புத்தகங்கள்

Pages

Sunday, October 31, 2010

மரணத்தின் வாசல் வரை -1..


வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று சில உள்ளன .அந்த நாட்களை உருவாக்கியது நம் அனுபவங்கள் தான்.அதிகம் நம் மனதில் நிலைப்பது எதிர்மறை அனுபவம் என்றால் மிகை ஆகாது .மகிழ்ச்சியை விட நம் மனம் துக்கத்தை எளிதில் பங்கு கொள்கிறது .சில நேரம் நம் மனம் துக்கத்திற்கு ஏங்குகிறதோ எனும் சந்தேகம் கூட எனக்கு உண்டு .
ஒரு பெரும் வலி அதனை தொடர்ந்து ஒரு வெறுமை அதனை தொடர்ந்து ஒரு எழுச்சி தொடர்ந்து ஒரு வெறுமை ,பின் ஒரு வீழ்ச்சி .இது தான் நமது வாழ்க்கை இதே சக்கரத்தில் நாம் சோதனை எலிகள் போல் சுழன்று ,உழன்று ஓடி கொண்டு இருக்கிறோம் .இது அயர்ச்சியை தரலாம் ஆனால் அனுபவங்களில் ஒரே சாயல் இருந்தாலும் அவை நமக்கு கொடுக்கும் செய்திகள் வெவ்வேறானவை .அதை சரியாக உள்வாங்குவது நமது திறமை .நாம் அனுபவத்தின் பாடத்தை கற்றோமா ? என்று வாழ்க்கை மீண்டும் மீண்டும் நம்மை பரிட்சித்து பார்க்கும். மீண்டும் மீண்டும் நாம் தோல்வி அடைந்தாள் நாம் இன்னும் சரியாக பாடம் படிக்கவில்லை என்று பொருள் .
விபத்துகள் ஏன் நேருகிறது ? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை .அது ஒழுங்கற்ற ஒரு அவதி என்று எண்ணலாம் .விபத்தின் ஒழுங்கே அது எப்பொழுதும் ஒழுங்கற்றது என்பதில் தான்.வெகு சாதரணமாக ஓடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறிய விபத்து சீண்டினால் கூட போதும் வாழ்க்கையின் பார்வை ,ஒரு குடும்பத்தின் பொருளாதாரம், நாம் வாழ்க்கையை பார்க்கின்ற தளம் என்று எல்லாமே கேள்விக்குறி ஆகி , நாம் எந்த தளத்தின் மீது நமது கால்களை நம்பிக்கையுடன் ஊன்றி நிற்கிறோமோ அந்த தளத்தின் அடித்தளத்தையே பிளக்கும் வல்லமை உண்டு .
வாழ்க்கையின் பெரும் கனவுகள் , பெரும் திட்டங்கள் எல்லாம் தூக்கி எரிந்து நசுக்க பட ஒரு நொடி போதும் .
விபத்து நமக்கு கற்று கொடுக்கும் முக்கியமான பாடம் வாழ்கையின் நிச்சயமற்ற தன்மை .வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை உணர்வதால் என்ன பலன் ? இதை இரு கோணங்களில் நாம் பார்க்கலாம் , ஒன்று வாழ்க்கையை முழுவதும் வாழ துணிவது ,ஏற்றுக்கொள்வது ,அதன் பிடியில் நம்மை ஒப்படைத்து ,நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புவது .விளைவுகளை எண்ணாமல் , செயல்களை நேர்மையும் ஈடுபாடுடனும் ,செயல்களை செய்வதால் ஏற்ப்படும் இன்பத்திற்காக செய்வது.இருத்தல் என்பது கடந்து வாழ்தல் எனும் தளத்திற்கு நாம் பயணிப்பது முக்கியம் .உயிர் வாழும் ஆசை அல்லது தற்காத்து கொள்ளும் உந்து சக்தி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் ஒரு அம்சம் , ஆனால் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு வினோத குணம் மனிதனுக்கு உண்டு ,அது தற்கொலை .உயிர் வாழும் இச்சையை இழக்கும் ஒரே ஜீவ ராசி நாம் தான் என்று எண்ணுகிறேன் .
அன்றாடம் நாம் எத்தனையோ விபத்துகளை பற்றி படிக்கிறோம் , செவி மடுக்கிறோம் ,காண்கிறோம் ஆனால் அவை நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை .அதிகம் சென்றால் அரை நாள் நம் மனங்களை அது ஆக்கிரமிக்கலாம் .எங்கோ நடக்கிறது , அது நமக்கு செய்தி .இது தவறான எண்ணமா என்றால் நிச்சயம் இல்லை ,இப்படி ஒவ்வொரு நாளும் இவ்வுலகை விட்டு நீங்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்காக வருந்தி கொண்டே இருந்தால் நாம் நம் வாழ்க்கையை இழந்து நிற்போம்.

