எனது அம்மா வழி தாத்தா தொண்ணூறு வயது வாழ்ந்து மறைந்தவர் ,நான் பதினொன்றாவது படிக்கும் பொது அவர் மறைந்தார் ,அவர் அவருடைய காலத்தில் தன் அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் ,அவரது கடைசி காலங்கள் என் வீட்டில் தான் கழிந்தது ,பத்தாவது படிக்கும் போது
என் தந்தையின் இழப்பால் வாடி இருந்த பொழுது அவரும் பாட்டியும் அவர்கள் ஊரிலிருந்து காலி செய்து இங்கு எங்களுக்காக வந்தனர் .நான் பத்தாவது முடித்துவிட்டு இருந்த அந்த நேரம் ,அப்பொழுதும் அவருக்கு நல்ல உடல் நிலையும் ,நினைவு கூர்மையும் இருந்தது ,அவரிடம் சென்று சுதந்திர கதைகளை சொல்ல சொல்லி கேட்பேன் .அவர் நேதாஜியின் தீவிர பக்தர் ,அவர் எப்படி இந்திய தேசிய ராணுவத்திற்கு போக இருந்தார் என்றும் அதை என் பாட்டி எப்படி திட்டம் போட்டு கவுத்தார் என்றும் அவரது அன்றைய ஆற்றாமையை இன்று வரை வருத்தத்துடன் சொல்லுவார் .
காந்தியை ரயிலிருந்து பிடித்து தள்ளிய அந்த பரங்கியர்களை தன் கையால் கழுத்தை நெரித்து கொள்ள தான் எத்தனை பிரயாசை பட்டேன் என்று அவர் சொல்லும் போது எனக்கு ஒரு மாறி சில்லிடும் .
அப்பொழுது எனக்கு நேதாஜியை மிகவும் பிடித்தது .காந்தி அண்ணலின் மேல் ஒரு வித மரியாதை இருந்தது அவளவு தான் .எனக்கு என் பள்ளியில் வைத்த பட்டை பெயர் காந்தி தாத்தா ,நான் போட்டிருந்த முட்டை கார்பன் கண்ணாடி ப்ரேம் எனக்கு வாங்கி தந்த பெயர் இது .மேலும் என் நண்பர்களுக்குள் சில சிறு சிறு தகராறுகளை பேச்சுவார்த்தை மூலம் தவிர்க்க யத்தனித்தேன் ,எனக்கு இந்த பட்டை பெயர் பிடித்தது .
பள்ளி முடிக்கும் தருவாயில் ஒரு வினாடி வினா போட்டியில் பங்குக்கொண்டு பரிசு வாங்கியது நினைவில் உள்ளது ,அதற்க்கு எனக்கு காந்தி அடிகளின் சுய சரிதை எனக்கு பரிசளிக்க பட்டது ,அதில் காந்தி அண்ணல் ஒரு கம்பை வைத்துக்கொண்டு நடப்பார் அவரது கம்பை ஒரு குழந்தை இழுத்து கொண்டு போகும் .அதுவே என் நினைவில் நிற்கும் காந்தியாரின் முதல் நிழல் படம் .
வருடா வருடம் வரும் காந்தி ஜெயந்தி விடுமுறை ,மற்ற எல்லா விடுமுறை நாட்களை போல் சூரியனின் நேரடி கண்காணிப்பில் தான் போகும் ,மணிக்கணக்கில் கிரிக்கெட் விளையாடி ,சோர்ந்து அம்மாவிடம் திட்டு வாங்குவது தான் மிச்சம் .காந்தி இறந்த அன்று பள்ளி விடுமுறை கிடையாது ,நியாய படி அன்று தான் முக்கியமாக விடுமுறை விட வேண்டும் என்று கிட்டா சொல்லுவான் "எங்க வீட்ல தங்கச்சி பாப்பா பொறந்தப்போ நான் ஸ்கூலுக்கு வந்தேன் ,ஆனா தாத்தா சாமிக்கிட்ட போனப்ப நான் லீவு ,அப்ப காந்தி தாத்தா சாமி கிட்ட போனதுக்கு லீவு ஏன் விடல ?"என்று அவன் மூணாவது படிக்கையில் கேட்டது நினைவுக்கு வந்தது .
