சரிதான் இயற்க்கை வேளாண்மை பற்றி ஏதேனும் சொல்லி இருப்பார் என்று வாங்கினேன் .புத்தகத்தை படித்த பொழுது எனக்கு கிட்டியது பெரும் ஏமாற்றம்.இது வெறும் வேளாண்மை புத்தகம் அல்ல ,ஒரு பெரும் அக-வாழ்க்கை தரிசனம் .புத்தகத்தை படித்து முடித்த பின்பு பெரும் எண்ண சுழல்கள் என்னை சுழற்றி அடிக்கின்றன .கோபம்,இனி என்ன எனும் தவிப்பு ,பச்சாதாபம் ,நிறைவு,அமைதி என்று கலவையான உணர்வுகள் காட்டு நதி போல் நொடிக்கொரு முறை திசைகள் மாறி பயணித்து கொண்டுள்ளேன் .
ஜப்பானின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இந்த கிழவர் உலகெங்கிலும் செய்யும் மாயாஜாலம் பிரமிப்பானது .நம்மையும்,நம் வாழ்க்கை முறையும் பரிகசித்து ஏளனம் செய்கிறார் .நாம் இயற்கையை நமக்காக வளைக்கிறோம், அதன் ஒழுங்கை சீர்குலைத்து சிதைக்கிறோம் எனும் உண்மையை நம் கண்களை நோக்கி உரக்க கூறுகிறார் .அந்த நேர்மையை கண்டு நம் மனசாட்சி வெட்கி தலை குனிகிறது .விடை தேட முயல்கிறது .நம் அறிவியலின் எல்லை ,இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ,உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ,இயற்கையின் சுழற்ச்சி ,தத்துவம் என்று பல அதி முக்கியமான புரிதல்களை நமக்கு அளிக்கிறார் .
சில வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு திரைப்படம் என் நினைவுக்கு வருகிறது , 'god must be crazy ' -ஆப்ரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இன மக்கள் பற்றிய ஒரு பதிவு ,ஒரு கள்ளம் கபடமற்ற ,பகிர்ந்து வாழும் ,இயற்கையுடன் இயந்து வாழும் ,நாடோடி பொது உடமை பழங்குடி சமூகம் ஒரு பக்கம் .மறுபுறம் -மகிழ்ச்சியாக வாழ வழி செய்வதாக எண்ணிக்கொண்டு ,வாழ்க்கையை வசதியாக மாற்றிக்கொள்ள அவனே உருவாக்கும் புதிய விதிகள் ,அதை கடைபிடிக்க அவனே உருவாக்கும் வழிமுறைகள் ,தன்னை தானே நாகரீகத்தின் பெயரால் வருத்தி கொள்ளும் மகிழ்ச்சியற்ற நகர மனிதன் .
இன்றைய மனித சிக்கல்களுக்கு யார் பொறுப்பு ? நிச்சயம் மனிதன் தான் ,இயற்கையின் பிடியிலிருந்து அவனது திட்டமிட்ட பேராசை அவனை இழுத்து செல்கிறது ,அதிலிருந்து தொடங்கும் சிக்கல்களுக்கு அவன் இயற்கையை நோக்கி அடி எடுத்து வைப்பது தான் தீர்வு ,ஆனால் பின் நகரமால் அவன் மென்மேலும் சிக்கலை தீர்க்கிறேன் என்று பெரும் சிக்கல்களையும் அதற்க்கான பெரும் உழைப்பையும் கொடுக்கும் ஒரு சுழலில் சிக்குகிறான் .இயற்கையை யாரும் பயன் படுத்தவும் வேண்டாம் ,அதை ஒழுங்கு படுத்தவும் வேண்டாம் என்று வாதிடுகிறார் .இயற்கையை நாம் முழுவதுமாக புரிந்துக்கொள்ள முடியாது ,அதன் சில அம்சங்களை நாம் அறிந்ததால் நாம் அதை புரிந்துகொண்டதாக ஆகாது .'ஒன்றுமே செய்யாதிரு ' இது புகொகாவின் மந்திர சொல் .
இனி புகொகாவின் வார்த்தைகளில் என்னை கவர்ந்த கருத்துக்கள் ..
1.மனிதன் ஒரு ,மகிழ்ச்சியான விலங்கு தான் ,ஆனால் அவன் ஒரு கடினமான உலகை படைத்து இன்று அதை உடைத்து மீண்டு வர துடிக்கிறான்
2.ஒரு பனித்துளியை ஆராய தொடங்கியதும் அவர்கள் முடிவற்ற அறிவாற்றல் எனும் ஒரு நரகத்தில் சிக்கி விட்டனர் .
3.இயற்க்கை என்றால் 'எது' என்ற கேள்வியை அவன் கேட்க துவங்கியதும் 'எது ' என்றால் எது என்று அவன் கேட்க வேண்டும் .இப்படியே போனால் முடிவற்ற கேள்விகனைகள் தான் மிஞ்சும் .
4.மனித இனத்தின் முதல் மோசமான எதிரி அவன் அகம் தான் ,ஆனால் மக்கள் அதை தான் கொண்டாடுகின்றனர்
5.இவ்வுலகிலுள்ள வேறுபாடுகளாலும் முரண்பாடுகளாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக வாழ்பவர்கள் குழந்தைகள் மட்டுமே .வெளிச்சம்,இருட்டு,வலிமை,நலமின்மை ஆகியவற்றை அவர்கள் உள்வாங்கி கொண்டாலும் ,அதை மதிப்பீடு செய்வதில்லை .வாழ்வின் ஆதார மகிழ்ச்சி அவர்களிடம் தான் இருக்கிறது .
6.இயற்க்கை ஒரு போதும் மாறுவதில்லை அதே சமயம் நொடிக்கு பல முறை நம் கண்களின் முன் மாறும் .இதற்க்கு காரணம் இயற்கையை பற்றிய நமது பார்வை காலம்காலமாக மாறுவது தான் .
7.ஏன் இயற்கையை புரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது ? ஏனெனில் இயற்க்கை என்று நாம் வரிப்பது ஒவ்வொருவரின் மனத்திலும் இயற்கையை பற்றி தோன்றுகிற கருத்தே ஆகும் .
8.மனித அறிவாற்றல் என்பது எவளவு சிறியது என்பதை காட்டும் பணியை தான் அறிவியல் செய்துள்ளது என்பது ஒரு முரணான நகைச்சுவை ஆகும் .
9.நமக்கு ஒரு உணவு நெருக்கடி ஏற்ப்பட்டால் அது இயற்கையின் உற்பத்தி சக்தியின் பற்றாகுறையால் விளைந்ததாக இருக்காது ,மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்படும் .
10.'வேகம்','அதிகம்' போன்ற "வளர்ச்சியின் "தாரக மந்திரங்களே இன்று சமுதாயம் இப்படி உடைந்து நொறுங்கி போனதற்கு காரணம் .
11.ஆராய்ச்சிகள் மூலம் ,கண்டுபிடிப்புகள் மூலம் ,மனித இனம் இயற்கையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிக்கும் என்று நம்புவது ஒரு மாயை .
12.அறிவியல் உண்மைகள் ஒருபொழுதும் முழுமையான உண்மையை எட்ட முடியாது .தத்துவங்களும் உலகை குறித்து கணிக்கும் பல்வேறு கருத்தாக்கங்களே தவிர வேறு எதுவும் இல்லை
எளிமையான ,இனிமையான மனித வாழ்வை நாம் ஏதேதோ மெனக்கெடல்கள் மூலம் சிக்கலாக ஆக்கி தவிக்கிறோம் .இயற்கையிடம் எடுத்ததை இயற்க்கையிடமே திருப்பி அளித்தல் மூலம் இயற்கையின் இயக்கம் சீராக செயல் படுகிறது அறிவியலின் போதாமை ,சிறப்பு துறையியல்கள் -இயற்கையை சிறு கூறுகளாக்கி ஆராய்வதன் மூலம் முழுமையான சித்திரம் கிடைப்பதில்லை ,உண்மைகள் துண்டுகளாக கிடைக்கிறது .ஆன்ம விழிப்பின் மூலம் நாம் இயற்கையின் பேரியக்கத்தில் ஒரு சிறு துளி என்பதை உணர வேண்டும் .புகோக இப்படி அடுக்கி கொண்டே போகிறார் .சிந்தனைகள் நிறைந்த இந்த படைப்பின் புகோக அவர்களின் ஆன்ம பலம் புலப்படுகிறது ,ஒரு நல்ல படைப்பானது படைப்பாளியின் ஆன்ம பலத்தை பறை சாற்றி நம்முள் புதிய சிந்தனை விதைகளை விதைக்கும் ,காலம் கனிந்தால் அத்தகு சிந்தனை விதைகள் பெரும் ஆலமரமாக மாறும் அளவிற்கு உயிர்ப்பானவை .புகோக அப்படி வட்ட ஒருவர் .புகோக காந்தியை போல் ஒரு நடைமுறைவாதி ,தத்துவங்களும் சித்தாந்த்தங்களும் மனிதனின் துயரத்திற்கு சாக்குபோக்கு சொல்ல அல்ல , நடைமுறையில் அது பயன்பட வேண்டும் இல்லையேல் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை .இவரது வழிமுறைகள் மூலம் நிச்சயம் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் .இந்த ஒற்றை வைக்கோல் பற்ற வைக்கும் தீ சுடர் ,உள்ளுக்குள் பெரும் கனலாக எரிந்து ,உலகெங்கும் உள்ளொளியை பரப்பும் .ஆனால் இன்றைய சூழலில் அது பெரும் கனவோ என்று ஐயம் எழுகிறது .
புகொகாவிர்க்கு பிடித்த புத்தனின் வரிகள் "வடிவம் வெறுமையானது ,வெறுமையானது தான் வடிவம் "