வாழ்க்கை நிச்சயமற்றது என்று உணருவதினால் எதிர்மறை எண்ணங்களும் உருவாக வாய்ப்பு உண்டு .பயம் ,அவ நம்பிக்கை ,பதட்டம் , நம் கனவுகள் இலட்சியங்கள் பறிக்க பட்டு விடும் எனும் கவலை .இது நம்மை இயற்கயின் திட்டத்திலிருந்து புறம் தள்ளுகிறது , நாம் மரிக்க விரும்பவில்லை , நாம் இயற்க்கைக்கு எதிராக சதிராடுகிறோம் , நமது பயம் நம்மை வழி நடத்துகிறது ,நம் இருப்பை ஆழ படுத்துகிறோம் நாம் அமரன் என்று எண்ணுகிறோம் ,நம்மை மரணத்திளிருந்து தப்புவிக்க நாம் பொருள் சேர்கிறோம் அதுவும் நமது தேவைக்கு மேல் .அது நம்மை காக்கும் என்று நம்புகிறோம் .ஆனால் எல்லாம் பொய் என்று உணர்ந்தவுடனும் நமது சுவடுகளை பதிக்க முயல்கிறோம் , நமது அடையாளங்களை இவ்வுலகத்திற்கு விட்டு செல்ல முயல்கிறோம் .மரணம் நம் மூக்கில் நுழைந்து நுரையீரலை அமுக்கி பிடித்து இதயத்தை கசக்கும் வரை நாம் மரணத்தை ஏமாற்றவே முயல்கிறோம்.கடவுளின் காலடிகளை பற்றி பதறுகிறோம் ,ஆனாலும் கருணை இல்லை .மரணம் உணர்வுகள் அற்ற சிலை மனிதன் ,அவனுக்கு நம் கனவுகள்,உறவுகள் நட்புகள்,முடிக்காத கடமைகள் எதை பற்றியும் கவலை இல்லை .இப்படி ஒரு ஊழியனை ஒவ்வொரு முதலாளியும் பெற ஏங்குவான் .
நாம் நிஜத்தில் தினமும் மரணத்தின் வாசல் வரை சென்று வருகிறோம் , இல்லை அது கூட தவறு தான் நாம் எங்கு வசிக்கிரோமோ அங்கெல்லாம் மரணத்தின் மூடிய கதவுகள் உள்ளது நாம் அதை முட்டி மோதிக்கொண்டு தான் இருக்கிறோம்.நாம் நினைக்கும் நேரத்தில் அது திறப்பதில்லை .இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவனுமே தன்னுடன் ஒரு மரணத்தின் வாசலை தூக்கி கொண்டு தான் திரிகிறோம் , என்றேனும் அந்த வாசல் திறக்க கூடும் , அதை நாம் தீர்மானிப்பது இல்லை .
தொடரலாம்- (எப்போது மீண்டும் இதை எழுத தோன்றுகிறதோ அப்பொழுது )

Tuesday, October 26, 2010

வேதனையான மருத்துவ சோதனை

இன்று சந்தைக்கு வரும் ஒவ்வொரு மருந்தும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின் தான் வருகிறது .முதல் கட்டமாக நோயின் கூறுகளை ஆராய்ந்து அதை எந்த கட்டத்தில் வீழ்த்த வேண்டும் எனும் அறிவு ,பின்பு அந்த நோயின் கட்டமைப்பு எனும் பூட்டை உடைத்து அதற்கேற்ற சாவியை கண்டடைதல் .அந்த சாவி ஒரு புரதமாகவோ , ஹோர்மோன், என்று எதுவாகவும் இருக்கலாம் .இதை கணினி துணை கொண்டு (simulation technic-drug designing) நோய்க்கு ஏற்ற கூட்டு அணுக்களை இது நமக்கு பகுத்து தரும் .பூட்டுக்கு ஏற்ற சாவியை கண்டு பிடிப்பது போல் தான் இது .அந்த கூட்டு அணுக்கள்(molecules) பின்னர் பரிசோதனை கூடத்திற்கு செல்கிறது அங்கு அதன் செயல்பாடுகள் ,மருத்துவ குணங்கள் , நோயை குண படுத்த தேவை படும் அளவு (therapeutic dose) , மருந்தினுடைய பாதுகாப்பான அளவு(safe dose/lethal dose) என்று பல கட்டங்கள் கடந்து , மிருகங்களில் செலுத்தி அதன் திறனையும் பாதுகாப்பையும் உர்ஜிதம் செய்து , மனிதர்களை சென்றடைகிறது .

முதலில் ஒரு சிறு பிரிவுக்குள் ( சுமார் 20-30)தன்னரர்வ நபர்களுக்கு மருந்தை செலுத்தி அவர்களை நாள் முழுவதும் கவனித்து ,அவர்களின் உடலில் ஏற்படும் அனைத்து உயிர் வேதியல் ( bio chemical) மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து ,மருந்தின் குண நலன்களை ,சாதக பாதகங்களை , பாதுகாப்பை , திறனை புரிந்துக்கொள்ளப்படுகின்றன .இதை முதற் கட்ட மருத்துவ பரிசோதனை என்று அழைகின்றனர் ( phase 1 clinical trials).இத்தகைய மனித பரிசோதனைகளுக்கு எதிக்ஸ் குழு உள்ளது , அது எல்லாம் விதிகளின் படி தான் நடக்கிறதா என்று கண்காணிக்கும்
.பரிசோதனையில் பங்கு பெரும் தன்னார்வ நபர்களுக்கு உரிய காப்பீடு , மற்றும் குடும்ப உறுபினர்களின் ஒப்புதல் ஆகியவை மிகவும் முக்கியம் .இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பரிசோதனை பல இடங்களில் இன்னும் அதிகமான மனிதர்களை கொண்டு நடத்த படும் .பின் மூன்றாம் கட்ட சோதனை பல நாடுகளில் பல்வேறு விதமான மக்கள் குழுக்களில் ,வெவ்வேறு மரபணு கூறுகள் ,சமூக நிலை , வயது , என்று பல்வேறு தளத்தில் நடத்த படும் .ஒரு மருந்து சந்தைக்கு வர இந்த அணைத்து கட்டங்களை கடந்து வர சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிடும் .

மருத்துவ வரலாற்றிலே ஆக பெரிய கரும்புள்ளியாக கருதப்படுவது அமெரிக்க அரசால் நடத்த பட்ட சிபிலிஸ் (syphilis) பரிசோதனை என கூறினால் அது மிகை ஆகாது .வெகு சமீபத்தில் அமெரிக்க அரசின் சார்பாக திருமதி .ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கௌதமேல (gauthamela) அரசிடம் மன்னிப்பு கோரியது .அப்படி என்ன தான் நடந்தது அங்கு ?
மேலே குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனை திட்டங்கள் வகுக்க முக்கியமான காரணமாக இருந்தது இந்த சம்பவம் தான் .சுமார் 64 வருடங்களுக்கு முன் அமெரிக்க அரசால் அங்கு நடத்த பட்ட மருத்துவ பரிசோதனை பற்றி சொன்னால் ,மனிதாபிமானமுள்ள எந்த ஆன்மாவும் வெட்கி தலை குனியும் .
இரு வேறு பரிசோதனைகள் நம் கண் முன் விரிகின்றன. முதலில் tuskeege பரிசோதனை ,அமெரிக்க சுகாதார துறையால் 1930 களில் தொடங்கி சுமார் நாற்பது வருடம் நடந்த இந்த சோதனையில் ஆப்ரிக்க- அமெரிக்க கறுப்பினத்தவர்கள் நானூறு பேரை மகான் கவுன்டி எனும் இடத்திலிருந்து தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது .இந்த நானூறு பேருக்கும் சிபிலிஸ் எனும் கலவியின் மூலம் பரவும் நோய் (sexually transmitted disease) இருந்தது .அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பயங்கர நோயாகும் .இவர்களை டாஸ்கீஜி,அலபாமா எனும் இடத்தில் வைத்து இவர்களுக்கு சிகிச்சை ,உணவு,உறைவிடம் மற்றும் ஈம கிரியைக்கான செலவை அளிக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி அழைத்து போனர். அவர்களில் நோயால் பாதித்த ஆண்கள் ,பெண்கள் ,பிறக்கும் போதே இந்நோயினால் பாதிக்க பட்ட குழந்தைகள் அடங்குவர் .அவர்களுக்கு இந்நோய் இருப்பதை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை .ஆனால் அவர்களுக்கு எந்த மருத்துவமும் அங்கு செய்யவில்லை , அவர்களுக்கு உள்ள நோயின் தன்மையை , பாதிப்பை ஆராய அவர்களை அப்படியே விட்டுவிட்டனர் .கல்வி அறிவு இல்லாத , ஏழை மக்களான அவர்கள் அரசாங்கம் அவர்களுக்கு நன்மை செய்கிறது , குணமாகிவிடும் என்று நம்பி அங்கு இருந்தார்கள் .1940 களிலயே சிபிலிஸ் நோய்க்கு பென்சில்லின் சிறந்த மருந்து என்று நிறுவப்பட்டது , பென்சில்லின் மருந்துகள் இருந்தும் கூட அந்த மருந்தை நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு இவர்கள் அளிக்காமல் அவர்களை சாக விட்டது தான் கொடுமை .அவர்களுக்கு இந்நோய்க்கு மருந்து உள்ளது என்றோ , அது கிடைக்க கூடிய தூரத்தில் தான் உள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை அல்லது இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து மறைக்க பட்டது .1972 ல் இந்த ரகசிய பரிசோதனை அம்பலமாகி நிறுத்தப்பட்டபோது வெறும் எழுபத்தி இரண்டு நபர்களே குற்றுயிரும் கொலையுயிருமாக மீதம் இருந்தனர்.

