புத்தகங்கள்

Pages

Saturday, September 3, 2011

குற்றமும் தண்டனையும்



அண்மையில் முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் .செப்டம்பர் 9 தூக்கு என்று உறுதியானது ,பின்னர் பெருத்த பரபரப்புக்கு பின் உயர்நீதிமன்றம் இடைகால தடை விதித்து இருக்கிறது .முதல்வரும் சட்டசபையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .இடையில் செங்கொடி எனும் பெண்ணின் மரணமும் அதை ஒட்டி எழுந்த சர்ச்சைகளும் இன்னும் ஓயவில்லை .

இப்பொழுது நாம் பேசவேண்டியதை இரண்டு பகுதியாக புரிந்துகொள்ளவேண்டும் .இந்த வழக்கை பொறுத்தவரை உள்ள நிலைப்பாடு என்ன ? பொதுவாக மரண தண்டனை பற்றிய நிலைப்பாடு என்ன ?

என்னை பொறுத்தவரை - எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் தமிழகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை .கடைசியாக ஆட்டோ ஷங்கருக்கு நிறைவேற்றப்பட்டது என்று சொல்கிறார்கள் ,ஆனால் அது என் நினைவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .ஆனால் இப்பொழுது தூக்கு என்று செய்தி வந்தவுடன் ,அதை செரித்துக்கொள்ள மிக கடினமாக இருந்தது .ஒரு அரசாங்கம் என்பது ஒரு மிகபெரிய அதிகார அமைப்பு ,அதன் பல்வேறு சக்கரங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றி அதை இயக்குகிறது ,ஒரு மிக பிரம்மாண்டமான முரணியக்கம் .அத்தனை பெரிய மகத்தான மக்களமைப்பு ஒரு தனிமனிதனை உயிர் வாழ தகுதியில்லை என்று முத்திரை குத்தி நசுக்குவதேன்பது மனதை உண்மையில் மிகவும் ரணபடுத்தியது என்பதே உண்மை .எங்கே இது நடந்துவிடுமோ என்று பயம் ஏற்பட்டது .

இனி வருங்காலங்களில் செங்கொடி போன்ற பொருளற்ற உயிர்பலிகளுக்கு உலகத்தில் இடமளிக்க கூடாது .மிகுந்த வேதனை அளிக்கிறது .தற்கொலைகள் த்யாகம் ஆகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .அவளது உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில் இவ்வகையான செயல்கள் நல்லது அல்ல  .போராட்டங்கள் ,உண்ணாவிரதம் என்பது வேறு,இப்படி தனிச்சையாக உயிரை துறப்பது என்பது வேறு  நிச்சயம் நல்ல விஷயம் அல்ல,இதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாகவே மேலும் பலர் இந்த வழியை தேர்ந்தெடுக்க கூடும் .


இந்த வழக்கை பொறுத்த வரையில் பேரறிவாளன் விடுதலை செய்ய தகுதியானவர் என்றே இது வரையிலான வாசிப்பில் புரிகிறது .மற்ற இருவரின் பங்களிப்புகள் பற்றி அதிகம் பொது வெளியில் பேச்சு  எழவில்லை .அவர்களுக்கு  நேரடியாக ராஜீவ் கொலையில் சம்பந்தம் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது .இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது .ஆகினும் கூட இருபது வருடங்கள் மரணம் என்பது எப்பொழுது என்று ஒரு வித கலவர மனதோடு வாழ்ந்து வருவதென்பது,நொடி பொழுதில் நிகழும் மரணத்தை காட்டிலும் கொடியது என்றே எண்ணுகிறேன் .அதனால் இந்த வழக்கை பொறுத்தவரையில் எனது நிலைப்பாடு இது தான் - பேரறிவாளன விடுதலை செய்யப்படவேண்டும்,மற்றவர்கள் மரண தண்டனை ரத்து செய்யப்படட்டும்  .ஆனால் இந்த சிக்கலை தமிழ் இன உணர்வாக கொண்டு செல்வதில் ,தமிழர்களை விளிம்பு நிலை மனிதர்களாக சித்தரிப்பது தவறான போக்காக எனக்கு படுகிறது .இந்தியா போன்ற விஸ்தாரமான தேசத்தில் -ஒவ்வொரு இனத்திற்கும் ,ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும், டெல்லியை தவிர பிற அனைத்து பிராந்தியங்களும் ஏதோ ஒரு வகையில் வஞ்சிக்க படுவதாக உணர்த்தபடுகின்றனர் .ஒரு மைய்ய அரசாங்க அமைப்பானது அதன் அத்தனை விளிம்புகளையும் தொட முயற்சி செய்ய வேண்டும்,நிச்சயம் இந்திய அரசு அப்படி செய்து வர முயன்றே வருகிறது .ஆனால் பல சமரசங்களும் ,விடுபடல்களும் இருந்தே வருகிறது .ஆனால் இதற்கு மாற்று பிரிவினை அல்ல என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டும் .திரு.வைகோ அவர்களின் சமூக பணியின் மீது ஆழமான மதிப்பு இருந்தாலும் ,அவரது அதீத உணர்ச்சி நிலைபாடுகள் அச்சம் தருவதாக உள்ளது .நாம் போராடவேண்டியது பிரிவினைக்காக அல்ல ,அதிகார பரவலாக்கதிர்காக ,அதுவே நல்ல மக்கள் ஆட்சி முறையை நமக்கு தரவல்லது .ராஜீவ் ஒன்றும் நல்லவர் அல்ல அவர் கொல்லபடவேண்டியவர் எனும் வாதம் ஏற்க தக்கது அல்ல.அவர் பல தவறுகளை செய்து இருக்கிறார் ,அதை விமர்சிக்கலாம் ,ஆனால் அதற்காக அவரது கொலையை நியாயபடுத்த முடியாது .இந்த வாதம் ஒருவகையில் அவர்களுக்கு எதிராக திரும்ப கூடும் .

காவேரி பிரச்சனை குறித்து கர்நாடகத்தில் தொழில் நடத்தும் ஒரு எங்கள் ஊர் நண்பருடன் சூடாக விவாதம் செய்து கொண்டிருந்தேன் .அவர் சொன்னார் " தம்பி ,இவளவு பெசுரீகலே ,நம்ம காரகுடியிளிருந்து இந்த இருக்குற பக்கத்தூர் திருபத்தூர் அங்கன மனுஷாளுக தண்ணிக்கு தவிக்கையில ,இங்குட்டு நீங்க அவுகளுக்கு நீர கொடுக்கபடாதுன்னு உங்க ஊர் காரங்க  போராட்டம் பண்றீகளே ,இத என்ன சொல்லுறது ?"
உண்மையில் நான் வாயடைத்து போய் விட்டேன் .தமிழகம் தனி நாடாக 2047 உருவாகிறது என்றே வைத்துகொள்வோம்,அப்பொழுதும் ராமனாதபுரமும் ,சாயல்குடியும் விளிம்பாகவே உணரும்,அப்பொழுது ராமனதாபுரம் சமஸ்தானம் தனி நாடாக அறிவிக்க கோரி போராடும் .


பொதுவில் மரண தண்டனை பற்றிய நிலைப்பாடு என்று யோசித்தால் -இந்த தண்டனையின் நோக்கம் என்ன ? என்பதை ஆராய வேண்டும் .ஒரு குற்றம் நடக்கையில் அதன் பின்னணி என்ன ? அதன் விளைவுகள் என்ன ? நோக்கம் என்ன ? போன்றவை ஆராய படவேண்டும் .காந்திக்கு ஒருவர் கடிதம் எழுதினாராம் -மும்பையில் வெறிநாய்களை கொல்லும் ஆணைக்கு எதிராக குரல் கொடுக்க சொல்லி,ஏனெனில் அது உயிர் வதை என்று முன்வைத்தார் .காந்தி அதற்கு மறுப்பு தெரிவித்து அதை நிராகரித்துவிட்டார் .

ஒரு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி அவளது உயிரை பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன .இந்த மாதிரி குற்றங்களின் நோக்கம் என்ன ? அவனது அடக்கமுடியாத மனநோய் குறிகள் அவனை அப்படி செய்ய வைக்கிறது .இதன் பின்னணி என்ன ? ஏதோ ஒரு பலத்த காயம் ஒன்று ஆள் மனதில் சிறு வயதில் நடைபெறுகிறது .பொதுவாக பீடோபிளியாக்கள் அவர்களது சிறு வயதில் சில கொடுமைகளுக்கு ஆட்படுத்தபட்டிருப்பார்கள் ,அது ஒரு வித மரபணு தொடர்ச்சி போல் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு பாதிப்பை கொடுத்துகொண்டே இருக்கும் .இந்த கன்னியை உடைத்தாக வேண்டும் .பலர் இதிலிருந்து தங்களை விடுவித்துகொள்கிரார்கள்  சிலர் அதில் ஈடுபடுகிறார்கள் .

