Thursday, April 17, 2025

அம்புப் படுக்கை - சரத்குமார் வாசிப்பு

எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ வெளியாகி ஏறத்தாழ ஏழாண்டுகள் கடந்துவிட்டன. அவற்றுக்கு இப்போதும் வாசிப்பு கடிதங்கள் வருவது ஒருபக்கம் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதற்கு பிந்தைய தொகுப்பிற்கு நாவலுக்கும் அதே அளவு கவனம் கிடைக்கவில்லை என்பது எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். சரத்குமார் அனுப்பிய வாசக குறிப்பை வாசித்தபோது நிறைவாக உணர்ந்தேன். நன்றி.   


நான் சமீபத்தில் படித்த மிக திருப்தியளித்த தொகுப்பு இது. தத்துவமும், யோகமும், அறியிவியலும் தொன்மங்களையும் கொண்டு தனது அனுபவங்களையும் தேடல்களையும் கேள்வியாகவும் கதைகளாகவும் மாற்றியிருக்கிறார். மொழியின் கூர்மையும் தேர்ந்திருக்கும் வடிவமும் கதையை இன்னும் ஆழமாக மாற்றியிருக்கிறது. என்னுடைய வாசிப்பில் இத்தகைய ஆழம் கொண்ட சிறுகதைகள் மிக மிக அரிதானவை. மிக முக்கியமான புத்தகத்தின் வழியே தன் வருகையை வலுவாக அறிவித்திருக்கிறார் சுனில். அபாரமான மொழி ஆளுமை வெளிப்படுகிறது, அவரது விவரணைகள் மிக கூரியவையாக வாசிப்பவருக்கு உணர்வுகளை ஆழமாக கடத்தி விடுகிறது.


வாசுதேவனின் கதையில் அவரது உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலை மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் படி நெருக்கமாக அமைந்திருந்தது. அவருக்கு வைத்தியம் செய்ய செல்லும் சித்த மருத்துவம் படிக்கும் இளைஞனின் எண்ணங்கள், நோயாளியின் பெயர் குறித்து மரபில் இருக்கும் சித்திரத்துடன் முரண் கொள்கிறது. எப்பொதைக்குமான வாழ்வின் பொருள் குறித்த கேள்வியாக அவனுள் மாறிவிடுகிறது. இறுதியில் வாசுதேவனின் மரணத்தையும் அவனது அக்கா குழந்தையின் உயிர் துடிப்பினையும் அருகருகில் வைத்துக் காண்பது மரபிலிருக்கும் வாசுதேவ உருவகத்தின் பொருளான பிரபஞ்ச லீலையினை நேரில் காண்பது போல் அமைந்திருக்கிறது. விடையில்லா அந்த மரணத்தினை இப்போது அவனால் ஏற்றுக் கொண்டிருக்க முடியும் என்று தோன்றுகிறது.


காளிங்க நர்த்தனம் சிறுகதை, புராணத்தை யோக முறையில் மாற்றி கையாளுகிறது. மாணிக்கத்தினது அரைகுறை யோக பயிற்சியால் தோன்றும் சைக்கிளின் பின் அமர்ந்திருக்கும் பெண் உருவம் அவனை கடிக்க வருவதையும், முறுக்கு சாமியின் புராண தலைகீழ் ஆக்கத்தையும் அவர்களது பயிற்சியின் விளைவாக எழும் காமம் விஷமாக மாறி வெளிப்படுவது போல் தோன்றுகிறது. அதனை அடக்குதலை பாம்பின் தலையில் ஏறி நடனமிடும் கிருஷ்ணனில் முறுக்குசாமி காண்கிறார்.  மாணிக்கத்தின் கனவில் வரும் பாம்பின் தலை வரை ஏறி சறுக்கும் காந்தியையும் ஏற முயற்சித்து தோற்கும் பிற மனிதர்கள் யாவரையும் அந்த யோக பாதையின் வழிகளில் இருப்பவர்களாக காண முடிகிறது. கிருஷ்ணனை பார்த்து தானும் சின்ன வயசிலேயே ஏறி இருக்கணும் என்று சொல்வது, வயதானவர்களை பாம்பின் அல்லது குண்டலினியின் தலை மேல் ஏறுவதில் இருந்து தடுப்பது எது என சிந்திக்க தூண்டுகிறது. சாபம் அடையும் குடும்ப பின் கதை எந்த வகையில் இந்த கதைக்கு வலு சேர்க்கிறது என்பது தெரியவில்லை. குண்டலினியிலிருந்து எழும் காமம் எவ்வாறு அத்தனை மனிதர்களையும் சுழித்து இன்மையில் கரைக்கிறது என்பதாக புரிந்து கொண்டேன்.


