்கும் டாக்டருக்கு அதில் நான்காயிரம் கமிஷன் தொகை கொடுக்கப்படும் என்றார், சி டி ஸ்கேனுக்கு நான்காயிரம் வாங்கப்படுகிறது அதில் இரண்டாயிரத்து ஐநூறு மருத்துவருக்கு என்று பங்கீட்டு விவரங்களை தெரிவித்தார், இதை பகிரங்கப்படுத்துவதன் மூலம் பல சிக்கல்கள் எழலாம் ஆனால் இது அனைவருக்கும் தெரிய வேண்டிய விஷயம்.
என்னுடைய உறவினர் ஒருவர் அவருடைய கணிணி துறை வேலையை உதறிவிட்டு இத்தகைய நோயறியும் நிறுவனத்தின் உயர் பதவிக்கு வந்தார், கொஞ்ச காலத்தில் மனம் நொந்து அப்பதவியை விட்டுவிட்டு மீண்டும் கணினி துறைக்கே சென்றுவிட்டார், மருத்துவர்களோடும் மருத்துவமனைகளோடும் அவருக்கு இருந்த கசப்பான அனுபவங்களை கொட்டி தீர்த்தார் ,அதில் நம் மாநகரத்து மருத்துவர்களின் நெறி பிறழ்வுகளை பற்றி அவர் கூறிய செய்திகள் எவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும். ஒரு மருத்துவர் இவரை தொடர்புக்கொண்டு தனக்கு அவசரமாக ஒரு லட்சம் தேவைபடுவதாக கூறியுள்ளார். இதில் என்ன வேதனை என்றால், அதை கடனாக கேட்கவில்லை தனக்கு வரவேண்டிய கமிஷன் பணத்தின் முன்பணமாக அந்த தொகையை கேட்டுபெற்றார், அத்தோடு அதை ஒரு மாதத்திற்குள் ஈடுசெய்தார்.
இந்தியாவின் பரந்த நிலபரப்பின் வேற்றுமையின் விளைவாக இங்குள்ள மரபணு வேற்றுமைகள் பன்னாட்டு மருந்து நிறுவனங்களை ஈர்க்கிறது.போதிய சட்ட பாதுகாப்பு இல்லாமை, ஊழல் மலிந்த உட்கட்டமைப்பு போன்றவை இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளை அவர்களுடைய இலக்காக ஆக்குகிறது. இந்தியாவில் முறையற்று நடக்கும் மருத்துவ சோதனைகள் கணக்கற்றவை. பெரும்பாலான சோதனைகள் நோயாளிகளின் அனுமதியன்று அவர்களுக்கு முறையாக தகவல் சொல்லாமல் நடைபெறுவதே. முறையற்ற இந்த சோதனைகளின் போது ஏதேனும் விரும்பத்தகாத விளைவு ஏற்பட்டால், அதற்கு காப்பீடு கூட கிடையாது.
