சில சம்பவங்கள் ஏன் நடக்கிறது என்பது நமக்கு புரிவதில்லை .சில சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று உளமார பிரார்த்தித்தும் பல நேரங்களில் நமக்கு அது நடக்கமால் நழுவி ஓடி விடும் .சில நேரங்களில் நாம் கனவு கண்ட அத்தனை மகத்தான தருணங்களும் ஒரு சேர அமைந்தால் நாம் எப்படி அதை தாங்கிகொள்வோம்?
மனிதர்களுக்கு துக்கத்தில் ஒரு ருசி இருப்பதை புரிந்து கொண்டுவிட்டனர் .மனித துக்கங்கள் பரவி வசீகரிப்பது போல் சந்தோஷம் பரவுவது இல்லை .அதனாலே மகத்தான ,மகிழ்ச்சியான தருணங்களில் நாம் வாயடைத்து நின்றுவிடுகிறோம் .
ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி மே மாத முதல்வாரம் வரை எனக்கு அப்படி சில தருணங்கள் வாய்க்க பெற்றது .
கடந்த ஒரு வருடமாகவே ஜெயமோகன் மேல் ஒரு ஈர்ப்பு என்னை அறியாமல் எனக்குள் வளர்ந்து வந்துள்ளது .தொடர்ந்து இணையத்தில் அவருடைய கட்டுரைகள் ,கதைகள் அதன் பின்பு கடந்த இரண்டு புத்தக திருவிழாவிலும் அதிகம் வாங்கியது அவரது எழுத்துக்களே .ஆழ்ந்த இலக்கிய ஞானம் ஏதும் இல்லையென்றாலும் தொடர்ந்து ஒரு வசீகரம் எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்கள் பால் உள்ளது .இதற்கு தொடக்கமாக இன்றைய காந்தியை தான் சொல்ல வேண்டும் .இன்றைய காந்தி என்னுள் பெரும் தாக்கத்தையும் ,நான் நம்பிய பல விஷயங்களின் வேறு கோணத்தையும் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியது .இணையத்தில் உள்ள அவரது கூகிள் குழுமத்தில் இணைந்தேன் .அவரை நேரில் சந்திக்கவேண்டும் எனும் அவா மனதை அழுத்தியது .
இதற்கும் ஒரு காரணம் உண்டு ,சென்றவருடம் ஈரோடு கதிர் அவர்கள் பதிவில் ஏழூர் அய்யாசாமி எனும் பெரியவரை பற்றி வாசித்தேன் .பத்தாயிரம் மரங்களை தனிமனிதனாக வளர்த்தெடுத்தார் .அவரது ஏழ்மையை கடந்து ,சமூகத்தை மேம்படுத்த அவர் வாழ்நாள் முழுவது செயாலாற்றினார் .அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை எனக்கு வந்தது .பின்பு இங்கு காரைக்குடியில் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து ஒரு பதினைந்து மரங்களை தெருக்களில் நட்டோம் .அதில் இரண்டு மட்டுமே பிழைத்து உள்ளது .அவரை சந்திக்க பல தடவை திட்டம் இட்டும் ஏதோ ஒரு தடை வந்தது .என் மனம் அந்த திட்டம் நிறைவேற தடையாக இருந்ததே நிஜம் ,ஏதேனும் ஒரு காரண கிளையை பற்றிக்கொண்டு அது தொங்கியது .பின்பு இந்த வருடம் ,சில மாதங்களுக்கு முன்பு அவர் மறைந்தார் எனும் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் தள்ளியது .இனி யாரேனும் சந்திக்க எண்ணினால் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது முட்டாள் தனம் ,வாழ்க்கை மிகவும் சிறியது என்பதே நான் கற்ற பாடம் .
தொடர் கடித பரிமாற்றம் மூலம் மே ஒன்று -ஞாயிறு அன்று அவரை சந்திக்க அனுமதி கொடுத்தார் .ஆயினும் இறுதியில் அவர் அன்று சென்னை செல்வதாக முதல் நாள் சொல்லிவிட்டார் .மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த சந்திப்பு நிகழவில்லை எனும் வருத்தம் இருந்தது .