 


குருதி சோறு இந்த தொகுப்பின் மிக முக்கியமான கதை. இதன் முக்கியத்துவத்திற்கு காரணம் இது எழுதப்பட்ட வடிவம் தான் என்று தோன்றுகிறது. காளி கோயிலில் நடக்கும் வருட திருவிழாவில் அனைவரது வீட்டிலிருந்து அரிசி கொண்டு வருவதும், மருளாலியின் ஆடலும், பலியும் சடங்குகளும் நடைபெறுகிறது. சுடலையால் அந்த ஆட்டத்தில் இரண்டற கலக்க முடிவதும் அதே நேரத்தில் சபரியால் கலந்து கொள்ள முடியாது போவதும் மிக முக்கியமான ஒன்று. பின்பு பாலாயியின் பஞ்ச கால வாழ்க்கையும் இறப்பும் சொல்லப்படுகிறது. அதன் மேலடுக்காக அவள் எவ்வாறு அன்ன சௌரக்ஷாம்பிகை புராணமாக மாற்றப்பட்டுள்ளார் என்று வைத்தியரின் வீட்டில் கூறப்படும் கதையாடலில் சொல்லப்படுகிறது.


இந்த அடுக்குகள் ஒன்றோடொன்று பொருந்தி ஒரு அபாரமான சமூக இயங்கியலை வெளிப்படுத்துகிறது. பாலாயியை கடவுளாக மாற்றி அவளது உக்கிரத்தில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபடும் சுடலையின் சமூகம் ஒருபுறம். அதில் உணர்ச்சி பூர்வமாக ஈடுபட முடியாமல் சபரியை தடுக்கும் பெருந்தெய்வ வழிபாடுடைய சமூக அமைப்பு மற்றோரு பக்கம். பாலாயியை காளியாக மாற்றி ரத்தத்தையும் அன்னத்தையும் படையிலிடும் நாட்டாரியல் வழிபாடும் அந்த திருவிழாவின் இறுதி நாளில் வைத்தியரின் வைதீக குடும்பத்தின் பங்கேற்பும் இணைந்ததாக அது உருமாறியிருக்கும் விதம் மிக முக்கியமானது.பாலாயியை வைதீகம் தனது புராணங்களின் வழி அவளை அன்னலக்ஷ்மியாக்கி திருமகளின் வழியே திருமாலுடன் பிணைக்கிறது. எவ்வாறு ஒரு நாட்டாரியல் தெய்வம் புராண மேல்நிலையாக்கத்தின் வழியே பெருந்தெய்வ மரபோடு இணைக்கப்படுகிறது என்பதை அறிய முடிகிறது. மருலாளியின் பூர்வீகம் தெரியாமல் அவனை பூசாரியாக ஏற்க மறுப்பதை வைத்தியரின் கனவில் தான் அம்மன் வந்து ஏற்றுக்கொள்ள சொல்கிறாள்.


பாலாயியின் வரலாற்றில் இருக்கும் அவளுடைய அடையாளம் புராணத்தில் களையப்படுகிறது. பாலாயியின் வாழ்வில் நடந்தேறிய அவளது பிள்ளைகளின் இறப்பும் அவளது மரணமும் தியாகமாக மாற்றப்படுகிறது. வைத்தியரின் குடும்பத்தின் தெய்வமாகும் பாலாயியின் சந்ததியின் தொடர்ச்சியினை கதைவழியாகவும், சடங்கின் வழியாகவும் பேணும் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டுள்ளது என ஒரு அமைப்பின் இரு பக்கமும் ஒன்றை ஒன்று நிரப்பி செயல்படுவதன் சித்திரம் முழுமையடைந்துள்ளது. இந்த சிக்கலான சமூக இயங்கியல் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. இந்த கதையின் சமூக இயங்கியலின் மறு பக்கமாக ஜெயமோகனின் மூத்தோள் கதையை வாசிக்க முடியும்.


அம்புப்படுக்கை சிறுகதையில் ஒவ்வொரு அம்பாக தப்பிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்ளும் ஆனா ரூனா செட்டியார் இறுதி படுக்கையில் இருக்கிறார். அவரை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவரது இறப்பினை எதிர் நோக்கியிருக்கிறார்கள். நாடி பிடித்து பார்க்க அழைக்கும் சுதர்சன் அவனுக்கு நம்பிக்கையில்லை என்றாலும் செட்டியாரின் நாடியைப் பார்க்க சம்மதிக்கிறான். நாடி பிடித்து பார்ப்பதில் அவரது நாடி மெல்ல அடங்குவதை உணர்ந்து கொள்கிறான்.


ஆனா ரூனாவின் இயல்பை அவருக்கும் தனது தாத்தாவிற்கும் இடையேயிருக்கும் பழக்கத்தினால் நன்கு உணர்ந்திருக்கும் சுதர்சன் அவர் எதிர் பார்க்கும் ஓரு பதிலை அளிக்கிறான். தான் விரும்பும் போது உயிர் பிரியும் என்ற பீஷ்மரது அம்பு படுக்கையை போல் ஆனா ரூனா வும் சுதர்சனின் பதிலில் திருப்தியடைந்து உயிரை விட சம்மதிக்கிறார் என்று தோன்றுகிறது.


பொன் முகத்தை காண்பதற்கும் என்கிற கதையில் சமகால சிக்கல் பேசப்படுகிறது. குழந்தையை பார்த்துக் கொள்ள மட்டுமே உதவும் பெரியவர்கள், அவர்கள் வாழ்ந்த ஊரினை விட்டு விலகி நகரத்தில் அடைந்து கிடக்கிறார்கள். சிறு குழந்தையின் அன்பில் மட்டுமே தன் இருப்பின் பிடிப்பினை கொண்டவர்கள். ஒரு அவசர நேரத்தில் அவர்கள் சொந்த வேலைக்காக பிரிந்து செல்ல நேரிடும் போது நகர வாழ்வில் உருவாகும் நெருக்கடி. அதனை தொழில் நுட்பத்தை கொண்டு வெற்றிகரமாக சமாளித்து விட்டதாக எண்ணும் நகர மனிதர்கள். தான் இல்லாமலே குழந்தை உறங்க பழகிக் கொண்டதால் தனது இருப்பை சந்தேகிக்கும் பெரியவர்.


இன்னும் சமூகத்தின் கறை படியாத இளம் குழந்தை மனித உறவின் ஆழத்தை அர்த்தப்படுத்தும் நொடியில் தனது வாழ்வின் அர்த்தத்தையும் கண்டு கொள்வது தான் கதை.


2016 சிறுகதை 1984 நாவலின் வின்ஸ்டன் கதாபாத்திரத்தின் இன்றைய முக்கியத்துவம் உணரப்படும் கதை.


முற்றிலும் சுதந்திர சிந்தனையை அனுமதிக்காத வின்சென்ட் வாழ்ந்த நாட்டின் சூழலில் இருக்கும் அம்சத்தை, புரட்சி இல்லாத குடியரசு நாட்டில் வாழும் மக்கள் தங்களது சுதந்திரத்தின் எல்லையை உணர்ந்து கொள்ளும் போது அவரை மீள் கண்டடைவு செய்கிறார்கள்.


கடைசியாக நரோபா வெளியேறும் போது இன்னொரு மேசையில் உட்கார்ந்திருக்கும் வின்ஸ்டனையும் அவரை தேடி வந்திருக்கும் ஆப்பிரிக்கா அமெரிக்கரையும் காண்பது வின்சென்ட் உருவகிக்கப்படும் சூழல் ஆர்வெல் கற்பனை செய்தவாறு உலகம் துண்டுப்படாமலாகியும் தொடர்ந்து அவர் எவ்வாறு கண்டடையப்படுகிறார் அல்லது தேவைப்படுகிறார் என்பதைக் காட்டுவதாக தோன்றுகிறது.


 


பேசும் பூனை ஒரு கிளாசிக் ஆவது முதன்மையாக அதன் மொழியினால் நிகழ்கிறது என்று தோன்றுகிறது.


வெளிநாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு செல்லும் குடும்பத்தில் தனித்திருக்கும் பெண்களின் தீர்க்கப்படாத ஏக்கம் அவர்களை பலவீனமாக்குகிறது. அதே நேரத்தில் இன்றைய குடும்பத்தில் இருக்கக் கூடிய ஆண் பெண் உறவின் முதிர்ச்சியற்ற தன்மை.


ஆணின் தீராத காமமும் பணம் சம்பாதிப்பதும் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் மனம். சமூகத்தால் உருவாகியிருக்கும் பெண்ணின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளும் தன்முனைப்பும்.


அந்த இடைவெளியில் நுழையும் பூனை பதிவேற்றாத எண்ணிலிருந்து வரும் அழைப்பின் வழியே அந்தரங்கங்களை திருடுகிறது. அவளுக்கு பிடித்த பாடல்கள், தகவல்கள் மற்றும் அக்கறையின் வழியே தனது இருப்பை நிலை நிறுத்துகிறது. விதவிதமான சேலைகளை கட்டி அவள் பூனைக்கு காண்பிப்பது என்பது உண்மையில் அவள் மீது அவளே கொண்ட கிளர்ச்சியாகவே தோன்றுகிறது. அவளுடைய ஏக்கம் தணிக்கப்பட்ட பின்பு அவளுக்கும் கணவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல்கள் சுமூகமாக முடிகிறது.


அவளது குடும்ப செலவுகளை நிர்வகிக்க ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக் அவளது தேவைகளை பூனை முடிவு செய்கிறது. பொருட்களை வாங்கி குவிக்கிறது. தேவைக்கு அதிகமாக செலவு செய்வதை உணர்ந்து தன்னிடம் சொல்லிவிட்டு இனிமேல் வாங்கு என்று சொல்லியதற்கு கோவித்துக் கொள்கிறது. அவளது தன்முனைப்பையும் ஏக்கத்தையும் பூர்த்தி செய்யும் பூனையின் திடீர் மறைவு அவளை குழந்தை பெற்றதற்கு அடுத்ததாக அழ வைக்கிறது.


பின்பும் அவளால் பூனையின் ஆதிக்கத்திற்கு மறுப்பு சொல்ல முடியாது கட்டுண்டிருக்கும் அவள் நிலை என்பது அவளது மன ஆசைகளுக்கும் தன்முனைப்பிற்கும் கட்டுப்பட்டிருக்கும் நிலை தான் என்று தோன்றுகிறது. அவளது மகள் தாயின் அதீத போக்கின் காரணத்தை உணர்ந்து பூனையை அடிக்கும் போது.. அவளை வெறி கொண்டு அடித்து மயங்கச் செய்கிறாள். உன்னால் எனது மகளை அடிக்க நேர்ந்தது என்று சொல்பவளிடம் பூனை சாதாரணமாக அவள் என்னை எத்தனை முறை அடித்தால் தெரியுமா.. ஒரு முறை அடித்ததற்கு இப்படி கவலை படுகிறாயே என்று கேட்குமிடம் மிக வலுவான தாக்கத்தை வாசிப்பவரிடம் உண்டு செய்கிறது. பூனை வெறும் விளையாட்டு என்பதிலிருந்து அவள் வந்து சேர்ந்துள்ள பூனையை தவிர்க்க முடியாத இடமும், அதனது கண்காணிப்பும் அவளை தற்கொலையை நோக்கி தள்ளுகிறது.