காரைக்குடி மின்வேதியல் ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் அண்மையில் அவருடைய மனைவிக்காக என்னை சந்திக்க வந்தார். அவருடைய மனைவிக்கு பல வருடங்களாக முடக்கு வாதம் (ருமாடிட் ஆர்தைடிஸ்) உள்ளது. பெங்களூரில் உள்ள பிரபலமான மூட்டு வியாதி மருத்துவ நிபுணரிடம் நான்கைந்து ஆண்டுகளாக மருந்து உண்டு வருகிறார். கால் மிகவும் எரிச்சல் கொடுப்பதாக சொன்ன அவர் அதற்கு வெளி பிரயோகமாக ஏதேனும் செய்ய முடியுமா என்று வினவினார், பின்னர் காலுக்கு ஓர் எண்ணெய் கொடுத்து அனுப்பினேன். ஒரு இரண்டு வாரம் கழிந்த பின் மீண்டும் வந்தார், எரிச்சல் பரவாயில்லை என்று சொன்னார். அப்போது, அந்த மருத்துவர் கொடுத்த ஆங்கில மருந்தின் அளவை குறைத்துகொண்டதாக சொன்னார், அதன் பின்னர் எரிச்சல் குறைந்தது என்றார். மாத்திரை போட்டவுடன் எரிச்சல் அதிகமானது என்பதை கண்டுபிடித்ததாக சொன்னார், அடுத்த வாரம் பெங்களூரில் அந்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என்றிருந்தேன் என்றார், சற்றே தயக்கத்துடன் மேலும் தொடர்ந்தார் “ ஆனா, சார் அவரு மேல எனக்கு கொஞ்சம் நம்பிக்கை போய்டுச்சு ..அவரும் அவருடைய மாணவர் ஒருத்தரும் சேர்ந்து ஒரு ரிசர்ச் பேப்பர் போட்ருக்காங்க..நெட்ல பாத்தேன்..அதுல ஆர்த்ரைட்டிஸ்க்கு ரெண்டு மருந்துல எது பெட்டர்ன்னு நோயாளிகளுக்கு கொடுத்து ஆய்வு செஞ்சுருகாங்க, ஒரு மாத்திரை விலை ரொம்ப ஜாஸ்தி, புதுசா மார்கெட்டுக்கு வந்துருக்கு , அதுகூட எப்போதும் கொடுத்துட்டு வர்ற மாத்திரை, அது இத காட்டிலும் சீப், அத காம்பேர் பண்ணி பாத்துருக்கார், கடைசில என்ன சொல்லிருக்காருன்னா இந்த ரெண்டு மாத்திரைகளுக்கு நடுவுல பெரிய அளவுல செயல்பாடுல மாற்றம் இல்லன்னு, அதனால விலை குறவா இருக்குற பழைய மாத்திரையே நல்லதுன்னு சொல்லிருக்காரு.”
இது நல்ல விஷயம் தானே என்று அவரிடம் கூறிய போது மேலும் தொடர்ந்தார், “ சார் அந்த கூட விலை மாத்திரைய என்னோட மனைவிக்கு அஞ்சு வருஷமா கொடுக்குறார், மாசத்துக்கு மாத்திரைக்கு மட்டும் இருபதாயிரம் செலவாகும், நான் சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல வேலை செஞ்சது நாள எங்க குடும்பத்தோட மருத்துவ செலவுகள அரசாங்கம் ஏத்துக்குது, அவரு திரும்ப திரும்ப ஒவ்வொரு தடவையும் இதையே சொல்வாரு, ‘உங்களுக்கு என்ன செலவு செய்ய கவர்ன்மென்ட் இருக்கு?’ இதுல கொடுமை என்னன்னா இந்த ஆய்வை 2010 லேயே அவர் முடிச்சிடார் , சரி சொல்லாம பரிசோதனை பண்ணினாரோ அப்படிந்குற சந்தேகம் ஒருபக்கம் இருக்கட்டும், ஆனா அதுக்கப்புறம் இப்பவரைக்கும் அந்த மாத்திரைய தான் கொடுத்துகிட்டு இருக்கார், அவரே ஆய்வுல அத விட மலிவான மாத்திரை நல்லா வேல செய்யுது அப்டின்னு சொல்றாரு, ஆனா அரசாங்க பணம் தானே ! இவங்களுக்கு என்ன நட்டம் அப்டின்னு இதையே கொடுக்குறார்..பெரிய டாக்டர் சார், இதை எல்லாம் கேக்கவும் முடியாது, குழப்பமா இருக்கு” என்றார்.
படித்த, ஒரு முன்னாள் விஞ்ஞானி என்பதால் அவரால் இத்தனை தூரம் ஆழமாக சென்று ஆராய முடிந்தது. வெறும் நம்பிக்கையில் வரும் எளிய மக்களால் அதையும் கண்டுகொள்ள முடியாது. மனமெல்லாம் புழுங்கிக்கொண்டே இருக்கிறது. எங்கள் பகுதியில் உள்ள மற்றுமொரு பிரபலமான மருத்துவரின் மருந்து சீட்டில் ஒரே மருந்தின் வெவ்வேறு பிராண்டுகள் திரும்ப திரும்ப வரும். பொதுவாக, ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் வைட்டமின்/ சத்து மாத்திரைகளை இதை காணலாம். அம்லோடிபின் மாத்திரையிலையே பன்னாட்டு நிறுவனத்தின் மாத்திரையும் உள்ளூர் நிறுவனத்தின் மாத்திரையும் இருக்கும்.
