Sunday, February 12, 2012

அவ்வா


எப்பொழுதோ ஓர் முறை பழைய நினைவுகள் மிக மோசமானவை, நம்மை அவை தின்றுவிடும் என்று ஒருமுறை நேர்பேச்சின் பொழுது ஜெயமோகன் சொன்னார்.அப்பொழுது நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், பழைய நினைவுகளை அசைப்போடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவே  இருக்கின்றன என்றேன்.நோஸ்டால்ஜியா ரொம்ப கொடூரமானது , ஒரு நினைவு அத ஒட்டி பல நினைவுகளை எழுப்பும், ஒரு நினைவு பின்னலுக்கு உள்ள நாம சிக்கிக்குவோம் , இப்படி வெளிவரமுடியாத நினைவு சுழல்ல திணறுவோம், தன்னிரக்கம் வரும், ஏக்கம் வரும், நம்ம நேரத்த அது முழுசா தின்றுவிடும் என்றார் ஜெ.

ஆம் அது உண்மைதான் , நினைவுகள் காலில் சிக்கிய காட்டுக்கொடிகள், ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்து அலைகழிக்கிறது . இடுகாட்டில் கொண்டு போய் இறக்கி வைத்து முட்டி பானையில் தண்ணீர் ஊற்றி மாமா மும்முறை சுற்றி தலைக்கு பின்னால் தூர எரிந்து ,அது பட்டென்று உடைந்தது.நெஞ்சில் விராட்டியை வைத்து தர்பையால் கற்பூரத்தை பற்றவைத்தார்,அவ்வா எரிய தொடங்கினால்.


பதினெட்டு வருடங்கள் கடந்துவிட்டன, அப்பா இறந்த அவ்வருடத்தில் எட்டு வயது சிறுவனாக நானும் முப்பத்து மூன்று வயதில் என் அம்மாவும்.அப்பா ஆசையாக கட்டிய வீட்டை விற்றுவிட்டு தாத்தாவோடு தான் பிறந்த வீட்டுக்கு அம்மா செல்லட்டும், நான் அப்பா வழி பெரியப்பா வீட்டில் வளர வேண்டும் என்பது குடும்பத்தாரின் விருப்பம், அம்மா ஒப்புக்கொள்ளவில்லை, வீட்டை விற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக இருந்தால்.காரைக்காலில் தங்கள் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, தாத்தா ,அவ்வா ,அவ்வாவின் அக்கா விசாலவ்வா காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார்கள்.எத்தனையோ நிதி நெருக்கடிகள், குடும்ப நெருக்கடிகள் அத்தனையும் சமாளித்து மெல்ல எழுந்து நின்றோம்.

சனி ,ஞாயிறுகளில் ஆரியபவன் பேப்பர் ரோஸ்ட் வாங்குவதற்காக நானும் அவ்வாவும் சைக்கிளில் செல்வோம். இப்பொழுதெல்லாம் அத்தனை நீளமான தோசைகளை காணமுடிவதில்லை, சட்டினிக்கும் சாம்பாருக்கும் தனி தனி பாத்திரங்கள், தோசையை கூடி வைத்தால் கூட கொள்ளாது வெளியில் முக்கால் அடிக்கு நீட்டிக்கொண்டிருக்கும் .நாய் துரத்தும் என்பதால் தோசை வாங்கி வரும் பொது அவ்வா தோசையை தூக்கி கொண்டுவரும்போது துணைக்கு நான் சைக்கிளில் பக்கத்தில் வருவேன்.ஒரு போதும் என்னுடைய சைக்கிளில் அவள் ஏறியதில்லை, என்னால் மிதிக்க முடியாது என்று நம்பினால்.
வீட்டுக்குள் நண்பர்கள் சேர்ந்து பூப்பந்தில் எறிபந்து விளையாடுவோம், எங்கெங்கோ பட்டு தெறித்து தூங்கிக்கொண்டிருக்கும் அவ்வாவின் மீது விழும், சற்றே எரிச்சலுடன் முனகிக்கொண்டே உள்ளே அறைக்குள் போய் படுத்துகொள்வாள்.பல வருடங்களுக்கு முன் ராமேஸ்வரம் சென்ற பொழுது முதன்முதலாக அவளுக்கு வலிப்பு வந்தது, கண்விழிக்கவில்லை என்றவுடன் உயிர் பிரிந்துவிட்டது என்று அஞ்சி ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு ஓடினார்கள், அரைமணி நேரம் கழிந்ததும் மெல்ல கண் விழித்து இயல்பு நிலைக்கு திரும்பினால்.
அதற்கு பின்பு சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரிக்கு மாமா அழைத்து சென்றார் .அங்கிருந்த ஓர் பிரபல மருத்துவர் இன்னும் நாலு மாசமோ ஆறு மாசமோ என்று சொல்ல அலறியடித்துக்கொண்டு ஊருக்கு வந்தது நினைவில் இருக்கிறது.ஆனால் ஒன்றும் ஆகவில்லை, தினம் இரண்டு மாத்திரைகள் சாப்பிட்டு அதன் பின்பு பதினைந்து வருடங்கள் உயிர் வாழ்ந்துவிட்டால் அவ்வா.இடைப்பட்ட காலத்தில் எண்ணை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது அவளின் உடலின் சக்தி தான், மெலிந்த ஒல்லியான சதைபற்றில்லாத ,சுருக்கங்கள் நிறைந்த கொழுப்பில்லாத தேகம்.சக்கரையோ , உயர் ரத்த அழுத்தமோ ,முடக்கு வாதமோ ஏதும் பாதிக்கவில்லை.அம்மாவிற்கும் பெரியம்மாவிற்கும் பாதி நரைத்துவிட்டபோதிலும் கடைசிவரை அவள் முடி கருகருவென்று இருந்தது மிகப்பெரிய அதிசயம்.வலிப்பு வந்து ஓர் முறை அடுப்படியில் விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது , சுமார் முன்னூறு முறையேனும் விழுந்திருப்பார் .ஆனால் அத்தனை காயமும் மூன்று நாட்களில் ஆறிவிடும் !! 

