Wednesday, December 29, 2010

பின்னோக்கி

இதோ 2010 தனது மிச்ச சொச்ச உயிரை இரண்டொரு நாளில் விடுத்து ,நிகழ்காலத்திலிருந்து வரலாறு பெட்டகத்தில் இறந்தகாலமாக நினைவுகளில் மட்டும் வாழ போகிறது .நிகழ்காலம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை இதோ என்று எண்ணுவதற்கு முன் அது கடந்து விடுகிறது .காலம் நம் வசதிக்காக நாம் உருவாக்கியது வருடம் ,நிமிடம் என எல்லாம் அப்படி தான்.புதிய மாற்றங்களை,புதிய சபதங்களை நாம் முன்மொழிய புத்தாண்டு ஒரு தினமாக இருக்கும் .மாற்றம் என்று முடிவாகிய பின் அதை அப்பொழுதே தொடங்க வேண்டும் ,இல்லையேல் அது நீர்த்துவிடும் என்று உணர்கிறேன் .ஆயினும் கூட இது ஒரு தொடக்கம் என்று எண்ணலாம்.ஒரு காலம் என்று ஒன்றை வரையறுத்து அதை பின்னோக்கி ஆராயும் பொழுது நிச்சயம் அது பெரும் சுகம் தரும் .
நாம் கடந்து வந்த உணர்வுபூர்வமான தருணங்கள்,நெகிழ்ச்சியான தருணங்கள் ,இதை எல்லாம் நாம் மனதில் மறு ஆக்கம் செய்து அந்த உணர்வுகளை மீள் எழுச்சி செய்தல் ஒரு பெரும் சுகம் .நாம் தவறிய இடங்கள் அப்பொழுது நமக்கு புரியாது ,உணர்வுகள் நமது நியாயத்தை மட்டும் பதிய செய்து புலன்களை கலங்கடிக்கும் .இப்பொழுது எண்ணி பார்த்தால் பிரச்சனையின் மறுப்பக்கத்தை புரிந்துக்கொள்ள முடியும் .நாம் அறியாத நமது இருட்டு பக்கங்கள் ,நாம் நம்மை வெறுத்த நமது கவனத்துக்காக எங்கும் நமது நிழல் அம்சங்களின் மீது சற்று ஒளியை பாய்ச்சினால் நம்மை நாம் இன்னும் ஒரு படி நெருங்கி விடுகிறோம் .

என்னை பொருத்தமட்டில் இந்த ஆண்டு கற்றவை ,பெற்றவை நிறைவாக உள்ளது .சமூக தளத்தில் யோசித்தால் என்னை மிகவும் வருத்தமாக்கிய நிகழ்வு என்றால் - பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக செய்த மதிப்பெண் பட்டியல் குளருபடி -இது ஒரு சமூகத்தின் ஆக பெரிய சீர்கேடாக நான் பார்க்கிறேன் ஊழல் என்பது அரசியல்வாதி ,அதிகாரி என்ற மையத்தை தாண்டி எப்படி வெகுஜன மார்கமாக மாறி ,ஒரு சராசரி மனிதன் சட்டத்தை தனது சுயநலத்துக்காக வளைக்கிறான் என்று உறைய வைத்தது .நியாயஸ்தன் ஒருவனுக்கும் மற்றவனுக்கும் உள்ள வேறுபாடு வாய்ப்பு மட்டுமோ என்று சந்தேகிக்க வைக்கிறது .யாரேனும் அரசின் ஊழலை பற்றி விமரிசித்தால் அவருக்கு அதில் பங்கு கிடைக்கவில்லை என்று ஆற்றாமையில் உழற்றுவது போல் இருக்கிறது .
ஆகபெரிய அவமானமாக நான் எண்ணுவது -சந்தேகமே இல்லாமல் எனது இயலாமையை தான் ,வருத்தபடுவதை ,கொபபடுவதை தவிர என்னால் ஏன் ஏதும் செய்ய இயலவில்லை என்று அவமானமாக இருக்கிறது .வரும் காலத்தில் இன்னும் சற்று கூடுதல் நேர்மையோடு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது .பொது தளத்தில் யோசித்தால் - கல்மாடி இந்தியர்களின் மொத்த மானத்தையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார் .ஆனாலும் அமெரிக்காவின் மானம் விக்கி லீக்ஸ் -புண்ணியவான் அசெஞ் அவர்களினால் நன்றாக உலகமெங்கும் சந்தி சிரித்தது.இது அப்துல் கலாமின் கனவான (மற்றும் கேப்டனின் ) இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது .இந்த மாறி கொடுமை எல்லாம் செஞ்சு என்னத்த வல்லரசாக வேண்டும் ? ஏற்கனவே இந்தியா இலங்கை தமிழர்களுக்கு புறமுதுகு காண்பித்து வல்லரசு ராஜப்பாட்டையில் கால்பதித்து விட்டது .இதை ஊர்ஜித படுத்து விதமாக சொந்த மக்களுக்கு சூனியம் வைக்கும் தண்டகாரண்யா பிரச்சனை -நினைத்தாலே இப்பவே கண்ண கட்டுதே.வல்லரசெல்லாம் வேண்டாம் சாமீ ,நல்லரசாக இருந்தால் போதும் .
நெகிழ்ச்சியான தருணம் என்று பார்த்தால் எங்கள் நண்பன் மணியின் பெயரால் உருவான அறக்கட்டளை சார்பாக ஒரு ஏழு குழந்தைகளின் கல்வி செலவை நண்பர்கள் இனைந்து ஏற்றது .பின்பு அவனது நினைவு நாளில் அவனது கிராமத்திற்கே சென்று மருத்துவ முகாம் நடத்தியது,உணவு அளித்தது .சிறிய மன பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழாம் வகுப்பு மாணவிக்கு கொஞ்சம் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தேன் ,அவள் திரும்பி வந்து அவளது பரிச்சை ரேங்க் கார்ட் கொண்டுவந்து தனது வகுப்பில் தான் முதலிடம் என்று கூறினால் -அப்பொழுது உண்மையிலயே எனக்கு தோன்றியது இது தான் "தன மகனை சான்றோன் என கேட்ட தாய் " .இதே போல் இன்னும் இரண்டு மூன்று மாணவர்களுக்கு ஆலோசனை பலனளித்து அவர்களின் பெற்றோர்கள் தொலைபேசியில் அதற்க்கு நன்றி தெரிவித்தது ,பல நேரங்களில் நாம் மருத்துவம் செய்யும் பொழுது அவருக்கு என்ன ஆனது இவருக்கு என்ன ஆனது என்று எண்ணி கவலை கொள்வேன் ,சிலர் தொலைபேசியில் கூப்பிட்டு உடம்பு சு
கமா இருக்கு சார் என்று சொல்லும் பொழுது ,மனம் எங்கும் ஒரு பரவசம் பரவும் .எனது அம்மாவின் ஐம்பதாவது பிறந்தநாளை அவருக்கு தெரியாமல் நண்பர்களின் உதவி உடன் நடு இரவில் கேக் வெட்டி கொண்டாடியது .படித்த பள்ளிக்கே மீண்டும் நுழைவது சுகம் அதுவும் சிறப்பு விருந்தினராக செல்வது இன்னும் பரம சுகம் அதுவும் இந்த வருடம் எனக்கு வாய்த்தது
படித்து முடித்து ஒன்றரை வருடத்திற்கு பின் வாங்கிய மருத்துவ பட்டம் .நெருங்கிய நண்பர்களின் திருமணம் என்று நெறைய தருணங்கள்

