புத்தகங்கள்

Pages

Friday, January 21, 2011

ஒற்றை வைக்கோல் தீச்சுடர்

இம்முறை சென்னை புத்தக கண்காட்ச்சிக்கு நானும் வந்தேன் ,ஒரு நாள் அவசர விஜயம் .சமீப காலமாக மூலிகை வளர்ப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக அதற்க்கு சம்பந்தமாக ஏதேனும் புத்தகம் தமிழில் உண்டா என்று துழாவி கொண்டிருந்தேன் ,அப்பொழுது என் கண்களில் சிக்கியது தான் மசானபு புகொகா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி ,(தமிழில்- மொழிபெயர்ப்பு -பூவுலகின் காதலர்கள் ,எதிர் வெளியீடு ,விலை-rs.80).
சரிதான் இயற்க்கை வேளாண்மை பற்றி ஏதேனும் சொல்லி இருப்பார் என்று வாங்கினேன் .புத்தகத்தை படித்த பொழுது எனக்கு கிட்டியது பெரும் ஏமாற்றம்.இது வெறும் வேளாண்மை புத்தகம் அல்ல ,ஒரு பெரும் அக-வாழ்க்கை தரிசனம் .புத்தகத்தை படித்து முடித்த பின்பு பெரும் எண்ண சுழல்கள் என்னை சுழற்றி அடிக்கின்றன .கோபம்,இனி என்ன எனும் தவிப்பு ,பச்சாதாபம் ,நிறைவு,அமைதி என்று கலவையான உணர்வுகள் காட்டு நதி போல் நொடிக்கொரு முறை திசைகள் மாறி பயணித்து கொண்டுள்ளேன் .

ஜப்பானின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இந்த கிழவர் உலகெங்கிலும் செய்யும் மாயாஜாலம் பிரமிப்பானது .நம்மையும்,நம் வாழ்க்கை முறையும் பரிகசித்து ஏளனம் செய்கிறார் .நாம் இயற்கையை நமக்காக வளைக்கிறோம், அதன் ஒழுங்கை சீர்குலைத்து சிதைக்கிறோம் எனும் உண்மையை நம் கண்களை நோக்கி உரக்க கூறுகிறார் .அந்த நேர்மையை கண்டு நம் மனசாட்சி வெட்கி தலை குனிகிறது .விடை தேட முயல்கிறது .நம் அறிவியலின் எல்லை ,இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ,உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ,இயற்கையின் சுழற்ச்சி ,தத்துவம் என்று பல அதி முக்கியமான புரிதல்களை நமக்கு அளிக்கிறார் .
சில வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு திரைப்படம் என் நினைவுக்கு வருகிறது , 'god must be crazy ' -ஆப்ரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இன மக்கள் பற்றிய ஒரு பதிவு ,ஒரு கள்ளம் கபடமற்ற ,பகிர்ந்து வாழும் ,இயற்கையுடன் இயந்து வாழும் ,நாடோடி பொது உடமை பழங்குடி சமூகம் ஒரு பக்கம் .மறுபுறம் -மகிழ்ச்சியாக வாழ வழி செய்வதாக எண்ணிக்கொண்டு ,வாழ்க்கையை வசதியாக மாற்றிக்கொள்ள அவனே உருவாக்கும் புதிய விதிகள் ,அதை கடைபிடிக்க அவனே உருவாக்கும் வழிமுறைகள் ,தன்னை தானே நாகரீகத்தின் பெயரால் வருத்தி கொள்ளும் மகிழ்ச்சியற்ற நகர மனிதன் .

இன்றைய மனித சிக்கல்களுக்கு யார் பொறுப்பு ? நிச்சயம் மனிதன் தான் ,இயற்கையின் பிடியிலிருந்து அவனது திட்டமிட்ட பேராசை அவனை இழுத்து செல்கிறது ,அதிலிருந்து தொடங்கும் சிக்கல்களுக்கு அவன் இயற்கையை நோக்கி அடி எடுத்து வைப்பது தான் தீர்வு ,ஆனால் பின் நகரமால் அவன் மென்மேலும் சிக்கலை தீர்க்கிறேன் என்று பெரும் சிக்கல்களையும் அதற்க்கான பெரும் உழைப்பையும் கொடுக்கும் ஒரு சுழலில் சிக்குகிறான் .இயற்கையை யாரும் பயன் படுத்தவும் வேண்டாம் ,அதை ஒழுங்கு படுத்தவும் வேண்டாம் என்று வாதிடுகிறார் .இயற்கையை நாம் முழுவதுமாக புரிந்துக்கொள்ள முடியாது ,அதன் சில அம்சங்களை நாம் அறிந்ததால் நாம் அதை புரிந்துகொண்டதாக ஆகாது .'ஒன்றுமே செய்யாதிரு ' இது புகொகாவின் மந்திர சொல் .