பத்துவருடங்களுக்கு முன் தாத்தா தவறிய பின்பு காரைக்கால் வீட்டை விற்று மாமாவிடம் பணம் கொடுத்தாகிவிட்டது.வெளியூர்களுக்கு எங்கும் செல்வதில்லை, எப்பௌல்தோ ஓரிருமுறை காரைக்குடியை தாண்டி இருக்கிறாள் அவளவு தான்.வலிப்பின் விளைவாக நினைவாற்றல் மழுங்கதொடங்கியது.காலம் 1990 களிலேயே உறைந்துவிட்டது .அம்மாவிற்கு எப்போதும் முப்பது வயது தான், நான் எப்போதுமே பள்ளி செல்லும் சிறுவன் தான்.உணவு உண்பது மறந்துவிட்டது, பேச்சு தான் எஞ்சியது.அவளுடைய பாலிய நினைவுகள் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவாள், புதுக்கோட்டையில் தான் உலர்ந்தது, அவர்களின் பெரியப்பா நடத்திய பள்ளிக்கூடம் அங்கு ஐந்தாம் பாரம் வரை படித்தது, உக்கிரானத்தில் எண்ணெய் வாங்கி தேய்த்து என்று அதே நினைவுகள்.அப்பொழுது தான் கற்றுக்கொண்ட கர்நாடக பாடல்களை இசைப்பால் ,ஸ்வரம் மாறது,ஜதி மாறது இசைப்பால்.அவளுக்கு ஹார்மோனியம் நல்ல பரிச்சயம், எனக்கு கீ-போர்டில் சரிகம வாசிக்க கற்றுக்கொடுத்தால் , இன்று வரை இசை சார்ந்து நான் பயின்ற ஒரே உருப்படியான விஷயம் அது தான்.  

மூன்று வருடங்களுக்கு முன்பு வலிப்பு வந்து கீழே விழுந்து இடுப்பெலும்பு உடைந்தது, வலிப்பு வருமென்பதால் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்வது சாத்தியமில்லை என்று மருத்துவர் தெரிவித்துவிட்டார், துலாவூர் நுடவைத்தியசாலை காரர்களை அழைத்து வந்து நுடம் கட்டினோம், இரவில் மீண்டும் வலிப்பு வந்து கால் திசை மாறிவிட்டது .எலும்புகள் சரியாக சேரவில்லை .அவளது நடை முடிவுக்கு வந்தது .சோபாவின் குஷனை அடியில் வைத்துக்கொண்டு இரண்டு கைகளால் உந்தி தள்ளி தள்ளி மெல்ல மூன்றாம் நாள் கழிப்பறைக்கு சென்றாள்.அக்கா மகன் அவளை ரயில் பாட்டி என்றே அழைப்பான்.

வெளிச்சத்தில் அமர்ந்தபடி தினமும் சாமி படங்களுக்கு பூ கட்டி கொடுப்பாள்.அவ்வபொழுது அவளது ஞாபக மறதி காரணமாக ஏதேனும் சண்டைகள் எழும் பின்பு அவளே அதற்கு வருந்தி அழுவாள்.நான் கிளினிக் முடித்து இரவு வீடுவரும்போது வெளியூரிலிருந்து வந்ததாக எண்ணி தினமும் என்னை பார்த்து அழுவாள் ,அவள் புறங்கையில் கொடுத்த முத்தத்தின் ஈரம் இன்னும் காயவில்லை .அவள் இருக்கும் வரை வீட்டில் எப்போதும் ஏதேனும் ஓர் சப்தம் இருந்துக்கொண்டே இருக்கும், பாடுவாள்,பேசுவாள் ஏதோ ஒன்று.இப்பொழுது நிலவும் நிசப்தம் உண்மையில் வீட்டின் அமைதியை குலைக்கிறது.வெற்றிலை கரை படிந்த பற்கள் லேசாக தெரிய மில்க் கிரீம் பிஸ்கட் போல் அகலமாக வாயை விரித்து கண்களில் கபடமின்றி அவள் சிரிப்பது கண் முன்னாள் நிற்கிறது.