மகிழ்ச்சியான தருணங்கள் என்று பார்த்தால் -நண்பர்களுடன் சதுரகிரி பயணம் ,நண்பர்களுடன் கொண்டாடிய தீபாவளி ,எந்திரன் முதல் நாள் காட்சி ,பார்த்த பல திரைப்படங்கள்,ப்ரெசிடென்ட் ஹோட்டலில் உண்ட இரவு உணவுகள் ,அக்காவிற்கு பிறந்த குழந்தை ,சச்சின் இருநூறு அடித்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி ,வருடத்தின் பிற்பாதியில் எனக்கு அறிமுகமான வலையுலகம் ,இப்பொழுதைக்கு -தமிழ்மண விருதுகளில் எனது மூன்று இடுகைகளும் அடுத்தகட்ட தேர்விற்கு சென்றுள்ளது ,இன்னும் பற்பல .பொது தளத்தில் யோசித்தால் -விளையாட்டு துறை மற்றும் பொழுது போக்கு துறையை தவிர்த்து வேறு எந்த துறையாலும் பெரிதும் மகிழ்ந்ததாக நினைவில்லை .
இந்த ஆண்டிற்கான சந்தேகம் -நான் என் மீது ஏதும் பிம்பம் எழுப்புகிறேனோ என்று ,எழுப்பாமல் இருக்க முயல்கிறேன் .கடவுளின் இருப்பை பற்றிய நம்பிக்கைகள் ,சந்தேகங்கள் வலுக்கிறது ,அதுவும் தமிழ் வலை உலகம் என்னை நெறைய சிந்திக்க வைத்துள்ளது .நெறைய இடங்களில் சிரிக்க வைத்தது .வாழ்க்கையை நாம் மட்டும் தான் தீர்மானிக்கிறோம் என்கின்ற எண்ணம் வலுவிழக்கிறது .ஒரு பெரும் கூட்டு முயற்ச்சியில் தன் பங்கை ஆற்றும் ஒரு துகள் என்று எண்ண தோன்றுகிறது .
ஆகபெரிய விழிப்பு -நிச்சயம் மக்களுக்கு சாமியார்களின் மேல் வந்துள்ள சந்தேக பார்வை என்று அடித்து சொல்லலாம் .என்னை பொறுத்த வரை எவர் ஒருவர் ஆன்மீகத்தை அமைப்பாக மாற்றுகிறாரோ அவருக்கு ஆன்மீகத்தை தாண்டி வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது என்று பொருள் .நித்தியை விட என்னை பாதித்த காணொளி கல்கி சாமியாருடயது .யோகத்தை பஞ்சு மிட்டாய் போல் இப்படி ஆளாளுக்கு விற்பது கொடுமை .
இன்னும் நெறையா எழுத வேண்டும் என்று தோன்றினாலும் ,பதிவின் நீ ..நீ ..நீளம் கருதி வேறு வழி இன்றி முடித்து கொள்கிறேன் ..
வரும் வருடம் நமக்கு தேர்தல் ஆண்டு -என்னென்ன தேவைகள் நமது அண்ணன்களை கேளுங்கள் ,பட்டியல் தயார் செஞ்சு வெச்சுக்கலாம் :)
நல்ல எண்ணங்கள் எல்லாம் உயிர் பெற்று ,வாழ்க்கை தரமும் நாம் வாழும் தரமும் ஒரு படியாவது உயர்ந்து ,மனங்களில் அமைதி குடி கொண்டு ,நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிரம்பி வழியும் ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் .நம்பிக்கையுடன் தொடங்குவோம் இந்த புத்தாண்டை .
தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
குறிப்பு -சற்றே சுய சொரிதல் அதிகமாக இருக்கிறதோ ? மன்னிச்சுக்கோங்க :)

Friday, December 24, 2010

பெற்றால் மட்டும் போதுமா-3

நாம் ஏன் ஒரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டும் ? இந்த வினாவிற்கு நாம் நேர்மையாக யோசித்து ஒரு பதிலை அடைய வேண்டும் .பல நேரங்களில் என்ன நடக்கிறது என்றால் ,பிள்ளை பேறு ஒரு விபத்தாக இருக்கிறது ,அல்லது சமூகத்தின் கட்டாயத்திற்கு அடிபணியும் வண்ணம் அமைகிறது .இன விருத்தி என்று ஒரு காரணம் மட்டுமா ? இன விருத்தி தான் காரணம் என்றால் ஏற்கனவே உலகம் மனித கூட்டத்தால் நிரம்பி வழிகிறது .குழந்தை பெற்றுக்கொள்ள பல காரணங்கள் உண்டு .
பெற்றோர்கள் பிள்ளைகள் பிறந்த பின்பு ,பிள்ளைகளை பற்றி எண்ணும் பொழுது மூன்று விதமான எண்ணம் வரும் ,பிள்ளைகளின் பேரில் ஒரு வாஞ்சை,பெருமை ,பிள்ளைகள் மேல் வரும் கோவம்,இயலாமை ,தன எதிர்பார்ப்புக்கு விரோதமான நிலைப்பாடு என்று வரும் பொழுது வரும் எண்ணம்- நாம் பிள்ளையை சமூகத்தின் பார்வைக்கு ஏற்றார் போல் வளர்க்கவில்லை என்று தாழ்வுமனப்பான்மை ,அல்லது ஏன் தான் இப்படி ஒரு பிள்ளையை பெற்றோம் என்று ஒரு வெறுமை கோவம் .பொதுவாக ஒரு சராசரியான பெற்றோர் இந்த மூன்று நிலைகளையும் ஏதோ ஒரு இடத்தில் சந்திப்பார் .
"பட்டர் பேபி சிண்ட்ரோம்." (battered baby syndrome ) என்று ஒரு நோய் உள்ளது .குழந்தைகளை மிக வன்மையாக தண்டிப்பது ,சிறு சிறு தவறுகளுக்கு கூட பயங்கர தண்டனைகள் ,சூடு வைப்பது ,ரத்தம் வர அடிப்பது என்று இது நீளும் .இவ்வகை குழந்தைகள் தங்களை பற்றிய ஒரு மோசமான மன நிலையை எட்டி விடுகிறது .இவர்கள் இரண்டு வகையில் வெளி வருவார்கள் ஒன்று -என்னையா அடித்தாய் ,நான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக வந்து உன் கையை முறிக்கிறேன் என்று முடிவு செய்து ,பாதை மாறி அடாவடி -அட்டகாசங்கள் புரியும் ,பிறரை துன்புறுத்தி இன்புறும் ஒரு மனிதனாக அல்லது என்னை வெறுக்கிறார்கள் நான் வாழ தகுதி அற்றவன் ,எதுக்குமே லாயாக்கிலாதவன் , என்று எண்ணி இறுதி வரை லச்சியங்கள் ஏதும் இல்லாமல் ,தோல்வி முகம் கொண்ட ஒரு வாழ்க்கை .குழந்தைகளை துன்புறுத்தும் பெற்றோர் -அவரது இளமை கால நினைவுகளின் வாயிலாக அதை செய்கிறார் ,ஒரு தவறான முன்மாதிரியை தனது முன்மாதிரியாக ஏற்று கொண்டதன் விளைவு .தொண்ணூறு சத விகிதம் இத்தகைய பெற்றோர்கள் அவர்களது இளமை வாழ்வில் கடுமையாக புண்பட்டிருப்பார்கள்.அந்த குழந்தையை போட்டு உலுக்கி எடுப்பதால் என்ன என்ன விளைவுகள் வரும் எப்படி இறந்து போகும் என்று விரிவாக மருத்துவம் கூறுகிறது (மேலும் தெரிந்து கொள்ள -shaken baby syndrome)
ஒரு அமெரிக்க ஆய்வு சொல்லும் தகவல் இது -அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக அறுபதாயிரம் குழந்தைகள் இவ்வகை பிரச்சனையால் பாதிப்பு அடைகிறார்கள் .சுமார் இரண்டாயிரம் குழந்தைகள் பெற்றோர்களின் கடுமையான நடத்தையால் இறக்கிறார்கள் .இதில் ஐம்பந்தைந்து சதம் ஒரு வயதினருக்கு கீழ் !!நமது நாட்டு நிலைமை ?!
ஒரு கேஸ் ஸ்டடி-ஒரு இளம் அமெரிக்க பெண் அவரது நாற்பது நாட்களே ஆன குழந்தையை அடித்து கொன்றுள்ளார் -காரணம் கேட்ட பொழுது யாரும் ஏன் மீது அன்பாக இல்லை ,எனக்கு பிறக்கும் குழந்தை ஏன் மீது அன்பாக இருக்கும் என்று எண்ணினேன் ,அது தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதற்க்கும் என் மீது வெறுப்பு என்று எண்ணினேன் என்னை என் குழந்தை கூட ஏமாற்றிவிட்டது ,அதான் கொன்றேன் .!! இது மிகை அல்ல ,உண்மை .

