Sunday, September 26, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -4

ஆயுர்வேதம் வழங்கிய அறுவை சிகிச்சை முறைகளை பற்றி சென்ற பதிவில் கண்டோம் .இனி வரும் பதிவுகளில் ஆயுர்வேதத்தின் அடிப்படை அறிந்து கொள்வோம் . இதில் நாம் இறங்கும் முன் சில விஷயங்களை தெளிவுப்படுத்த ஆசைப்படுகிறேன்.பண்டைய மருத்துவ முறைகள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுத்தன்மை இருக்கும் அது சமநிலை கோட்பாடு .நம் உடலில் , உள்ளத்தில் , உணர்வில் சம நிலையில் இருப்பது ஆரோக்கியம் என்று கூறப்படுகிறது .சீன மருத்துவ முறைகளில் கூட யின் யங் என்றும் நான்கு அடிப்படை பரு பொருட்கள் என்றும் அதன் சமநிலை கூறித்து பேசுகிறது .முன் கூறியபடி கிரேக்க மருத்துவமும் சம நிலை கோட்பாடை நம்பியது .
மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக கருதியது , இன்று போல் மனிதன் உலகத்தின் மையம் எனும் கருத்து அப்பொழுது இல்லை .இயற்கையின் மாற்றங்கள் மனிதனை எவ்வாறு மாற்றும் அதை எவ்வாறு எதிர்க்கொள்வது என்பது பண்டைய மருத்துவங்களின் முக்கிய விஷயமாக அலசப்படுகிறது .
சரக சம்ஹிதை முழுவதும் ஒரு உரையாடல் தான் . அக்னிவேஷர் தனது குருவிடம் ஆயுர்வேதம் குறித்து எழுப்பும் கேள்விகள் அதற்க்கு அவர் அளிக்கும் விடை ,இது தான் அந்த படைப்பே .இதில் சிஷ்யருக்கும் குருவுக்கும் கருத்து வேறுபாடு உண்டு , உடன்படுதல் உண்டு ஏன் புறக்கணித்தல் கூட உண்டு .சில விஷயங்களை குரு ஆத்ரேயர் கூறும் பொழுது அதை மறுத்தலித்து இதை நான் எப்படி நம்புவது என்று கூட அக்னிவேஷர் வினா எழுப்பி உள்ளார் .ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் மொத்த கருத்துகளை மூன்றாக பிரிக்கலாம் நம் வசதிக்காக
1.எக்காலத்திற்கும் பொருந்தும் அடிப்படைகள்
தத்துவ சித்தாந்தங்கள் , முக்குற்ற அடிப்படை , பஞ்ச பூத கொள்கை , நோயின் அடிப்படைகள் ,சிகிச்சையின் அடிப்படைகள் இவை எல்லாம் அடங்கும் .
2. அக்காலத்திய வழிமுறைகள்
சில சிகிச்சை முறைகள் , சில எண்ணங்கள் வாசிக்கும் போது நமக்கு இன்றைய அறிவுக்கு தர்க்கத்திற்கு ஏற்பவையாக இருக்காது அதை அக்காலத்தின் மன ஓட்டம் கொண்டு நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் .
3.இப்பொழுதிற்கு புரிந்து கொள்ள முடியாத செயல் முறைகள் , அல்லது திரிபு , நடைமுறை சாத்தியங்களின் உள்ள குறைபாடு .சற்று ஆய்வு செய்தால் இவை நமக்கு நல்ல பலன் அளிக்க கூடியவை .
அதே போல் ஆயுர்வேதம் என்றுமே ஒற்றை படை சிந்தனையை கொண்டது அல்ல.ஒரு அத்தியாயத்தில் மது வகைகளின் தீய குணங்களை பற்றி இடித்து கூறும் , மற்றொரு இடத்தில் மது வகைகள் தயாரித்தல் , அதை உட்கொள்ளுவதர்கான விதிமுறைகளை கூறும் .அதே போல் ஆயுர்வேதத்தின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளதால் மாற்று சிந்தனைகளையும் , முறைகளையும் உள்வாங்கி வளரும் தகுதி அதற்க்கு உண்டு .
இந்திய மருத்துவமா இல்லை ஆங்கில மருத்துவமா எது சிறந்தது என்று மிக முக்கியமான கேள்வி ஒன்று உண்டு .என்னை பொறுத்த வரை இந்த போட்டியே அர்த்தமற்றது , ஒரு தாய்க்கு மூத்தமகன் மேல் பாசம் அதிகமா இல்லை இளைய மகன் மேல் பாசம் அதிகமா என்று வரையறுப்பது எவ்வளவு மூடத்தனமோ அதே போல் தான் இதுவும் .இன்றைய நவீன மருத்துவம் என்பது பண்டைய சிந்தனையை கொண்டு அதை பரிசீலித்தோ இல்லை நிராகரித்தோ வளர்ந்த முறை , அது இன்னும் வளர்ச்சி காணும் ஒரு துறை . நான் நவீன மருத்துவத்தை பண்டைய மருத்துவ பண்பாட்டின் நீட்சியாகவே காண்கிறேன் .மனிதன் நோய்களுக்கு எதிரான போராட்டத்தை அவன் இந்த மண்ணில் ஜனித்த முதல் தொடங்கிவிட்டான் .உலகில் எந்த ஒரு மருத்துவ முறையுமே முழுமை கிடையாது , அதற்கென்று சில எல்லைகள் உள்ளது .தன மருத்துவத்தை புகழ நமக்கு அடிப்படை புரிதலே இல்லாத இன்னொரு மருத்துவமுறையை சாடும் இந்த இரு கோடுகள் பழக்கம் அபாயமானது .நவீன மருத்துவத்தை இந்திய மருத்துவ நம்பிக்கை உள்ளவர்களோ , இல்லை நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தையோ புறம் தள்ள முடியாது .

இதை எல்லாம் நாம் மனதில் நிலை நிறுத்தி கொண்டு சற்று அகலமான பார்வையுடன் ஆயுர்வேதத்தை பற்றி மேலும்
அறிவோம் .

1 comment:

  1. well said ,

    ulagil nagareegathin munnodi indian na ok solluvanga aana
    maruthuvathil sonna illambanga.
    but my opinion is latest medicine nin munodi ayurvedham

    ReplyDelete