ஆரம்பத்தில் அவள் முணுமுணுக்கும் சுவர்ணலதா பாடலின் வரி பாடகியின் குரலில் கேட்கிறது. பின்பு தொலைபேசியில் வரும் நிறுவனத்தின் அழைப்பில் கேட்கும் பாடலில் பூனையின் குரல் ஊடுருவியிருக்கிறது. இறுதியாக அவளது அக மொழியிலே பூனை ஊடுருவி இருப்பதன் முடிவு தீவிரமாக அமைந்துள்ளது.


 


அறிவியல் புனைவு கதையான திமிங்கிலம் இன்னொரு முக்கியமான கதை. கற்பனை உலகத்தில் தொழில் நுட்பத்தின் சிக்கலை தீவிரப்படுத்தி அணுகும் கதை. அவனுக்கும் அவனது முதல் மனைவி ஜெமீமாவிற்கும் இடையே நடைபெறும் உரையாடலே கதையின் மையம்.


 


மானுடம் தழைக்க வேண்டும் என்பதற்கும் உலகம் வாழ வேண்டும் என்பதற்குமான முரண். மனித மைய வாதத்திற்கும் பிரபஞ்ச ஒட்டு மொத்த பார்வைக்குமான போர். அதில் மனித தன்முனைப்பின் சிக்கலும் பிரபஞ்சத்தை ஒட்டு மொத்தமாக பார்க்க தவறுவதன் விளைவும் தீவிரமாக விவரிக்கப்படுகிறது.


மக்களில் செயல்படும் வாழ்வதற்கான விழைவு அவர்களை கீழ்மை நோக்கி செலுத்தும் விதமும் ஒரு குறிப்பிட்ட எல்லையை மீறும் போது குற்ற உணர்விற்கு ஆளாகி அதன் பழியை ஆராய்ச்சியாளனின் மீது சுமத்துவதும் வெவ்வேறு நிகழ்விற்கும் பொருத்தி பார்க்க கூடியது.


ஆராய்ச்சியாளனுக்கு இருக்க வேண்டிய அறத்திற்கும் அறிவியலின் கண்டுபிடித்தலில் அவனுக்கு இருக்கும் ஈர்ப்பிற்கும் இடையேயான சிக்கல் இறுதியில் கூர் கொள்கிறது. இந்த கேள்வியின் இன்னொரு வடிவம் தான் விஷக்கிணறு குறு நாவலாக விரிவடைந்துள்ளது.


மனிதன் இந்த உலகில் மற்ற எதையும் சார்ந்திராமல் வாழ்வதற்கான சோதனையை மேற்கொண்டு அவன் வெற்றியடைகிறான். ஆனால் அவன் அவ்வாறு தனியாக வாழும் சாத்தியம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி. ஏதோ ஒரு வகையில் குழுவாக வாழ்வதே அவனுடைய இயல்பு என்று தோன்றுகிறது. அதற்காக சமைக்கப்பட்டதே நாகரிகமும் பண்பாடும்.


அதன் எல்லையை அல்லது வெறுமையை உணரும் அவன் தான் உருவாக்கிய அனைத்தையும் நேர் செய்ய முடியுமா என்று நினைக்கிறான். ஜெமீமாவை நெருங்க அவனுள் இருக்கும் அழியா தேடல் அவன் தன்னை இவ்வுலகில் அரக்கனாக எஞ்சியிருக்க கூடாது என்று நினைக்க வைக்கிறது. அந்த கடற்கரையில் அவன் ஓடும் பாத தடங்களை அழித்துக் கொண்டே திரும்பும் போது புது காலடிகள் உருவாகியிருப்பதை உணர்ந்து கொள்கிறான். உண்மையில் இங்கு உருவாக்கும் எதையுமே அழித்து விட முடியாது. ஒன்று உருவாகிவிட்டால் அதனை காலத்தில் பின் சென்று அழிப்பது சாத்தியமற்றது. அதனால் இறந்து போன திமிங்கிலத்தின் எலும்பினை இழுத்துக் கொண்டு கடலில் சென்று மரிக்கிறான் என்று தோன்றுகிறது. தேவைக்கு அதிகமாக தின்று அழிக்கும் திமிங்கிலத்தின் தேவை மக்களுக்கு அவ்வப்போது அவனது எல்லையை நினைவில் நிறுத்திக் கொள்ள அவசியமானது தான் போல.


கூண்டு சிறுகதை ஒரு மிகுபுனைவு.. அந்த கூண்டின் உருவாக்கமும் அதன் நோக்கமாக கதையில் சொல்லப்படுவதும் சேர்ந்து என்னை சிறிது பரவசத்திற்கு உள்ளாக்கி விட்டது. கூண்டு அதுவே குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டும் என்பதும், கூண்டினை செய்த கொல்லனின் மீசையற்ற ஆயிரக்கணக்கான வருட புன்னகையும் அந்த கூண்டிணை பிரபஞ்சத்தோடு என் மனம் ஒப்பிட்டு கொண்டது. அங்கு நிகழும் மனிதர்களின் தவிர்க்க முடியாத வாழ்வு அவர்களின் தண்டனை என்ற அளவில் சிந்தித்துக் கொண்டிருந்த என்னை கதையின் முடிவு கீழிறக்கியது. எந்த தவறும் செய்யாத ஒருவன் அல்லது சமூகத்தில் சொல்லப்படும் லட்சிய உருவகத்தில் வாழும் ஒருவனின் நிலையை காட்சி படுத்துகிறது.


சமூகம் ஒரு நேரத்தில் தனது உண்மை நிலையினை ஏற்றுக் கொண்டு கூண்டிற்குள்ளேயே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் போது, எந்த குற்றமும் செய்யாத ஒருவன் இரக்கத்தொடு பார்க்கப்படுகிறான். அவனும் அந்த கூண்டிற்கு செல்ல தனக்கு இருக்கும் காரணங்களை கற்பனை செய்து கூண்டின் தவறால் வெளியிலிருப்பதாக எண்ணிக் கொள்கிறான். சமூகத்தின் அழுத்தம் எந்த அளவிற்கு தனியர்களின் மீது செயல்படுகிறது என்பதும் அவனுக்கு தேவைப்படும் ஆத்ம பலத்தின் தேவையையும் உணர்ந்து கொள்ள முடிகிறது.


ஆரோகணம் தருமனின் இறுதி பயணத்தை போல் காந்தியின் இறுதி பயணத்தை படைக்க முயலும் கதை. இந்த கதையை நான் மிக ரசித்தற்கு காரணம் ஒன்று காந்தியை தொன்மமாக்கும் மிக முக்கியமான கதை.


காந்தியின் மனம் யதார்த்தத்தில் செயல்படும் விதத்தை மெல்லிய நூல் போன்ற கதைகளில் அணுகி அறிய முயன்ற முயற்சிகளில் இருந்து இது வேறுபடும் விதம் சிறப்பானது.


இரண்டாவதாக மரபில் இருந்து ஆத்ம சுத்திகரிப்பை அடைய வாழ்நாள் முழுவதும் முயன்று கொண்டிருந்த மனிதர் மரபினால் சொல்லப்படும் சொர்க்கத்தை தனது இயல்பினாலேயே நிராகரிப்பது. இது முக்கியமான மீறல் என்று தோன்றுகிறது.


மிக அற்புதமான கதைகள். தமிழில் இத்தகைய கதைகளை எழுதும் சுனில் நிச்சயமாக முதன்மையான எழுத்தாளர் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment