Wednesday, April 16, 2025

மரப்பாச்சி இலக்கிய வட்டத்தின் ஏப்ரல் மாத கூடுகை சிறுகதை விவாதம்

எழுத்தாளர் அஜிதனின் ‘ஓர் இந்திய ஆன்மிக அனுபவம்’ சிறுகதையும் எழுத்தாளர் சுசித்ராவின் ‘ராம பாணம்’ குறுநாவலும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நாராயணி அம்மா, கோமளா டீச்சர், வேலாயுதம் பெரியசாமி, நாராயணன் மெய்யப்பன், முகமது கபூர், கவிஞர் சிலம்பரசன், எழுத்தாளர்கள் பிரபாகரன், சித்ரன் ஆகியோர் பங்குபெற்றனர். எல்லோரும் கதைகளை வாசித்து வந்ததால் செறிவான உரையாடல் சாத்தியமானது. 






முதலில் அஜிதனின் ‘இந்திய ஆன்மிக அனுபவம்’ கதை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மறுவாசிப்பிற்கு உட்படுத்த முடியாத அளவிற்கு அருவருப்பை மைய உணர்வாக கொண்டுள்ளதாக கூறினார்கள். அஜிதனின் கதைகளில் தொழிற்படும் துல்லியமான புற சித்தரிப்புகள் அவரது பலம். அருவருப்பான அனுபவத்தை மொழியில் நுணுக்கமாக விவரிப்பது சவாலானது. சிறுநீர் உப்பு படிவதை பற்றி அவர் எழுதிய சித்திரம் உதாரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. எதை இந்திய ஆன்மிக அனுபவம் என கூறுகிறார் என்றொரு கேள்வி எழுப்பப்பட்டது. ஏன் கூறுகிறார் என்பதும் இன்னொரு கேள்வி. தலைப்புதான் கதையை வலுவாக்குகிறது. வாமாச்சார மரபு அருவருப்பை ஆன்மிக பாதையாக முன்வைப்பதைப்பற்றி பேசினோம். லிங்கத்தை வெளியே விட்டபடி உறங்கிக்கிகொண்டிருக்கும் பைத்தியக்காரனை சிவனாக உருவகிக்க இடமுண்டு என்றொரு கருத்து வந்தது. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலில் பிங்கலன் தொழுநோயாளியையும் பள்ளிகொண்ட பெருமாளையும் ஒருவரென காணும் கணம் அவனுக்கு பெரும் தொந்திரவை அளித்தது. ஜெ எழுதிய ‘மலம்’ எனும் கதையும் ‘இந்திய ஆன்மீக அனுபவம்’  கதையுடன் பொருத்தி பார்க்கலாம்.  கும்பமேளா நிகழ்ந்த சூழலில் இன்று இந்த கதை எழுதப்படுவதில் ஒரு அரசியல் நிலைப்பாடும் உள்ளதாக ஒரு வாசகர் குறிப்பிட்டார். கும்பமேளாவில் வரும் பாபாக்களை பொது சமூகம் ஒவ்வாமையுடன் நடத்தவில்லை. மாறாக அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறது என்பதால் அத்தகைய அரசியல் நிலைப்பாடை வலிந்து இக்கதைக்கு அளிக்க வேண்டியதில்லை, இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு பிறகு வாசிக்கும்போது இந்த அரசியல் தூண்டுதல் பெரிய காரணியாக பார்க்கப் படாது. கும்பமேளா அளவிற்கு எல்லாம் செல்லாமல்  உள்ளுர் மாரியம்மன் கோவில் திருவிழாக்கள், எச்சிலில் உருள்வது போன்ற சடங்குகளுடன் பொருத்திப் பார்க்கலாம். தினம் தினம் இந்த அருவருப்புடன் வாழ்ந்தபடி தான்  கோடிக்கணக்கான மக்கள் தங்கள் நாட்களை கடக்கிறார்கள். எளிய மக்களின் ஆன்மிகமும் வாழ்வனுபவமும் இந்திய சூழலில் அருவருப்பை ஏற்றுக்கொள்ளவும் இயல்பாக கடந்து செல்லவும் வழிவகுக்கிறது. ஆகவே இந்த கதை மேலதிகமாக  எந்த அதிர்ச்சியும் அருவருப்பையும் கடத்தவில்லை எனும்  விமர்சனம்  எழுந்தது. எனினும் அருவருப்புடன் இயல்பாக இயைந்து வாழ பழகும் எல்லோருக்கும் அது ஆன்மிக அனுபவமாக பரிணாமம் கொள்வதில்லை. பொது உண்மையை தொடுவதை விட தனி உண்மையை காட்டி நின்று விடுகிறது என்பதே இந்த கதையின் எல்லை. இது சாமானிய மனிதனின் கதை அல்ல, ஒரு நவீன அறிவு ஜீவியின் சிக்கல். அழகும் அருவருப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.  அருவருப்பை வேறொன்றாக மாற்றி கற்பனை வழி கடந்து செல்லும் திறனுடையவனாக இருக்கிறான் கதைசொல்லி. தொடுகை தான் அவனை தொந்திரவு செய்யக்கூடியது. இருளில் அத்தகைய மாற்றம் சாத்தியமாகவில்லை. முதல்முறை நேருக்குநேர் மெய்யை  எதிர்கொள்கிறான். அது அவனது அகங்காரத்தை உடைக்கிறது. அவன் ஒரு தொடுகையை உணர்கிறான். ஆனால்  படுத்துக்கிடக்கும் பைத்தியகாரனைத் தவிர அருகே யாருமே இல்லை. அவனுக்குள் இருப்பவை எல்லாம் கரைந்தழிகின்றன. மீட்பவர்கள் பெண்கள் என்பதற்கு சிறப்பான கவனம் ஏதும் இருக்கிறதா என்று பேசப்பட்டது. 


    

இரண்டாவதாக விவாதிக்கப்பட்ட கதை சுசித்ரா எழுதிய ‘ராம பாணம்’ எனும் குறுநாவல். மீனாட்சிநாதன், சாம்பு மற்றும் ராமுடு ஆகிய மூவர் 1896 ஆம் ஆண்டு காவிரிக்கரையில் அமர்ந்து உரையாடுவதே கதை. ராமுடு தனது குருநாதர் ராமாமிர்தம் பிள்ளை தன்னிடம் சொன்ன திருவையாறு பஞ்ச நாத பிரம்மம் எனும் தியாகராஜரைப் பற்றிய கதையை சொல்கிறார்.  ராமுடு கதைசொல்லும்போது ‘அப்பேர்ப்பட்ட பஞ்சநாத பிரம்மம்ன்ற நாதபிரம்ம பாகவதர என் குருநாதர் கண்ணோட கண் வெச்சுப் பார்த்திருக்காரு. அவர் கண்களை நான் பார்த்திருக்கேன், இப்போ என் கண்கள நீங்கப் பார்க்கரீங்க’ என்று   சொல்கிறார். 


ராமுடுவிற்கு அவரது குரு ராம நாமத்தை ஜபம் செய்ய  அளித்திருக்கிறார். ராமன் எனும் உருவம் மீது அவருக்கு பெரிய ஈடுபாடு இல்லை. “உச்சிவேளைக்கு வந்தா தெய்வானை கள்ளச்சி தன்னோட இரண்டு வயசுப் பிள்ளைய நிக்க வைச்சுக் குஞ்சாமணி ஆடக் குளிப்பாட்டிட்டிருப்பா. அந்தக் குழந்தையப் பாக்குறதும் வழுவூர் சந்நிதியில ராமனோட உருவத்தைப் பார்க்குறதும் எனக்கு அத்தனை வேத்துமையாத் தெரியல.” மேலும் தனது குடும்பத்தினர் பகலில் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இரவில் காமக்களியில் ஈடுபடுவது எனும் கபடம் அவரை எரிச்சல் கொள்ள செய்கிறது.  ஆனால் அவரேதான் பெரும் உவகையோடு தனது குருநாதர் சொன்ன தியாகராஜர் ராம விக்கிரகத்தை காவேரியில் கண்டெடுத்த கதையை சொல்வது பாத்திர வார்ப்பிற்கு முரணாக பட்டது.  


தில்லைஸ்தானம் ராமுடுவிற்கு ஒருவித அடையாள சிக்கல். ராமய்யராகவும் இல்லை, ராமையா பிள்ளையாகவும் இல்லை. தாயிடமிருந்து பிரிந்து தந்தையிடம் வளர்கிறார். ஆனால் அங்கு ஏறத்தாழ அடிமை வாழ்க்கை தான் வாய்க்கிறது. ராமுடு தனது குருவாக கருதும் ராமாமிர்தம் பிள்ளை ஏறத்தாழ இதே போன்ற குடும்ப பின்புலம் கொண்டவர். எனினும் அவர் ‘பிள்ளையாக’ வளர்பவர். ராமுடுவிடம் பெண் அனுபவம் உண்டா என்றொரு கேள்விக்கு தாசிகள் எனது தாயர்கள் என்றொரு பதிலை அளிக்கிறார். காவேரியை அதன் நிறைவில்  கண்டவனுக்கு எந்த பெண்ணும் நிறைவை அளிக்க மாட்டாள் என்பதே அவரது பதிலாக உள்ளது.  இயற்கையே முழுமை. ஆகவே வழிபாட்டுக்குரியது. இயற்கையின் முழுமையை அறிந்தவனால் உலகியலில் அமைய முடியாது என்பதே கண்டுகொண்டவனின் சாபம் என்பதை ராமுடு உணர்த்துகிறார். உ வே சாவின் சீடனை போல வருகிறான் மீனாட்சிநாதன். சுவடிகளின் மீது பித்துக்கொண்டு அலைகிறான். சாம்பு நவீனமானவன். பட்டணத்தில் நவீன வரலாறு படிக்கிறான். ஒருவகையில் இவையிரண்டும் வரலாற்றின் இரண்டு பக்கங்கள் என சொல்லலாம். மீனாட்சிநாதன் காவேரிக்கரையை விரும்புகிறான். மீனாட்சி நாதனின் ஆய்வுகளை பழங்குப்பை என கருதும் சாம்பு பட்டனவாசத்தை விரும்புபவன். 


குறுநாவலை இரண்டு கதைகளாக பிரிக்கலாம். ராமுடு - மீனாட்சிநாதன்- சாம்புவின் பகுதி முதல் 7 அத்தியாயங்கள் வரை நீள்கிறது. அந்த பகுதியின் உச்சம் என்பது மீனாட்சிநாதன் நாகசூடாமணி சுவடியை கண்டெடுக்கும் தருணம். வீடு முழுக்க குவியலாக ஒழுங்கின்றி கிடக்கும் சுவடி கட்டிலிருந்து பூச்சி இட்ட துளை வழியாக தேடிய சுவடிகளை  பெரும் பரவசத்தோடு கண்டெடுப்பார்கள். 


குறுநாவலின் இரண்டாம் கதை சரடான தியாகராஜருக்கு அவரது சகோதரர் ஜப்பேசருக்குமான உறவையும் முரனையும் இணைவையும் சித்தரிக்கும் பகுதிக்கு இந்த முதல் பகுதி தேவையற்ற சுமையாக உள்ளது என்றொரு விமர்சனம் முன்வைக்கப்பட்டது. கதைப்படி ஜப்யேசன் சிலநொடிகள் முந்தி பிறந்த மூத்தவர். பஞ்சநாத பிரம்மமும் ஜப்யேசனும் இரட்டை பிறவிகள்.  ஜப்யேசன் அழுகுரலை கேட்டு பூமிக்கு வந்தவன் பஞ்சநாத பிரம்மம். பஞ்சநாத பிரம்மம் பற்றி அவரது தாயார் ‘யார் அழுதாலும் முன்னே சென்று நின்றுவிடுபவன்’ என கேலியாக குறிப்பிடுகிறார். தந்தை ஒருவருக்கு விக்கிரகமாகவும்  இன்னொருவருக்கும் தூபதீப மலராகவும்  ராமனை அறிமுகம் செய்கிறார். இருவரும் தங்களுக்கு மறுக்கப்பட்ட வடிவத்தில் ராமனை ஏந்தி கொள்கிறார்கள். முக்திக்கான வழியாக பிரவிருத்தி மார்க்கம் நிவிருத்தி மார்க்கம் என இரண்டு பாதைகள் உண்டு. பல்கி பெருகி அனுபவிப்பது ஒரு வழி, விலகி துறவு கொள்வது இன்னொரு வழி. ஜப்யேசன் திளைக்கும் வழியில் செல்பவன் என்றால் பஞ்சநாத பிரம்மம் துறவின் வழியில் செல்பவன். பொதுவாக விஷ்ணுவை திளைக்கும் மரபிற்கும் சிவனை ஒடுங்கும் மரபிற்கும் உரியவர்களாக வகைப்படுத்துவர். ஜப்யேசனை சிவனோடு இணை வைப்பது இங்கு பொருந்துமா என்றொரு கேள்வி உண்டு. எனினும் கதையின் தொடக்கத்தில் இருந்தே கறுப்பு - சிவப்பு என்றொரு இருமையை எழுத்தாளர் சுட்டுகிறார். இந்தியர்களுக்கு உரிய நிறமாக கறுப்பும் ஐரோப்பியர்களுக்கு உரிய நிறமாக சிவப்பும் முன்வைக்கப்படுகிறது. பெருமாள்- சிவன் இருமையை இதன் நீட்சியாக காணலாம். சிவனை ராஜசிக குணத்தின் பிரதிநிதியாக காண இடமுண்டு. சிவப்பும் ரஜோ இயல்பின் நிறம் தான். 


ராமாமிர்தம் பிள்ளை ஒன்றுவிட்ட சகோதரியான ராஜதாசி ரமாவாணியை ஜப்யேசன் ஏறெடுத்து பார்க்க வேண்டாம் என்பதை அறிவுறுத்த தூது செல்லும் இடத்தில் பஞ்சநாத பிரம்மத்தை சந்திக்கிறார். அவரது தூதும் அதற்கு ஜப்யேசன்பதிலும் என விரிகிறது. ஜப்யேசனும் பஞ்சநாத பிரம்மமும் ஒன்றின் இரு அம்சங்களாக தென்படுகிறார்கள். ரமாவாணி பஞ்சநாத பிரம்மத்தை காணும்போது ஜப்யேசன் இட்டுக்கொள்ளும் நெற்றிக்கண் போன்ற சிவப்பு குறியை நெற்றியில் காண்கிறாள். இந்த மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பது உணர்த்தப்படவில்லை. ஜப்யேசன் ராமன் விக்கிரகத்தை காவிரியில் வீசுகிறார். சகோதரர்கள் இருவரும் நீரில் குதிக்கிறார்கள். மூன்று நாட்களுக்கு பின்பு ஒருவர் மட்டுமே விக்கிரகத்துடன் கரையேறுகிறார். ஏறியவர் விக்கிரகத்தை கையில் ஏந்தியபடி ஜப்யேசன் குரலில் பாடியபடி  வருகிறார். அங்கிருப்பது எவர், காவேரி எடுத்து கொண்டது எவரை என சொல்ல முடியவில்லை. அவர்கள் இருவரையும் ராமபாணம் ஒன்றாக கோர்க்கிறது. பின்னர் அவர் தியாகபிரம்மம் என வழங்கப்படுகிறார்.  


ராமபாணம் எனும் உருவகமே குறுநாவலின் மைய இழை. ராம பாணம் என்பது அழிப்பதல்ல. அது கடவுளின் தொடுகை. ஒன்றை மற்றொன்றுடன் கோர்ப்பது, இணைப்பது, ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது. ஜெயமோகனின் ‘பிழை’ கதை இத்தகைய இறையாற்றலின் இருப்பு/ அல்லது தொடுகையை பற்றி பேசும் அபாரமான கதை. கொரோனா கால கதைகளில் ஜெயமோகன் தாயுமானவரை மையமாக கொண்டு எழுதிய கதைக்கும் ஜப்யேசர்- ரமாவாணி உறவு சித்தரிப்பிற்கும் தொடர்ச்சி இருப்பதாக ஒரு பார்வை முன்வைக்கப்பட்டது. 


இந்த கதையின் முக்கியமான சிக்கல் அதில் கையாளப்படும் படிம குவியல் காரணமாக உணர்வு ரீதியான விலக்கத்தை ஏற்படுத்தி படிமங்களை பொருத்திப்பார்த்து புரிந்துகொள்ளும் அறிவு செயல்பாடாக கதை வாசிப்பு ஆகிறது என்பதே. மாறன்- ராமன் எனும் இருமை பேசப்படுகிறது. ஜப்யேசன்  மாறனாகவும் பஞ்சநாத பிரம்மம் ராமனாகவும் காண இடமுண்டு.  மனதின் மீது நித்தம் நிகழும் சமர் என வாலி - சுக்ரீவன் சமர் உருவகிக்கப்படுகிறது. பலவீனனான சுக்ரீவன் ராமனின் துணை கொண்டு வாலியை வெல்கிறான். சுக்ரீவன் தியாகராஜராகவும் ஜப்யேசன் வாலியாகவும் சித்தரிக்கப்படுகிறான். இறுதியில் மல்லுக்கு அறைகூவல் விடுகிறான் ஜப்யேசன். நெற்றியில் சிவக்குறியுடன் சிவனுக்கு உவமிக்கப்படுகிறான் ஜப்யேசன். ராமாமிர்தம் பிள்ளை படகில் ஜப்யேசனுடன் செல்லும்போது தன்னை ராவணன் என கூறிக்கொள்கிறார். படகில் எனக்காக ஜப்யேசன் பாடுவார் என்று படகோட்டி சொல்லும்போது ‘குகனுக்கு இல்லாத ராமனா’ என்று ஒரு வரி வருகிறது. பஞ்சநாத பிரம்மம் ராமாமிர்தத்திடம் பேசும்போது தன்னை வீடணன் என்றும்  பலி சக்கரவர்த்தி என்றும் சொல்கிறார். ஜப்யேசன் ராமாமிர்தத்திடம் நாத வடிவில் தான் ராமனை அறிவதாகவும் ராமனின் உருவத்தின் மீது தனக்கு ஈடுபாடில்லை என்றும் சொல்கிறார். வலியை கலையாக்கும் சாதகனாக அவர் தென்படுகிறார். கலை கலைக்காக என்பதே அவர் கூற்று. பஞ்சநாத பிரம்மம் கலையை இறை அனுபவத்திற்கான வழியாக காண்கிறார். இப்படி தொடர் முரண்பாடுகளை உணர முடிகிறது. இரண்டாவது முக்கிய சிக்கல், குறுநாவல் பாத்திரங்களில் இருந்து தரிசனத்திற்கு செல்லாமல் தரிசனத்தை அடைந்த பிறகு பாத்திரங்களை அதற்கேற்றவாறு வளைக்க முற்படுகிறது. தியாகராஜரை நீக்கிவிட்டு இக்கதையை வாசித்தால் நல்லதோர் புனைவாக காண முடியும். ஆனால் தியாகராஜர் என்பது கதையிறுதியில் தெளிவாக சொல்லப்பட்டு விடுகிறது. தியாகராஜர் வாழ்க்கை சரிதத்தை அறிந்தவர்களுக்கு ஜப்யேசன் பாகவதர் அல்ல என்பது தெரியும். எனக்கு தெரிந்தவகையில் அவருக்கு தனது சகோதரரின் மீதிருக்கும் கோபம் என்பது அவரது ராம விக்கிரக பூஜை அரிசி பருப்புக்கு ஆகவில்லை என்பதுதான். இந்த கதையில் தியாகராஜர் ஒருபடி கீழாகவும்  ஜப்யேசன் ஒருபடி மேலாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். ஜெயமோகனின் பல கதைகளில் இந்த போக்கு காண கிடைக்கும். துறவுக்கு சத்வத்தை விட ரஜோ குணத்தை முதன்மைப் படுத்துவார். சத்வ குணமுடையவர் துறவியாவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை. ரஜோ குணமுடையவர் தன்னை, தனது தன்முனைப்பை வெற்றிகொண்ட பிறகே துறவின் பாதையில் பயணிக்க முடியும். ரஜோ குணத்தவரின் போராட்டம் எழுத்தாளர்களை ஈர்ப்பது இயல்பானதே. எனினும் சத்வ குணத்தை குறைத்து அல்லது அலுப்புடன் காட்டுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். வெண்முரசில் யுதிஷ்டிரன் பாத்திர வார்ப்பை உதாரணமாக கொள்ளலாம். சுசித்ராவின் இந்த கதையிலும் பஞ்சநாத பிரம்மத்தின் சித்தரிப்பு இத்தகையதே. பொது சமூகம் சத்வ குணத்தின் மீது காட்டும் மரியாதைக்கு எதிர்வினையாககூட கலைஞர்களின் எரிச்சலையும் உதாசீனத்தையும் பார்க்க முடியுமா என்றொரு எண்ணம் தோன்றியது. மாறன்- ராமன் கவித்துவமான இடமாக இருந்தாலும் வான்மீகிக்கு அளிக்கப்படுவது மரா எனும் சொல்தான். ஜப்யேசன் பாத்திரத்தின் வலிமைக்கு முன் தியாகராஜர் மிகவும் வலுவற்றவராக தெரிகிறார். தியாகராஜரை பக்திமானாகவும் கவியாகவும் காண இடமுண்டு. அவற்றை இருவேறு கூறுகளின் இணைவாக காண வேண்டுமா என்றொரு கேள்வியும் எழுந்தது. கபீர் தாஸரின் ஜீனி சதாரியா அருமையான பாடல். அப்பாடலில் முன்வைக்கப்படும் நெசவு எனும் படிமமும் நௌகா சரித்திரம் எனும் ஜெயதேவரின் பாடலில் இருந்து கோபிகைகள் ஆடையை கொண்டு படகின் ஓட்டையை அடைக்க முயலும் நெசவு எனும் சித்திரமும் இயைந்து வருகிறது. எனினும் ஜீனி சதாரியா பாடல் கதை நிகழும் கால சூழலுக்கு பொருத்தமானதா என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டது. அதை நியாயம் செய்வதற்கென மஸ்தானி என்றொரு பாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. புறசித்தரிப்பில் சில இடங்கள் திரும்பத்திரும்ப வருவதாக தோன்றுகிறது என்றாலும் காவேரியை சித்தரித்த விதம் மிகச் சிறப்பாக இருந்ததாக பேசப்பட்டது. இந்த எல்லைகளை கடந்து வாசகருக்கு ஒரு காலகட்டத்தை கண் முன் நிறுத்தும் அனுபவத்தை கதை அளிக்கிறது. எல்லாவற்றையும் இணைக்கும் ராம பாணத்தால் கூட பெண்ணின் துயரை போக்க முடியவில்லை என்பது அபாரமான இடம். ராமனே தவறிய இடமல்லவா.      


மீனாட்சி நாதன் சொல்லும்போது “நமக்கு ஒண்ணு தெரியலன்னு அது நம்மள பிடுச்சு இழுக்குமில்ல… அந்த மாதிரி ஒரு மாயம். ஆதீனத்துல எங்க அய்யா சபாபதி முதலியார் சொல்வாறு. நமக்குள்ள இருக்குறதுதான் அங்க அந்த சுவடியில இருக்குன்னுட்டு. நம்மள்ள உள்ள இருக்கு. அது நமக்குத் தெரியல. அது தான அங்க வெளிய எழுத்தா இருக்கு. ரெண்டையும் இணைக்குற ஒரு திரி கண்ணுக்குத் தெரியாம இத்தனைக் காலத்தையும் தாண்டி வந்திட்டிருக்கு. நமக்குள்ள அந்தத் திரி ஒரு துளை வழியா ஓடுறா மாதிரி அதுக்குள்ளேயும் ஓடுது. அதான் அதைப் பார்த்த உடனே நமக்குள்ள அதைப் பிடுச்சுக்கணும்னு இருக்கும். ஓலையில உள்ள அதை உண்மையிலேயே புரிஞ்சுக்கிட்டா இங்க நம்மள்ள உள்ள இத புரிஞ்சுக்கிடலாம்பாரு.” சுவடிகள் வழியாக பழையகாலம் தன்னை திரும்பி நோக்குவதை பற்றி சொல்கிறான். ராமனையும் அத்தகைய ஆழமான செதுக்காகவும் அது நம்மை திரும்பி நோக்காதா என பார்ப்பதாகவும் ராமுடு குறிப்பிடுகிறார். 

‘ஒக நாம, ஒக மாட, ஒக பாண, ஒக பார்ய’


‘எல்லாம் மட்கி உதிர்ந்து போகர சமாச்சாரம். ஆனால் ஒரு பெயரும் ஒரு சொல்லும் ஓர் அம்பும் ஒரு பெரும் காதலும் இங்க இருக்கு. எல்லாமே உதிந்துபோனப்பிறகும் மிஞ்சி இருக்குற ஒண்ணு தான் அது.’ என்கிறார் ராமுடு.  வரலாறை மிஞ்சி நிற்கும் ஆழ்படிமம் ராமன். அதை சொல்லின் வழியாக மீட்டெடுக்க முடியும்  என்பதாக  பொருள்படுகிறது. ராமுடு தனது குரு தனக்கு அளித்த ராம நாமத்தை பற்றி குறிப்பிடும்போது “கனிச்சாறோட இனிமையும் அடர்த்தியும் கொண்ட சங்கீதமெல்லாம் அவரிட்டேருந்து பரிபோன பிறகு அதோட கொட்டை மட்டும் தான் தன்கிட்ட மிச்சம் இருந்ததா சொல்வாரு. அதான் ராமநாமம். அதைத்தான் அவர் எனக்குக் கொடுத்தாரு. அது எனக்குள்ள முளைக்கணும்னு சொன்னாரு.” என சொல்லும்போது மேற்சொன்ன எண்ணம் வலுப்படுகிறது. 


மிக நல்ல குறுநாவலாக வந்திருக்க வேண்டியது, ஒன்றுக்கும் மேற்பட்ட மைய கேள்விகளை பின்தொடர்ந்து, சிதறியதால் அந்த உயரத்தை எட்ட தவறிவிட்டது என்பதே என் எண்ணம். 


No comments:

Post a Comment