இனி புகொகாவின் வார்த்தைகளில் என்னை கவர்ந்த கருத்துக்கள் ..

1.மனிதன் ஒரு ,மகிழ்ச்சியான விலங்கு தான் ,ஆனால் அவன் ஒரு கடினமான உலகை படைத்து இன்று அதை உடைத்து மீண்டு வர துடிக்கிறான்

2.ஒரு பனித்துளியை ஆராய தொடங்கியதும் அவர்கள் முடிவற்ற அறிவாற்றல் எனும் ஒரு நரகத்தில் சிக்கி விட்டனர் .

3.இயற்க்கை என்றால் 'எது' என்ற கேள்வியை அவன் கேட்க துவங்கியதும் 'எது ' என்றால் எது என்று அவன் கேட்க வேண்டும் .இப்படியே போனால் முடிவற்ற கேள்விகனைகள் தான் மிஞ்சும் .

4.மனித இனத்தின் முதல் மோசமான எதிரி அவன் அகம் தான் ,ஆனால் மக்கள் அதை தான் கொண்டாடுகின்றனர்

5.இவ்வுலகிலுள்ள வேறுபாடுகளாலும் முரண்பாடுகளாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக வாழ்பவர்கள் குழந்தைகள் மட்டுமே .வெளிச்சம்,இருட்டு,வலிமை,நலமின்மை ஆகியவற்றை அவர்கள் உள்வாங்கி கொண்டாலும் ,அதை மதிப்பீடு செய்வதில்லை .வாழ்வின் ஆதார மகிழ்ச்சி அவர்களிடம் தான் இருக்கிறது .

6.இயற்க்கை ஒரு போதும் மாறுவதில்லை அதே சமயம் நொடிக்கு பல முறை நம் கண்களின் முன் மாறும் .இதற்க்கு காரணம் இயற்கையை பற்றிய நமது பார்வை காலம்காலமாக மாறுவது தான் .

7.ஏன் இயற்கையை புரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது ? ஏனெனில் இயற்க்கை என்று நாம் வரிப்பது ஒவ்வொருவரின் மனத்திலும் இயற்கையை பற்றி தோன்றுகிற கருத்தே ஆகும் .

8.மனித அறிவாற்றல் என்பது எவளவு சிறியது என்பதை காட்டும் பணியை தான் அறிவியல் செய்துள்ளது என்பது ஒரு முரணான நகைச்சுவை ஆகும் .

9.நமக்கு ஒரு உணவு நெருக்கடி ஏற்ப்பட்டால் அது இயற்கையின் உற்பத்தி சக்தியின் பற்றாகுறையால் விளைந்ததாக இருக்காது ,மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்படும் .

10.'வேகம்','அதிகம்' போன்ற "வளர்ச்சியின் "தாரக மந்திரங்களே இன்று சமுதாயம் இப்படி உடைந்து நொறுங்கி போனதற்கு காரணம் .

11.ஆராய்ச்சிகள் மூலம் ,கண்டுபிடிப்புகள் மூலம் ,மனித இனம் இயற்கையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிக்கும் என்று நம்புவது ஒரு மாயை .

12.அறிவியல் உண்மைகள் ஒருபொழுதும் முழுமையான உண்மையை எட்ட முடியாது .தத்துவங்களும் உலகை குறித்து கணிக்கும் பல்வேறு கருத்தாக்கங்களே தவிர வேறு எதுவும் இல்லை
எளிமையான ,இனிமையான மனித வாழ்வை நாம் ஏதேதோ மெனக்கெடல்கள் மூலம் சிக்கலாக ஆக்கி தவிக்கிறோம் .இயற்கையிடம் எடுத்ததை இயற்க்கையிடமே திருப்பி அளித்தல் மூலம் இயற்கையின் இயக்கம் சீராக செயல் படுகிறது அறிவியலின் போதாமை ,சிறப்பு துறையியல்கள் -இயற்கையை சிறு கூறுகளாக்கி ஆராய்வதன் மூலம் முழுமையான சித்திரம் கிடைப்பதில்லை ,உண்மைகள் துண்டுகளாக கிடைக்கிறது .ஆன்ம விழிப்பின் மூலம் நாம் இயற்கையின் பேரியக்கத்தில் ஒரு சிறு துளி என்பதை உணர வேண்டும் .புகோக இப்படி அடுக்கி கொண்டே போகிறார் .சிந்தனைகள் நிறைந்த இந்த படைப்பின் புகோக அவர்களின் ஆன்ம பலம் புலப்படுகிறது ,ஒரு நல்ல படைப்பானது படைப்பாளியின் ஆன்ம பலத்தை பறை சாற்றி நம்முள் புதிய சிந்தனை விதைகளை விதைக்கும் ,காலம் கனிந்தால் அத்தகு சிந்தனை விதைகள் பெரும் ஆலமரமாக மாறும் அளவிற்கு உயிர்ப்பானவை .புகோக அப்படி வட்ட ஒருவர் .புகோக காந்தியை போல் ஒரு நடைமுறைவாதி ,தத்துவங்களும் சித்தாந்த்தங்களும் மனிதனின் துயரத்திற்கு சாக்குபோக்கு சொல்ல அல்ல , நடைமுறையில் அது பயன்பட வேண்டும் இல்லையேல் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை .இவரது வழிமுறைகள் மூலம் நிச்சயம் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் .இந்த ஒற்றை வைக்கோல் பற்ற வைக்கும் தீ சுடர் ,உள்ளுக்குள் பெரும் கனலாக எரிந்து ,உலகெங்கும் உள்ளொளியை பரப்பும் .ஆனால் இன்றைய சூழலில் அது பெரும் கனவோ என்று ஐயம் எழுகிறது .
புகொகாவிர்க்கு பிடித்த புத்தனின் வரிகள் "வடிவம் வெறுமையானது ,வெறுமையானது தான் வடிவம் "

Monday, January 3, 2011

உலகளந்தான்

புதிய ஊர்கள் ,புதிய மனிதர்கள் ,அந்த மண் அதன் மனம் ,அந்த ஊரின் ஆன்மா ஆகியவை அற்புதமானவை .பயணிக்கும் பொழுது வழியில் என் விழிகளில் பிம்பமாக படியும் ஒவ்வொரு பனை மரமும், தென்னை மரமும் ,உடன் வரும் சூரியனும் சந்திரனும், நான் எங்கு சென்றாலும் ,ஒளிந்து கொண்டாலும் முகத்தை பொத்தி விளையாடும் தாய் தன் குழந்தையை கண்டு கொள்வது போல் நான் பயணங்களில் எங்கு ஒளிந்து கொண்டாலும் என்னை கண்டு பிடிக்கும் ,எனக்கும் சூரிய சந்திரனுக்கும் இடையே நடந்தேறும் தொன்மையான விளையாட்டு, எப்பொழுதும் தொடரும் ஒரு விந்தை .எங்காவது செல்ல வேண்டும் ,அது தாஜ் மஹால் ,தஞ்சாவூர் பெரிய கோவில் என்று இல்லை ,ஒத்தை அடி பாதையில் ஊரில் நூறு வீடுகள் கொண்ட குட்டைகள் சூழ்ந்த சிறு கிரமாமாக இருக்கலாம் ,பொட்டல் காட்டில் , வழுக்கை தலையில் ஆங்காங்கு வளைந்து சுருண்டு இருக்கும் தலை மயிர்களை போல் ஆங்காங்கு தென்படும் கருவேலங்களுக்கு ஊடே செம்மண் தரையில் பாதை இல்லாத வழியில் பயணிக்கலாம் .பயணங்கள் மனிதனை அவனுக்கு நெருக்கமாக ஆக்குகின்றன ,அவன அறியாத சூழலில் அவனது எண்ணங்களின் நேர்மையை சோதிக்கின்றன .


உயர்ந்த சிகரங்களும் ,தேங்கிய குட்டைகள்,பாசி படர்ந்த குளங்களும்,தாமரை தடாகங்களும் ,சம தரையாய் விரியும் கடலும் ,பெரும் வெறுமையால் நிரப்ப பட்ட புழுதி பொட்டல்களும் ,பேரிரைச்சலோடு பாரத வெள்ளை நிற நீர் விழிச்சிகள்,அதோடு இனைந்து வரும் ஒரு வித மூலிகை வாசனை.
குருவிகளும் காக்கைகளும்,கூடுகளும் நிரம்பிய உயிர்ப்புடன் கூடிய பிரம்மாண்ட விருட்சங்களும் ,வறண்டு போன கிழவியின் தோலை போல் முதிர்ந்து நிமிர்ந்து உயர்ந்தும் படர்ந்தும் நிற்கும் மகா விருட்சங்கள்.உலகின் கால மாற்றங்களுக்கு வெறும் மௌனியாக ,சாட்சியாக நிற்கும் மரங்கள்
வசந்தங்களில் தனது ஆடைகளை உரித்து நிர்வனாமாக நிற்கும் மொட்டை மரங்களும் ,பாசி பூசிய சுவர்களும் ,வானம் தான் எத்தனை வகை ?சூரியன் உதிக்கும் செவ்வானம், விண்ணில் ஏதும் ரத்த களரி
நடக்கிரதோ என்று நாம் ஐய படும் ரத்த சிவப்பு உடலெங்கும் பூசிய ருத்ர வானம் ,களங்கம் இல்ல குழந்தை போல் மேகம் இல்லா தூய வானம் ,இரவின் நட்ச்சத்திர வானம்,நிலவில்லாத இருண்ட வானம் ,ஹர்ரி பாட்டர் படத்தில் வரும் டம்பல்டோர் தாத்தாவின் தாடி போல் வெண்மை நிற மேகங்கள் நிறைந்த வானம் ,தேர்களாக,முதலைகளாக ,வாய் பிளந்த சிங்கமாக என்று ஒவ்வொரு மேகமும் ஒரு ரகசிய குறியீட்டுடன் வானில் அலைந்து திரிகின்றன .


