அன்பு மணிக்கு ,
இன்று நினைத்தாலும் மனம் வலிக்கும் , மறக்க முடியாத அந்த நாள் . ஒரு பெரிய முட்டாள் தனத்தின் பிடியில் சிக்கி கோபம் , ஏமாற்றம் ,பச்சாதாபம் , கண்ணீர் என்று பல்வேறு உணர்வுகள் சுழற்றி அடித்த நாள் .நண்பனின் நினைவு நாள் .
மணி , பதின்மூன்று வருடம் பள்ளி தோழர்கள் நாம்
.அந்த ஒளி நிறைந்த கண்கள் , இன்னும் எங்களை கண்டு கொண்டே இருக்கிறது .விவரம் புரியாத எட்டு வயதில் ,இழப்பை உணர முடியாத எனக்கு என் தந்தையின் இழப்பு ,அதற்க்கு ஆறுதல் சொன்ன உனது
அந்த பக்குவம் எங்கே ? பள்ளியின் பக்கத்து தெருவில் இருக்கும் உன்
வீட்டில் நாங்கள் கழித்த காலம் எத்தனை? மதியம் உண்டு , உனது
தொலைகாட்சியில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் கண்டது , முதல் நாள் தலைவரின் படத்தை காண நாம் எல்லாம் முயன்றது எத்தனை முறை ? கடைசியில் உனக்கு துணைக்கு வந்தது கூட பாபா பாட்டு தானே .சுப்புவையும் , கோவிந்தனையும் , சாஸ்தனயும், வெங்கட்டையும் நீ ஓட்டி அள்ளிய நாட்கள் எத்தனை ? விளையாடிய கிரிக்கெட் போட்டிகளில் அழுகுணி ஆட்டம் ஆடியது எத்தனை ?"அதெல்லாம் நான் சிங்கபூர் போய்டுவேன் டா " என்று நீ சொன்னது எத்தனை முறை? இப்பொழுது எங்கே இருகிறாய் ? .இதையெல்லாம் எழுத வேண்டாம் என்று நான் இத்தனை நாள் எழுதவில்லை இருந்தும் எனது உணர்வெழுச்சியில் இதையெல்லாம் தவிர்க்க முடியவில்லை .நீ மட்டும் அந்த தற்கொலை முயற்சியில் தோற்றிருந்தால் நாங்களே
உன்னை கொன்றிருப்போம் அந்த அளவுக்கு உன் முட்டாள் தனத்தின் மேல் கோபம் .நீ யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்தது இல்லை , சிவா உடன் , ஸ்ரீ ராம் உடன் உனது சிறிய ஊடல்கள் மட்டும் தான் நினைவில் உள்ளது . நீ யாரையும் காதலித்து ஏமாறவோ , ஏமாற்ற்றவோ இல்லை , நீ சித காரியத்தின் விளைவை நீ அறிவாயா ? இன்றும் அம்மா உனை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள் , உங்கள் ஒரு மகன் போனால் என்ன நாங்கள் பல மகன்கள் உங்களுக்கு உள்ளோம் இது மட்டுமே எங்களால் அம்மாவிடம் சொல்ல முடியும் .அப்பா அவரது உணர்வுகளை வெளிக்காட்டவில்லை ,மென்று முழுங்கி அவர் படும் அவஸ்தை நீ அறிவாயா ?
உனக்கு மனதில் தைரியம் அதிகம் அதான் உன்னால் உன்னை முடித்து கொள்ள முடிந்தது ,அதுவும் ஊஞ்சல் கம்பியை கொண்டு .நல்ல வேலை நாங்கள் யாரும் உனது முகத்தை கடைசியில் பார்க்கவில்லை
உன் பெயரை சொல்லி இன்று நாங்கள் சேர்ந்துள்ளோம் , எங்களுக்கு அம்மா , அக்கா என்று புதிய உறவுகள் .மணிகண்டன் நினைவு அறக்கட்டளை, மனம் வலிக்கிறது மணி, உன் வாழ்வின் பயனே எங்களின் எழுச்சி தானோ ? .கனவுகள் பெரியது , தூக்கம் தொலைந்து விட்ட பின் கனவுகளை எங்கே தேடுவது .செப்டம்பர் 30 , இன்று உன் பெயரில் இலவச மருத்துவ முகாம் .அரூபமாய் இருக்கும் நண்பா , நீ மகிழ்ச்சியுடன் இருப்பாய் , நீ எங்களை காண்கிறாய் .அம்மா எங்கள் எல்லோர் மூலமாகவும் உன்னை தான் காண்கிறாள் .நீ எழுதினாயே ஒரு கடிதம் , உன் நண்பர்களுக்கு என்று , அடடா என்ன உபதேசங்கள் , வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டு வாழ்கையை வாழ உபதேசமா ?
பிறப்பு இறப்பு என்று தத்துவம் பேசினாலும் இழப்பின் வலி வாட்டுகிறது.
ஒன்றும் இல்லை இதற்க்கு மேல் உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை
எங்கோ நீ நலமுடன் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
உனது நண்பர்கள்