இந்த பூதத்தை தோண்டி துருவும் போது தான் கௌதமேலாவில் நடந்த சிபிலிஸ் பரிசோதனை பூதம் கிளம்பியது .
அங்கு சிறையில் இருந்தவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்த பட்டது .அலபமாவிலாவது நோய் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டனர் , இங்கோ நோய் இல்லாதவர்களுக்கு கூட நோயை பரப்பி பின்பு ஆராய்ந்தனர் !
ஆம் சிபிலிஸ் நோயை இந்நோய் உள்ள விலை மாதர்களை கொண்டு சிறையில் உள்ள கறுப்பின மக்களுடன் தொடர்பேற்படுத்தி இந்நோயை பரவ செய்தனர் !இதற்க்கு எதிர்ப்பு வந்த உடன் நோய் கிருமிகளை உரிய விதத்தில் பாதுகாத்து அதை நேரடியாக சிறைவாசியின் ஆணுறுப்பில் செலுத்தினர் !!இதில் ஈடுபட்ட டாக்டர் கட்ளர் இதை கடைசி வரை நியாய படுத்தியது இன்னும் கொடுமை !!இவர் அமெரிக்காவின் துணை சர்ஜென் ஜெனரல் பதவி வரை வந்தவர் !!

இது ஏதோ அமெரிக்காவில் நடந்தது ,அமெரிக்க ஏகாதிப்பத்தியம் அப்படி இப்படி என்று எண்ண வேண்டாம் , இரண்டாம் உலக போரின் போது நாஜிக்கள் ,ஜப்பானியர்கள் என்று இதை பலர் செய்து உள்ளனர் .இன்றும் pfizer போன்ற மிக பெரிய நிறுவனம் கூட ஆப்ரிக்காவில் விதிகளை மீறியதாக குற்றம் சாட்ட படுகிறது .இந்தியா இப்போது மருத்துவ பரிசோதனைக்கு மிக ஏற்ற நாடாக பார்க்க படுகிறது .நம்மூரில் உள்ள சொபளங்கி சட்டங்கள் , நம் மக்களின் அறியாமை , இங்கு உள்ள மக்கள் தொகை மற்றும் மரபணு வேற்றுமைகள் என்று பல காரணம் .நாம் மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறோம் , அதை அவர்களின் வசதிற்கு பயன் படுத்துகின்றனர் .இது எல்லா மருத்துவர்களுக்கும் பொருந்தாது .கிராம புறங்களிலும் , சேரி பகுதியிலும் பல மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன , அதில் நாம் பங்கேடுகிறோம் எனும் அடிப்படை கூட தெரியாமல் மக்கள் உள்ளனர் .இலவச மோகமும் இதற்க்கு காரணம் .நாம் விழிப்புடன் இருப்பது அவசியம் .மனிதனின் பேராசைக்கு அளவு இல்லமால் போய்விட்டது
மனித இனத்தின் சிறப்பு குணம் இது தான் போல- ஒரு சாரர்/தனி மனிதன் வளமோடு வாழ யாரையும் எதையும் அழிக்கலாம் , இதற்க்கு நாம் குரங்காகவே வனங்களில் திரிந்து இருக்கலாம்.

Wednesday, October 20, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 6 -நோய்

ஒவ்வொரு மருத்துவ முறையும் உலகில் தோன்ற நோய் , நோய் பற்றிய பார்வை தான் முக்கியம் .
ஆங்கிலத்தில் dis ease -என்று நோயை குறிப்பிடுகிறோம் . நோய் என்பதை புரிந்து கொள்ள ஆரோக்யம் என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் .ஆரோக்கியம் என்பது வட மொழியிலிருந்து வந்த ஒரு சொல்.ரோகம் இல்லாத சூழல் என்பதே ஆரோகியத்தின் பொருள்.
ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் காரான காரிய கொட்பாடில் நம்புகிறது .நமது உடலில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஒத்திசைவோடு செயல் படுகின்றது .ஒட்டுமொத்தமாக ஒரு சம நிலை தன்மை இதில் அடங்கி இருக்கிறது .இந்த சமநிலைத்தன்மை நீடித்து இருக்கும் வரை எந்த கோளாறும் இல்லை .இது குலையும் போது வரும் சூழலே நோய் .