ஒரு தாய் அவரின் இரண்டு வயது மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறார் ,உடல் சுடுகிறது ஜுரம் என்கிறார் .மருத்துவர் காண்கிறார் ,மருந்து கொடுக்க படுகிறது ,மீண்டும் இரண்டு நாளில் தூக்கி வருகிறார் ,மருந்து- வீடு, மீண்டும் மருத்துவர் ஆனால் ஜுரம் இல்லை .ஆனாலும் மீண்டும் மீண்டும் மருத்துவரை காண வருகிறார் ,அவனுக்கு அது சரி இல்லை இது சரி இல்லை எப்பொழுதும் அழுகிறான், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து கொண்டே இருப்பார் .இன்னொரு தாய் தனது ஒன்றரை வயது மகளுக்கு கையில் சிறு வெட்டு என்று அழைத்து வருகிறார் , மருந்து போட பட்டு அழைத்து செல்ல படுகிறாள் ,மீண்டும் இரண்டொரு நாளில் வேறு விரலில் கட்டு .இப்படி தொடர்கதையாக தொடர்கிறது .இது என்ன தெரியுமா ? "முஞ்ஹாசன் பேபி சிண்ட்ரோம் " (munchaussen baby syndrome or munchaussen syndrome by proxy)
இந்த நோய் பொதுவாக செவிலி தாய்களுக்கும் ,தாய்மார்களுக்கும் ஏற்படுவது ஆகும் ,இது ஒரு விளாயாட்டு -தன் குழந்தையை ஆரோகியமாக இருக்க விட மாட்டார்கள் ,அவர்களின் வாழ்வின் பொருளே குழந்தைக்கு சேவை செய்வது தான் என்று எண்ணுவார்கள்,குழந்தை சரியானால் தங்களது வாழ்வின் நோக்கம் சரிகிறது என்பதால் ,குழந்தையை தொடர்ந்து படுக்கையில் ஆழ்த்தி ,அவர்களை நோய்வாய்ப்பட செய்து தொடர்ந்து தங்கள் கண்காணிப்பில் வைப்பார்கள் .தொடர்ந்து பொய்கள் மூலம் புதிய புதிய வியாதிகளை உருவாக்கலாம் .இது ஒரு மிக ஆபத்தான போக்கு .குழந்தையின் சுகவீனம் இவர்களுக்கு நிம்மதியை அளிக்கும் .பாசமாக உணவு ஊட்டுவார்கள் ,பக்கத்திலே அமர்ந்து கண்விழிப்பார்கள் ஆனால் உடல் நிலை மட்டும் சரியாகாது .(இதை கருவாக கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நல்ல திரைப்படம் வந்தது பெயர் நினைவில்லை) எனினும் இது சமூகத்தில் அவளவு பரவலாக இல்லை ,ஆகினும் கூட நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

பிள்ளைகள் பெரும் முன் நாம் மனதளவில் இன்னொரு உயிரை பேணி காக்க தயாரா என்று கேட்டுக்கொள்ள வேண்டும் .வேண்டா வெறுப்பாக பிள்ளையை பெற்று கொண்டு சனியனே,ஏன் நேரம் என்று அவர்கள் மீது நம் இயலாமையை திணிக்க கூடாது.

ஏன் ஒரு பிள்ளை பாதை மாறுகிறது ? தொடுகையின் முக்கியத்துவம் என்ன ?
வரும் பதிவுகளில் ..
மேலும் அறியலாம் ....
பயனுள்ள சுட்டிகள்..

Thursday, December 16, 2010

போட்டி -சிறுகதை

குறுகலான அந்த சிமெண்ட் சாலை ,இருபுறமும் ஓடும் கழிவு நீரோடைகள் ,அதை ஒட்டி ' பிங்க் சிட்டி ' ஜெய்பூர் போல் வெள்ளை அடிக்காத சுட்ட செங்கல் சுவர்கள் கொண்ட பூசாத ஓர் அறை -ஓர் வாசல் மாளிகைகள் அணிவகுத்து நிற்கின்றன .சமத்துவம் பேசும் ஒற்றை சிமெண்ட் ஸ்லாப் ,யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் சாக்கடையை தாண்டி வீட்டுக்குள் நுழைய அதில் கால் வைத்து ஆக வேண்டும் ,முதலைகள் நிறைந்த அகழியை தாண்டி கோட்டைக்குள் நுழைவது போல் .மழை காலங்களில் லோடு லோடாக முக்கால் ஜல்லி கற்களை கொட்டுவது போல் சட சடவென்று சப்தம் எழுப்பும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் .சைக்கிள்கள்,வண்டிகள்,குழந்தைகள், ஆடுகள்,மாடுகள்,கோழிகள்,மனிதர்கள் என்று சகலரும் சமமாக வாழும் வேதாந்த வீதி அது .
இதே தெருவின் கடை கோடியில் இருக்கும் வீடு ,அரசு பள்ளியில் அஞ்சாம் வகுப்பு படிக்கும் முத்துவின் வீடு " ஆத்தா ,பள்ளுடம் போய்ட்டாரேன் " தனது வயதிற்கும் உடலிற்கும் மீறிய அவனது அப்பாவின் சைக்கிளை கெந்தி கெந்தி ,குரங்கு பெடல் போட்ட படி கிளம்பினான் .இந்த நேரத்தில் நாம் ராஜாவை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் .

