வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று சில உள்ளன .அந்த நாட்களை உருவாக்கியது நம் அனுபவங்கள் தான்.அதிகம் நம் மனதில் நிலைப்பது எதிர்மறை அனுபவம் என்றால் மிகை ஆகாது .மகிழ்ச்சியை விட நம் மனம் துக்கத்தை எளிதில் பங்கு கொள்கிறது .சில நேரம் நம் மனம் துக்கத்திற்கு ஏங்குகிறதோ எனும் சந்தேகம் கூட எனக்கு உண்டு .
ஒரு பெரும் வலி அதனை தொடர்ந்து ஒரு வெறுமை அதனை தொடர்ந்து ஒரு எழுச்சி தொடர்ந்து ஒரு வெறுமை ,பின் ஒரு வீழ்ச்சி .இது தான் நமது வாழ்க்கை இதே சக்கரத்தில் நாம் சோதனை எலிகள் போல் சுழன்று ,உழன்று ஓடி கொண்டு இருக்கிறோம் .இது அயர்ச்சியை தரலாம் ஆனால் அனுபவங்களில் ஒரே சாயல் இருந்தாலும் அவை நமக்கு கொடுக்கும் செய்திகள் வெவ்வேறானவை .அதை சரியாக உள்வாங்குவது நமது திறமை .நாம் அனுபவத்தின் பாடத்தை கற்றோமா ? என்று வாழ்க்கை மீண்டும் மீண்டும் நம்மை பரிட்சித்து பார்க்கும். மீண்டும் மீண்டும் நாம் தோல்வி அடைந்தாள் நாம் இன்னும் சரியாக பாடம் படிக்கவில்லை என்று பொருள் .
விபத்துகள் ஏன் நேருகிறது ? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை .அது ஒழுங்கற்ற ஒரு அவதி என்று எண்ணலாம் .விபத்தின் ஒழுங்கே அது எப்பொழுதும் ஒழுங்கற்றது என்பதில் தான்.வெகு சாதரணமாக ஓடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறிய விபத்து சீண்டினால் கூட போதும் வாழ்க்கையின் பார்வை ,ஒரு குடும்பத்தின் பொருளாதாரம், நாம் வாழ்க்கையை பார்க்கின்ற தளம் என்று எல்லாமே கேள்விக்குறி ஆகி , நாம் எந்த தளத்தின் மீது நமது கால்களை நம்பிக்கையுடன் ஊன்றி நிற்கிறோமோ அந்த தளத்தின் அடித்தளத்தையே பிளக்கும் வல்லமை உண்டு .
வாழ்க்கையின் பெரும் கனவுகள் , பெரும் திட்டங்கள் எல்லாம் தூக்கி எரிந்து நசுக்க பட ஒரு நொடி போதும் .
விபத்து நமக்கு கற்று கொடுக்கும் முக்கியமான பாடம் வாழ்கையின் நிச்சயமற்ற தன்மை .வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை உணர்வதால் என்ன பலன் ? இதை இரு கோணங்களில் நாம் பார்க்கலாம் , ஒன்று வாழ்க்கையை முழுவதும் வாழ துணிவது ,ஏற்றுக்கொள்வது ,அதன் பிடியில் நம்மை ஒப்படைத்து ,நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புவது .விளைவுகளை எண்ணாமல் , செயல்களை நேர்மையும் ஈடுபாடுடனும் ,செயல்களை செய்வதால் ஏற்ப்படும் இன்பத்திற்காக செய்வது.இருத்தல் என்பது கடந்து வாழ்தல் எனும் தளத்திற்கு நாம் பயணிப்பது முக்கியம் .உயிர் வாழும் ஆசை அல்லது தற்காத்து கொள்ளும் உந்து சக்தி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் ஒரு அம்சம் , ஆனால் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு வினோத குணம் மனிதனுக்கு உண்டு ,அது தற்கொலை .உயிர் வாழும் இச்சையை இழக்கும் ஒரே ஜீவ ராசி நாம் தான் என்று எண்ணுகிறேன் .
அன்றாடம் நாம் எத்தனையோ விபத்துகளை பற்றி படிக்கிறோம் , செவி மடுக்கிறோம் ,காண்கிறோம் ஆனால் அவை நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை .அதிகம் சென்றால் அரை நாள் நம் மனங்களை அது ஆக்கிரமிக்கலாம் .எங்கோ நடக்கிறது , அது நமக்கு செய்தி .இது தவறான எண்ணமா என்றால் நிச்சயம் இல்லை ,இப்படி ஒவ்வொரு நாளும் இவ்வுலகை விட்டு நீங்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்காக வருந்தி கொண்டே இருந்தால் நாம் நம் வாழ்க்கையை இழந்து நிற்போம்.