சரி இந்த ஞாயிறு எனது 'சந்திக்க வேண்டிய நபர் ' லிஸ்டில் உள்ள இன்னொருவரை சந்திக்க முடியுமா என்று பார்த்தேன் .அவர் தமிழருவி மணியன் அய்யா .கடந்த சில ஆண்டுகளாகவே அவரை எனக்கு பிடித்தது ,அவரது நேர்மை பிடித்தது ,மேலும் மனதில் இருக்கும் காந்தி பிசாசு வேறு ஆட்டுவித்ததால் அவரை சந்திக்க சந்தர்பம் தேடி நின்றேன் .அவரை தொடர்புகொள்ள வழி ஏதும் கிடைக்கவில்லை .வலையில் அவரது முகவரியை தேடி பார்க்க முயன்று தோற்றேன் .விகடனுக்கு கேட்கலாம் என்று எண்ணினேன் .யதார்த்தமாக எங்கள் ஊர் கேபிள் சானலை நோட்டம் விட்டு கொண்டிருந்த பொழுது கீழே ஒரு விளம்பரம் ஓடியது .தமிழருவி மணியன் முப்பதாம் தேதி காரைக்குடி அருகே பலவான்குடி வருகிறார் என்று .நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ,மீண்டும் எவளவோ முயன்றும் அந்த விளம்பரம் கண்ணில் படவில்லை .
பின்னர் அந்த கேபிள் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கேட்டறிந்தேன் .எல்லாம் நண்மைக்கே என்பது போல் உணர்ந்தேன் .
நானும் என் நண்பனும் பின்னர் மணியம்மாவும் எங்கள் ஊரிலிருந்து காரில் புறப்பட்டு பலவான்குடி சென்றோம் ,காரைக்குடிக்கு அருகே என்றாலும் ,இதற்கு முன் நான் அங்கு சென்றதில்லை ,வழி விசாரித்து செல்ல இரவு எட்டு ஆகிவிட்டது .கொஞ்சம் பதட்டம் ,கொஞ்சம் ஆர்வம் என்று அவர் பேசும் இடத்தை நோக்கி சென்றோம் .நல்லவேளையாக அப்பொழுது தான் தொடங்கினார் .இரவு ஒன்பதே கால் வரை அவரது பிரசங்கம் தொடர்ந்தது .
மிக தெளிவான ,அவசியாமான கருத்துக்களை கோர்வையாக எடுத்துரைத்தார் .காமராஜர் சரியாகவே அவருக்கு தமிழருவி என்று பட்டம் கொடுத்துள்ளார் .
விழா முடிந்தபின்னர் ,மேடையிலிருந்து இறங்கியவரை வழிமறித்து ,என்னை அறிமுகம் செய்து கொண்டு ,சுப்புவையும் மணியம்மாவையும் அறிமுகம் செய்து கொண்டு ,அவரிடம் ஒரு இரண்டு நிமிடம் பேசினேன் .காந்திய மக்கள் இயக்கம் தொடர்பாக ."காசு சம்பாதிக்கணும் ,பதவி வேணும் என்றால் இங்க வராதிங்க தம்பி ,நம்கிட்ட இருக்குறத கொடுக்க தயாரா இருக்கணும் ,களப்பணி செய்யணும் அப்டின வாங்க ,இதுக்கு சில படிவங்கள் விதிகள் எல்லாம் இருக்கு ,புதிய ஆட்சி வந்தவுடன் இதன் அடுத்தகட்டம் பற்றி பேசலாம் "-என்றார் மிகுந்த நம்பிக்கையுடன் .பின்பு அவரது செல் நம்பரை கொடுத்தார் வாங்கிகொண்டு விடைபெற்றோம் .மனம் நிறைவாக இருந்தது .ஒரு நல்ல மனிதரை ,நேர்மையான காந்தியரை ,நமது வாழ்க்கை தரத்தை ஒரு படியேனும் உயர்த்த முயலும் ஒரு நல்ல ஆத்மாவை சந்தித்த நிறைவு .
