Friday, September 3, 2010

எனக்கு தெரிந்த கடவுள்!!-1


கடவுளும் குழந்தையும் ஒன்று என்று சொல்லுவர் . சில இழப்புகளை சந்திக்கும் போதோ ,விரக்தியின் உச்சத்தில் உழலும் போதோ கடவுளின் இருப்பை பற்றி நமக்குள் ஒரு கோபக்கனல் கேள்வி எழுப்பும் .
நான் பயின்ற ஆயுர்வேத மருத்துவத்தின் துணையால் நான் என் வாழ்வில் சிலரை சந்திக்க நேர்ந்தது .இன்று வரை எனக்கு அவர்கள் அளித்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் பல .அதை இன்று நினைத்தாலும் என் மனம் கனத்து விடும் .அப்படி என் வாழ்வில் நோயாளிகளாக உள்நுழைந்து என் வாழ்கை பார்வையை மாற்றிய சில ஜீவன்களை பற்றி இந்த பதிவு ...

ஜனார்தனன்
நான் கல்லூரியில் பயின்று கொண்டு இருந்த சமயம் எனது பேராசிரியருடன் சென்று அவரது கிளினிக் அமரும் பழக்கம் உண்டு எனக்கு .சில சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டும் , மேற்பார்வை செய்து கொண்டும் இருந்த காலம் அது .ஒரு நாள் நானும் என் நண்பனும் பேராசியர் அவர்களின் அழைப்பின் பேரில் அவருடன் இனைந்து ஊரப்பாக்கம் சென்றோம் .அங்கே கவலைக்கிடமான நிலையில் தன் மகன் உள்ளதாகவும் , பல வருடங்களாக நினைவு தப்பி படுத்த படுக்கையாக இருப்பதாகவும், கோமா நிலையிலிருந்து மீள வழி இல்லை என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிவிட்ட படியால் தான் ஆயுர்வேத முறையை நம்பி இங்கு வந்ததாகவும் அவரது தந்தை சொன்னார். தந்தையின் அழைப்பின் பேரில் நாங்கள் அங்கு சென்றோம் , ஊரப்பாக்கம் ரயில்வே கேட் தாண்டி சிறு மண் ரோடு கடந்து அவர் வீடு இருந்தது .இங்கே என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும் என்று தெரியாமல் நாங்கள் சென்றோம் , 2 அறைகள் உள்ள சராசரி மத்திய வர்க்க வீடு தான் அவர்களின் வீடு .ஒரு அம்மா வந்து எங்களுக்கு ஹோர்லிக்ஸ் போட்டு கொடுத்தார் .உள்ளே சென்று பார்க்கலாம் என்று அழைத்து போனார் .ஒரு சிறிய அறை, மத்தியில் ஒரு ஆஸ்பத்திரி கட்டில் சாய்ந்து படுத்து இருந்த அந்த உருவத்தை கண்டு திடுக்கிட்டு தான் போனோம் .

உடம்பே ஒடுங்கி உருகி வெறும் எலும்பின் மேல் தோல் போர்த்திய போல் ஒரு மனிதர் , தலையில் ஒரு பக்கம் மண்டை ஓடே இல்லை வெறும் பள்ளம் , அதன் மேல் ஒட்டவைத்தது போல் தோல் , கண்கள் இரண்டும் இடுங்கி உள்வயமாக ஆழ்ந்து இருக்கும் ஒரு ஞானியை போல் ,மூக்கில் ஒரு ரப்பர் குழாய்,மொட்டை அடித்து மூன்று நாள் ஆன மாறி இருக்கும் முடி தலையில் ,பக்கவாட்டில் தொங்கும் மூத்திர பை .அவரது அப்பா பக்கம் சென்று அழைத்தார் " ஜனா , ஜனா "..உஹும் அசைவு ஏதும் இல்லை , "ஜனா ,அப்பா வந்துருக்கேன் டா, டாக்டர் வந்துருக்காரு பாரு " இம்முறை வலது கை அனிச்சையாக நகர்ந்து அருகில் இருந்த என் மேல் பட்டது , நான் பயந்து இரண்டடி பின்வாங்கினேன் ."ஒன்னும் இல்லைங்க பழக்க படாத ஆளுன இப்படி தான் கொவ படுவான் , ஜனா அவரு டாக்டர் உன்ன குண படுத்த வந்துருக்காரு
, இனிமே அவரு தான் உன்ன பாத்துக்குவாரு" கை மீண்டும் பழைய இடத்துக்கு சென்றது . "பாத்தீங்களா இப்ப அமைதி ஆகிட்டான் " , எங்களுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை
.இவருக்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை . இந்த நிலையில் உள்ள ஜீவனுக்கு ஏன் இவளவு மெனக்கெடல்
என்று எனக்குள்ளே
ஒரு வினா எழுந்தது , இவரை வாழவைத்து என்ன நடக்க போகிறது என்று எதிர்மறை சிந்தனை நிரம்பி வழிந்தது .
ஜனா என்கிற ஜனார்தனன் , உலகத்தை ரட்சிக்கும் கடவுளின் பெயர் .இன்று அந்த ஜனார்தனன் பலருடைய
இரட்சிப்பில் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார் .என்னால் அங்கு இருக்க முடியவில்லை ,நான் அந்த அறையிலிருந்து வெளியேறினேன் , எனது பேராசிரியர் தொடர்ந்து பரிட்சித்து கொண்டிருந்தார் அவரை .நான் அவசரமாக ஒரு போன் வருகிறது என்று கூறி செல் எடுத்து காதில் வைத்து கொண்டு அப்படியே அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் , நான் உள்ளே போகவே இல்லை .பத்து பதினைந்து நிமிஷம் கழிந்தது ஆசிரியரும் நண்பனும் அவரது தந்தையிடம் ஏதோ பேசிக்கொண்டே
வெளியே வந்தார்கள் .நான் முகத்தை திருப்பி கொண்டு செல்லில் பேசுவது போல் நின்று இருந்தேன் .அவரது அப்பா வாயில் வரை வந்து அவர்களை வழியனுப்பினார். நான் அவரின் கண்களை பார்ப்பதை தவிர்த்தேன் அவர் என்னை பார்த்தார் "தம்பி , ஏதோ அவசர செய்தி போல , பாத்து பதட்ட படாம போயிட்டு வாங்க என்றார் ", நான் தலை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று புறப்பட்டு விட்டேன் .. ஜனாவை நான் ஏன் வாழ்க்கையில் மீண்டும் பார்கவே கூடாது என்று எண்ணி கிளம்பினேன் ..ஆனால் ....(அடுத்த பகுதியில்)

2 comments:

  1. நண்பா, இதன் மறுபாகத்தை விரைந்து பதிப்பாய் என ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன்....
    - முத்து

    ReplyDelete
  2. உங்கள் தளத்திற்கு இன்றுதான் வருகிறேன். இதன் அடுத்த பாகம் எங்கே இருக்கிறது? ஜனார்த்தனன் குணமாகி, பெற்றோரை மகிழ்வுறுத்தினாரா என்று தெரிந்துகொள்ள ஆர்வம்.

    ReplyDelete