எப்பொழுதோ ஓர் முறை பழைய நினைவுகள் மிக மோசமானவை, நம்மை அவை தின்றுவிடும் என்று ஒருமுறை நேர்பேச்சின் பொழுது ஜெயமோகன் சொன்னார்.அப்பொழுது நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், பழைய நினைவுகளை அசைப்போடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கின்றன என்றேன்.நோஸ்டால்ஜியா ரொம்ப கொடூரமானது , ஒரு நினைவு அத ஒட்டி பல நினைவுகளை எழுப்பும், ஒரு நினைவு பின்னலுக்கு உள்ள நாம சிக்கிக்குவோம் , இப்படி வெளிவரமுடியாத நினைவு சுழல்ல திணறுவோம், தன்னிரக்கம் வரும், ஏக்கம் வரும், நம்ம நேரத்த அது முழுசா தின்றுவிடும் என்றார் ஜெ.
ஆம் அது உண்மைதான் , நினைவுகள் காலில் சிக்கிய காட்டுக்கொடிகள், ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்து அலைகழிக்கிறது . இடுகாட்டில் கொண்டு போய் இறக்கி வைத்து முட்டி பானையில் தண்ணீர் ஊற்றி மாமா மும்முறை சுற்றி தலைக்கு பின்னால் தூர எரிந்து ,அது பட்டென்று உடைந்தது.நெஞ்சில் விராட்டியை வைத்து தர்பையால் கற்பூரத்தை பற்றவைத்தார்,அவ்வா எரிய தொடங்கினால்.