Friday, July 22, 2011

ஞானேஸ்வரி







குற்றாலம் பற்றிய பதிவில் ராஜபாளையம் சென்றதை பற்றி கூறி இருந்தேன் ,அதை பற்றி விரிவாக எழுதுவதாகவும் கூறி இருந்தேன் .குற்றாலம் செல்லும் வழியில் எனது பெரியப்பாவின் நண்பர் திரு.செல்லம்மா ராஜூ அவர்களின் இல்லம் இருக்கிறது , பல வருடங்களாக அழைத்து கொண்டிருப்பதால் அங்கு செல்லலாம் என்று முடிவானது .உண்மையில் எனக்கு விருப்பமே இல்லை,குற்றால கனவுகளில் மிதந்து கொண்டிருந்தேன் .ராஜபாளையத்தில் இருக்கும் அவரது ஹார்ட்வேர் கடைக்கு வர சொன்னார் , சரி வந்தவர்களுக்கு டி வாங்கி அனுப்பி வைத்துவிடுவார் என்றே எண்ணினேன் .பழைய காலத்து பாகவதர் ஜிப்பா ,ஜரிகை வேட்டி ,பக்கவாட்டு வழுக்கை ,பென்சில் மீசை என்று ஒரு வித வித்யாசமான தோற்றத்தில் இருந்தார் அவர் .டீயை குடித்துவிட்டு கிளம்பலாம் என்றோம் ,பக்கத்தில் தான் வீடு வந்துவிட்டு போகலாம் என்றார் .தட்டமுடியவில்லை அதனால் சென்றோம் ,ஐம்பதுகளில் கட்டப்பட்ட வீடு ,நீல சாயம் போட்டு வெளிறிய பனியன் போல் இருந்த சுவர்களுக்குள் ஒரு கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பிகள் அவரவர் குடும்பத்தோடு ஒரே கூரையின் கீழ் வசிக்கின்றனர் .பழைய காலத்து கட்டிடம் ,குறுகிய படிகளை கடந்து மாடிக்கு சென்றோம்.
அவரது தாத்தா சுதந்திர போராட்ட த்யாகி என்றார்,நேரு ராஜபாளையம் வந்த பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை காண்பித்தார் .அன்றைய காங்கிரசையும் ,இன்றைய காங்கிரசையும் மனம் ஒப்பிட்டு சிரித்ததை தடுக்க முடியவில்லை .கொஞ்ச நேரம் பொதுவாக பேசி கொண்டிருந்தார்கள் , எப்படா கிளம்புவது என்று காத்து கொண்டிருந்தேன் நான் .அம்மாவிற்கும் ,பெரியாம்மாவிற்கும் சிக்னல் கொடுத்து கிளப்பினேன் , "கொஞ்சம் இருங்க " என்று சொல்லியபடியே ஒரு பை நிறைய மாம்பழங்கள் ,அத்தோடு ஒரு பெரிய தாம்பாளம் நெறைய தோல் சீவிய வெட்டிய துண்டுகள் .தோட்டத்தில் விளைந்தது ,தயங்காமல் சாப்பிடுங்கள் என்றார் .வேண்டாம் வேண்டாம் என்று வாயளவில் மறுத்துக்கொண்டே கண்களால் அந்த பழங்களை ருசித்தேன் ,பின்பு எப்படி அந்த தட்டு காலியாகியது என்றே தெரியவில்லை .சரி இத்தோடு கிளம்பலாம் என்று எழுந்தோம் ,உள்ளிரிந்து ஒரு பெண்மணி நாலைந்து டார்ச் லைட்டுகளோடு வெளியே வந்தார் ,சரி விருந்தாளிகளுக்கு பரிசு கொடுக்க எடுத்து வருகிறார் என்று எண்ணினோம் ."கீழே சாக் பீஸ்ல செஞ்ச சில சிற்பங்கள் இருக்கு ,கொஞ்சம் பாத்துட்டு கிளம்பலாம் " என்றார் .
குடும்பமே முன்னாள் வழி நடத்தி செல்ல ,பின்னால் தொடர்ந்து இறங்கினோம் .பூட்டியிருந்த ஒரு அறையை மெதுவாக திறந்தார் ,உத்திர திருநாள் உதய மார்த்தாண்ட வர்மன் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷத்தை பார்த்து ஏற்படும் ஒரு வியப்பு ,அது எங்கள் அனைவரின் முகத்திலும் வழிந்தது .ஆம் ,அங்கு ஒரு பொக்கிஷம் இருந்தது ,கலை பொக்கிஷம் .கண்களை விரித்து அகல சுற்றி நோக்கினேன் ,எங்கும் கண்ணாடி பேழைகள் ,அதற்குள் இருப்பது ஒரு உலகம் .காலத்தால் பிந்தியதால் என்பதாலோ என்னவோ எல்லாம் சுருங்கி சின்ன சின்ன துண்டுகளால் ஆன உலகம், சாக் பீசும், பிளாஸ்டர் ஒப் பாரிசால் ஆன உலகம் ,கும்பகர்ணன் இருந்து இருந்தால் நம்மை எல்லாம் எப்படி பார்த்து இருப்பான் என்று அறை வினாடி யோசித்தேன் அப்படி நான் கும்பகர்ணனை பார்த்தேன் - ஒரு அலைமாரியில் உறங்கும் கும்பகர்ணனை எழுப்பும் சேனை .
திரு.செல்லமா ராஜுவின் தம்பியின் மனைவியார் திருமதி.ஞானேஸ்வரி ,பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் ஞானேஸ்வரி தான் .அவர் தனியாளாக அந்த அறை முழுக்க சாக் பீசினாலும் , பீ.ஒ.பீ.யினாலும் மிக நுணுக்கமாக ஜீவனுள்ள அந்த சிற்பங்களை வடித்துள்ளார் .இராமாயண நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு அலமாரி முழுவதும் வைத்துள்ளார்கள் .பத்து தலைகளோடு ராவணன் எகத்தாளமாக தனது சயன அறையில் படுத்து இருப்பதாகட்டும் , அனாயாசமாக படுத்து உறங்கும் கும்பகர்ணனை எழுப்ப வாசிக்க படும் பேரி,துந்துபிகலாகட்டும் , இன்று போய் நாளை வா என்று ராமன் ராவணனை போர்களத்தில் தனது அறத்தால் வீழ்துவதாகட்டும்- அதே களத்தில் போரின் சேதாரங்களை , மானுட அழிவுகளை சித்தரிப்பது ஆகட்டும், அனைத்திலும் அத்தனை நேர்த்தி ,வியக்க வைக்கும் நுணுக்கம்.இதற்கு ஒரு சிறிய உதாரணம் - சிவன் மதயானை உரித்தல் நிகழ்வில் உட்பக்கமாக நோக்கினால் வெள்ளை நிறத்தில் யானையின் விளா எலும்புகள் செதுக்கபட்டுளது தெரிகின்றது .
பால கிருஷ்ணன் ஆடும் காலிங்க நர்த்தனத்தில் அந்தரத்தில் மிதக்கும் கிருஷ்ணன் என்று ஒவ்வொன்றும் மீள முடியாத பிரமிப்பையும் ,பரவசத்தையும் அளித்தது .ஒரு பெரிய மலை
போன்ற அமைப்பு அதில் வெவ்வேறு சன்னிதானங்கள் ,திருப்பதி ஏழுமலையான் முதல் ஐயப்பன் வரை ,கோவிலின் கச்சிதமான அமைப்பு ,உள்ளே டார்ச் அடித்தால் அங்கு விக்ரஹ ரூபமாக வடிக்கபட்டுளது தெரியும்.
இத்துடன் அங்கு நான் எடுத்த படங்களை இனைக்கிறேன் - காண்க .எனது புகைப்பட கருவி ஆறு மெகா பிக்சல் அளவே ,மேலும் உற்சாகத்தில் சரியாக எடுக்கவில்லை இருந்தாலும் பார்க்க வேண்டும் .புகைப்படங்களை தரவிறக்கம் செய்து பெரிதாக்கி பார்ப்பது நலம் .
அத்தனை அமைதியாக அவர் ஒவ்வொன்றாக விளக்கினார் , மாடியில் முற்று பெறாத நிலையில் மகாபாரதம் உருவாகி கொண்டிருக்கிறது .இவர் எதையும் பார்த்து வரையவில்லயாம் ,அவராக கதையை வாசித்து வாசித்து உருவாக்கி கொண்ட உருவகங்களை நமக்கு அளிக்கிறார் .இதை செய்து முடிக்க அவருக்கு பத்து வருடம் ஆகி உள்ளது .ஒரு சிறு கோணல் கூட இதை அவலட்சணம் படுத்தி விடும் ,மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் .
இது ஒரு தவம் போன்றது ,மனம் முழுவதையும் குவிய செய்ய வேண்டும் ,ஒரு யோகம் போல ,தியானம் போல செயலும் செய்பவனும் ஒன்றாக இணையும் உத்தம புள்ளியில் உயர்ந்து நிற்கும் கலை வடிவம் ,அதை அவர் கைவர பெற்றுள்ளார் .இவருடைய திறன் வெளியில் அவளாக பிரபலமாகவில்லை ,ஒரு தனி பெரும் கண்காட்சி நடத்தும் அளவிற்கு அங்கு விஷயம் இருக்கிறது .
இதை ஒரு நிரந்தர கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்து விட்டு வந்தேன் .சிறு வயதிலிருந்து அவர் இதை செய்து வருகிறார் ,அவருக்கு இப்பொழுது சுமார் ஐம்பது வயது இருக்கலாம் .முக்கியமாக மனமார பாராட்ட வேண்டியது அவர்களது குடும்பத்தை .பொதுவாக ஒரு இந்திய கூட்டு குடும்பத்தில் பெண்களின் தனி திறன்கள் வெளிபடுவதர்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு."போய் வேலை வெட்டிய பாரு " என்று அனுப்பிவைத்து விடுவார்கள் ,இப்படி பல திறன்கள் கொண்ட பெண்கள் வெளி உலகிற்கு வரமாலே மறைந்து போய்விடுகின்றனர் .ஆனால் மாறாக ஒரு நாளைக்கு பல மணி நேரம் செலவிட வேண்டிய இத்தகைய படைப்பூக்கம் மிக்க திறன்கள் ஒரு கூட்டு குடும்பத்தில் வெளிக்கொணர பட்டுள்ளது என்பது அந்த குடும்பம் இவருக்கு கொடுத்த ஊக்கத்திற்கு சான்று .
தொன்மங்களும் காப்பியங்களும் கேட்டு வளர்ந்த சூழலில் இத்தகைய படைப்புகள் எமக்களித்த எழுச்சி தீவிரமானது .அன்றைய மாலையை மிக சிறப்பான மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றியதற்கு திருமதி .ஞானேஸ்வரி மற்றும் குடும்பத்தாருக்கும் உளமார்ந்த நன்றி .


நான் பல சமயங்களில் யோசிப்பதுண்டு ,கலைகளின் நோக்கம் தான் என்ன? மனிதனுள் நிரப்பிடமுடியாத ஒரு ஏக்கமும் வெறுமையும் எப்பொழுதும் இருக்கிறது ,அதை கண பொழுதேனும் கலை நிரப்புகிறது ,ஒரு நொடியேனும் முழுமையின் ருசியை நமக்கு தருகிறது .

No comments:

Post a Comment