ஆங்கில - நவீன மருத்துவத்திற்கும் பண்டைய இந்திய மருத்துவத்திற்கும் நோயின் பார்வையில் உள்ள வேறுப்பாட்டை இப்படி புரிந்து கொள்ளலாம் , நம் உடல் என்பதை ஒரு தேசத்தோடு ஒப்பிட்டால் , கிருமி அல்லது நோய் எனும் விதேச சக்தி நம் தேசத்தை தாக்குகிறது . நாம் உலகில் வசித்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பல்வேறு நோய்களினோடு , கிருமிகளினோடு நாம் அறியாமலே நமது நோய் எதிர்ப்பு சக்தி எனும் ராணுவம் போரிட்டு கொண்டுள்ளது .நம் ஒவ்வொரு செயலும் , ஒவ்வொரு எண்ணமும் , நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சமநிலைதன்மையை குலைக்கிறோம், உடல் அதன் சக்திகளை கொண்டு இதை நிரப்பி சரி செய்ய முயல்கிறது .ஒவ்வொரு நிமிடமும் இது நடக்கிறது , பொதுவாக நம் உடலின் ராணுவம் வேகமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கிறது.ஒரு கட்டத்தில் நமது உடலின் ராணுவம் சோர்ந்து விடுகிறது அல்லது எதிரிகளின் பலம் அதிகமாகி பின்வாங்கும் சூழல் ஏற்படுகிறது .இந்த கட்டம் வந்த உடன் தான் உடல் சில குறியீடுகளை நமக்கு அளிக்கிறது , எங்களால் சமாளிக்க முடியவில்லை ,எங்களுக்கு உதவி தேவை எனும் குறியீடு .இந்த குறியீடுகளே நோயின் அறிகுறிகளாக தென்படுகிறது , சுருக்கமாக சொன்னால் வலி , ஜுரம் போன்ற அறிகுறிகள் நமது கவனத்தை உடலின் மீது திருப்ப ஒரு உத்தி என எண்ணலாம்.
இந்த கட்டத்தில் நாம் உடலின் ராணுவத்திற்கு உதவுவது தான் மருத்துவம் .இதை இரண்டு மாதிரியில் செய்யலாம் , ஒன்று ராணுவத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கலாம் , தமது படையை , புதிய ஆயுதங்களை வழங்கலாம் அல்லது இருக்கும் ராணுவத்தை சீர்ப்படுத்தி எதிரிகளை திருப்பி தாக்கும் திறனையும் உற்சாகத்தையும் அளிக்கலாம் .
முதலாவது நவீன மருத்துவத்தின் வழி இரண்டவாது பண்டைய மருத்துவத்தின் வழி .ஆண்டி பயோடிக் போன்ற மருந்துகள் வெளியிலிருந்து வந்து சேர்ந்த கூடுதல் படைபலம் , அவர்களுக்கு என்று ஒரு ஆயுள் உண்டு அது வரை போராடி விட்டு உடலிலிருந்து கரைந்துவிடுவர் .பண்டைய மருத்துவ முறைகள் நமது பாதுகாப்பை பல படுத்தி தாக்குதலை தாங்கும் வல்லமையை அளிக்கின்றது.
இது ஒரு பொதுவான புரிதல் என்றாலும் இதற்க்கு இரண்டு மருத்துவ முறைகளிலுமே விதி விலக்குகள் உண்டு.
இது வெளியிலிருந்து வரும் கிருமிகளுக்கு பொருந்தும் சித்தாந்தம் .இப்பொழுது அதிகமாக மக்களை பாதிப்பது தவறான வாழ்க்கை முறை பின்பற்றுவதால் வரும் நோய்களே பிரதானம் , மெடபோலிக்(metabolic ) நோய்கள் ,auto immune diseases ஆகியவைகள் எனலாம் .
இதில் குறிப்பாக auto immune diseases - நமது சர்க்கரை நோய் , முடக்கு வாதம் (rhematid arthritis) இவை எல்லாம் இதில் அடங்கும் .இந்த வகை நோய் சற்று வித்யாசமானது ,நமது உடல் ராணுவத்தில் பல்வேறு அணுக்கள் பல்வேறு வேலையை பிரித்து செய்கின்றன ,முக்கியமாக மூன்று பிரிவுகள் என்று சொல்லலாம் முதலில் எதிரிகளை கண்டு பிடிக்கும் பகுதி (identification) ,பின்பு எதிரிகளை அழிக்கும் பகுதி(eradication) பின்பு எதிரிகளின் தகவலை சேமிக்கும் பகுதி(database) .இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியமானது , ஒரு கிருமி நமது உடலில் நுழைந்தால் முதலில் அதை கிருமி , எதிரி என்று நமது உடலின் ராணுவம் கண்டு கொள்ள வேணும் , பின்பு அது இதற்க்கு முன் உடலில் நுழைந்து அழிக்க பட்ட எதிரிகளின் தகவல்களோடு இந்த எதிரியை ஒப்பிட்டு பார்க்கும் , அதில் தகவல்களுடன் ஒத்துமை இருந்தால் , அந்த கிருமியை எளிதில் வீழ்த்தலாம் , ஏனெனில் முன்பே இந்த கிருமியை அழிக்க நமது உடல் ராணுவம் ஒரு முறையை கையாண்டு வெற்றிகொண்டுள்ளது .இந்த முறையை தான் நாம் தடுப்பூசி முறையில் பயன் படுத்துகிறோம் .பலவீனப்படுத்த பட்ட நோய் கிருமிகளை உடலில் செலுத்தி அதற்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அந்த நோய் கிருமியின் தகவல்களை நமது உடல் சேமித்து வைத்து விடுகின்றன .மீண்டும் தாக்குதல் தொடங்கும் போது எளிதில் வீழ்த்த முடிகின்றது .இந்த auto immune diseases இல் என்ன நடக்கிறதென்றால் வெளியிலிருந்து வரும் ஒரு சக்தியை கிருமி என்று என்னுவதக்ற்கு பதிலாக நமது உடலிலே உள்ள நமக்கு அன்றாடம் உழைத்து பயன் தரக்கூடிய நம் உடலின் மற்ற அவசியமான திசுக்களை எதிரியாக எண்ணினால் என்ன நடக்கும் ? அது தான் இது . ஒரு உள் நாட்டு போர்.நமது உடலின் ராணுவம் நமது உடலின் திசுக்களையே அழிப்பது.(நமது தமிழ் சமூகத்திற்கும் கூட இந்த நோய் தான் உள்ளது போலும், சொந்த தமிழ் சகோதர்களை அழித்தொழிக்க உதவி கொண்டு இருக்கிறோம் ).இவ்வாறு இன்சுலின் சுரக்கும் திசுக்கள் அழிந்தால் சர்க்கரை நோய் வருகிறது , மூட்டுகளில் உள்ள திசுக்கள் அழிந்தால் முடக்கு வாதம் வருகிறது , தோல் திசுக்கள் அழிந்தால் சொரியாசிஸ் (படல நோய்) வருகிறது .
இவ்வகை நோய்களுக்கு எந்த முறையிலுமே நிரந்தர நூறு சத விகித தீர்வு என்பது கிடையாது , காரணம் நாம் என்ன தான் முயன்றாலும் நமது உடல் ராணுவத்தின் மெமரியில் இந்த திசுக்கள் நமது எதிரி என்று படிந்து விட்டது .இதை நாம் என்ன மருந்து கொடுத்தாலும் மாற்ற முடியாது என்பதே நிதர்சனம் ,