வாழ்க்கை நிச்சயமற்றது என்று உணருவதினால் எதிர்மறை எண்ணங்களும் உருவாக வாய்ப்பு உண்டு .பயம் ,அவ நம்பிக்கை ,பதட்டம் , நம் கனவுகள் இலட்சியங்கள் பறிக்க பட்டு விடும் எனும் கவலை .இது நம்மை இயற்கயின் திட்டத்திலிருந்து புறம் தள்ளுகிறது , நாம் மரிக்க விரும்பவில்லை , நாம் இயற்க்கைக்கு எதிராக சதிராடுகிறோம் , நமது பயம் நம்மை வழி நடத்துகிறது ,நம் இருப்பை ஆழ படுத்துகிறோம் நாம் அமரன் என்று எண்ணுகிறோம் ,நம்மை மரணத்திளிருந்து தப்புவிக்க நாம் பொருள் சேர்கிறோம் அதுவும் நமது தேவைக்கு மேல் .அது நம்மை காக்கும் என்று நம்புகிறோம் .ஆனால் எல்லாம் பொய் என்று உணர்ந்தவுடனும் நமது சுவடுகளை பதிக்க முயல்கிறோம் , நமது அடையாளங்களை இவ்வுலகத்திற்கு விட்டு செல்ல முயல்கிறோம் .மரணம் நம் மூக்கில் நுழைந்து நுரையீரலை அமுக்கி பிடித்து இதயத்தை கசக்கும் வரை நாம் மரணத்தை ஏமாற்றவே முயல்கிறோம்.கடவுளின் காலடிகளை பற்றி பதறுகிறோம் ,ஆனாலும் கருணை இல்லை .மரணம் உணர்வுகள் அற்ற சிலை மனிதன் ,அவனுக்கு நம் கனவுகள்,உறவுகள் நட்புகள்,முடிக்காத கடமைகள் எதை பற்றியும் கவலை இல்லை .இப்படி ஒரு ஊழியனை ஒவ்வொரு முதலாளியும் பெற ஏங்குவான் .
நாம் நிஜத்தில் தினமும் மரணத்தின் வாசல் வரை சென்று வருகிறோம் , இல்லை அது கூட தவறு தான் நாம் எங்கு வசிக்கிரோமோ அங்கெல்லாம் மரணத்தின் மூடிய கதவுகள் உள்ளது நாம் அதை முட்டி மோதிக்கொண்டு தான் இருக்கிறோம்.நாம் நினைக்கும் நேரத்தில் அது திறப்பதில்லை .இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவனுமே தன்னுடன் ஒரு மரணத்தின் வாசலை தூக்கி கொண்டு தான் திரிகிறோம் , என்றேனும் அந்த வாசல் திறக்க கூடும் , அதை நாம் தீர்மானிப்பது இல்லை .
தொடரலாம்- (எப்போது மீண்டும் இதை எழுத தோன்றுகிறதோ அப்பொழுது )
மிரட்டலான பதிவு! சான்சே இல்லை..... நல்லா எழுதி இருக்கீங்க.....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா மேடம் :)
ReplyDeleteMaranam ennum pudhir vidai theriyamal irupadhudhan adhan gambeeram! Adharkum vidai therindhal vazhkai rasikaadhu!!
ReplyDelete'HAPPY DIWALI'
UNGA AMMAKITAUM VAZHTHU SOLLIDUNGA DOCTOR
நல்லாயிருக்குங்க..!!
ReplyDeleteடாக்டர்,
ReplyDeleteநலம்தானே.
செறிவான நடையில் ஆழமாக எழுதியிருக்கிறீர்கள்.படிக்கும்போது இதயம் கனப்பதே எழுத்தின் வெற்றி.
//சில நேரம் நம் மனம் துக்கத்திற்கு ஏங்குகிறதோ எனும் சந்தேகம் கூட எனக்கு உண்டு//
ஆம்...மிகப் பெரும் காவியங்கள் துக்கத்தின் நமைச்சலில் ,சோகத்தின் முனகலில் உருவாகியிருப்பவைதான்.அப்படிச் செய்து செய்து மனிதன் சோகத்திலேயே சுகம் காணப்பழகி விட்டான்.அதுவும் கூட சரியில்லாததும்,முற்றும் எதிர்மறையானதும்தானே.
வருகைக்கு நன்றி திருமதி கிருஷ்ணன் :)
ReplyDeleteதீபாவளி நல்லா கொண்டாடி இருப்பீங்க :)
நன்றி பிரவீன் :
அம்மா ,நலம் :)
ReplyDeleteநிச்சயமாக நமது இயல்பு துக்கம் இல்லை .அது நமது இயல்பிற்கும் எதிரானது தான் :)