புத்தகங்கள்

Pages

Thursday, November 18, 2010

குருஜி-2 -சற்றே பெரிய சிறுகதை

இப்பொழுது தான் அவனை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது .அலுவலக எதிரில் இருக்கும் கிருஷ்ணன் நாயர் டீ கடையில் அமர்ந்து ஆகாசத்தை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து டீயை இடக்கையால் சுற்றி ஆத்தி அப்படியே ஒரு வாய் குடிப்பதும் மீண்டும் ஆகாயத்தை பார்த்து சிரிப்பதும் குடிப்பதும் என்று போனது .நான் மெதுவாக அவனிடம் சென்றேன் ,"வா வெங்கட் ,நீ என்ன பாக்க வருவன்னு எனக்கு தெரியும் " என்று சொல்லி புன்முறுவல் பூத்தான் , நான் அப்படியே பூசி மொழுகி பொத்தம் பொதுவாக ஒரு சிரிப்பு சிரித்தேன் , நாயர் "இது எந்தா பிரமாதம் எனக்கு கூட அறியும் வெங்கட் சார் தினம் இதே மூணு மணிக்கு இவ்வுட வரும் " என்று சந்தில் புகுந்து நாதஸ்வரம் வாசித்தான் .நாயரை கண்ணாலே துச்சமாக ஒரு பார்வை பார்த்து விட்டு கோவிந்தன் தொடர்ந்தான் "வெங்கட் வாழ்கைய பத்தி என்ன நினைக்குற ? " என்றானே பார்க்கணும் அந்த கேள்வியை கேட்ட உடன் சின்ன வயதில் பல்பத்தை தொலைத்து விட்டு தேடி அடிவாங்கிய போது ஏற்பட்ட அந்த ஒரு பரபரப்பு எனக்கு ஏற்ப்பட்டது , கேட்டு விட்டான் ,என்னிடம் இது வரை யாரும் கேட்க்காத இந்த கேள்வியை கேட்டே விட்டான் ,எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ,இது வரை நான் இதை பற்றி ஏதாவது யோசித்திருந்தால் தானே ஏதாவது சொல்ல முடியும் ,எதுவுமே சொல்லவில்லை என்றால் நம்மை முட்டாள் என்று எண்ண மாட்டானா ? நாம் அறிவு ஜீவி என்று உலகத்தில் நம்மை நிறுவ வேண்டாமா ,இப்படி என் எண்ணங்கள் எல்லாம் என் மனதில் ஸ்க்வாஷ் ஆடியது (எப்போதுமே கபடி தான் ஆடணுமா என்ன ,தீபிகா விளையாடியதை பார்த்த பின் இப்பொழுது எல்லாம் என் மனம் ஸ்க்வாஷ் தான் விளையாடுகிறது )



நான் ஒருவழியாக வாயை திறந்து சொன்னேன் "வாழ்க்கைங்கறது நாம் மட்டும் வாழ்றது இல்ல பிறருக்காக நாம வாழ்றது " என்று ஏதோ ஒரு படத்தில் ஏதோ ஒரு ஹீரோ சொன்ன வசனத்தை சொன்னேன் ,கோவிந்தன் இதை கேட்டதும் சிவமணி ட்ரம்ஸ் போல் அதிர்ந்து சிரித்தான் ,நாம ஏதாவது தப்ப சொல்லிட்டோமோ என்று மனம் பதறியது ,ஆடதொட கஷாயத்தை வெறும் வயற்றில் குடித்தால் வருமே ஒரு முக பாவானை அது போல் வந்தது ,"வெங்கட் முதல்ல நீ யாரு ,நான் யாரு ,நாமங்க்றது யாரெல்லாம் ,பிறர்ன்னு யார சொல்லுவ நீங்கறது நீ இல்ல ,நான்கறது நான் இல்ல ,நாயர் கூட நாயர் இல்லை ..நாமெல்லாம் .." என்று அவன் தொடரும் பொழுது பளிச்சென்று நான் பேசினேன் " கரக்ட் கோவி ,எனக்கு கூட இந்த ஆளு நாயர் இல்லன்னு கொஞ்ச நாளா டௌட் ,நான் பேசுற மலையாளம் கூட இந்த ஆளுக்கு புரியல , இவன பாத்தா அந்த திருநெல்வேலி ரெட்டை கொலை பண்ணிட்டு ஒட்டு மீசை வெச்சுக்கிட்டு தப்பிச்சு வந்தவன் மாறியே இருக்கான் , " நாயர் பதறி " சேட்டா இப்படி எல்லாம் பறைய கூடாது " என்று தலையாலம் (தமிழ் + மலையாளம்) பேசினான் .அமைதியாக தொடர்ந்தான் கோவி " வெங்கி , நேத்து நான் வெறும் கோவிந்தன் இன்னிக்கோ ஆச்சார்யா கோவிந்தன் ,நாளைக்கு நான் யாருன்னு எனக்கே தெரியாது ,இந்த மாற்றத்துக்கெல்லாம் யாரு காரணம் ? எல்லாம் என் குருநாதர் பாக்கி சுகதேவ் மகாராஜ் தான் நான் உன்ன கூட்டிட்டு போறேன் ,ஒரு வாரம் கிளாஸ் ,ரெண்டாயிரம் பீஸ் ,குண்டலினிய அப்டியே மூலாதாரத்திளிருந்து கெளப்பி சஹாஸ்ராரத்துல கொண்டு போய் நிப்பாட்டி அப்ப உன் அகக்கண்ண திறப்பாரு குரு ,அதெல்லாம் ஒரு அனுபவம் ,மிருகின ஜம்போ க்ரியா அடடா எப்பேர்பட்ட விஷயம் , மூச்ச உள்ள இழுத்து ரெண்டு நாசியையும் விரலால அடைச்சு ,நெத்திய சுருக்கி ,கண்ண உருட்டிஅப்படியே ஒரு நிமிஷம் இருக்கணும் ,அப்புறம் வாய் வழியா மூச்ச இழுத்து மறுபடியும் 30 செகண்ட் அப்டியே இருக்கணும் ,அப்போ கடவுள் குருஜி வடிவத்துல அப்படியே கண் முன் சச்சிதானந்த சொரூபமாய் நடனம் ஆடுவார் " லயித்து சொல்லி கொண்டிருந்த கோவி நாயரின் குரல் கேட்டு திடுக்கென்று விழித்தான் "ஞான் கண்டிருக்கு சாரே ,ஞான் தினம் இத கண்டிருக்கு " என்று குதித்தான் நாயர் , "நாயரே என்ன சொல்லுறீங்க கோவி மாறி நீங்களும் கடவுள பார்த்தீங்களா " என்று அதிர்ச்சியில் கேட்டேன் "சச்சிதானந்தம் ,நம்ம 21G கண்டக்டர் , சைதாபேட்டை கூவம் பிரிட்ஜில் ஏறும் சமயத்துல எல்லாரும் இப்படி தான் மூக்க பொத்தி செய்வாங்க , இது ஒரு க்ரியான்னு எனக்கு தெரியாது பச்சே பஸ்சு கண்டக்டர் சச்சிய எனக்கு நல்லா அறியும் " கடுப்பான கோவி "நாயர் சும்மா இருங்க இதெல்லாம் உங்கள மாறி ஞான சூன்யத்துக்கு புரியாது ,வெங்கி அடுத்த மாசம் குருஜி கைலாஸ் போறாரு ஒரு நாப்பதாயிரம் செலவாகும் ,ரெடி ஆகுங்க போகலாம் ,அதுக்கு முன்னாடி இந்த சனி ஞாயர் குனியமுத்தூர் ஆஸ்ரமத்துக்கு போகலாம் , டிக்கெட் எடுத்துடுங்க ,குருஜி கூட உலக சமாதன மாநாடு முடிசுகிட்டு வெள்ளி கிழம வந்துருவார் அவரோட பிரசங்கத்தையும் கேக்கலாம் ,என்ன சரி தான ?" :வெங்கி சாரே நானும் கூட குருஜி ஆணோந்த ஜகடன் பத்திரிக்கையில் எழுதியத படிச்சுருக்கேன் ,யானும் நீங்க கூட வரும் " என்று சொல்லி இருவரும் டிக்கெட் செலவை என் தலையில் கட்டிவிட்டு நடை கட்டினார்கள் சம்பந்தமே இல்லாமல் சில மாதங்களுக்கு முன் கோவியுடன் முதல் நாள் இளைய சேனாதிபதி நடித்த ஏறா படம் பார்த்தது நினைவுக்கு வந்தது , அதில் இளைய சேனாதிபதியின் அறிமுக காட்ச்சியில் தண்ணீருக்குள்ளிருந்து திமிங்கலம் மாறி வரும் அந்த காட்சிக்கு இவன் விசில் அடித்ததிலிருந்தே ,இவன் கூட படத்துக்கோ வெளியூருக்கோ போகக்கூடாது என்று முடிவு செய்து இருந்தேன் ,ஆனால் விதி யாரை விட்டது .

வெள்ளிகிழமையும் வந்துவிட்டது , நாங்கள் மூவரும் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து குனியமுத்தூர் கிளம்பினோம் , எனக்கு என் வாழ்வில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஏற்ப்படபோகிறது என்று ஒரு நம்பிக்கை பிறந்தது .
தொடரும்.....
முந்தைய பகுதி

குருஜி-1 சற்றே பெரிய சிறுகதை

.

2 comments:

  1. அடுத்த பாகம் எப்படா ரிலீஸ்? போர்த பாத்தா டாக்டர் சுனில்கிருஷ்ணன் னு எழுதுறத விட்டுட்டு எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் னு போர்டை மத்திருவ போலருக்கே?

    ReplyDelete
  2. தம்பி சிவா :)
    எழுதுன ஒரு கதைக்கு இவளவு பிட்டு வேணாம் :)
    இந்த கதைக்கு எனக்கு என்ன புலிட்சர் பரிசா கொடுக்க போறாங்க :)
    எழுத்தாளர் எல்லாம் பெரிய விஷயம் !!
    பொழப்ப பாக்கணும்ல:)

    ReplyDelete