ஒரு வரியில் சொல்வதென்றால் நம் எல்லோர் உள்ளும் ஒரு மருத்துவர் இருக்கிறார் நாம் செய்ய வேண்டியது அவருக்கு துணை நிற்பது மட்டுமே

இன்னும் தெரிந்து கொள்வோம்...

Saturday, October 9, 2010

மனிதகுலத்தின் அழியா யுத்தம்

மனித குலத்தின் மிக நீண்ட போர் , முடிவடையாத ஒரு யுத்தம் நேற்று இன்று நாளை என்று எக்காலமும் தொடரும் ஒரு யுத்தம் ஒன்று உண்டு .
அது அறிவுக்கும் மனதிற்கும் இடையில் நடக்கும் ஒரு போர் .அறிவையும் மனதையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம் ,இருந்தும் முயல்கிறேன் , அனுபவம் , கல்வி சார்ந்து , தர்க்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் முறையை அறிவு எனலாம் , பகுத்தாய்வு முறை எனலாம் .அனுபவம் தன் அனுபவமாகவும் இருக்கலாம் இல்லை கண்ட கேட்ட பிற விஷயங்களாகவும் இருக்கலாம் .

தர்க்கங்களை தகர்த்து , அனுபவம் ,கல்வியை கடந்து ( சில நேரம் முரனாகக்கூட ) உள்ளுணர்வுகளை அடிப்படையாக கொண்டு , அளவில்லாத ஆற்றலை தன்னிடத்தில் கொண்டுள்ள ஒரு அமைப்பு மனம்.
அறிவின் நடைமுறை மற்றும் விதிகள் மனதில் செல்லுபடியாகாது. அறிவு செயலின் விளைவை சார்ந்து சிந்திக்கும் , மனம் செயலின் காரணத்தை சார்ந்து புரிந்துகொள்ளும் .
மனதிற்கும் அறிவுக்குமான இந்த போராட்டம் அன்றாடம் நடக்கும் செயல் , இதை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது இதை போராட்டம் என்று கூறுவது மிகை எனவும் படுகிறது , ஏனெனில் இவை இரண்டும் ஒன்றை சார்ந்து மற்றோன்று எனும் நிலையில் உள்ளது , போராட்டம் என்பதை காட்டிலும் அவைகளின் இயல்பு நிலையே இது தான் , ஒன்றை ஒன்று தங்களின் பலவீனங்களை இன்னொன்றின் பலத்தால் நிரப்புகிறது எனவும் சொல்லலாம் .