முத்துவிற்கு ஒரு எதிரி உண்டு என்றால் அது ராஜா தான் ,தினமும் அவன் ராஜாவினால் பரிகசிக்கப்பட்டான் ,அவனுக்கும் ராஜாவிற்கும் ஏழாம் பொருத்தம் .ராஜா-பெயருக்கு ஏற்றார் போல் அவன் அந்த தெருவுக்கே ராஜா,எல்லோரின் செல்ல பிள்ளை ,தெருவில் டக்லஸ் தாத்தா அவனை கண்டு எடுத்து சோறு போட்டு வளர்த்தார் ,அவரின் மறைவுக்கு பின் அவன் அந்த தெருவின் பொது உடமை ஆனான் .தினம் ஒரு வீட்டில் சாப்பாடு -பிரியாணி,தயிர் சாதம்,ரொட்டி ,மட்டன் என்று வெளுத்து வாங்கியதால் நல்ல தசை திரட்சி ,ராஜாவின் அனுமதி இன்றி அந்த தெருவில் ஒரு ஜீவன் நடமாடமுடியாது .கழுத்தில் இருக்கும் அரக்கு பட்டை ,வெந்தய நிறம்,செந்தூரம் தோய்ந்த அந்த நெற்றி இது தான் ராஜா .

முத்துவை பார்த்தாலே ராஜா எங்கிருந்தாலும் ஓடி வந்து நிப்பான்,அதுவும் அவன் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் அது ஒரு சடங்காகவே ஆகி விட்டது .அவனுக்கும் ராஜாவிற்கும் ஒரு போட்டி ,போட்டி களம் முத்துவின் வீட்டில் தொடங்கி அந்த தெரு சங்கமிக்கும் பள்ளிக்கூட தார் சாலை வரை .முத்துவை முன்னாள் விட்டு ராஜா நாலு கால் பாய்ச்சலில் அவனை கடந்து சென்று அந்த எல்லை கோட்டை தொட்டு எக்களிப்புடன் சிரிப்பதாக முத்து எண்ணுவான் ,இன்றும் அதுவே நடந்தது .ராஜா நாலு கால் பாய்ச்சலில் ஓடி தெரு முக்குக்கு வந்து இவனை பார்த்து வாலாட்டியது .முத்துவிற்கு இது பயங்கர எரிச்சலை கொடுக்கும் ."முதல்ல வரோம்னு உனக்கு ரொம்ப திமிரு ,பாரு ஒரு நாள் உன்ன நான் ஜெயிப்பேன் ,ஒருநா உன் கால உடச்சி உன்ன நொண்ட வெக்குறேன் பாருடி" கருவி கொண்டே கிளம்பினான் முத்து..
பள்ளிக்கூடம் முடிந்து திரும்பி வந்தான்,அம்மா ஆக்கி வைத்த சோற்றை தின்று பசியாறி படித்து கொண்டிருந்தான் .வெளியே அழு குரல் ,விடீரென்று ஒரு சத்தம் ,அவனது அம்மாவின் குரல் ,தொடர்ந்து அடி விழுவது போல் சத்தம் " சனியனே ,****, கைல இருக்குற காச கொடேண்டி , சிறுக்கி " தலை முடியை பிடித்து இழுத்து கத்தி கொண்டிருந்தான் முத்துவின் அப்பா , அம்மா விடவில்லை "போடா நாயே ,நீ ஊர் மேஞ்சுட்டு வர்றதுக்கு நான் அழுகனுமா ,என்னிக்காவது ஒரு நாள் ஒழுங்க இருந்துருக்கியாடா ,உன் புள்ளைக்கு ஒரு நல்ல அப்பனா நடத்துருக்கியா ," என்று முகத்தில் உமிழ்ந்தால் ,முத்து வெளியே வந்து இந்த கோலத்தை பார்த்தான் அது அவனுக்கு பழக்கப்பட்டது தான் ஆனாலும் அவனுக்கு வலித்தது "அப்பா ,நீ போ..நீ ஒன்னும் வர வேணாம் ,போ ..."கத்திக்கொண்டே ஓடிவந்தான் "அடிங்க ****மவனே ,பிச்சுருவேன் "என்று அவனும் கத்தியபடியே பக்கத்தில் கிடந்த அந்த செம்பரான்க்கல்லை கையில் எடுத்தான் ,ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது ,முத்து ஓடி வருகிறான், பக்கத்தில் வந்து விட்டான் அப்பன் கல்லை தூக்கி எறிந்தான் ,சுரீர்ரென்று ஒரு சப்தம் ,எங்கிருந்தோ ஓடி வந்த ராஜா அவனை கடித்தத்தில் அந்த களேபரத்தில் அவன் அந்த கல்லை ராஜாவின் வலது முன்னங்காலில் போட்டான் ,கீச்சு குரலில் கத்தியபடியே ஆக்ரோஷமாக அவனை கவ்வியது ராஜா ,பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து விளக்கி விட்டு அவனை அனுப்பி வைத்தனர் ,"இன்னிக்கு நாய் உங்கள காப்பாத்திருச்சு ,இன்னொரு நாள் வரேன் ,எந்த நாயும் உங்கள காப்பாத்தாது ,நாய்களா",முத்துவும் அம்மாவும் அழுது கொண்டே வீட்டுக்குள் சென்றனர் .

விடிந்தது ,அதே போல் முத்து பள்ளிக்கூடம் கிளம்பினான் ,சைக்கிளில் கெந்தி குரங்கு பெடல் போட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்,அவன் பின்னால் முன்னங்காலை நொண்டிய படியே ஓடி வந்தது ராஜா ,வழக்கம் போல் இவனும் வேகமாக சைக்கிளை கெந்தினான் ,கிட்ட தட்ட அவனது எல்லை கோட்டை
அடைந்தான் ,கழுத்தை திருப்பி ஏகத்தாளமாக ராஜாவை நோக்கினான் ,நொண்டியபடியே தோல்வியின் கோரத்தால் முகம் தொங்கி வந்து கொண்டிருந்தது .முத்துவின் மனம் கனத்தது ,கண்ணீர் வழிந்தது ,காத்திருந்தான் ராஜாவிர்க்காக,ராஜா அவனை கடந்து சென்று வாலாட்டியது .சிரித்துக்கொண்டே பள்ளிக்கு சென்றான் .

மறுநாள் முத்து தனது சைக்கிளில் புத்தக பையை மாட்டி கொண்டு உருட்டி கொண்டு நடந்தான்,பக்கத்தில் ராஜா அவனோடு துணையாக நடந்து வந்தது .

Wednesday, December 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம்-10 -மருத்துவ தகவல்கள் (tips)


சில எளிய மருத்துவ தகவல்களை இப்பகுதியில் பகிர்கிறேன்
1.சைனஸ் தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் தலை குளிக்கும் நாட்களில் தலை பாரம்,தலை வலி வரும் ,இத்தகைய சமயங்களில் தலைக்கு இளம் சூடான ஒரே வெந்நீர் (அதவாது வெந்நீருடன்,குழாய் தண்ணி கலக்காமல் ) தலைக்கு ஊற்றிவிட்டு ,அரை டம்பளர் சுடு தண்ணீரில் ஒரு அரை டீ ஸ்பூன் மிளகு பொடி கலக்கி ஒரே மடக்கில் குடித்தால் அன்று தலை பாரம்,வலி வராது.
2.நாம் சமைக்கும் பொழுது மிளகாய்க்கு பதில் மிளகு ,கரும்பு வெள்ளத்திற்கு பதில் பனை வெள்ளம் (கருப்பட்டி),சீனிக்கு பதிலாக கற்கண்டு உபயோகித்தல் நலம் பயக்கும் .குறிப்பாக உருளை கிழங்கு 'ரோஸ்ட் ' செய்யும் பொழுது மிளகு போடி சேர்த்து வதக்கினால் ருசியும் நன்றாக இருக்கும்,உருளை சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் கால் வலி ,கை வலி வராது

3.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகம் சேர்க்க கூடாது என்று ஒரு நம்பிக்கை உண்டு,இது ஆராய்ச்சிக்குட்பட்டது ,எனினும் எதுக்கு 'ரிஸ்க்' என்று எண்ணினால் நாம் உபயோகிக்கும் உப்பிற்கு பதிலாக இந்து உப்பு (pottasium salt)சிறிதளவில் உபயோகிக்கலாம் .

4.தூக்கமின்மை இருந்தால் உறங்குவதற்கு முன் உள்ளங்கால்களில் நன்றாக சூடான நல்லெண்ணெய் தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் உறக்கம் வரலாம்.

5.திடிரென்று மூச்சு திணறல் ஏற்ப்பட்டால் ,(குறிப்பாக குழந்தைகள்,முதியவர்களுக்கு) கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்து சூடாக்கி அதில் சிறிது பச்சை கர்ப்பூரத்தை (இல்லாத பட்சத்தில் சூடம் உபயோகிக்கலாம் ) போட்டு அது கரைந்த பின் அந்த எண்ணெய் நெஞ்சு ,விளா,முதுகு பகுதிகளில் தடவினால் ஓரளவுக்கு மூச்சு திணறல் குறையும் .

6.மூட்டுகளில் வலி வீக்கம் இருந்தால் ,கொஞ்சம் ஆத்து மணலை எடுத்து இரும்பு வானெலியில் வறுத்து அதை துணியில் பொட்டலமாக கட்டி ஒத்தடம் கொடுத்தால் வலி நன்றாக குறையும் ,குறிப்பாக மூட்டுகளில் பிடிப்பு உள்ளவர்கள் இதை செய்வதன் மூலம் நல்ல பலன் அடையலாம் .
7.கொத்தவரங்காய் -(cluster beans) அடிக்கடி சேர்ப்பது மூலம் சர்க்கரை நோய் ஓரளவுக்கு கட்டுபடும்,அதுவும் இன்சுலின் எடுத்து கொண்டிருந்தால் அதன் தேவையை குறைக்கும் .

8.வேர்கடலை உள்ள ஊட்ட சத்துகள் பாதாம் பிஸ்தா ஆகியவையில் உள்ள புரதத்திற்கு இணை ஆனது .வேர்க்கடலை சாப்பிடும் பொழுது அதன் வெளி தோலை சேர்த்து சாப்பிட வேண்டும் , அதில் நம் உடலுக்கு தேவையான 'ஜின்க் ' மற்றும் ஆண்ட்டி - ஆக்சிடென்ட்ஸ் (anti-oxidants) அதிக அளவில் இருக்கிறது .
9.எலும்பு முறிவு, எலும்பு உருக்கி நோய்களால் பாதிக்க பட்டவர்கள் முளை கட்டிய பயறை சிறிது சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து தினமும் உண்டால் போதிய அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு கிட்டும் .பிரண்டை மோரில் ஊறவைத்து பின்பு துவையல் அரைத்து சாப்பிடுவது நன்மை பயக்கும் .

10.உடல்பயிற்ச்சி செய்யும் பொழுது நமது உடலுக்கு தகுந்த மாறி செய்ய வேண்டும் .அதிக எடை ,பளு தூக்குவது ஆபத்தானது .நமது வயிற்று பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் குடலிறக்கம்(hernia) ஏற்பட வாய்ப்பு உண்டு .

Sunday, December 5, 2010

பெற்றால் மட்டும் போதுமா-2


ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு நிலைப்பாடை எட்டு வயதிலிருந்து பத்து வயதிற்குள் எடுத்து விடுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .தன்னை பற்றிய ஒரு நிலை பாடும் அதன் புற சூழல்,உலகம் பற்றிய ஒரு நிலைப்பாடும் அது இந்த வயதில் அடைந்து விடுகிறது .அப்பொழுது எடுக்கும் அந்த முடிவு,அதன் குணாதிசயங்களை முடிவு செய்து அதற்கேற்ற ஒரு பாத்திரத்தை ஏற்று கொண்டு வாழ்க்கையை நடத்தும் .இதை 'ஸ்கிரிப்ட் ' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .நாம் எல்லோரும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற வாறு நடித்து கொண்டு இருக்கிறோம்,அதையே நாம் திரும்ப திரும்ப செய்கிறோம்.
குழந்தைகள் எடுக்கும் நிலைபாடை நான்காக வகுக்கலாம்
நான் சரி ,உலகமும் சரியானதே -(i'm ok.you are ok-positive)- இது ஒரு ஆரோக்கியமான மன நிலையாக வளர்ச்சி பெரும் ,வாழ்க்கையின் பால் நம்பிக்கை இருக்கும்,மனிதர்கள் மீது நம்பிக்கை ,அன்பு இருக்கும்,வாழ்க்கை வாழ்வதற்கே எனும் மனப்பான்மை இருக்கும் .
நான் சரி ஆனால் உலகம் சரி இல்லை -(i am ok,you are not ok-projective) -இது குற்றம் சுமத்தும் மனம் ,நான் மட்டுமே சரி ஆனவன் ,வாழும் தகுதி உள்ளவன் ,நீ தகுதி அற்றவன்,மதிப்பில்லாதவன் ,தனது செயல்களின் விளைவிற்கு இன்னொருவன் மேல் பழி போடுவது .அடக்கி ஆள முயல்வது,அதிகார மையமாக செயல் படுவது

நான் சரி இல்லை, உலகம் சரியானது -(i am not ok,you are ok-introjective)- இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ,தன்னம்பிக்கை இன்றி தவிப்பர் ,தளர்ச்சி அடைவர் ,மன அழுத்தத்தால் பாதிப்பு ஏற்படும் .உற்சாகமின்மை ,மன சோர்வு .நான் இந்த உலகத்தில் வாழ தகுதி அற்றவன் என்று நம்புவர் ,உச்சகட்டமாக தற்கொலை நடக்கலாம் .

நானும் சரி இல்லை உலகமும் சரி இல்லை -(ii am not ok you are also not ok-futile)-வாழ்கை இவர்களுக்கு ருசிப்பதில்லை ,வாழ்க்கை ஒரு திக்கற்ற,நோக்கமற்ற ஒரு பயணம் ,எந்த சுவாரசியங்களும் இதில் இல்லை ,வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை ,வாழ்வதில் ஒரு பிடிமானம் இல்லாமல் தற்கொலைக்கு செல்லலாம் .