மீண்டும் மனம் ஒரு மாதிரி அரித்து கொண்டே இருந்தது ,ஞாயிறு தவிர வேறு நாட்கள் எனக்கு கிளினிக் உண்டு .மே முழுவதும் ஒவ்வொரு ஞாயிறும் ஏதேதோ வேலைகள் .ஜெயமோஹனை ஞாயிறு என்று இல்லாமல் வார நட்களிலேனும் சந்திக்க முடிவு செய்தேன் .
ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில் எனக்கு தேரிசனம்கோப் டாக்டர் .மகாதேவன் துரோணரை போல் .நான் ஒன்றும் ஏகலைவன் இல்லை ,ஆனாலும் அந்த இடத்திற்கு என்னை உயர்த்திக்கொள்ள முயல்பவன் .எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆயுர்வேத அறிவுஜீவி .அத்தனை மகத்தான மருத்தவரை நான் சந்தித்ததே இல்லை .சென்னையில் பயின்று கொண்டிருந்த சமயங்களில் அவரது புத்தகங்களும் அவர் பேசிய சி டிகளும் தினம் தோறும் என் மூளையை ஆக்கிரமித்தது .அவரிடம் சீடனாக சென்று ஒரு ஆறுமாதமாவது பயில வேண்டும் என்பது எனது கனவு ,ஆயினும் எனது குடும்ப சூழல் அதற்கு என்னை அனுமதிக்கவில்லை .அவரிடம் பயின்ற மாணவர்கள் அவரை பற்றி சொல்லியது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது ,எனது சுயத்தை அடமானம் வைக்க வேண்டும் என்பது போல் இருந்ததால் நான் அவரிடமிருந்து சற்று தொலைவில் என்னை தள்ளி வைத்துக்கொண்டேன் .எல்லாம் இந்த பாழாய் போன ஈகோ !ஒரு மனிதனை அவனது விருப்பத்திளிருந்தும் ,ஞானத்திளிருந்தும் ,விடுதளையிளிருந்தும் எத்தனை தூரம் தள்ளி வைக்கிறது ?.இவர் எழுதிய சில புத்தகங்கள் எனக்கு தேவையாக இருந்தது .சென்னையில் அது கிடைக்கவில்லை .அவருடைய இடத்தில் மட்டுமே உள்ளதாக தகவல் வந்தது .தேரிசனம்கோப் அதுவும் நாகர்கோவிலில் பக்கமே இருப்பதாக சொன்னார்கள் .அவரையும் ஒரு மெயிலில் தொடர்புகொண்டேன் .அவருக்கு இருக்கும் வேலையில் திருப்பி தொடர்பு கொள்வார் எனும் நம்பிக்கை இன்றியே அதை செய்தேன் .மனதிற்கு சாக்கு வேண்டுமே ?எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பதில் அனுப்பினார் .ஆச்சர்யமாக இருந்தது
சடாரென்று முடிவெடுத்தேன் -மே நான்காம் தேதி ,புதன் கிழமை வார நாள் என்றாலும் பரவா இல்லை அன்றே சந்திக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன் .செவ்வாய் இரவு கிளினிக் முடித்துவிட்டு .மதுரைக்கு புறப்பட்டேன் ,அங்கிருந்து எக்ஸ்பிரஸ் பேருந்து மூலம் நாகர்கோவில் .அதிகாலை நான்குமணிக்கு அங்கு பொய் சேர்ந்தேன் .இத்தனை சீக்கிரம் வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை .நமக்கு என்று ஒரு திசை உணர்வு உண்டு .அதை நம்பி அங்கு சுற்றி வந்து ஏதேனும் விடுதி தென்படுகிறதா என்று பார்க்கலாம் என்று பார்த்தேன் .சுற்றி சுற்றி அலைந்தேன் திசை உணர்வு பறந்து பொய் வியர்க்க விருவிருக்க தெருத்தெருவாக நடந்ததுதான் மிச்சம் .ஜெயன் கதையில் வரும் யட்சி ஏதேனும் பிடித்ததோ என்று பயம் வந்துவிட்டது .மணி ஐந்தாகியது .மீண்டும் வடசேரி பேருந்து நிலையத்துக்கே வந்தேன் .கோடைகால இரவுகளும்,காலைகளும் மிக அற்புதமாக இருக்கும் ,நல்ல காற்றோடு தெளிவான வானத்தொடும் இருக்கும் .
தேரிசனம்கோப் பேருந்து நின்றது ஏறி அமர்ந்துகொண்டு உறங்கிவிட்டேன் ,பின்னர் நடத்துனர் எழுப்பி டிக்கட் கேட்டார் .இடம் வந்தால் இறக்கிவிடுமாறு சொல்லிவிட்டு மீண்டும் உறக்கம் .காலை ஐந்தரைமனிக்கு இறக்கிவிட்டார் .அங்கேனும் தங்குவதற்கு ஏதும் வசதி இருக்கும் எனும் குருட்டு நம்பிக்கையில் அத்தனை சீக்கிரம் அங்கு வந்து இறங்கினேன் .அந்தகாரம் வரைந்த இருள் ஓவியம் .இருட்டுகளின் வெவ்வேறு நிழல்களை கண்டேன் .கருமையின் வெவ்வேறு அடர்த்திகள் சூழ்ந்து இருந்தன .முப்பக்கமும் சூழ்ந்த சிகரங்களின் கருமை ..இறங்கி ஆஸ்பத்திரி எங்குள்ளது என்று விசாரித்து சென்றேன் .உள்நோயாளிகள் வளாகத்தில் நடந்துகொண்டிருந்தனர் .கேட் வெளிப்புறம் நின்று பார்த்துகொண்டிருந்தேன் .யாரையும் எழுப்ப மனம்வரவில்லை .வாக்கிங் போய்கொண்டிருந்த ஒரு அம்மா -வாட்ச் மானை எழுப்பினார் .நான் இம்மாதிரி மகாதேவன் அவர்களை காண வந்துள்ளேன் நானும் ஒரு மருத்துவன் என்று சொன்னேன் .தங்க ஏதேனும் இடம் கிடைக்குமா என்று கேட்டேன் ,இங்கு விடுதி ஏதும் இல்லை என்றார் ,ஆஸ்பத்திரியில் வார்ட் ஏதும் காலியாக உள்ளதா என்று கேட்டேன் ,அதுவும் இல்லை என்றார் .அங்கு வாசலில் ,வேப்பெமரத்தடியில் ஒரு திண்ணை இருந்தது அதை பார்த்து இந்த இடம் கிடைக்குமா என்றேன் ,ஒரு மாதிரி சந்தேக கண்ணோடு உள்ளே விட்டார் .
திண்ணையில் பையை வைத்துவிட்டு கண்ணை அயர்ந்தேன் .இரவெல்லாம் இவர்களை சந்திக்க போகிறோம் எனும் உற்சகாமே எனது தூக்கத்தை களவாடியது .கொசுக்கள் என்னை என் தாய் போல் நேசிக்கிறது ,சுற்றி சுற்றி வந்து ராகம் பாடியது .கொஞ்சம் விடிந்தவுடன் அங்குள்ள குழாயில் பல் விளக்கி காலாற வெளியே நடந்தேன் .வயலும் மலையும் சூழ்ந்த அற்புத பிரதேசமது .
பசி என் கவனத்தை உடலின் இருப்பை நோக்கி திருப்பியது .பஸ்சில் இறங்கிய பிரதான சாலையில் ஒரு சாயா கடை,சிவன் பாடல்கள் சத்தமாக ஒளித்து கொண்டிருந்தது .அத்தனை காலை பொழுதில் நல்ல கூட்டம் பலர் அமர்ந்து ரசவடை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .எனக்கும் இரண்டு வடை இரண்டு ஆப்பம் கொண்டுவர சொன்னேன் .காலையில் புளித்த மாவால் செய்த ஆப்பத்தை உண்பது சரியா என்று யோசித்தேன்,பசி என்னை வென்றது .அந்த வடையும் ஆப்பமும் அத்தனை ருசி .ருசியை என் மூக்கு உணர முடிகிறது .இதை எழுதும் சமயம் கூட .