மனம் அறிவு இந்த இரண்டில் எது சிறந்தது , உயர்ந்தது எனும் கேள்வி மிக முக்கியமானது பொதுவாகவே நமக்கு எழும் முதல் கேள்வியும் கூட , என்னை பொருத்தமட்டில் சிறந்தது உயர்ந்தது என்று இதை நாம் பிரிக்க முடியாது .அப்படி செய்தால் அது மடத்தனம் கூட .அறிவு சார்பு நிலையில் அதிகம் நிலைத்து இருக்கும் போது உணர்சிகளற்ற மரத்து போன நிலை உருவாகிவிடுகிறது .இன்று நம் அறிவு சமூகம் இன படுகொலைகள் , சமூக அவலங்களை கண்டும் காணாது
இருப்பதே இதற்க்கு சான்று .பிற உயிர்களின் உணர்வுகளையும் , இருப்பையும் நாம் உணரமால் போக வாய்ப்பு உண்டு .உணர்வு சார் நிலை பற்றி நான் என்ன கூறுவது ? இன்று நடக்கும் எல்லா அநியாய உயிரிழப்புகளுக்கும் இது தான் காரணம் , முறை தவறிய உறவுகள் முதல் முதல் காட்சி படம் வரை மனம் சார்ந்த நிலை தான் .
காயமே இது பொய் அடா காற்றடைத்த பையடா என்று சொன்ன இதே தேசத்தில் தான் இறந்த மனிதர்களுக்காக ஒப்பாரி வைக்கும் வழக்கம் உள்ளது .மனிதன் இந்த இரு பெரும் அமைப்புகளை சம நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தசெய்த முயற்சிகள் தான் அனைத்துமே என்று சொன்னால் அது மிகை ஆகாது . சட்டம் , தண்டனை, சமூக அமைப்பு , சமூக கட்டுப்பாடு இவை அனைத்துமே அறிவின் மூலமாக நம் மனதிற்கு கொடுக்க படும் செய்தி .அறிவின் அடக்குமுறைகளை எதிர்த்து அல்லது அதற்க்கு பதிலாக மனம் கொடுத்தது தான் கலை .நம் உணர்வுகளின் மிகை வடிவம் தான் கலை , நடைமுறையில் இல்லாத அல்லது ஒவ்வாத அல்லது நம்மால் வெளிபடுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடாக அறிவு அனுமதித்து , அங்கீகரித்து மனதின் வடிகாலாக வளர்ந்து வந்தது தான் கலை..இதனால் தான் அறிவியல் படைப்புகளை காட்டிலும் கலை படைப்புகள் நம்மை எளிதாக சென்றடைகின்றன , ஆனால் அவை அறிவியல் படைப்புகள் போல் பலன் தருமா என்றால் அது சந்தேகமே , அறிவியல் நமக்கு பயன் தரும் , கலை நமக்கு மகிழ்ச்சி தரும் .
காடு மனித மனம் , நகரம் நமது அறிவு .காடு நமது இயல்பு , நகரம் நாம் உருவாக்கியது.காட்டை அழித்து அழித்து நாம் உருவாக்கியது நகரத்தை , நமது தேவைகளுக்கான ஒரு சொர்கபுரியை .அறிவின் ஆளுமை அதிகமாக அதிகமாக நாம் உணர்வுகளற்று போகின்றோம் , நமது தேவைகளுக்காக அறிவை பயன் படுத்தி எதை வேண்டுமானாலும் அழித்து நமது தேவைக்காக அதை மறு உருவாக்கம் செய்திடலாம் .அறிவு சார்ந்த சமூகத்தில் சுரண்டல் இருக்கிறது சுயநலம் இருக்கிறது .மனிதம் மறித்து விடுகிறது .மனம் சார்ந்த சமூகத்திலோ உணர்வு குவியலாக வழிமுறை தெரியாமால் விழி பிதுங்கி இருக்கிறது .அறிவு பூர்வமாக செயல் பட கூட நம் மனம் தான் காரணம் .மனம் அனுமதித்தால் தான் அதுவும் சாத்தியம் காடும் வேண்டும் நாடும் வேண்டும் , அறிவும் வேண்டும் மனமும் வேண்டும் .

இயற்கையின் விதி அபாரமானது நாம் சமநிலையிலிருந்து வழுவினாலும் அது சமநிலையை நோக்கியே இந்த உலகத்தை அழைத்து செல்லும் , சில நேரம் வலு கட்டாயமாகவும் கூட .உணர்வுகளற்ற சமுதாயத்தை நாம் நமது அறிவின் மூலமாக உருவாக்க முயற்சிக்கிறோம் , நமது மனதின் குரலை நாம் புறக்கணிக்க தொடங்கிவிட்டோம் .இதை தான் பண்டைய புராண கதைகளில் தேவ அசுர யுத்தம் என்று உருவக படுத்தி இருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு .காடு தன்னகத்தில் பல நகரங்களை கொண்டுள்ளது , மனம் தன்னகத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத சாத்திய கூறுகளால் நிரம்பி வழிகிறது .
அறிவு -மனதின் முரணியக்கம் அபாரமானது, மிக நுட்பமானதும் கூட இதை எல்லாம் நாம் உணரும் தருணம் இது. நம்மை நாமே சற்று உற்று நோக்கினால் போதும் நாம் விழிப்படைந்துவிடுவோம் .
சரி போதும்ன்னு நெனைக்கிறேன் :) பதிவுலகத்துல இருந்துட்டு எந்திரன் பத்தி எதுவுமே எழுதலேன்னா எப்படி ?
என்னை பொறுத்த மட்டில் என்னை ஏமாற்றாமல் படம் எனக்கு மன பூர்வமா / உணர்வு பூர்வமா நிறைவை, மகிழ்ச்சியை கொடுத்துருச்சு :)

Tuesday, October 5, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 5 ஆயுர்வேதம் FAQ

1. ஆயுர்வேதம் என்பது கேரளத்தை சேர்ந்த மருத்துவமா ?

ஆயுர்வேதம் இன்று அதிகம் புழக்கத்தில் உள்ள மாநிலம் கேரளம் .மேலும் சுற்றுலா துரையின் அபார வளர்ச்சியின் காரணமாக கேரளத்தில் இதற்க்கு பெரும் வரவேற்ப்பு உள்ளது .அங்கு மக்களுக்கு இயல்பாகவே பல ஆயுர்வேத சிகிச்சை முறைகள் , மருந்துகள் பரிச்சயம் .எண்ணெய் குளியல் பிழிசில் போன்ற சிகிச்சை முறைகள் அங்கு பிரபலம் .இன்றும் பல வைத்திய பரம்பரைகள் ஆயுர்வேதத்தின் சாரத்தை மாற்றாமல் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர் .இவை எல்லாம் கூறினாலும் , ஆயுர்வேதம் கேரளா மருத்துவம் என்று கூற இயலாது , இமயம் முதல் குமரி வரை எல்லா இடத்திலும் இது புழக்கத்தில் உள்ளது , வரலாற்று ரீதியாகவும் அதுவே உண்மை , ஆகவே இது இந்திய மருத்துவ முறை என்பதே சரி .

2. ஆயுர்வேதத்தில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டா ?

இன்றைய விளம்பர உலகத்தில் எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் தங்களது தனிப்பட்ட லாபத்துக்காக இவ்வாறு சில போலி மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை சித்தரிக்கிறார்கள் .இது உண்மை இல்லை .ஆயுர்வேதத்தால் சில நோய்களை குணப்படுத்த முடியாது என்பதை ஆயுர்வேத மூல புத்தகங்களே அறிவிக்கிறது . எய்ட்ஸ் , புற்று நோய் இவைகளுக்கெல்லாம் இன்னும் முழுமையாக மருத்துவங்கள் எந்த முறையிலும் இல்லை .

3.ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்க விளைவு கிடையாது என்கிறார்களே ?

இது முழு உண்மை இல்லை .சில நேரங்களில் சிலருக்கு தேவை இல்லாத விளைவுகள் ஏற்படுவது உண்டு .ஒரே நோய்க்கு பல மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது , ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உடல் ,நோயின் தன்மைக்கேற்ப மருந்து வழங்கினால் எந்த பிரச்சனயும் இராது , மாறாக முறையாக தயாரித்த மருந்தை சரியான நோயாளிக்கு கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் விளைவுகள் இருக்கும் .ஆனால் அவை தற்காலிகமே , மருந்தை நிறுத்தினால் போதும் .மேலும் சில மருந்துகளில் உலோகங்கள் , தாது பொருட்கள் மூலமாக கொண்டு செய்யப்படுகின்றன , அதை உட்கொள்ளும் போது சற்று கவனம் தேவை .

4. ஆயுர்வேதத்திற்கு பட்ட படிப்பு உள்ளதா ? அல்லது எல்லாம் வெறும் அனுபவ ஞானம் தானா ?

நவீன மருத்துவம் போலவே ஆயுர்வேதம் , சித்த மருத்துவங்களுக்கு பட்ட படிப்பு , பட்ட மேற் படிப்பு , பட்டய படிப்பு எல்லாம் உண்டு .நவீன மருத்துவம் போலவே இதற்கும் 41/2+1 ,நாலரை வருட கல்லூரி படிப்பு மற்றும் ஒரு வருட பயிற்சி உண்டு .இதற்க்கு என்று தனி மருத்துவ கவுன்சில் உண்டு . மத்திய அரசாங்கத்தின் கீழ ஒரு துறை உண்டு , பதிவு பெற வேண்டும் .தமிழ்நாட்டில் இந்த படிப்புகள் டாக்டர் எம். ஜி .ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கீழ அங்கீகரிக்கப்பட்டுள்ளது .தமிழக அரசு சென்ற ஆண்டு முதல் அரசு ஆயுர்வேத கல்லூரியை நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது .அதை தவிர சென்னையில் நான்கு தனியார் கல்லூரி உள்ளது .

5. எந்த நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் நல்ல பலன் கிடைக்கும் ?

அறுவை சிகிச்சை அவசிய படும் நோய்களை தவிர அனைத்து நோய்களுக்குமே ஓரளவு ஆயுர்வேதம் பயன்படும் .
சில நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு துணையாக செயல்படும் .( சர்க்கரை , ரத்த அழுத்தம் ).
நெரம்பு மண்டல நோய்கள் , மூட்டு நோய்கள் , தோல் நோய்கள் , குழந்தை பேரு , சில மன நோய்கள், ஜீரண உறுப்பு கோளாறுகள் ( வயிற்று புண் , மூலம் ) இது போன்ற நோய்களில் நல்ல பலன் கிடைக்கும்