இந்த நிலைபாடுகளால் அரங்கேறுவது தான் வாழ்க்கை எனும் நாடகம் ,எட்டு வயதிலே நாம் நம் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து விடுவோம்,இந்த பாத்திரங்களை குழந்தைகள் தனதாக்கிகொள்ள முக்கிய காரணம் பெற்றோர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை
இனி என்ன ? அந்த பாத்திரமாக வாழ்வது தான் பாக்கி .
உலகில் வசிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு எது தெரியுமா ? நமது இருப்பின் மீதான கவனம் , நமது இருப்பை நாம் ஆழ படுத்துகிறோம் ,அதை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் .இது மிகவும் அடிப்படையான உணர்வு .இந்த அங்கீகாரம் ஒரு மென் சிரிப்பாகவும் இருக்கலாம், இல்லை கண் அசைவாகவும் இருக்கலாம் இல்லை முதுகில் விழும் அடியாகவும் இருக்கலாம், இல்லை கன்னத்தில் விழும் அறையாகவும் இருக்கலாம் .

ஒரு மனிதனுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய வலி,அவமானம் அவனது இருப்பை நாம் புறக்கணிப்பதே ஆகும், நாம் நம் குழந்தைகளை புறக்கணித்தால் என்ன ஆகும் ?


தொடரும் ...

Saturday, December 4, 2010

ஜோனாதன் லிவிங்ஸ்டோன் எனும் சுதந்திரத்தின் குரல்

எனக்கு பெரிதாக ஆங்கில நாவல்,கதைகளில் அறிமுகம் ,ஆர்வம் இல்லை .இது வரை நான் மொத்தமே ஒரு இருபது ஆங்கில நாவல்கள் படித்து இருந்தால் பெரிய விஷயம் ,அதிலும் ஒரு நாலஞ்சு சிட்னி ஷெல்டன் நாவல்கள் ,பிறகு டேன் பிரவுன் நாவல்கள் ,பிறகு ஹாரி பாட்டர் அனைத்து பாகங்கள் , இதை தவிர இன்னும் நாலஞ்சு தேறலாம் ,பெரிதாக எந்த காரணமும் இல்லை -கதாப்பாத்திரங்களின் சூழலோடு எனக்கு ஓட்டுவது கொஞ்சம் கடினமாக இருந்தது .அதனால் என்னை தகவல் சார்ந்த பொது அறிவு புத்தகங்கள்,சிறு வயதில் சந்தாமமா ,டிங்கில் காமிக்ஸ்,பாட புத்தகங்கள்(குறிப்பாக நான் -டீடைல்) ,பின்னர் கல்லூரியில் ஆன்மீக புத்தகங்கள்,சுய முன்னேற்ற புத்தகங்கள் என்று என்னை சுருக்கி கொண்டேன் .(இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை)
நம் வாழ்வில் வாசிப்பதால் ஏதும் பலன் உண்டா ? சில வாசிப்புகள் நம் வாழ்க்கையே புரட்டி போட்டு விடும் .நேரடியாக நம் இதயத்தில் புகுந்து நம் நம்பிக்கை ,சித்தாந்தங்கள் என்று எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் .கேள்விகள் ,பயம், உன்னதம் என்று அது பல தளத்தில் நின்று பேசும் ,ஒரு அங்குலமாவது நம்மை முன்னோக்கி நகர்த்தி செல்லும் .ஒரே படைப்பு எல்லாருக்கும் உன்னதத்தை தருவதில்லை ,ஒரு படைப்பு நமக்கு தாக்கத்தை தருகிறது என்றால் அதற்க்கு நாம் தயாராக இருக்கும் நேரத்தில் அதை படித்தால் மட்டுமே அது நம் உள்ளத்தில் மோதி பிரளயமாக வெடிக்கும் .ஒவ்வொரு வாசகனுக்கும் இத்தகைய அந்தரங்கமான அக அனுபவம் ஏதோ ஒரு படைப்பினால் ஏற்படும் .
வாழ்க்கையில் எத்தனையோ படைப்புகள் வரும்நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம் ஆனால் எதுவும் அந்த முதல் அனுபவத்திற்கு ஈடாகாது ,முதல் காதலை போல்.
கல்லூரி நான்காம் ஆண்டு படித்து கொண்டிருந்த சமயத்தில் ,மே மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் .அப்பொழுது எனக்கு மனதில் சில விஷயங்கள் என்னை போட்டு அழுத்தி கொண்டிருந்த காலம் .அப்பொழுது ஊரில் எனது நீண்ட நாள் பள்ளி தோழியை சந்தித்தேன் ,அவளுக்கு தேர்ந்த ரசனை உண்டு ,ஆங்கிலத்தில் நெறைய நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிப்பாள் ,பின்னர் படித்த புத்தகத்தை பற்றி நெறைய பேசுவாள் ,அப்படி அவள் எனக்கு பரிந்துரைத்த புத்தகம் ஏராளம் ,புத்தகத்தின் தடிமனை பார்த்து ஒதுங்கி விடுவேன் ,அவள் எனக்கு அந்த நேரத்தில் இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்தால் ஒன்று the alchemist-by paulo coelho (அல் கெமிஸ்ட் ) இன்னொன்று ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் தி சீ கல் (jonathan livingston the seagull). அல் கெமிஸ்ட் நான் அப்போது படிக்கவில்லை ,அவள் வீட்டில் இருந்த அந்த சிறிய புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தால் ,இதையாவது படி என்றாள்
.அந்த புத்தகம் ஐம்பது அல்லது அறுபது பக்கங்கள் தான் இருக்கும்,அதிலும் நெறைய படங்கள் வேறு இருக்கும் ,சரி சின்ன புக் தான படிக்கலாம் என்று நானும் படித்தேன் , அது தான் ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் தி சீ கல் .
ரிச்சர்ட் பாச் எனும் முன்னாள் அமெரிக்க விமான படை விமானி எழுதிய புத்தகம் இது .சீ கல் எனும் கடலை நம்பி வாழும் ஒரு பறவை இனம் உண்டு .அந்த பறவை கூட்டத்தில் ஒரு பறவை தான் ஜோனாதன்.அந்த பறவை கூட்டதிலிருந்து தன்னை வேறுபடுத்தி கொண்டவன் ,அவனுக்கு பல லச்சியங்கள் உண்டு ,வெறும் உணவுக்காக பறப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை ,பறப்பது சுகம்,உயரே உயரே ,மேலும் உயரே,வின் மீன்களை எட்டி பிடிக்க அவனுக்கு அடக்க முடியாத அவா ,அவன் அவனது சமூகத்தில் வேறுபட்டு சிந்திக்க தொடங்கியதால் அவனை அவனது சமூக பெரியவர்கள் அவனது பெற்றோர்கள் ,குடும்பம் என அனைவருமே அவனை அடக்க முயன்றனர் ,பொது புத்தி விளையாடியது ,அவனது தாய் தந்தை அவனை கண்டிக்கின்றனர் ,உணவுக்காக நாம் பறக்கிறோம் ,அதனால் நீ அந்த அளவுக்கு பறக்க நேர்ந்தால் போதும்,இதர பறவைகள் போல்,சீ கல் போல் உன்னால் ஏன் இருக்க முடியவில்லை ? நமக்கு எது வருமோ அதை மட்டும் செய்து சமூகத்தோடு ஒத்து வாழு என்று அறிவுரைகள் .ஜோ அவ்வாறு அமைதியாக் இருக்க முயல்கிறான் ,ஆனால் முடியவில்லை .பெற்றோர்களுக்கு தெரியாமல் தொடர்ந்து பறக்கும் நுணுக்கங்களை அறிகிறான் ,அவனுக்கு தன்னால் எது முடியும்,எது முடியாது ,அது ஏன் முடியாது இதை தெரிந்து கொள்ள வேண்டும் ,ஆயிரம் அடிகளிலிருந்து வேகம் எடுக்கிறான் ,கடலை ஒட்டி பறக்கிறான், இன்று அவனுடைய சமூகத்தில் உயிர் வாழும் எந்த சீ கல் விடவும் அவன் பறக்கும் நுணுக்கங்களை கற்று தேருகிறான்.


ஒரு கட்டத்தில் தன்னால் கழுகை போல் பறக்க முடியாது ,என்று தனது எல்லையை உணர்கிறான் ,நாம் கூட்டத்தினரோடு இனைந்து வாழ வேண்டும் என்று தன்னை தானே சமாதானப்படுத்துகிறான் .
ஆனால் மறு நொடி அவனது கனவு ,ஆசை அவனது தீர்மானத்தை நொறுக்குகிறது.எந்த ஒரு சீ கல் அடையாத ஒரு உயரத்தை அவன் அடைகிறான் ,பெருமையோடு கூட்டம் இருக்கும் கரைக்கு திரும்பினால் ,அங்கே ஒரு பெரும் கூட்டம் இவனுக்காக காத்து கொண்டிருக்கிறது , ஜோ ஒரு கிளர்ச்சிகாரனாக சித்தரிக்க படுகிறான் அவனது சாதனை அங்கு அங்கீகரிக்க பட வில்லை ,ஆனால் அது ஒரு விதி மீறலாகவும், அந்த இனத்திற்கு வந்த அவமானமாகவும் சித்தரிக்க படுகிறது ,ஜோ சமூகத்திலிருந்து தள்ளி வைக்க படுகிறான் .,ஜோ தனது கருத்தை சொல்கிறான் ,வாழ்க்கைக்கு மேலான அர்த்தம் இருக்கிறது,நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை விட மேலாக வாழலாம் ,ஆனால் செவி மடுக்கவில்லை .


அவனது தனிமையை விட சமூகத்தின் மூடதனம் அவனை அதிகமாக வாட்டியது .அவன் வேறு ஒரு சீ கல் உலகத்திற்கு அழைத்து செல்ல படுகிறான் .,அது சொர்க்கம், இவனை போலவே வெவ்வேறு கட்டத்தில் முயன்று வெகு சில சீ கல் அங்கு வந்து உள்ளன , கற்க இன்னும் நெறையா இருக்கிறது என்று உணர்கிறான் ,பழைய உலகை மறந்துவிட்டான் ,புதிய கேள்விகள் -விவாதங்கள் புரிதல்கள் ,தனது பறக்கும் திறமை உச்ச கட்ட நேர்த்தியை நோக்கி ஜோ வந்து கொண்டிருந்தான் , அவன் இந்த உலகத்திலிருந்து இதை விட மேலான உலகத்திற்கு செல்ல அவனுக்கு வாய்ப்பு வரும் காலம் நெருங்கியது ,ஆனால் ஜோ மீண்டும் அவனது கூட்டத்திற்கு திரும்ப விரும்பினான், தன்னை போல் உயரே பறக்க துடிக்கும் இளம் சீ கல்களை பயிற்றுவிக்க எண்ணினான் ,
ப்லேட்சேர் -தன்னை போல் உயரே பறக்க துடிக்கும் ஒரு இளம் கல் ,ஜோ தன்னையே காண்கிறான் ,அவனும் தனது கூட்டத்தால் வெறுக்க பட்டவன் ,அவனை பயிற்றுவிக்கிறான் .மேலும் பலர் இணைகிறார்கள்,ஜோ வின் சீடர்கள் அதிகமாகிறார்கள் ,சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்திற்கு திரும்ப கூடாது ,ஆனால் ஜோ மற்றும் சீடர்கள் சமூகத்திற்கு திரும்புகிறார்கள் ,இவர்களின் செயலை கண்டு ,சமூக பெரியவர்கள் கொதிப்படைகிறார்கள் ,ஆனால் இவர்களின் திறமை கண்டு ஒரு கூட்டம் வாயை பிளக்கிறது ,இரவில் இவர்களை சுற்றி வட்டம் கூடுகிறது .ஜோ இறுதியில் இறை தூதுவனாக சித்தரிக்க படுகிறான்.சமூகம் ப்லேட்சரை சாத்தான் என்று சாடுகிறது ,வெறுப்பை உமிழ்கிறது .தங்களை வெறுத்து ஒதுக்கிய சமூகத்தை ப்லேட்சேர் வெறுக்கிறான், ஆனால் அவன் பார்வை மாறுகிறது,எல்லா சீ கல் இடமும் உள்ள மேன்மையை காண்கிறான்,நேசிக்கிறான் ,புதிய உச்சத்தை அடைகிறான் .

அதி அற்புதமான இந்த சிறிய நாவல் எனக்கு கொடுத்த உணர்வுகள் அபாரமானது ,எனக்கே இறக்கை முளைத்தது போல் இருந்தது ,எளிமையான நடை, அருமையான குறியீடுகள் மூலம் வாழ்க்கை பார்வையை உன்னதமாக சொல்லும் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது ,மற்றும் என்னை அதிகம் பாதித்தது என்றும் சொல்லலாம் .இதனுள் ப்லேட்சேர் - ஜோ நடத்தும் விவாதங்கள் ,ஜோ தன்னை விட மூத்த சியாங் கல் இடம் நடத்தும் விவாதம் ,சுலைவான் மற்றும் ஜோ விவாதம் என்று பல அற்புதமான,எளிமையான விவாதங்கள் கதை முழுவதிலும் உள்ளது .இந்த கதையை நாம் பல தளங்களில்,பல பொருள்கள் கொண்டு விவாதிக்க முடியும் அதுவே இதன் வெற்றி .இதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் .நிச்சயம் முயல்வேன் .நம் அகத்தை விரிக்கும் அனுபவம் இதில் கிடைக்கிறது .நெகிழ்ச்சியான இந்த கதையை அனைவரும் வாசிக்க வேண்டும் ..

எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்த வரி.“The only true law is that which leads to freedom,” Jonathan said.“There is no other.”
குறிப்பு:மக்கள் பயன்பெறும் வண்ணம் இதை இலவச கணினி புத்தகமாக வெளியிட்டுள்ளனர் அதன் சுட்டி
http://img1.liveinternet.ru/images/attach/b/2/3599/3599086_richard_bach__jonathan_livingston_seagull.pdf
அத்துடன் இது திரைப்படமாகவும் வெளி வந்துள்ளது (நானும் கண்டததில்லை!!)
இந்த அற்புதமான இசையை தொடுத்து எடுக்க பட்ட இந்த காணொளியை காணுங்கள்

Wednesday, December 1, 2010

பெற்றால் மட்டும் போதுமா?-1

அண்மையில் பதிவர் கலகலப்ரியா ,தேகா ,மற்றும் பாலா அவர்கள் அவர்களுடைய பதிவுகளில் பிள்ளை வளர்ப்பு பற்றியும் ,அதன் அம்சங்களை பற்றியும் நல்ல விவாதங்களை தொடங்கி வைத்தனர் .அவர்களின் கருத்துக்கள் ,மற்றும் நவீன காலக்கட்டத்தில் இவ்வகை சிந்தனை போக்குகள் மிகவும் முக்கியமானவை .என் கருத்துக்களும் ,நான் சேகரித்த கருத்துக்களையும்,அனுபவங்களையும் இணைத்து ஒரு பதிவாக இடலாம் என்று இந்த முயற்ச்சியை தொடங்குகிறேன் .ஆகினும் கூட இது இன்னொரு தொடராக வருவது போல் நான் உணர்கிறேன் .இத்தகைய விவாதங்கள் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் .