நான் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை ,அவமானம் ,ஆக பெரிய அவமானம் ,எனது வெற்றிகள் ,சாதனைகள் ,தோல்விகள் .ரணம் ,எதுவும் தெரியவில்லை .நான் இருப்பதை கூட பொருள் படுத்தவில்லை ,ஏளன சிரிப்பு ,மனிதனின் அகந்தையை எட்டி உதைக்கும் எக்காளம். ஒரு பிரமாண்டம் ,மிகை ஒழுங்கு ,மிகை அறிவு ,மகோன்னதம் ,பூரிப்பு ,பெருமை ,பேரமைதி என்று உணர்வு கலவைகளில் நான் சிக்கி கொள்வேன் .உலகை அளக்க வேண்டும் ,என் வெறும் கால்களால் உலகம் முழுவதையும் அளக்க வேண்டும் ,நான் வாமணன் அல்ல ,என் காலடி படாத இடமே இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு மலையின் ,ஒவ்வொரு மலரின் வாசத்தை நுகர வேண்டும் ,ஒவ்வொரு மரத்தையும் ஆற தழுவி உச்சி முகர வேண்டும் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியாது ,கனவுகள் காண்கிறேன் .


எங்கெங்கோ பயணிக்கிறேன் ,என் பயணங்களில் நான் கண்டதை கேட்டதை பகிர விரும்புகிறேன் ,நான் உலகை அளக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் முயல்கிறேன் ,என்னை நான் வாரம் ஒரு முறை தொலைக்க விரும்புகிறேன் , எனது மொட்டை மாடியில் தெரியும் வானம் எவரெஸ்ட் உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்று உணர விரும்புகிறேன் .

சமீபத்தில் நண்பர்களுடன் சதுரகிரி மலைக்கு பிரயானப்பட்டேன் .மதுரை வந்து அங்கிருந்து கிருஷ்ணன் கோவில் சென்று (ஸ்ரீ வில்லி புத்தூர் செல்லும் வழி ) அங்கிருந்து வத்திரா இருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை வர வேண்டும் .தாணிப்பாறை -சதுர கிரி மலைகளின் அடிவாரம் .மலை பாதை மிகவும் சவாலானது வழுக்கு பாறைகள் ,நீர் நிலைகள் ,செங்குத்து பாறைகள் ,உருண்டை கற்கள் என்று வழி நெடுகிலும் காண படும் .அமைதியான இயற்க்கை சூழல் ,நம்மை தொலைக்க சரியான இடம் .வழிகள் ஆங்காங்கு பிரியும் சற்று கவனம் தேவை .ஏற இறங்க மொத்தம் 22 கி .மீ ,அதிகம் பாரங்கள் சுமக்காமல் ,சாப்பிட ஏதேனும் ரொட்டிகள் மற்றும் தண்ணீர் குப்பிகள் எடுத்து கொண்டு ஏறினாள் போதும் .என் அளவில் இது ஒரு உன்னதமான அனுபவம் ,அமைதியாக இயற்கையின் பிரமாண்டத்தின் முன் நடப்பது நம்மை உணரும் தருணம் .பயம் ,உற்ச்சாகம் என்று கலவையான மனோ நிலை .இத்தகு மலைகளை ஏறி சாதிப்பது என்ன ? நம் தகுதியை குறிப்பாக உடல் மற்றும் மன தகுதியை சோதிக்க நல்ல களமாகும்.மலை உச்சிக்கு சென்று திரும்பும் பொழுது நாம் நம் பலம் கூடியிருப்பதை உணரலாம் .நம் உடல் மற்றும் மன வலு கூடுவது திண்ணம் .
அங்கு நான் எனது காமெர கொண்டு எடுத்த சில புகை படங்கள் இங்கு அளிக்கிறேன் .

1.ஆதவனின் பார்வையில் சிதறி ஓடும் மேக
கூட்டங்கள்
.








7.இது தான் இளநீர் (இலை நீர் )





எனக்கு படங்கள் எடுக்கவும் பார்க்கவும் பிடிக்கும் அந்த உரையும் தருணங்கள் நினைவலைகளாக என்றும் மகிழ்ச்சி அளிக்கும் .எனக்கு இத்துறையில் ஆர்வம் மட்டும் உண்டு ,எந்த தொழில்நுட்பமும் தெரியாது .இப்புகைப்படங்கள் நிக்கான் எல் 11 எனும் 6 மெகா பிக்சல் காமெர கொண்டு எடுத்தது
பல அறிய மூலிகைகளும் ,வன விலங்குகளும் நிறைந்த காடு என்று சொல்ல படுகிறது .நான் கூட ஒரு அறிய வகை சாம்பல் நிற அணிலை கண்டேன் அதை படம் எடுப்பதற்குள் தவ்வி மறைந்துவிட்டது .
அங்கும் வழி எங்கும் கொட்டி ஆங்காங்கு கிடக்கும் பாண் பராக் பாக்கேட்டுகளை ,பிளாஸ்டிக் பைகளை பாரத உடன் மனம் சஞ்சல பட்டது .மிருகங்கள் கடந்து போனதை அதன் கால் தடம் கொண்டோ ,சாணத்தின் வாடையை கொண்டோ அறிய முடியும் என்பர் ,மனிதன் வந்து போனதற்கு சிறந்த அறிகுறி பிளாஸ்டிக் பைகள், சிகரட் பொட்டிகள்,கிழிந்த உள்ளாடைகள் ,அருந்த செருப்புகள் .இவைகளை நமது அடையாளங்களாக நாம் விட்டு செல்லுகிறோம் .இன்னும் ரொட்டி பாக்கெட்டுகள் ,தண்ணீர் குப்பிகள் ,பீர் குப்பிகள் .மனம் மிகவும் வருந்தியது .கடைசி வரை நம் சுயநலம் மட்டும் தான் முக்கியமா ? ..
இது ஒரு அளப்பறியா அனுபவம் ,நல்ல நண்பர்களோடு நிச்சயம் போய் வாருங்கள்.
குறிப்பு -படங்களில் உள்ள தேதி தவறானவை ,எனக்கு அதை மாற்ற தெரியவில்லை அதனால் அது பாட்டுக்கும் ஒரு நேரத்தை காண்பிக்கிறது

குறிப்பு - எனது தமிழ் மன பரிந்துரைகள் மூன்றும் இரண்டாம் சுற்றிற்கு தேர்வாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்

பிரிவு - சமூக அரசியல் விமர்சனம்

Saturday, January 1, 2011

இந்திய மருத்துவம் -இன்றைய பிரச்சனைகள்

நீண்ட நாட்களாக இதை எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன் ,ஏதோ வேலைகள் கணினி முன் அமர்ந்து நிதானமாக எழுத இயலவில்லை ,
ஏதோ ஒரு தயக்கம் .இப்பொழுது எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் .ஒரு ஆயுர்வேத மருத்துவனாக ,நான் இதனுள் புழங்கி கொண்டிருப்பதால் இதை ஆராதிக்கும் அதே சமயத்தில் இதில் உள்ள குறைப்பாடுகள் என் கண்களை உறுத்துகின்றன . உற்று நோக்கியதில் எந்த ஒரு மருத்துவமுமே பரிபூரணம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிந்தது .

இந்திய மருத்துவத்தை பொறுத்த வரையில் இன்றைய சிக்கல்களின் தோற்று வாயாக மூன்று முக்கிய காரணிகளை கூறலாம் .மருத்துவர்கள் ,அரசு ,பொது மக்கள் என்று இவர்களை சார்ந்து புரிந்து கொள்ளலாம் .ஒவ்வொன்றையும் சற்று
ஆழமாக நோக்க வேண்டும் .

1.இப்பொழுது நவீன மருத்துவத்தை பொறுத்த மட்டில் ,மருத்துவர்கள் நோயாளிகளின் தேவையை மட்டுமே கவனிக்கும் வசதி உண்டு ,மருந்து தயாரிப்பது ,புதிய மருந்துகளை கண்டு பிடிப்பது போன்றவை உயிர் வேதியல் ,மருந்தாளுமை ஆகியவை பயின்றவர்கள் கவனிக்கின்றனர் .இங்கே அது மாதிரி இல்லை , இங்கே இலை தழைகளை கொணர்வது,மருந்து செய்வது என்று அனைத்துக்குமே ஒரே மருத்துவ படிப்பு தான் .

2.குழப்பம் -சித்த மருத்துவமும் சரி ஆயுர்வேதமும் சரி அண்மைய காலம் வரை குரு -சிஷ்ய பரம்பரையின் வாயிலாக தொன்று தொட்டு வழங்கப்பட்டுள்ளது .சுதந்திரத்திற்கு பின்பு தான் கல்லூரி ,பல்கலைகழக அமைப்புகள் எல்லாம் அதிகமாக வந்தது .அறிவு தொடர்ச்சி நடைபெறுவதில் இதனால் பெரும் சிக்கல் நிலவுகிறது .பாரம்பரிய ரகசியங்கள் தங்களோடு அழிந்தாலும் அழியட்டும் அது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று பல தொன்மையான மருத்துவ முறைகள் வழக்கொழிந்து போய் விட்டன.பல செயல்முறைகளும் ,மருத்துவ கோட்பாடுகளும் நீர்த்து போய்விட்டன அல்லது தவறாக உருவகபடுத்தப்பட்டுள்ளன
3.எந்த ஒரு துறையுமே தன்னை புதுபித்தல் முக்கியமாகும் ,தனது பழைய தோல்களை கழட்டி எரிந்து புதிய சட்டையை மாட்டும் பாம்பை போல ,உயிர்ப்புடன் ஒன்று உயிர் வாழ அது புதுபிக்கப்பட வேண்டும் ,ஆனால் இந்திய மருத்துவத்தின் நிலை சிக்கலானது .இன்னும் சொல்ல போனால் இந்திய மருத்துவத்தில் புதிய மூலிகைகள் இணைக்கப்பட்டு ஒரு நூறு வருடங்களாவது கழிந்து இருக்கும்.


4.இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளை கொண்டு அது எதை எதையோ சாதிக்கலாம் ,நடைமுறையில் அது நடக்கவில்லை .இதற்க்கு காரணம் -இத்துறையில் போதிய நவீன ஆய்வுகள் இல்லை ,அரசு இந்திய மருத்துவத்திற்க்காக பெரும் தொகையை ஒதுக்கினாலும் அது சரியான முறையில் பயன்படுவதாக தெரியவில்லை .ஆங்காங்கு நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் முன்முடிவுகள் சார்ந்த ஆய்வுகளாக இருக்கிறது ,ஒன்று அது மருத்துவத்தை மட்டம் தட்ட வேண்டும் என்கின்ற ஒரே நோக்கோடு செய்ய படுகிறது ,அல்லது நாம செஞ்சா சரியா தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கையோடு செய்ய படுவது மேலும் ஆய்வுகள் மிகவும் தட்டையாக உள்ளது ,முழுமையான உருவத்தை அளிக்கவில்லை என்பது ஒரு முக்கிய குற்றசாட்டு.



5.பெருகி வரும் போலிகள் -இது மற்றும் ஒரு முக்கியமான பிரச்சனை ,தினம் தோறும் நாம் தொலை காட்சியில் எப்படியும் ஒரு பத்து பதினைந்து போலிகளை காண்கிறோம்,அதுவும் குறிப்பாக பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுகிறேன் பேர்வழி என்று செய்யும் அட்டகாசங்கள் அளவில்லாதவை .இதை எந்த மருத்துவ சங்கமும் தட்டி கேட்பது இல்லை ,பொதுவாக இத்தகைய விளம்பரங்களில் வரும் ஆட்கள் எக்கசக்கமாக கறந்து விடுவர் அது தெரியாமல் நம் மக்கள் அவர்களை நம்பி ஏமாறுவர் . மேலும் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு ,பணபலம் ஆகியவை தற்காத்து நிற்கும் .எங்கள் சங்கங்கள் கூட இவர்கள் விஷயத்தில் எவ்வளவு முனைந்தும் ஏதும் செய்ய முடியாதது துரதிஷ்டமே
.
6.தவறான பொருளாதார ,கல்வி கொள்கைகள்
இன்றைய அவசர யுகத்தில் அனைத்தும் பணம் ,நேர விரயம் என்பது சம்பாதிக்கும் திறன் என்பதை குறிக்கிறது ,எல்லா சமயங்களிலும் இந்திய மருத்துவத்தால் நவீன மருத்துவம் போல் நோய் குறிகளை உடனடியாக சரி செய்ய முடிவதில்லை .மேலும் நாம் நம் பாரம்பரிய அறிவுகளின் மேல் கொண்டுள்ள முன்முடிவுகளோடு சேர்ந்த ஒரு வித ஒவ்வாமை ,இதை வெற்றிகரமாக நமது கல்வி முறை நம்முள் செலுத்தி உள்ளது .இந்த கல்வி முறை நம்மை ஒரு வித நுகர்வு வெறிக்கு இட்டு செல்கிறது ,அவசியத்திற்கு அதிகமான நுகர்வு ,பகட்டு நமது அடையாளமாக திணிக்க படுகிறது .நான் நமது பாரம்பரிய அறிவை அப்படியே ஏற்றுகொள்ளுங்கள் என்று கூறவில்லை ,இதை பரிசீலனை கூட நாம் செய்வதில்லை என்பதே நிதர்சனம்.நாம் அறிய நமது கல்வி முறைகள் உதவுவதில்லை மாறாக அதை சீரழிக்கும் அனைத்து உபகரணங்கள் ,வழிமுறைகளை நமக்கு அது ஊட்டுகிறது.நமது கல்வி முறைகள் நம்மை மாற்று வழிகளில் சிந்திக்க விடுவத்தில்லை , நம்மை ,நமது சிந்தனையை சுய அறிவை மழுங்க அடிக்கும் ஒரு இயந்திரத்தனமான கல்வி முறையை பின்பற்றுகிறோம் .இயற்கைக்கும் நமக்குமான உறவை சிதைக்க படுகிறது ,ஒரு சுரண்டல் சமூகம் உருவாக வழி வகை செய்கிறது.இத்தகைய கல்விமுறையில் பயின்ற பின்பு இந்திய மருத்துவத்தை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் ,நாம் ஓவியத்திற்கான சட்டம் அடிப்பதில்லை சட்டத்தை வைத்து கொண்டு அதற்குள் ஓவியத்தை அடக்க முயல்கிறோம் .

7.இந்திய மருத்துவம் யார் பயில்கிறார்கள் என்று பார்த்தால் ,ஒன்று பரம்பரை மருத்துவர்கள் -தங்களது குடும்ப நீட்சியாக அல்லது ஏதோ ஒரு மாணவன் -நவீன மருத்துவம் படிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டதால் அவர்களது குடும்பத்தின் நிர்பந்ததினால் அல்லது அரசு வேலை கிடைக்கும் எனும் நப்பாசயினால் கல்லூரிக்கு வருகின்றனர் .வேண்டா வெறுப்பாக வரும் மாணவர்களுக்கு கல்லூரியில் காத்திருக்கும் மற்றொரு அதிர்ச்சி ,இது வரை பயின்ற அறிவியலுக்கு தொடர்பில்லாத வேறு ஒரு உலகம் .தான் படித்தது மட்டும் உண்மை என்று நம்பும் மனம் இதை ஏற்று கொள்ள தயங்குகிறது .ஒட்டு மொத்தமாக பார்த்தால் படிக்கும் கூடத்தில் வெகு சிலர் மட்டுமே அதன் போக்கை கண்டு கொள்கின்றனர் .எனக்கு இந்திய மருத்துவத்தை புரிந்து கொள்ள நான்கு ஆண்டுகள் பிடித்தது ,அதுவரை நானும் கூட ஒரு வித விரக்தியில் இருந்தேன் ,நல்ல வேலையாக எனக்கு ஒரு நல்ல ஆசான் கிட்டினார் .இது எல்லோருக்கும் அமைவது இல்லை என்பதே சிக்கல் .பெரும்பாலும் இப்படி ஆர்வமில்லாமல் படிக்கும் மாணவர்கள் படித்த உடன் வேறு ஏதாவது வழியில் சென்று விடுகின்றனர் .பல இருவத்தி நான்கு மணி நேர ஆஸ்பத்திரிகளில் இரவு நேர மருத்துவ பனி இந்திய மருத்துவர்கள் மற்றும் ஹோமியோ மருத்துவர்களே பனி புரிகின்றனர் .நம் கல்விமுறை இந்திய மருத்துவர்களுக்கு வெற்றிகரமாக ஒன்றை கொடுத்தது என்றால் அது தாழ்வு மனப்பான்மை தான் .

8.இப்பொழுது இந்திய மருத்துவம் நோக்கி வரும் மக்கள் யார் என்று கவனித்தால் ,ஒன்று நவீன மருத்துவத்தின் பால் நம்பிக்கை இழந்து ,அதிக பண விரயம் ஏற்பட்ட பின்பு ,நவீன மருத்துவம் தங்களை கைவிட்டு விட்டது என்று நம்பும் சமயத்தில் -எத்தை தின்னால் பித்தம் தெளியும் எனும் நோக்கில் இந்திய மருத்துவத்தை நாடும் ஒரு வழக்கம் இங்கு உள்ளது .பொதுவாக இவ்வகை நோய்களுக்கு -அதுவும் நீண்ட காலமாக பல ஆங்கில ரசாயான மருந்துகள் உண்டு அவர்களது இயல்பு நிலையிலிருந்து வெகுவாக விலகி இருப்பார் ,அதை சரி செய்து உடலை இயல்பு நிலைக்கு திருப்ப காலம் அதிகமாக தேவை படும் ,சில நேரங்களில் அத்தகைய நிகழ்வுகள் சாத்திய படுவதும் இல்லை .ஒரு மருத்துவ பேருண்மை சொல்லவா -மருத்துவமே ஒரு மிக பெரிய சூது தான் ,வெவ்வேறு முயற்சிகள் ,சில பலனளிக்கும் சில அளிப்பதில்லை . வெகு சிலரே இந்திய மருத்துவத்தை விருப்பத்தோடு நாடுகிறார்கள் என்பது நான் பார்க்கும் கண் கூடான உண்மை .

9.வணிகம் மற்றும் வியாபாரம்
எனது தாத்தா எங்கள் வட்டத்தில் பிரபலமான சித்த வைத்தியர் .காலனாவிற்க்கும் அரயனாவிற்க்கும் மருத்துவம் பார்த்தவர் ,எனது அப்பா அரசு சித்த மருத்துவர் அஞ்சு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் மருந்து கொடுத்தவர் .இன்றைய காலம் வேறாகிவிட்டது -சாதாரணமாக ஆயுர்வேத மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இப்பொழுது உயர் வர்க்க மக்களின் சிகிச்சையாக மாறி போனது வருந்தத்தக்க உண்மை .எளிய மக்களின் அன்றாட தேவைகளை போக்கிய வைத்தியர்கள் ,எளிய மருந்துகள் எல்லாம் காணாமல் போய்விட்டன .ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் ஒரு வித நிறுவன கலாச்சாரம் வெகு வேகமாக பரவுகிறது.என்னை தேய்தல்-மசாஜ் மட்டுமே ஆயுர்வேதம் என்பது போன்ற பிம்பம் எழுப்ப படுகின்றது .மருந்தில்லாத எளிய முறைகள் ,உணவு முறைகளை சீர் செய்தல் மூலம் பல நோய்கள் தீர்க்க படும் ,இதை பற்றிய சரியான அறிவை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பல நேரங்களில் கொண்டு சேர்பதில்லை .

10.மூலதன தட்டுபாடு
இயற்க்கை வளங்கள் சுரண்டல் பல வகையிலும் நடை பெறுகிறது .வரைமுரைகளின்றி பல அறிய வகை மூலிகைகளை உபயோகித்த்மையால் இன்று பல மூலிகைகள் அழிந்து விட்டன அல்லது அழிவின் விளிம்பில் உள்ளன .ஒரு நூறாண்டுகளுக்குள் தான் எத்தனை மாற்றம் ? மூலிகை தட்டுபாடு -இதனால் கலப்படம் நடக்கிறது ,மருந்து தனது செயல் வீரியத்தை இழக்கிறது .முறையாக மூலிகைகளை பாதுகாக்க வேண்டும் ,அதை முறையாக உபயோகித்தல் வேண்டும் .அரசு தரப்பில் இதற்கான முயற்ச்சிகள் நிச்சயம் குறைவே .இதை ஒவ்வொரு கடை குடிமகனுக்கும் கொன்று சேர்க்க வேண்டும்

11.இதை எல்லாம் கடந்து வந்தாலும் இறுதியாக இந்திய மருத்துவம் வெல்ல வேண்டியது எளிய மக்களிடம் தான் இழந்த நம்பிக்கையை .பத்திய பயம் ,ஒவ்வாமை பயம் என்றும் பழக்கம் இல்லை என்றும் பல காரணங்கள் மக்கள் தரப்பில் .இந்திய மருத்துவம் தனது பெருமையை மீட்டு மீண்டும் மக்களிற்கு பயனுள்ள எளிய மருத்துவமாக மாற -அனைவரின் பங்களிப்பும் அவசிய படுகிறது .மேலும் நவீன மருத்துவர்கள் -இந்திய மருத்துவத்தை நோக்கி சில நேரங்களில் த்வேஷ பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் .இந்திய மருத்துவத்தின் பால் நம்பிக்கை கொண்டுள்ள பலரை நான் அறிவேன் ஆகினும் கூட சிலர் இத்தகைய செயலில் தங்களை தாழ்த்தி கொள்கிறார்கள் .இது ஒரு தவறான போக்கு .ஆயினும் கூட அவர்களின் விமரிசனத்திற்கு பல நேரங்களில் இந்திய மருத்துவத்தால் அவர்களது மொழியில் விடை அளிக்க முடியவில்லை என்பதும் நிதரிசனம்இன்னும் பகிர நெறைய விஷயங்கள் இருந்தாலும் ,பதிவின் நீளம் கருதி இதோடு நிறுத்துகிறேன் ,மீண்டும் மற்ற்றொரு சமயத்தில் விரிவாக பகிர முயல்கிறேன் .

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ....