Wednesday, February 16, 2011

ராஜப்பாவின் சித்திரங்கள்

ராஜப்பா -இவரை பற்றிய என் நினைவுகள் மிக குறைவே ,அவரை நான் சரியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லையே என்று இன்று வருந்துகிறேன் .இவர் எனது தாத்தாவின் தம்பி (சின்ன தாத்தா ).தம்பி என்றால் ரத்த உறவு அல்ல ,தாத்தாவின் சித்தியின் மகன் .இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்து மறைந்தவர் .நாடோடி வாழ்க்கை வாழ்ந்த கண் முன்னாள் இருந்தும் யாரும் அறியாத ஒரு மேதை என்றே இன்று எண்ண தோன்றுகிறது .அதிகம் பேசமாட்டார் ,ஒரு இடத்தில் பத்து நாட்களுக்கு மேல் தங்கியதாக நினைவு இல்லை .ஏதோ ஒரு சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவார் .ஏதோ ஒன்றை பழுது பார்த்துக்கொண்டும் ,உருவாக்கி கொண்டும் சதா சர்வ காலமும் 'பிசியாக ' இருப்பார் .
அவர் அற்புதமாக பிடில் வாசிப்பார் என்று தாத்தா அவரை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன் .ஒரு அழுக்கு வேட்டி,மேல் சட்டை அணியாமல் துண்டு போர்த்திய ஒல்லியான தேகம் ,ஒட்டி உள்ளிழுக்கப்பட்ட வயிர் ,தலையில் ஓமகுச்சி நரசிம்மன் போல் இருபுறமும்( மட்டுமே) நரைத்த மயிர் இருக்கும் ,அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரது முகசாயல் பூனையை நினைவுபடுத்தும் .அவருடைய புகைப்படம் ஒன்றே ஒன்று எங்கோ கண்டதாக நினைவு அதையும் இன்று கண்டுபிடிக்கமுடியவில்லை .

அவரது கடைசி காலத்தில் அவரது நடவடிக்கை ஒரு வித பித்து நிலையை நோக்கி அவர் பயணிக்கிராரோ என்று சந்தேகம் எழும் வண்ணம் இருந்தது .ஒரு முறை காரைக்குடிக்கு வந்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வராமல் வழியில் ஒரு மண் குவியலின் மேல் கிடந்து என் அப்பாவின் பெயரை அரற்றி கொண்டிருந்தாராம் .அப்பாவிடம் சிகிச்சை பெரும் ஒருவர் இவரை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார் .மற்றொரு முறை டர்பண்டின் எண்ணெய் குடித்து ஒரே அமர்களம் .நான் ஐந்தாவது படிக்கும் சமயம் ,அவரது மறைவுக்கு ஒரு வாரம் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்தார் ,எனக்கு 'கார்' வடிவம் இருக்கும் ஒரு மஞ்சள் நிற பென்சில் பாக்ஸ் கொடுத்தார் .அது இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளது ,மிகவும் ராசியான பாக்ஸ் -பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொது தேர்வுகளுக்கும், நுழைவு தேர்வுகளுக்கும் அதையே எடுத்து சென்றேன் .பின்பு தான் தெரிய வந்தது அது திருச்சியில் இருக்கும் அண்ணனிடமிருந்து அவனுக்கு தெரியாமல் எடுத்து வந்தது என்பது .அதே போல் எனது பெல்ட் ஒன்றை அவனுக்கு கொடுத்தார் என்று அறிகிறேன் .கொட்டம்குச்சி பிடில் செய்வது ,கலிடோஸ்கோப் செய்தது ,இன்னும் ஏதேதோ பெபர்களும் அட்டைகளும் நிறைந்த நினைவுகள் .இது மட்டுமே இன்று என் மனதில் இருக்கும் அவரை பற்றிய நினைவுகள் .
என் சொந்த ஊரான அறிமளத்தில் ,எங்கள் வீட்டு திண்ணை சுவர்களில் சில ஓவியங்கள் உண்டு .அத்தனை ஜீவனுள்ள ஓவியங்கள் .தாத்தா அந்த சிறிய திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார் .மறுபுறம் இன்னொரு திண்ணையில் நோயாளிகளும் குடும்பத்தினர்களும் அமர்வார்கள் .யாரும் இல்லாத பொழுது அந்த திண்ணை தான் எனது வாசஸ்தலம் ,அந்த ஓவியங்களில் இருப்பவர்கள் யார் என்று தெரியாத வயது ,அவர்கள் தான் எனக்கு தோழர்கள் ,நான் என்ன பேசினாலும் காது கொடுத்து மறுப்பு தெரிவிக்காத நண்பர்கள் .பேசி விளையாடி மகிழ்ந்த தருணங்கள் அற்புதமானவை

பிற்காலத்தில் அந்த ஓவியங்களை காணும் பொழுதெல்லாம் எனக்கு வியப்பு ஏற்படாமல் இல்லை .அந்த ஓவியங்கள் ராஜப்பா தீட்டியது என்று தாத்தா சொன்னதும்,எனக்கு மனமெல்லாம் ஒரு வித மகிழ்ச்சியும் ,வருத்தமும் ஒரு சேர வரும்.எல்லாம் பென்சிலால் வரையப்பட்டவை .கடந்த பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த சமயம் அவர் வரைந்த அந்த ஓவியங்களை எனது புகைபடகருவியில் பதிந்துள்ளேன் .அதை இங்கு பகிர்கிறேன் .