பின்னர் அங்கு டுட்டி டாக்டராக பணிபுரிபவரின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டேன் .அங்கு குளித்துவிட்டு .அந்த ஆஸ்பத்திரியை சுற்றி பார்த்தேன் ,மிகவும் நேர்த்தியாக அதிக காசு பிடுங்குதல் இல்லாத எளிய ஆஸ்பத்திரி .
அங்கு உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்றேன் .கோவில் பழைய சோழர் ஆலயம் .நடமாட்டமே இல்லை .கீழிறங்கி பிரஹாரம் சுற்றி வந்தேன் .கோவில் அய்யரும் வாதியகாரரும் அமர்ந்திருந்தனர் .சற்று பேச்சு கொடுத்தேன் .இந்த இடத்தின் முழு பெயர் - திரு சரம் கோர்ப்பு -அது மருவி தேரிசனம்கொப் என்றாகிவிட்டது .ராமாயணம் பால காண்டத்தில் தாடகையை வதம் செய்ய ராமர் வில்லில் நாண் ஏற்றி அம்பை குறி பார்த்த தளம் என்று சொன்னார் .இங்குள்ள சிவனுக்கு ராகவேச்வரன் என்று பெயர் .
பின்னர் மகாதேவனை சந்திக்க திரும்பினேன் .அவர் புதன் மற்றும் வெள்ளி இருக்கமாட்டார் என்று சொன்னார்கள் .நல்லவேளை நான் சென்ற சமயம் அவர் இருந்தார் .உள்ளே அவரது நோயாளிகளை பார்க்கும் அறைக்கு சென்றேன் ,காலில் விழுந்தேன் .அமர சொன்னார் .என்ன விஷயம் என்று கேட்டார் .வாய் குழற உளறினேன் .அவரே ஒருவாறாக புரிந்துகொண்டார் .பையில்லிருந்து எங்கள் ஊரின் ஸ்பெஷல் ஐட்டங்களை எடுத்து வைத்தேன் ,நெய் வறுவல் சீவல் , மிச்சேர்,நன்னாரி சர்பத் .அவர் வெவ்வேறு கூட்டங்களில் சொன்ன கருத்துக்களை அவருக்கே திருப்பி சொன்னேன் .
அத்தனை பெரிய மருத்துவர் ,ஒரு நாளுக்கு நூறு புற நோயாளிகளை பார்க்கும் மருத்துவர் -அவர் என்னிடம் கேட்டார் -"என்பா நம்ம மருத்துவ முறையே ஒரு ஏமாற்று முறையோனு சில நேரங்களில் தோணுது ".நான் கலங்கிவிட்டேன் .
ஆம் சில சமயங்களில் எனக்கும் இம்மாரி தோன்றியது உண்டு .ஆனால் நமக்கு தான் அறிவு போதவில்லை என்று எண்ணி இருந்தேன் ."நமது மருத்துவம் மட்டும் இல்லை ,ஒரு கோணத்தில் பார்க்கையில் ஒட்டு மொத்த மருத்துவும் ஒரு ஏமாற்று வேலை என்று தோன்றுவதும் உண்டு " என்று சொன்னேன் .சிரித்தார் .அவருடைய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று கேட்டேன் .மற்றுமொரு மருத்துவரை அறிமுகம் செய்து எடுத்து கொடுக்க சொன்னார் .ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று எண்ணினேன் ,ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு புத்தகம் வாங்கி செல்லலாம் என்றும் எண்ணி இருந்தேன் .கையிருப்பு 1500 இருந்தது .1700 மதிப்புள்ள இரு புத்தகங்களை அவருடைய கையெழுத்தோடு மிக குறைந்த விலையில் (525) ரூபாய்க்கு ஆசீர்வதித்து கொடுத்தார் .பின்பு சாப்பிடாமல் செல்ல கூடாது என்று சொல்லி வீட்டிற்கு சென்று சாப்பிட சொன்னார் .ஏற்கனவே காலை ஆறு மணிக்கு தின்ற ஆப்பமும் வடையும் செரிமானமாகி அடுத்த உணவை ஆவலோடு வயிறு எதிர்பார்த்த தருணம் .அவியலும் ரசமும் ,கேரளா அரிசியும் சுட சுட அன்புடன் மகாதேவன் அவர்களின் தாயார் கையால் பரிமாறப்பட்டது .பெரும் நன்றி பெருக்கோடு அங்கிருந்து புறப்பட்டேன் .அவரிடம் நான் ஜெயமோஹனை பார்க்க போகிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு அது மிக பெரிய மகிழ்ச்சியை அளித்தது .அகம் மகிழ்ந்து இலக்கியம் பற்றி சற்று நேரம் பேசினார் .
அங்கிருந்து வடசெரிக்கு பஸ்சில் வந்து ,பின்பு அங்கிருந்து பார்வதிபுரம் பேருந்தில் ஏறினேன் .அங்கிருந்து சாரதாநகர் கண்டுபிடித்து ஐந்தாவது கிராஸ் கண்டுபிடித்தேன் .ஜெயன் அணைத்து லண்ட்மார்க்சையும் முன்பே சொல்லிருந்தபடியால் எளிதாக செல்ல முடிந்தது .
ஹரிதம் -இது அந்த விசாலமான மாடி வீட்டின் பெயர் .உள்ளே படபடுப்புடன் நுழைந்து பெல் அழுத்தினேன் .கதவை ஒரு பையன் திறந்தான் ,கண்டவுடன் அவன் ஜெயன் அவர்களின் மகன் அஜிதன் என்று கண்டுகொண்டேன் .அப்பா இருக்கிறாரா என்று கேட்டு உள்ளே நுழைந்தேன் .வாங்க ,வருவீங்கன்னு சொன்னாரு என்றான் .ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது .ஜெயமோகன் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அஜிதன் பற்றிய ஒரு சித்திரம் இருக்கும் ,அவனை அங்கு சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .புதியவர் எனும் கூச்சம் இல்லாமல் நீண்ட நேரம் அவனோடும் பேசினேன் .அப்பா ,அவர் வந்துட்டார் என்று மாடியில் இருக்கும் தந்தையுடன் இங்கிருந்தபடியே கூறினான் .சற்று நேரம் கழித்து ஜெயமோகன் வந்தார் -கிட்டத்தட்ட இரண்டு மணியில் அவருடன் தொடங்கிய பேச்சு ,நான் ஆறரை மணிக்கு கிளம்பும் வரை நீடித்தது .
நம் ஆதர்ச நபரை சந்திக்கும் முன்பு நமக்கு மனதில் ஒரு பிம்பம் இருக்கும் ,அவர் இப்படி பேசுவார் ,அப்படி பழகுவார் என்று ஏதேதோ எதிர்பார்ப்புகள் இருக்கும் .ஜெயமோகன் அவர்களை சந்திக்கும் முன் அவரை அணுகுவதற்கு கடினமான ஒரு அறிவுஜீவி என்றே மனதில் எண்ணி இருந்தேன் .ஆனால் நிஜத்தில் மிகவும் எளிமையான மனிதர் , பேசும் நபரின் தகுதியும் ,ஆர்வமும் தெரிந்துகொண்டு அதற்கேற்றமாதிரி புரியும்படியான வாதங்களை முன்வைத்தார் .காந்தியம் குறித்தும் அண்ணா ஹசாரே குறித்தும், ஆயுர்வேதம் குறித்தும் ,மருத்துவம் குறித்தும் ,நகைச்சுவை அனுபவங்கள் ,இலக்கியம் குறித்தும் என்று பல்வேறு தலைப்புகளை தொட்டு சென்ற உரையாடல் ,அதே சோபாவில் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து பெயராமல் ஐந்து மணிநேரம் நீடித்தது .அவர் போட்டு கொடுத்த துளசி டி ,பின்பு அருண்மொழி அக்கா கொடுத்த பட்டினம் பக்கோடா,தேநீர் என்று வயிறுக்கும் தலைக்கும் வஞ்சனை இல்லாத உணவு .
அஜிதன் ,அருண்மொழி அக்கா என்று வீட்டில் இருக்கும் அனைவரும் இயல்பாக அந்த விவாதத்தில் பங்கெடுத்தனர் .மனிதருக்கு பகலில் ஒரு குட்டி தூக்கம் போடும் பழக்கம் உண்டு,நான் பாட்டுக்கும் பேசிகொண்டே அதை கெடுத்துவிட்டேன் ,இன்னமும் பேசி இருப்பேன் ,கடைசியில் அவர் கண்களில் தெரிந்த அயர்ச்சி ,அவருக்கு ஒய்வு தேவை என்பதை எனக்கு புரிய வைத்தது .புறப்படும் நேரத்தில் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டு சென்றேன் .
ஆறரைக்கு அங்கிருந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டேன் .வடசேரி வந்து உணவரருந்தி பின்னர் மதுரைக்கு பேருந்து பிடித்து ,அங்கிருந்து காரைக்குடி வந்து சேர காலை நான்கு மணி ஆனது .நான் ஏதேதோ விஷயங்கள் பேசவேண்டும் என்று திட்டம் இட்டிருந்தேன் ,ஆனால் அங்கு பொய் ஏதோ விஷயங்களை மணிகணக்கில் பேசியாகிவிட்டது .அதை எண்ணி பார்க்கையில் மனம் சோர்வாக இருந்தது ,ஒரு நல்ல வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதான ஒரு உணர்வு .ஒரு பெரிய எழுத்தாளுமையின் நேரத்தை விழுங்கி விட்டேனோ எனும் குற்றஉணர்வு ,சுய பரிதாபம் சுழலில் சிக்கியது மனம் .
மறுநாள் காலை நல்ல படியாக வந்து சேர்ந்தேன் என்று அவருக்கு தகவல் அனுப்பினேன் ,எனது பிரச்சனையை அவர் சரியாகவே கண்டுகொண்டிருக்கிறார் "இந்த சந்திப்பு உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்று எண்ணுகிறேன் ,முதல் சந்திப்பில் எப்பவுமே அப்படி தான் " என்றார் .ஆம் இனி அவரிடம் பேசும் பொழுது ஒரு புதியவரிடம் பேசும் தயக்கம் இருக்காது ,நல்ல நட்பும் இனிய சூழலும் இருக்கும் .எல்லாம் நன்மைக்கே என்று தோன்றியது .
அந்த வாரம் ,என் வாழ்வில் மிக முக்கியமான வாரம் ,என்னை ஆழமாக பாதித்த ஆளுமைகளை ஒரு சேர சந்தித்தேன் ,தேடல் இருப்பவனுக்கு பாதைகள் பிறக்கும் .அகந்தையை புறம் தள்ள முயல்வது என்பது நமக்குள்ளே நடக்கும் போராட்டம் ,இருமையின் இருட்டு பக்கங்களில் தொடர்ந்து வரும் போர் ,அகந்தையை கசட்டி வைக்க முடியாமலே நான் மதிப்பு கொண்டிருந்த இந்த மனிதர்களை சந்திக்காமல் காலம் தாழ்த்தி வந்தேன் ,ஒரு வகையில் இது என் உடல் மற்றும் மனம் மீது நான் முழு ஆளுகை செலுத்தியதில் எனக்கு கிடைத்த பகுதி வெற்றி என்றே எண்ணுகிறேன் .என் அகந்தையை என் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன் என்று நம்புகிறேன் ,நான் எனது முதல் அடியை சரியான திசையில் வைத்துள்ளதாகவே எண்ணுகிறேன் .இனி இங்கிருந்து பிரபஞ்சமும் அதன் நியதிகளும் என்னை என் இலக்கை நோக்கி அழைத்து செல்லட்டும்