வருடாவருடம் குழந்தைகள் தினத்திற்கு நடக்கும் மாறுவேட போட்டியில் எப்படியும் மூன்று காந்திகலாவது ஒரு வகுப்புலிருந்து வருவார்கள் ,தொடர்ந்து ஐந்து வருடம் நான் காந்தி வேடம் தான் போட்டேன் .இதுவும் எனது காந்தி தாத்தா பட்டை பெயர் நிலைக்க காரணம். ஒரு குச்சி ,ஒரு கண்ணாடி, ஒரு வெள்ளை வேட்டி,சமீபத்தில் சோலையாண்டவர் கோயிலுக்கு முடி நேர்ந்து விட்டிருந்தால் அவன் இந்த வருடம் நிச்சயம் காந்தி தான் ,எல்லாரும் திருவள்ளுவர் ,முருகன்,சிவன்,விவேகானந்தர் ,பாரதியார்,கட்டபொம்மன் ,நேதாஜி என்று எக்கச்சக்க துணிமணிகளை சுமந்து ,ஒட்டு தாடி மீசை எல்லாம் உறுத்தி விழி பிதுங்கி மேடையில் ஏறி உளறி ,அலறி அழுதது மறக்கவே முடியாது ,காந்தி வேடத்திற்கு செலவே கிடையாது ,காந்தி மகானின் எளிமையோ இல்லை அவர் மேல் உள்ள பற்றோ இல்லை குடும்பத்தின் வருவாயோ எதுவென்று தெரியவில்லை ஒவ்வொரு வருடமும் போட்டியில் காந்தியின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது ,சலூன்கடைக்காரின் மகன் என்பதாலோ என்னவோ எனக்கு வருடா வருடம் காந்தி வேஷம் தான் ,அப்பாவே மொட்டையும் அடித்து கூட்டி வந்து விடுவார் "அப்பா எப்ப பாத்தாலும் காந்தி தானா? ஒரு வருஷமாவது முருகன்,அம்மன் வேஷம் போடக்கூடாதா "என்று நான் கெஞ்சி அழுவதை நண்பர்கள் கேலி செய்தது உண்டு ,சக்தி ,முருகன் எல்லாம் பணக்கார பிள்ளைகள் போடும் வேஷம் அதில் நெறைய நகைகள் போடுவார்கள் ,அது எங்களுக்கு கனவு ,நான் ஒரு முறை அடம் பிடித்ததால் எனக்கு ஜடா முடி, விக் ,புலித்தோல் ,ரப்பர் பாம்பு எல்லாம் கொடுத்து கையில் சூலம் கொடுத்து சிவனாக்கி என்னை ஆடவைத்தது நினைவுக்கு வந்தது ,அந்த பாம்பு நான் போட்ட குதிஆட்டதில் கழுத்திலிருந்து கீழே வழுக்கி விழுந்து எல்லாரும் சிரித்தது ,பின்பு நான் அழுதது என்று பல நினைவுகள்
பாரதிக்குகூட கோட் .தலைப்பாகை தேவை ,வள்ளுவனுக்கு கூட ஒட்டு தாடி தேவை,ஆனால் காந்திக்கு எதுவுமே தேவை இல்லை மழுங்கிய மொட்டையும் , ஓட்டை கண்ணாடியும் ஒரு குச்சியும் போதும்.காந்தியின் எளிமை போட்டி நடுவர்களுக்கு பிடிக்கவில்லை போலும் ,அல்லது காந்தி அவர்களுக்கு சலிப்பை தந்துவிட்டாரோ என்னவோ ஒரு முறை கூட காந்தி வேடம் போட்ட யாருக்கும் பரிசு கிட்டியது கிடையாது
காந்தியின் நினைவு தினம் அன்று காலை பத்து மணிக்கு ஆசிரியர் எல்லாரையும் எழுந்து நிற்க சொல்லுவார் ,இரண்டு நிமிடம் மெளனமாக நிற்க வேண்டும் ,இடக்கையை கட்டி வலக்கை ஆட்காட்டி விரலால் உதடுகள் மேல் வைத்து சத்தம் போடாமால் கண்ணை இறுக மூடி நிற்க வேண்டும் ,அந்த நேரம் பார்த்து 'டமார் ' சுந்தரமோ இல்லை ரவியோ ஒரு 'பாம்' போடுவார்கள் ,அப்படி போடவில்லை என்றால் வாயாலாவது ரவி அந்த சப்தத்தை எழுப்புவான் ,அடக்க முடியாமல் வாயை பொத்தி கண்களால் சிரிப்போம் , யாரும் அத்தகைய நெருக்கடியான தருணத்தில் கண் திறக்க மாட்டோம் ,ஏனெனில் எல்லாரும் சிரிப்பை அடக்கி கொண்டிருக்கும் போது அதை நாம் பார்த்தால் நாம் சிரிப்பை அடக்க முடியாமல் எக்கு தப்பாக சிரித்து தொலைவோம் ,கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருக்கும் செல்லம்மா டீச்சர் ,திட்டி வகுப்புக்கு வெளியே முட்டி போட வைப்பார் ,அந்த பாக்கியம் எனக்கு ஓரிரு முறை வாய்த்து இருக்கிறது .
அடுத்ததாக காந்தி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது அவரை சார்ந்த கிண்டல்கள்,கேலிகள், பிற்காலத்தில் அதுவே அவரை பற்றிய சில கீழான நகைச்சுவை துணுக்குகள் என்று பரிணமித்தது ,ஏழாவது படிக்கும் பொழுது சந்தத்தோடு இனைந்து புது புது வரிகள் எங்களுக்கு அறிமுகம் ஆனது ,காந்தியை பற்றிய அத்தகைய முதல் பகடி பாடல் ,"காந்தி வந்தாராம் ,பூந்தி திண்ணாராம்,வாந்தி எடுத்தாராம் ,சாந்தி ஆனாராம் ," என்று கூட்டமாக எல்லாரும் ஒரே ஸ்ருதியில் பாடி களித்தது ,பதினொன்றாவது ,பன்னிரெண்டாவது படிக்கும் சமயத்தில் அவர் பெயரை பயன் படுத்தி பல கீழான நகைச்சுவை துணுக்குகளை நண்பர்கள் சொல்லுவார்கள் ,எனக்கு அது ஒரு மாதிரி உவர்ப்பை தந்தது ,தினம் இது தொடர்ந்தது ,ஒரு நாள் எனக்கு கோபம் வந்து இதற்காக நண்பர்களுடன் சண்டைக்கு சென்றேன் ,"அவரு என்ன உன்ன பெத்த அப்பா வா ? என் கெடந்து துள்ளுற ?" என்று அவர்கள் கேட்டது ,பின்பு சமாதன உடன்படிக்கை எட்டினோம், நான் இருக்கும் பொழுதில் அத்தகைய பேச்சுகள் காந்தியை பற்றி பேசக்கூடாது என்று .அது இறுதி வரை நீடித்தது .நான் என்னையே காந்தியாக உணர்ந்த தருணங்கள் அது ,அவர்களின் காந்தியை பற்றிய ஆபாச,வசை மொழிகள் என்னையே திட்டுவது போல் உணர்ந்தேன் .
என் குடும்ப சூழல் ,நான் எனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு .கல்லூரியை மறந்து சென்னையில் ஒரு தொழிற்சாலையில் வேலை .புதிய நண்பர்கள், வயதின் வலு ,கையில் காசு ,வாழ்க்கையின் வேறொரு பக்கம் நான் பயணிக்க துணிந்தேன் .அங்கே இருக்கும் தொழிற்சங்கம் ,தோழர்கள் என்று புதிய உலகம் பிறந்தது ,நண்பர்கள் கூடினாலே தவறாமல் தாக்க படும் ஒரு நபர் காந்தியாக தான் இருப்பார் ,எனக்கு அது பெரும் அதிர்ச்சியை தந்தது ,நம் இனத்துக்கு காந்தி துரோகம் இழைத்தார் , என் மதத்திற்கு அவர் துரோகம் இழைத்தார் ,என்று பலர் என் காதில் ஓதினார்கள் ,அவர் ஒரு வியாபாரி ,தந்திரமானவர் ,சுயநலவாதி,அவரது நடத்தை சரி இல்லை என்று பல பல குற்றசாட்டுகள்.அவர் பாப்பான் என்றும் பனியா என்றும் வசைகள் நீண்டது ,தன் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும் கூட அதற்க்கு காந்தி தான் காரணம் என்று வசை மொழிகள் தினம் என் செவிகளில் விழுந்தது .
ஒரே மனிதர் ,எப்படி இப்படி எல்லா குழுவினராலும் வெறுக்கப்படுகிறார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது ,மத அடிப்படைவாதிகளால் ,நாத்திகவாதிகளால் ,முதலாலீகளால் ,தொழிலாளர்களால் என்று ,இவர்களின் இத்தனை வெறுப்பு பிராச்சாரம் எனக்கு காந்தியை இன்னும் நெருக்கமாகியது ,ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் முன் சிக்கிய கலைஞன் எனக்கு முன் தெரிந்தான் ,அவனிடம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு ,எல்லாரையும் திருப்தி படுத்த முயன்று அம்முயர்ச்சியில் தோல்வி அடைந்த சமரசமற்ற நேர்மையான லட்சியவாதியாக என் கண்ணுக்கு தெரிந்தார் காந்தி .சிறுபான்மையினரும் ,பெரும்பான்மையினரும் காந்தி ஒன்று சேர்த்தார் ,இருவருமே தங்களுக்கு காந்தி எதிராக செயல் பட்டார் என்று எண்ணும் தளத்தில் .
காந்தி மகாத்மாவா ? எனக்கு தெரியாது ,அது எனக்கு தேவையும் இல்லை .ஆனால் அவர் நிறை குறைகளை கொண்ட, அதை பூசி மெழுகாத ,உண்மையின் வடிவம் காந்தி ,தன் வாழ்க்கையை நமக்கு முன் விரித்து காட்டிய ஒரு மனிதன் காந்தி ,அந்த துணிவு யாருக்கு வரும் ?
வருடங்கள் ஓடிவிட்டன ,என் மகளை எனது பெட்டியில் இருக்கும் அந்த சுய சரிதை புத்தகத்தை பத்து வருடங்களுக்கு முன் தேடி எடுத்து தர சொன்னேன் ,அவளும் கொடுத்தால் ,அது மட்டுமே எனக்கு பொழுது போக்கு ,உடைந்திருந்த என்னை நான் கட்டி எழுப்பினேன் ,மகாத்மா ,தேச பிதா எனும் பூச்சுகளை களைந்து ,காந்தி எனும் அந்த பிடிவாதக்கார லட்சியவாதியை நான் தேடி அடைந்தேன் .நாளை மறுநாள் எனக்கு "இன்றைய பிரச்சனைகளும் அதன் காந்தீய தீர்வும் " எனும் எனது ஆய்வு கட்டுரையை ஏற்று கொண்டு எனக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது அழகப்பா பல்கலைகழகம் .
நான் காந்தியவாதியா ?
இன்றோடு எனது பதினான்கு வருட ஆயுள் தண்டனை முடிவடைகிறது .எனக்குள் இருக்கும் காந்தியை நான் கண்டுக்கொள்ள இந்த பதினான்கு வருடம் எனக்கு தேவை பட்டது .விடிந்தால் விடுதலை ,
இல்லை ,நான் காந்தியவாதி இல்லை,நான் ஒரு கொலைகாரன் ,தன் கண் முன்னாள் தனது ஐந்து வயது பெண் குழந்தை சீரழியும் கொடுமையை காந்தி கண்டிருக்க மாட்டார் .குறிப்பு-எனக்குள் இருக்கும் காந்தியை நான் கண்டடைய (முயன்றுகொண்டிருக்கும் !!)எனக்கும் பெரிதும் உதவிய "இன்றைய காந்தி " எனும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் படைப்புக்கு வந்தனம் .
பட உதவி-கூகிள்
.