1.இந்தியாவின் ஆக பெரிய மக்கள் தலைவர் மகாத்மா காந்தி


2.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் -ஜவஹர்லால் நேரு













இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் 1947 -1952 வரை .ஒவ்வொரு ஓவியத்திலும் அது வரைந்து முடிக்கப்பட்ட நாளும் அவரது கையெழுத்தும் இருக்கிறது .அனைத்துமே வெறும் பென்சில்களால் தீட்டப்பட்டது (அந்த காலத்து பென்சில் கூட எவளவு தரமாக இருக்கிறது!! ).இன்றும் அந்த முட்டை பற்று போடப்பட்ட செட்டிநாட்டு சுவர்களில் காலத்தால் அழியாத படைப்புகளாக நிலைத்து நிற்கிறது .பழைய மரங்கள் எல்லாம் கரையான் அரித்து வீட்டை இடித்து புதுபிக்க வேண்டும் என்று பெரியப்பா சொன்னார் .ஏனோ மனம் கனத்தது .ராஜப்பா வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிந்து அல்லாடிய ஒரு கலைஞன் ,படைப்பூக்கம் தலைகேறி பித்தாக ஆடிய ஒரு மேதை .உயிரை கலந்து உருவாக்கும் எந்த ஒரு படைப்பும் ஜீவனுள்ளது ,அது தன்னை தானே காத்துகொள்ளும் வல்லமை கொண்டது.பின்கட்டை மட்டும் இப்பொழுது முற்றிலும் இடித்து புதிய வீடு கட்டி முடித்தாகி விட்டது .நாளை இதுவும் இடிந்து விழலாம் ,ஆனால் ஓவியமாக இல்லாவிட்டாலும் புகைப்படமாவது நிச்சயம் எஞ்சி இருக்கும் ,ராஜப்பா ஒன்றும் ரவிவர்மா இல்லை ,இது ஆக சிறந்த ஓவியங்களா ? ..எனக்கு தெரியாது .இவருக்குள் அந்த விதை இருந்தது உண்மை .இந்தியாவில் திறமை இருந்தும் ,முட்டி மோதி தன்னை பிரகடனபடுத்த வேண்டும் ,ராஜப்பா அப்படி தன்னை முன்னிறுத்த தெரியாமல் வாழ்ந்து மறைந்த ஒரு ஜீவன் .
ராஜப்பா இன்றும் வாழ்கிறார் .அந்த ஜீவனுள்ள பாரதியின் கண்களை பாருங்கள் ,இப்பொழுது கூடவா தெரியவில்லை ?

9 comments:

  1. அந்த ஓவியங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்... பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.... இந்த பதிவு - விலை மதிப்பில்லா அருமையான நினைவுகளை சுமந்து வந்து உள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. அந்த திண்ணையையும், அந்த ஓவியங்களையும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போலுள்ளது.

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சித்ரா மேடம் ,ரமேஷ் சார் :)
    முன்னோர்கள் வாழ்ந்து புழங்கிய இடம் - அவர்களின் ஆசைகளும் கனவுகளும்,ஆசிர்வாதங்களும் நிறைந்த இடம் .ஏதேதோ நினைவுகள் ..

    ReplyDelete
  4. நல்ல பதிவு.
    நல்ல ஓவியங்கள்.

    ReplyDelete
  5. அவற்றை புகைப்படமெடுத்து வைத்தது சிறப்பு..

    ReplyDelete
  6. மதிப்பில்லா பொக்கிஷம். திருவாளர் ராஜப்பாவின் விடுதலை வேட்கையும் தனது காலத்தைய தலைவர்களின் மேல் உள்ள பற்றும் அவர் வரைந்த ஓவியங்களில் காண முடிகின்றது.
    இவ்வோவியங்களையும் திருவாளர் ராஜப்பாவைப் பற்றியும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரத்னவேல் ,முத்துலெட்சுமி மேடம்,டாக்டர்.ரங்கா சார், காயத்ரி .
    தங்களது வலை தளத்தை நான் ஏற்கனவே பார்வை இட்டுள்ளேன் ,நிச்சயம் வருகிறேன்

    ReplyDelete
  8. படங்கள் ரொம்ப நன்றாக உள்ளது. இதில் நீங்கள் சேமித்து வைத்து விட்டதால் என்றும் தொலைந்து விடாமல் இருக்கும்.

    எழுதும் புது சிறிய பத்தியாக பிரித்து எழுதுங்கள் ..படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.

    ReplyDelete
  9. அருமையாக இருக்குதுங்க....

    ReplyDelete