எத்தனை பெரிய சுரமும் ,சளியும் மூன்றுநாட்களுக்கு மேல் நீடித்ததில்லை.இம்முறை மெல்ல அவளது ஒவ்வொரு செயல்பாடுகளும் குறையத்தொடங்கின, கிளினிக் செல்லும் பொது தினமும் நானும் அம்மாவும் அவளிடம் போய் வருகிறோம் என்று சொல்லுவோம் ,அவளும் மலர்ச்சியோடு போய் வாருங்கள் என்பாள்.மூன்று நாட்களாக உம் என்று மட்டும் சொன்னாள் அவ்வா இங்கு வரும்போது மாற்றலாகி கொண்டுவந்த பாராத் சிலிண்டரை ஒன்பதாம் தேதி கொண்டு போய் ஒப்படைத்தோம்.அம்மா அதை கொடுத்தவுடன் அழத்தொடங்கினாள் ,பாட்டி வரும்போது வந்த சிலிண்டர் அவள் போகப்போகின்ற சமயத்தில் கொடுத்துவிட்டோம் என்று, அன்றிரவு எவ்வித சலனமும் இன்றி மூச்சடங்கி பக்கத்தில் உறங்கிய பெரியம்மாவின் மேல் தலை சாய்ந்தது.

தன் உற்ற சொந்தங்களின் மரணத்தை உறுதி செய்யும் கொடுமையைப்போல் மருத்துவனுக்கு தவிப்பு கொடுக்கும் விஷயம் வேறேதும் இல்லை.அவளது நாடியை இறுதியாக பார்த்தேன் .மனிதர்கள் தங்களது பலவீனத்தை மறைக்க, தங்களது பயங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள ,தனிமையில் சிக்காமல் இருக்க என்று பல காரனங்களிளால் பணியை வெறியோடு செய்வார்கள்.நான் எண்ணை மீட்டுக்கொல்வதும் அப்படித்தான், அடுத்ததடுத்து ஆகவேண்டிய காரியம் என்று டைரியும் கையுமாக திரிந்தேன், கணக்கு வழக்குகளை நானே வலிய ஏற்றுக்கொண்டு பராமரிக்கிறேன்.கணக்குகளை கவனிக்கும் பொழுது தர்க்கப்பூர்வமாக இயங்க முடிகிறது, மனம் சோர்வடைய இடைவெளி கிடைப்பதில்லை , புலனுக்கு அப்பால் புறப்பட்டுவிட்டாள்.

வயசாளிகள் என்னை எப்பொழுதும் பாதித்துக்கொண்டே இருந்தனர்.பாரதத்தில் எனக்கு பிடித்த பாத்திரம் பீச்மரே, இனம்காண முடியாத ஈர்ப்பு, ஹாரி பாட்டர் நாவல்களிலும் கூட டம்பல் டோர் எனக்கு பிடித்த புனைவு கதாப்பாத்திரம்.அவ்வா மரிப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு மெரீனா திரைப்படம் பார்த்தேன், அதில் வந்த அந்த தாத்தா பாத்திரம் அரங்கில் என்னை கேவி கேவி அழ செய்தது.வயோதிகர்கள் அவமானப்படுவதும்,புறக்கணிக்கப்படுவதும் என்னை பெரிதும் பாதித்தன.நான் தாத்தாகளாலும் பாட்டிக்கலாலுமே வளர்க்க பட்டேன்.என்னிடம் வரும் பெரும்பான்மையான நோயாளிகள் வயோதிகர்களும் குழந்தைகளுமே அதிகம்.

உலகத்தில் எங்கும் சுயநலம் மலிந்து இருக்கிறது என்று யாரவது என்னிடம் சொன்னாள் ,நான் நிச்சயம் மறுப்பேன்.இவ்வுலகம் தாகத்தினால் ஆனது ,ஒவ்வொரு உயிரின் வளர்ச்சிக்கு பின்பும் தன்னலம் மறந்த செயல்கள் நிச்சயம் இருக்கும்.ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஓர் புள்ளியில் குறுகிய சுயநலம் எனும் வளையத்திலிருந்து விடுபடுகிறான், அப்படி எத்தனையோ உயிர்களின் ஆசியால் ஆனதே என் ஜீவன் இதை நான் முழுமையாக உணர்ந்தே இருக்கிறேன்.அவ்வா அவள் விதைத்த கனவில் வாழ்கிறாள்.       

     

1 comment:

  1. அருமையான பதிவு ஐயா.
    மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete