Thursday, December 16, 2010

போட்டி -சிறுகதை

குறுகலான அந்த சிமெண்ட் சாலை ,இருபுறமும் ஓடும் கழிவு நீரோடைகள் ,அதை ஒட்டி ' பிங்க் சிட்டி ' ஜெய்பூர் போல் வெள்ளை அடிக்காத சுட்ட செங்கல் சுவர்கள் கொண்ட பூசாத ஓர் அறை -ஓர் வாசல் மாளிகைகள் அணிவகுத்து நிற்கின்றன .சமத்துவம் பேசும் ஒற்றை சிமெண்ட் ஸ்லாப் ,யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் சாக்கடையை தாண்டி வீட்டுக்குள் நுழைய அதில் கால் வைத்து ஆக வேண்டும் ,முதலைகள் நிறைந்த அகழியை தாண்டி கோட்டைக்குள் நுழைவது போல் .மழை காலங்களில் லோடு லோடாக முக்கால் ஜல்லி கற்களை கொட்டுவது போல் சட சடவென்று சப்தம் எழுப்பும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் .சைக்கிள்கள்,வண்டிகள்,குழந்தைகள், ஆடுகள்,மாடுகள்,கோழிகள்,மனிதர்கள் என்று சகலரும் சமமாக வாழும் வேதாந்த வீதி அது .
இதே தெருவின் கடை கோடியில் இருக்கும் வீடு ,அரசு பள்ளியில் அஞ்சாம் வகுப்பு படிக்கும் முத்துவின் வீடு " ஆத்தா ,பள்ளுடம் போய்ட்டாரேன் " தனது வயதிற்கும் உடலிற்கும் மீறிய அவனது அப்பாவின் சைக்கிளை கெந்தி கெந்தி ,குரங்கு பெடல் போட்ட படி கிளம்பினான் .இந்த நேரத்தில் நாம் ராஜாவை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் .

முத்துவிற்கு ஒரு எதிரி உண்டு என்றால் அது ராஜா தான் ,தினமும் அவன் ராஜாவினால் பரிகசிக்கப்பட்டான் ,அவனுக்கும் ராஜாவிற்கும் ஏழாம் பொருத்தம் .ராஜா-பெயருக்கு ஏற்றார் போல் அவன் அந்த தெருவுக்கே ராஜா,எல்லோரின் செல்ல பிள்ளை ,தெருவில் டக்லஸ் தாத்தா அவனை கண்டு எடுத்து சோறு போட்டு வளர்த்தார் ,அவரின் மறைவுக்கு பின் அவன் அந்த தெருவின் பொது உடமை ஆனான் .தினம் ஒரு வீட்டில் சாப்பாடு -பிரியாணி,தயிர் சாதம்,ரொட்டி ,மட்டன் என்று வெளுத்து வாங்கியதால் நல்ல தசை திரட்சி ,ராஜாவின் அனுமதி இன்றி அந்த தெருவில் ஒரு ஜீவன் நடமாடமுடியாது .கழுத்தில் இருக்கும் அரக்கு பட்டை ,வெந்தய நிறம்,செந்தூரம் தோய்ந்த அந்த நெற்றி இது தான் ராஜா .

முத்துவை பார்த்தாலே ராஜா எங்கிருந்தாலும் ஓடி வந்து நிப்பான்,அதுவும் அவன் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் அது ஒரு சடங்காகவே ஆகி விட்டது .அவனுக்கும் ராஜாவிற்கும் ஒரு போட்டி ,போட்டி களம் முத்துவின் வீட்டில் தொடங்கி அந்த தெரு சங்கமிக்கும் பள்ளிக்கூட தார் சாலை வரை .முத்துவை முன்னாள் விட்டு ராஜா நாலு கால் பாய்ச்சலில் அவனை கடந்து சென்று அந்த எல்லை கோட்டை தொட்டு எக்களிப்புடன் சிரிப்பதாக முத்து எண்ணுவான் ,இன்றும் அதுவே நடந்தது .ராஜா நாலு கால் பாய்ச்சலில் ஓடி தெரு முக்குக்கு வந்து இவனை பார்த்து வாலாட்டியது .முத்துவிற்கு இது பயங்கர எரிச்சலை கொடுக்கும் ."முதல்ல வரோம்னு உனக்கு ரொம்ப திமிரு ,பாரு ஒரு நாள் உன்ன நான் ஜெயிப்பேன் ,ஒருநா உன் கால உடச்சி உன்ன நொண்ட வெக்குறேன் பாருடி" கருவி கொண்டே கிளம்பினான் முத்து..
பள்ளிக்கூடம் முடிந்து திரும்பி வந்தான்,அம்மா ஆக்கி வைத்த சோற்றை தின்று பசியாறி படித்து கொண்டிருந்தான் .வெளியே அழு குரல் ,விடீரென்று ஒரு சத்தம் ,அவனது அம்மாவின் குரல் ,தொடர்ந்து அடி விழுவது போல் சத்தம் " சனியனே ,****, கைல இருக்குற காச கொடேண்டி , சிறுக்கி " தலை முடியை பிடித்து இழுத்து கத்தி கொண்டிருந்தான் முத்துவின் அப்பா , அம்மா விடவில்லை "போடா நாயே ,நீ ஊர் மேஞ்சுட்டு வர்றதுக்கு நான் அழுகனுமா ,என்னிக்காவது ஒரு நாள் ஒழுங்க இருந்துருக்கியாடா ,உன் புள்ளைக்கு ஒரு நல்ல அப்பனா நடத்துருக்கியா ," என்று முகத்தில் உமிழ்ந்தால் ,முத்து வெளியே வந்து இந்த கோலத்தை பார்த்தான் அது அவனுக்கு பழக்கப்பட்டது தான் ஆனாலும் அவனுக்கு வலித்தது "அப்பா ,நீ போ..நீ ஒன்னும் வர வேணாம் ,போ ..."கத்திக்கொண்டே ஓடிவந்தான் "அடிங்க ****மவனே ,பிச்சுருவேன் "என்று அவனும் கத்தியபடியே பக்கத்தில் கிடந்த அந்த செம்பரான்க்கல்லை கையில் எடுத்தான் ,ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது ,முத்து ஓடி வருகிறான், பக்கத்தில் வந்து விட்டான் அப்பன் கல்லை தூக்கி எறிந்தான் ,சுரீர்ரென்று ஒரு சப்தம் ,எங்கிருந்தோ ஓடி வந்த ராஜா அவனை கடித்தத்தில் அந்த களேபரத்தில் அவன் அந்த கல்லை ராஜாவின் வலது முன்னங்காலில் போட்டான் ,கீச்சு குரலில் கத்தியபடியே ஆக்ரோஷமாக அவனை கவ்வியது ராஜா ,பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து விளக்கி விட்டு அவனை அனுப்பி வைத்தனர் ,"இன்னிக்கு நாய் உங்கள காப்பாத்திருச்சு ,இன்னொரு நாள் வரேன் ,எந்த நாயும் உங்கள காப்பாத்தாது ,நாய்களா",முத்துவும் அம்மாவும் அழுது கொண்டே வீட்டுக்குள் சென்றனர் .

விடிந்தது ,அதே போல் முத்து பள்ளிக்கூடம் கிளம்பினான் ,சைக்கிளில் கெந்தி குரங்கு பெடல் போட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்,அவன் பின்னால் முன்னங்காலை நொண்டிய படியே ஓடி வந்தது ராஜா ,வழக்கம் போல் இவனும் வேகமாக சைக்கிளை கெந்தினான் ,கிட்ட தட்ட அவனது எல்லை கோட்டை
அடைந்தான் ,கழுத்தை திருப்பி ஏகத்தாளமாக ராஜாவை நோக்கினான் ,நொண்டியபடியே தோல்வியின் கோரத்தால் முகம் தொங்கி வந்து கொண்டிருந்தது .முத்துவின் மனம் கனத்தது ,கண்ணீர் வழிந்தது ,காத்திருந்தான் ராஜாவிர்க்காக,ராஜா அவனை கடந்து சென்று வாலாட்டியது .சிரித்துக்கொண்டே பள்ளிக்கு சென்றான் .

மறுநாள் முத்து தனது சைக்கிளில் புத்தக பையை மாட்டி கொண்டு உருட்டி கொண்டு நடந்தான்,பக்கத்தில் ராஜா அவனோடு துணையாக நடந்து வந்தது .

12 comments:

  1. மனதை தொட்ட கதை.

    ReplyDelete
  2. அருமையான சிறுகதை... பதிவின் பாதியில் அந்த படத்தை வெளியிட்டதால் சுவாரஸ்யம் சற்று குறைந்துவிட்டது... பதிவின் இறுதியில் இணைத்திருக்கலாம்...

    ReplyDelete
  3. நல்லா இருக்கு

    ReplyDelete
  4. சித்ரா மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. டி .வி .ஆர் சார் நன்றி :)
    பார்வையாளன் சார் -முதல் வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  6. பிரபாகரன் -வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    ஆம் கடைசியில் இணைத்து இருக்கலாம்

    ReplyDelete
  7. கதை நல்லாருக்கு. ஒரு சின்ன விண்ணப்பம். உங்களின் "அதிகம் கவணிக்கப்பட்டவை" யாராலும் "கவனிக்கப்" படாதது வருத்தமளிக்கிறது. சற்று கவனியுங்களேன்.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பரே. நலமே விழைவு. மிகுந்த மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. கனாக்காதலன் ,ஜோதிஜி
    உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி .
    'கவனிப்பவர்களுக்கு ' பயனாக இருந்தால் சரி தான் :)

    ReplyDelete
  10. நல்ல கற்பனை வளம் உன்னிடம் உள்ளதடா. இன்னும் மெருகு ஏற்று. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி கவி ..நிச்சயம் வாசிக்கிறேன்

    ReplyDelete