அடிப்படையாக சில உளவியல் விஷயங்களின் தெளிவு நமக்கு முக்கியம்,அதிலிருந்து தொடங்குவோம் ." போர்ன் டு வின் " (born to win by muriel james and dorothy) எனும் தங்களது உளவியல் புத்தகத்தில் உளவியலாளர்கள் சில அற்புதமான அடிப்படைகளை நமக்கு அளிக்கின்றனர் ,அதை தொகுத்து நமக்கு நம்மை பற்றிய புரிதல் ஏற்ப்படுத்திக்கொள்ள இந்த சிறு முயற்ச்சி .நான் இத்துறை வல்லுநர் அல்ல என்றாலும் எனக்கு தெரிந்ததை கூற முயல்கிறேன்.
மரபு வழி குணங்களும் ,புறசூழலும் ஒரு தனிமனிதனின் குணாதிசயங்களையும் ,ஒரு சூழலுக்கு நாம் ஆற்றும் எதிர்வினையையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன,ஆயினும் கூட மனிதர்கள் இவைகளின் கருணையில் காலம் தள்ள அவசியம் இல்லை ,இதை நாம் நிச்சயம் நமக்கேற்ற வடிவில் மாற்றலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் .
மரபணு வழியாக வரும் குணங்களை பொறுத்த மட்டில் ,முக்கியமாக நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ,மரபணுக்கள் அப்படியே தந்தை ,தாய்களின் நோய்களை பிள்ளைகளுக்கு பரப்புவது இல்லை ,அந்த நோய் நம்மை எளிதில் ஆட்க்கொள்ளக்கூடிய தன்மையை (susceptiblity)மட்டுமே நமக்கு அளிக்கிறது,இது குணாதிசயங்கள் மற்றும் நடத்தைக்கும் கூட பொருந்தும் .அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் மகனுக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ,அதை அறிந்து நம் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை நாம் சீர்ப்படுத்திக்கொண்டாலே போதும் ,அந்நோயை தவிர்க்கலாம் .
மனிதர்களின் ஆளுமை மொத்தமாக மூன்று தளங்களில் செயல்படுகிறது என்று கூறலாம் .
பெற்றோர்கள் தளம்
குழந்தை தளம்
சராசரி மானுட தளம் (வளர்ந்த மனிதன் தளம்)
நாம் ஒவ்வொருவரும் இந்த மூன்று தளங்களில் மாறி மாறி பயணிக்கிறோம் ,ஒரு சில தளங்களில் நாம் அதிகமாகவும் வெளிப்படுகிறோம் .
இந்த தளங்களை புரிந்து கொள்ள ஒரு உதாரண சூழல் .
ஒரு மழை கால மாலை பொழுதில் தள்ளு வண்டியில் ஐஸ் கிரீம் உங்களை நோக்கி வருகிறது என்று நினைத்துகொள்ளுங்கள்
பெற்றோர் தளத்தின் சிந்தனை - இதை சாப்பிட கூடாது , சாபிட்டால் ஜுரம் வந்துடும்
குழந்தை - சூப்பர் !!! சாப்பிடனும் !!
சராசரி நிலை - இந்த மழை பொழுதில் நாம் சாப்பிட்டால் நாளை அலுவலகம் செல்வது கடினம் ,வேறு ஒரு முறை பார்க்கலாம் .
நம் வாழ்க்கையை முடிவு செய்யும் பலம் ஓரளவுக்கு நமக்கே இருக்கிறது என்பது உண்மை .ஆனாலும் நாம் மட்டுமே முடிவு செய்யும் வரம் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை என்பதும் உண்மை .

இந்த மூன்று தளங்களில் நாம் மாறி மாறி பயணிப்பது நமக்கு புரியும் .
பெற்றோர்கள் தளம்- இது நம் பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்று கொண்டது ,கண்டிப்பு தன்மை ,ஊக்க தன்மை ,முன் முடிவுகள் ,எச்சரிக்கை ,எதிலுமே ஒரு நம்பகமின்மை ஆகியவை இந்த தளத்தில் முக்கியமானது .நமக்குள் இருக்கும் ஒரு பெற்றோர் நமக்குள் இருக்கும் குழந்தையை போஷித்து பாதுகாக்கும் அமைப்பு இது .

குழந்தை தளம் -இது நாம் உணர்வுகள் சார்ந்து இயங்கும் தளம் ,இயற்கையான உந்துதல்கள் இதை வழி நடத்தி செல்கின்றன .சிரித்தல், மகிழ்தல் ,அடம் பிடித்தல் ,பிடிவாதம் இதெல்லாம் இந்த தளத்தின் வெளிப்பாடு .

சராசரி மானுட தளம் -ஒரு முதிர்ச்சியான மனம் கொண்ட ,சிந்திக்கும் தளம் , அறிவு ,அவதானிப்பு,சூழல் ,வாய்ப்புகள் என்று தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சூழலை எடை போடும் நிலை .பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வு , பகுத்தறிவு ஆகியவை இந்த தளத்தின் செயல்பாடே .

இந்த கட்டமைப்புகள் நம்முள் எப்பொழுது ?எப்படி வருகின்றன ?
முதலில் குழந்தை தளம் ,இந்த தள செயல்பாடுகள் தான் நமக்கு கைகூடும் .உணர்வுகளின் வாயிலாக ,தனது தேவைகள் வாயிலாக இது நடக்கிறது ,பின்னர் ஒன்றரை வயதினிலே பெற்றோர் தளம் உருவாகிவிடுகிறது ! இது பெற்றோர்களை (நடத்தையை)அவதானிப்பது மூலமும், தண்டனை -பரிசு (punish-reward) நடத்தைகள் மூலமும் ஒரு தளத்தை உருவாக்குகிறது ,பிற்பாடு கேள்விகள் மூலம் புரிதல் எட்ட முயலும் பொழுது மானுட அறிவு நிலையை எட்டுகிறது.முக்கியமான இன்னொரு விஷயம் ,இந்த தளங்களுக்கு வயது தடை இல்லை ,குழந்தைகள் பெரிய மனிதர்கள் போலவும், பெற்றோர்கள் போலவும் நடக்கும் ,பெரியவர்கள் -குழந்தை போலவும் ,பெற்றோர்கள் போலவும் நடப்பார்கள் .அதை தான் படங்கள் குறிக்கின்றன

ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு ஆழமான அடிப்படை புரிதலை எப்பொழுது எட்டுகிறது தெரியுமா ?

வளரும் ....
குறிப்பு -நான் உளவியலாளர் அல்ல .எனது துறை உளவியல் அல்ல .ஆயினும் கூட அந்த துறையில் அடிப்படை அறிவு கொஞ்சம் உண்டு ,மேலும் ஆர்வம் உண்டு அவ்வளவே.
.
பட உதவி-கூகிள்