தண்டனை என்பது என்ன ? அதன் மூலம் என்ன நிகழும் ? ஏன் அது கொடுக்கப்படவேண்டும் ?
தண்டனை என்பது குற்றவாளியின் செயலுக்கான எதிர் செயல் அல்ல.அவனது குற்றத்தின் நோக்கத்திற்கான சமூக ஒருமைப்பாட்டின்,பொது விழுமியங்களின் எதிர்வினை .அதாவது குற்றவாளியின் மனசாட்சிக்கு அவனது தீய நோக்கத்தை நினைவுகூர ஒரு வாய்ப்பேற்படுத்தி கொடுத்து ,அதிலிருந்து அவனை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப செய்வது .

ஆனால் எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை .குற்றஉணர்வு என்பதே இல்லாத ஆட்களை நாம் காண்கிறோம் .நொடி பொழுது கிறுக்கு தனம் என்பதன் விளைவாக நடக்கும் குற்ற சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் தீராத காயமாக ஆழத்தில் இருக்கும் .மேலும் தண்டனை- சிறை வாசமேன்பது ,அந்த குற்றவாலியால் பொதுமக்களுக்கு ஆபத்து என்று ஒன்று இருக்கும் பட்சத்தில் வழங்கபடுவது.அந்த ஆபத்து நீங்கியதர்கான அறிகுறிகள் தெரிந்தால் நிச்சயம் அவரை அங்கு வைப்பதில் பொருள் இல்லை .


பொதுவில் மரண தண்டனை என்பது அவசியமில்லை.கடுமையான சட்டம் வரவேண்டும் என்று வாதிடுகிறார்கள் .குற்றம் செய்பவர் யாரும் சட்டத்திற்கு பயந்து செய்யாமல் இருப்பதில்லை என்பதே நிதரிசனம் .ஆகவே மரண தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்து இருக்கிறது என்று சொல்வது சரியல்ல.மாறாக மரண தண்டனை அழிந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது .மசூத் ஆசாத் பற்றி என் நண்பன் சொன்னான் ,காந்தஹார் விமான கடத்தலின் பொழுது அவனை விடுவிக்க கோரினார்கள் .பின்னர் ஜெய்ஷ்-ஈ -முகம்மது எனும் இயக்கத்தை தொடங்கி,மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதலில் அவனுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக நம்பபடுகிறது .நாளை இதே நிலை அஜ்மல் கசாபிற்கும் வரலாம் இல்லையா என்று கேட்டார் .சிந்திக்க வைத்த கேள்வி .

இளமையில் சில உக்கிரமான சித்தாந்தங்களால் மூளை சலவை செய்யப்பட்டு , சக மனிதர்கள் பால் தீராத வெறுப்பை விஷமாக கக்கி வருபவர்களை என்ன செய்வது ? .அந்த சித்தாந்த கதவுகள் அவர்களுக்கு சில தர்க்க தாழ்களை ஏற்படுத்தி கொடுத்து மொத்தமாக அடைத்து வைத்து விடுகிறது,அதை எக்கணம் உடைக்க முடியும் ?
ஆனால் அது யாருடைய தவறு ? தான் நம்பும் ஒரு  விஷயத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வரும் மனிதர்கள்,அந்த விஷயத்தின் ஒட்டு மொத்த விளைவுகளை பற்றி சிந்தனை செய்வதில்லை , ஒரு போலி த்யாகி பட்டம் உருவாக்க பட்டு ,அவர்களை ஒரு மகத்தான கனவிற்காக உயிர் நீத்த த்யாகியாக சித்தரித்து விடுகின்றனர் .இதுவே இவு இரக்கமற்ற தற்கொலை படை தாக்குதல்களில் ஈடுபடுவோரின் மனநிலையாகும் .

மரண தண்டனை என்பது - ஒரு பெரிய நல்லதிற்காக செய்யப்படும் ஒரு செயல் .அந்த பெரிய நல்லது (for the greater good) என்னவென்று யோசிக்க வேண்டும் .ஒரு வளர்ந்த நாகரீக சமூகத்தில் நிச்சயம் மரண தண்டனைக்கு இடமில்லை .

மரண தண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எத்தனையோ தர்க்கங்கள் எதிர் தர்க்கங்கள் ,இரு தரப்புகளிலும் சில நியாயங்கள் ,பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் .இது அத்தனையும் கேட்டு புரிந்து அறிவார்ந்த ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை .ஆனால் என் உள்ளம் செல்லும் திசை தெளிவாகவே தெரிகிறது .நிச்சயம் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் அவனது உயிரை போக்கிகொள்ளும் உரிமை கூட கிடையாது என்பதே அது .அப்படி இருக்கையில் மரண தண்டனைக்கு வேலையே இல்லை .

                                An eye for an eye makes the world blind- gandhi