இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை, கடந்த சில மாதங்களாகவே இதை பற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் தோன்றி எழுத தொடங்கும் போதெல்லாம், அந்தரத்தில் விட்டுவிட்டு மற்ற வேலைகளை காண சென்றுவிடுவேன். ஆனால் செருப்பில் ஏறிய முள்போல மனசாட்சியை குத்திக்கொண்டே இருந்தது. உச்சகட்டமாக அண்மையில் என்னை உலுக்கிய ஓர் இழப்பு, உண்மையில் நிலைகுலைய செய்தது. இதை எழுதுவதால் பலத்த எதிர்ப்புகளையும், விரும்பத்தகாத விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அறிந்தும் எனக்குள் ஒலிக்கும் அந்தராத்மாவின் குரலுக்கு நான் செவி சாய்த்திட வேண்டிய அவசியத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன்.
ஆயுர்வேதத்தில் சமஸ்க்ருத பகடி ஒன்று உண்டு " வந்தனம் வைத்ய ராஜனே, யமராஜனின் சகோதரனே, யமனும் சரி வைத்தியனும் சரி ஈவிரக்கமற்றவர்கள் தாம், ஆனால் யமன் உயிரை மட்டுமே விழுங்குவான் ,வைத்தியனோ செல்வத்தையும் சேர்த்து விழுங்குவான் " .பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தகைய போக்குகள் இந்திய மருத்துவத்தில் நிலவி வந்ததில் ஒன்றும் வியப்பில்லை.சரக சம்ஹிதையில் மருத்துவர்களை இரண்டாக வகுக்கிறார் பிரானாபிசார மற்றும் ரோகாபிசார .ரோகாபிசார வைத்தியன் நம் ஆயுளை நீட்டிக்க கூடியவன்,பிணிகள தீர்ப்பவன் ,நேர்மையானவன் ,அவனால் அந்த நோயை குணப்படுத்தமுடியும் என்றால் மட்டுமே அதை கையில் எடுப்பவன்.பிரானாபிசார வைத்தியன் இதற்கு நேர்மாறான குனங்களைக்கொண்டவன் நம் உயிரை பறிப்பவன் .