என்னுடைய நெருங்கிய நண்பனின் தந்தைக்கு ஒரு நாள் காலை நெஞ்சு ஒரு மாதிரி குத்துவதாக நண்பன் தொலை பேசினான், வழக்கம் போல் வாய்வாக இருக்கலாம் என்று அஷ்ட சூர்ணம் போட்டு தண்ணி குடிக்க சொன்னேன், ஆனால் அதற்கு பிறகும் ஒரு மாதிரி வலி நீடித்தது. இங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், வண்டியில் பின்னால் அமர்ந்து சென்றவருக்கு ஓர் ஈ.சி.ஜி எடுத்தார்கள், மாரடைப்பு வந்துள்ளதால் மதுரையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினார்கள். அங்கு சென்று மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பதட்டமாக தொலை பேசினான். அவர் நன்றாக தெளிவாகத்தான் இருந்தார். எனினும் கொஞ்சம் கலக்கமாக இருப்பதாக சொன்னான். ஒவ்வொரு பரிசோதனைகளாக செய்ய தொடங்கினார்கள். அறுபத்தி நான்கு ஸ்லைட் சிடி ஸ்கேன் ரத்த பரிசோதனைகள் எல்லாம் செய்தார்கள். அவர் மாநில அரசு ஊழியர் ஆகவே கலைஞர் காப்பீடு இருந்தது. ஒன்னரை முதல் ஒன்னே முக்கால் லட்சம் வரை காப்பீடு பாதுகாப்பு இருந்தது. பரிசோதனை முடிவுகளை என்னுடைய நண்பன் எனக்கு தெரிவிக்க வேண்டி அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டான், அதெல்லாம் வீட்டுக்கு விடுவிக்கும் போது கொடுக்கிறோம் என்று மறுத்து விட்டார்கள். அதன் பின்பு ஆஞ்சியொக்ராம் செய்தால் மட்டுமே எதையும் சொல்ல முடியும் என்றார்கள் , பின்னர் அடைப்பு இருக்கிறது அப்படியே ஆஞ்சியோப்ளாஸ்டி செய்தால் ஒழிய வேறு மார்க்கம் இல்லை என்றார்கள். ஒன்னரை லட்சம் ஆகும் என்றார்கள், உங்களுக்கு தான் அரசு காப்பீடு இருக்கே அப்புறம் என்ன ? என்றார்கள். பீதியில் கலங்கி இருந்த அவர்கள் ஒப்புகொண்டார்கள். எல்லாம் முடிந்து, வீட்டுக்கு வந்தவுடன் சென்று பார்த்தேன், நன்றாக இருந்தார். அப்பொழுது அவருடைய பரிசோதனை முடிவுகளை பார்வையிட்டேன், மற்றுமொரு அதிர்ச்சி- ஒரேயொரு ரத்த நாளத்தில் முப்பது சதவிகித அடைப்பு, அதற்கு ஒன்னரை லட்சம் செலவு செய்து ஆஞ்சியோ ! மாத்திரைகள் மூலம் எளிதாக சரி செய்ய கூடிய வாய்ப்பிருந்தும், அதை செய்யவில்லை, நேரடியாக இல்லையென்றாலும் மக்களின் பணத்தை அழகாக சுரண்டினார்கள்.
மதுரையில் உள்ள பெரும்பாலான பிரபல மருத்துவமனைகள், அங்கு போக சொல்லி கடிதம் கொடுக்கும் மருத்துவர்களையும் நன்றாக கவனிக்கிறார்கள். நோயாளியிடம் அங்கு வசூலிக்கப்படும் தொகையில் ஒரு பங்கு ரெபர் செய்த மருத்துவருக்கும் உண்டு.
எங்கள் பகுதியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் எனக்கு நன்கு பரிச்சயமான குடும்ப நண்பரின் மகனுக்கு வயிற்று வலிக்கு காட்ட சென்றார்கள். அவர் வயிற்றை ஸ்கேன் எடுக்க சொன்னார். அவர் ஸ்கேன் எடுக்க சொன்ன மையத்தில் கூட்டமாக இருந்ததால், மற்றொரு மையத்தில் எடுத்துவிட்டு சென்று பார்த்தார். ஸ்கேன் ரிபோர்டை பார்த்த அவர், இந்த ரிப்போர்ட் பிழையானது, நான் எடுக்க சொன்ன இடத்தில் மீண்டும் எடுத்து விட்டு வாருங்கள் என்றார். அங்கு சென்று எடுத்துவிட்டு வந்ததும் அதை பார்த்த மருத்துவர் உடனடியாக மருத்துவமனையில் சேருங்கள், அப்பெண்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். பதினோரு வயது சிறுவன் அவன், ஏதோ சந்தேகம் தோன்ற, இவர்கள் அவனை மதுரையில் உள்ள ஓர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பார்த்த மருத்துவர் அப்பெண்டிக்சும் இல்லை ஒன்னும் இல்லை என்று மருந்து கொடுத்து அனுப்பிவைத்தார். இந்த கதையை என்னிடம் சொன்ன அவர் முதலில் எடுத்த இரண்டு ஸ்கேன் ரிபோர்டுகளையும் காட்டினார், இரண்டிலும் எந்த வித்யாசமும் தென்படவில்லை. ஒரேயொரு வித்தியாசம் கடைசியாக எடுக்கப்பட்டது, அந்த பிரபல மருத்துவமனையை நிர்வகிக்கும் மருத்துவரின் புதல்வியின் மையம் என்பதே. அப்பெண்டிக்ஸ் , இந்த உறுப்பு அன்றாட செயல்பாடுகளுக்கு உதவுவது இல்லை என்பதால், வயிறு வலிக்கு இதன் மேல் பழிபோடபட்டு அதை அறுத்து வீசி எறிவதில் குறியாக இருப்பதில் வியப்பேதும் இல்லை.
மருத்துவ துறையின் அற பிரழ்வுகளை தொகுத்துகொள்ள முயல்கிறேன். மருந்து நிறுவனங்களின் தலையீடு மிக முக்கியமான காரணம். காப்பீடு திட்டம், மற்றும் அறுவை சிகிச்சைகள்- இந்த மூன்று அம்சங்களை ஒட்டியே நாம் பெரும்பாலான பிரழ்வுகளை காண்கிறோம்.
வழக்கம் போல் ஓர் டிஸ்கியையும் போட வேண்டும், இது அனைத்து மருத்துவர்களுக்கும் பொருந்துவது அல்ல. இதற்கு விதிவிலக்காக பல மருத்துவர்கள் உள்ளனர், அவர்களை நானே சந்தித்தும் இருக்கிறேன். தங்கள் கனவுகளை மிகுந்த சிரமங்களுக்கு ஊடாக தக்க வைத்துக்கொள்ளும் அவர்களின் முனைப்பு எனக்கு எப்போதும் ஊக்கம் அளிக்கும். ஆனால் விதிவிலக்குகள் விதிகள் அல்ல என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
கோபம், வருத்தம், எதையும் செய்ய முடியாத ஆற்றாமை ஆகியவை கலந்தே இதை எழுதுகிறேன். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு எவ்வித காழ்ப்போ கோபமோ கிடையாது. எந்த மருத்துவ முறையும் பூரணமானது அல்ல என்பதே எனது நம்பிக்கையும். ஏதோ ஒரு வகையில் இவை அனைத்துமே மானுடம் நோய்களுக்கு எதிராக தன் பிரஞ்ஞையை திரட்டி கண்டடைந்த வழிமுறைகள் என்பதால், நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை முற்றிலும் புரந்தள்ளுவதை போல் நான் அவர்களை புறக்கணிக்க மாட்டேன்.
நவீன மருத்துவத்தை பற்றி வாய் கிழிய பேசும் நீ , உன் துறையில் உள்ள சிக்கல்கள் பற்றி வாய் திறக்கவில்லையே ? என்று கேள்வி எழும்பகூடும்- நீண்ட நாட்களுக்கு முன்னர் எமது துறையில் உள்ள பிரச்சனைகள் பற்றி விரிவாக எனது வலைப்பூவில் எழுதியுள்ளேன்.
மருத்துவ தொழிலை துறவு மனப்பான்மையோடு அணுக வேண்டும் என நான் சொல்லவில்லை. குறைந்தபட்சம் செய்யும் பணியை நியாயமாக செய்ய வேண்டும் என்றே எண்ணுகிறேன்.’நீ என்ன பெரிய ஒழுங்கா ?’ என்று என்னை நோக்கி நானே கேள்வி எழுப்பி கொள்கிறேன். ஆம், என்னளவில் சின்ன சின்ன சமரசங்களை செய்துகொள்ளவே செய்கிறேன். சேற்றுகையால் சட்டையில் உள்ள சேற்றை துடைக்க முயல்கிறேன், ஆனால் ஒரு நாளும் அந்த சேற்று குழியில் என்னை அமிழ்த்திகொள்ள நான் விரும்பவில்லை. மனதில் மின்னலென வரும் சபலங்களுக்கு வாய் ஊறினாலும், நான் வாசித்த காந்தி அவருடைய கைதடியை கொண்டு உச்சந்தலையில் ஒரு போடு போடுவார். அவர் மிக மோசமான காவல் நாய் போல விரும்பதகாத ஒரு சிறிய எண்ணம் குறுக்கே போனாலும் அதை விடாமல் துரத்திகொண்டிருப்பார். விழித்துக்கொண்ட மனசாட்சி போல ஆபத்தானது உலகில் வேறு ஒன்றும் இல்லை. ஏனெனில் சமரசங்களுக்கு அப்பால் உள்ள உண்மை அதற்கு தெளிவாகவே தெரியும்.
அருமையான பதிவு சுனில். ஒரு ஆயுர்வேத மருத்துவராக உங்களின் குழப்பம் புரிகிறது. நிறைய விவாதித்து புரிந்துகொள்ளவேண்டிய விஷயம். என் பார்வையில் நானும் இதைப் பற்றி யோசித்து எழுத முயல்கிறேன்.
ReplyDeleteகட்டற்ற பொருளாதார நுகர்வில் அறம் எனபடுவதே கார்ப்பரேட் எதிக்ஸ் தான்..நாம் பேசும் மானுட அறம் எல்லாம்,உன்னையும்,என்னையும் போன்ற மிக சிலராலே கவனிக்க படக்கூடும்..கல்வி கட்டமைக்கும் அதீத பேராசை , அதிலிருந்து எழும் நுகர்வு காய்ச்சல்..ஆயுர்வேதில் எங்கோ படித்ததாக நினைவு,, கட்றற்ற எதற்குமே ஜுரம் என்றுதானே பெயர்? காமம் முதற்கொன்று?..அதீத நுகர்வின் கண்ணி தானே மருத்துவனும்.பின் என்ன அறம் எதிர்பார்க்க முடியும்? கஞ்சத்தனமான அல்லது சேமிக்க கூடிய ,லட்சியவாத நம் தந்தைகள் பெற்றுடுத்த அதீத பேராசையும்,நுகர்வும் கொண்ட குழந்தைகள் தானே நாம்? பின் இதில் மானுட அறமாவது, வெங்காயமாவது ..
ReplyDeleteஎந்த துறையையும் ரசித்து, நெறிமுறைகளோடு சிறிது வாழ்வதற்கு வேண்டுமென்ற ஒரு சிறு தொகையை மட்டும் சம்பாதித்து, மனம் நிறைய நிம்மதியாய் தூங்கும் மனிதர்களை இன்று வாழதெரியாதவர்கள் என்று பட்டம் சூட்டுவர்.
ReplyDeleteDear Sir,
ReplyDeletePlease give your mail id. I need solution for some problems. Please help.
My id : speakthiyagu@gmail.com
mail me on your queries- nalanda.aho@gmail.com
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஇன்றைய நடைமுறையிலிருந்து மக்கள் தாங்களாகவே ஓரளவேனும் தெரிந்து கொண்டார்கள் என்று தான் சொல்லவேண்டும் இருப்பினும் செய்வதறியாமல் ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது. மனதில் ஓரமா ஒரு ஐயம் அணைத்திருக்கும் பழகிய நாம் "இதுவும் வியாபாரம் தானே" என்று இதற்கும் பழகிவிடுவோமா!
காந்திய வாத கொள்கையில் பிடிப்பு கொண்ட "மாற்றத்தை விரும்பு" நீங்கள் "மாற்றமாக" இருப்பிர்கள் என்ற நம்பிக்கை உண்டு.வாழ்த்துக்கள்!
நண்பரே ..உங்கள் சிந்தனை தான் எனக்கும் ..
ReplyDeleteஉங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் ..
நண்பர் உங்கள் இந்த அற்புத கட்டுரைக்கு எனது தளம் மூலமாக லிங்க் கொடுத்திருக்கிறேன் ..நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்பியவனாக ..தவறு இருந்தால் மன்னிக்கவும்
ReplyDeletehttp://ayurvedamaruthuvam.blogspot.com/2012/07/blog-post.html
உங்களுக்கும் சேவை உள்ளத்துடன், மனசாட்சியுடன் தியாக உள்ளத்துடன் ,உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் என் பாராட்டுகளும் ,வாழ்த்துக்களும் .
ReplyDeleteமனசாட்சி உள்ள மருத்துவர் ! வாழ்க பல்லாண்டு !
கடந்த வாரம் என் நண்பரின் மனைவிக்கு வயிற்று வலி என்பதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்கள் சிறுநீரகத்தில் கல் உள்ளது உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று கூறினார்கள் .பணம் ரூ .40,௦௦௦000 கட்டகூறி உள்ளார்கள் .பாவம் ! ஏழை என்பதால் அடுத்த மருத்துவமனைக்கு சென்றார்கள் அங்கு இந்த ரிப்போர்ட் பார்த்துவிட்டு ரூ .60,000 கேட்டுள்ளார்கள் .பயந்து போன நண்பர் மீண்டும் முதலில் பார்த்த மருத்துவமனைக்கே வந்துவிட்டார் அங்கு மீண்டும் அவரை சந்தித்த அதே மருத்துவர் மீண்டும் ஸ்கேன் எடுக்க கூறியுள்ளார் ( ஒரே நாளில் ) அந்த ஸ்கேனை பார்த்து முகத்தை ஆச்சர்யமாக வைத்துகொண்டு - " அடடா உங்களுக்கு சிறுநீரகத்தில் கல் இல்லை ( சந்தோசப்பட்டார் நண்பர் ) உள்ளே உங்கள் கர்ப்ப பை அருகில் முக்கிய நரம்பு சுருண்டு விட்டது உடனடியாக அறுவை சிகிச்சை செய்து உங்கள் கர்ப்ப பை எடுக்க வேண்டும் என்றும் இப்போது செலவு ரூ .1,50,௦௦௦000 ஆகும் " என்று கூறியுள்ளார் ( இவர் தென் இந்தியாவின் புகழ் பெற்ற நுண் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் ).இந்த தண்டனை ஏன் தெரியுமா ? அந்த மருத்துவரை விடுத்து அடுத்த மருத்துவரை அணுகி விசாரித்து வந்ததால் வந்த வினை . அதிர்ந்த என் நண்பர் என்னிடம் கூறினார் .நான் அவரை சத்தம் போட்டு நான் அறிந்த என் மருத்துவ நண்பரை அணுகினோம் அவர் எல்லா ரிப்போர்ட்டும் பார்த்துவிட்டு சிறு சிறுநீரக கல் உள்ளது நிறைய தண்ணி,இளநீர் குடிங்க ! போதும் என்று வலிக்கு இரு மாத்திரைகள் கொடுத்தார் .இப்போ என் நண்பரின் மனைவி சந்தோசமாக உள்ளார் .
ஏன் இத்தனை தில்லு முள்ளு ! நம் சமுதாயம் எங்கே செல்கிறது ? மாற்றம் செய்ய முடியாதா ? யாரால் மாற்றம் செய்ய முடியும் ? நாம் என்ன செய்யலாம் ?
நட்புடன் ,
கோவை சக்தி
சிறப்பான பதிவு !(http://ayurvedamaruthuvam.blogspot.com/2012/07/blog-post.html)-மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
ReplyDeleteFollower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி சார் !
உண்மையான மருத்துவர்களுக்குத்தான் நீங்கள் சொல்லிய மனித நேயம்.பணத்துக்கு பறப்பவர்களுக்கு அல்ல.வசூல் ராஜா எம்.பி.பிஎஸ் கள்தான் அதிகம் இங்கு.
ReplyDeleteநீங்கள் கூறும் தூத்துக்குடி பெண் மருத்துவர் மருத்துவம் செய்வதைவிட பணம் சம்பாதிப்பதில்தான் குறியானவர்.மயக்க மருந்து மருத்துவரான அவர் கர்ப்பமான பெண்ணுக்கு பிரசவம் அதுவும் அறுவை சிகிச்சை மூலம் செய்ய துனிந்தது எதற்கு?
அப்படி குழந்தை இரந்து விட்டது என்ரும் தெரிந்தும் .தாயும்,சேயும் நல்லாயிருக்கிறார்கள்.பணம்தந்த பின்னர்தான் தையல் பின்னர்தான் பார்க்கவுடுவேன் என்றது மனிதாபிமானமா?பணம் கட்டியவுடன் கொஞ்சம் சிக்கல் வேறு மருத்துவமனைக்கு அனுப்புகிறேன் என்று இறந்த பெண்ணையும்-குழந்தையையும் உயிருடன் இருப்பவ்ர்களைப்போல் அனுப்பிட.புதிய மருத்துவமனையில் இப்பெண் இறந்து 2மணி நேரமாகிவிட்டது என்றால் என்னால் கூட கொலை வெறியை அடக்க இயலவில்லை.அவர் பெண் மருத்துவரே அல்ல.அநத பெயரில் அழைப்பது உயர்ந்த உயிர்காக்கும் பணிக்கு கேவலம்.
உங்களது இந்த இடுகையை நான் கூகிள் ப்ளஸில் பகிர்ந்திருந்தேன், இதை ஒட்டிய ஒரு விவாதம் நடந்த சுட்டியை இணைத்திருக்கிறேன். பிரச்சனைகளின் சரியான ஆணிவேரை ஆராய்ந்து நடுநிலையோடு அணுகுபவர்களுக்கு இது உதவக்கூடும்.
ReplyDeleteநன்றி!
https://plus.google.com/u/0/112641844811673276825/posts/N7CQnSce6i3
கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..
ReplyDeleteமுகம்மது சார்- உங்களை போன்ற மருத்துவர்களே என்னைபோன்றவர்களுக்கு முன்னோடி, அவ்வகையில் இதை னான் உங்களின் ஆசியாகவே எடுத்து கொள்கிறேன்..
ஷங்கர்- ப்ளஸ்சில் நீங்கள் இட்டுள்ள சுட்டியை கண்டேன், அந்த நீண்ட விவாதத்தை படித்தேன்..பேசவும் விவாதிக்கவும் இன்னும் பல தரவுகள் இருக்கின்றன..நேரம் கிடைக்கும் போது மேலும் விரிவாக பேசலாம்..நன்றி