சமகால உலக/ இந்திய இலக்கியத்திலிருந்து நாவல்கள் தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்படுவது குறைவு என்பதே என் எண்ணம். மொழியாக்கங்களுக்கு குறைவில்லை. சமகால கவிதைகள் உதிரி உதிரியாகவாவது நம்மை வந்து சேர்ந்து விடுகிறது. நாவல்கள் எண்ணிக்கையில் குறைவு தான். ‘க்ளாஸிக்குகள்’ இன்னும் பல இங்கே வரவில்லை என்பதே நிதர்சனம். 2018 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த அமிதபா பக்சி எழுதிய ‘பாதி இரவு கடந்துவிட்டது’ நாவல் நான்காண்டுகளில் தமிழுக்கு இல. சுபத்ராவின் மொழியாக்கத்தில், எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்தது நல்ல விஷயம். அமிதபா டெல்லியில் பிறந்து வளர்ந்து பணியாற்றி வருபவர். ஐ.ஐ.டியில் கணினி பேராசிரியர் என்று அறிகிறேன்.
இந்திய ஆங்கில இலக்கியம் சார்ந்து ஏதோ ஒரு மன விலக்கம் எப்போதும் எனக்கு உண்டு. நகர்ப்புற வாழ்வை அதனால் நன்றாக/நம்பகமாக சித்தரிக்க முடியும். ஆனால் அதற்கு வெளியே களங்கள் நகரும் போது வெளிப்படும் மெனக்கிடல்கள் அயர்ச்சியை தருபவை. சாமானிய மக்களின் வாழ்விலிருந்து இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் வெகுதூரம் விலகியிருக்கிறார்கள். ஒருபோதும் ஒன்று சேர முடியாத கண்ணாடி தடுப்பு அவர்களை மக்களிடமிருந்து பிரிக்கிறது. மனிதர்களை காட்சி பொருளாக ஆக்குகிறார்கள் என்றொரு எண்ணம் எனக்கு உண்டு. ரஞ்சித் ஹோஸ்கோட்டே போன்றவர்கள் இந்த எல்லையை வெளிப்படையாக மேடைகளில் அங்கீகரித்தது உண்டு. ஆகவேதான் இந்திய மொழிகளின் ஆங்கில மொழியாக்கத்திற்கு பெரும் சந்தை உருவாகி வருகிறது. ஏனெனில் நகரங்களுக்கு வெளியே ரத்தமும் சதையுமாக வாழ்க்கை நிகழும் களம் இந்திய மொழி எழுத்தாளர்களால் தான் அதிகமும் எழுதப்படுகிறது.
‘பாதி இரவு கடந்துவிட்டது’ அவ்வகையில் வழமையான இந்திய ஆங்கில நாவல்களில் இருந்து மாறுபட்ட தனித்துவம் கொண்டவை. நாவல் சாமானியரின் வாழ்க்கையைத்தான் சித்தரிக்கிறது. ஆனால் அதிசயமாக கண்ணாடி தடுப்புக்கு அப்பால் பாதுகாப்பான தொலைவிலிருந்து மனிதர்களை அணுகவில்லை. சாமானியர்கள் குறித்து மிகுந்த அக்கறையுடன் எழுதப்பட்ட நாவல். ‘பாதி இரவு கடந்து விட்டது’ எனும் தலைப்பு கிளர்த்திய கற்பனையை தான் முதலில் சொல்ல வேண்டும். விடியலின் மீதான நம்பிக்கையா, அல்லது கரைந்து கொண்டிருக்கும் இரவின் மீதான ஏக்கமா? அல்லது இரண்டுமேவா?
நாவல் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. விஸ்வநாத் எனும் எழுத்தாளர் தனது சொந்த வாழ்க்கை குறித்து எழுதும் நீள நீள கடிதங்கள் ஒரு பகுதி. பதிப்பகத்திற்கு, அமெரிக்காவில் வசிக்கும் சகோதரனுக்கு, இறந்து போன மகனின் வெளிநாட்டு மனைவிக்கு, தனது மனைவிக்கு கடிதங்கள் எழுதுகிறார். அதுவரையிலான பிழை புரிதல்களை, பாவங்களை, தவறுகளை ஒப்புக் கொண்டு அதற்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோருவது தான் இந்த கடிதங்களின் பொதுவான பேசுபொருள். எழுத்து, எழுத்தாளர் தொடர்பாக விஸ்வநாத் முன்வைக்கும் பார்வை எனக்கு இணக்கமானவை. இந்த கடிதங்களின் ஊடாக ஒரு கதை நமக்கு சொல்லப்படுகிறது. எழுத்தாளர் விஸ்வநாத், அவரது மனைவி விமலா, சகோதரர் ஜெகன்நாத், அவரது தந்தை, அகால மரணமடையும் அவரது மகன் சுஷாந்த் ஆகியோர் இந்த கடிதங்களில் துலங்கும் பிரதான பாத்திரங்கள். தில்லியில் சமையல்காரராக இருக்கும் தந்தைக்கு தன் விஸ்வநாத் மீது தீராத குறை ஒன்றுண்டு. தன் மகன் பெரிய எழுத்தாளர் என்பதில் பெருமைதான் ஆனால் தந்தையின் சமையல் தொழிலை அவன் இழிவாக கருதினான் என்பதால் அதே தொழிலை கையில் எடுத்த இரண்டாவது மகன் மீது கூடுதல் பிரியம். விஸ்வநாத்தின் சிக்கல் என்ன? “என் வாழ்வில் பிரயோஜனமான சிலவற்றை நான் செய்திருக்கிறேன் என என்னை சமாதானப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தன. விவாதங்களில் உண்மையில்லை, எழுத்துக்களில் உண்மையில்லை, புகழ்ச்சிக்களில் உண்மையில்லை. எதிலுமே உண்மையில்லை.” அறுபதுகளின் இறுதியில் கோபக்கார இளைஞனாக லட்சியவாதத்தின் வீழ்ச்சியை கண்டு கொதிப்படைகிறான். தனது எழுத்து சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்று விரும்புகிறான். அவனது கொந்தளிப்புக்களை கதையாக எழுதும்போது சமூகம் அவற்றை பகடி கதைகளாக வகைப்படுத்தி செரித்துக்கொள்ள முயல்கிறது. “இலக்கியம் வரலாற்றின் போக்கில் தாக்கங்கள் எதையும் ஏற்படுத்துவதில்லை- ஏனெனில் வரலாறானது ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான மக்களினூடாக செயல்படுகையில் இலக்கியமானது ஒரு சமயத்தில் ஒரு மனித மனத்தினுள்ளேயே செயல்படுகிறது” என்பதை விஸ்வநாத் புரிந்து கொள்கிறார். கோபத்தையும் பழியுணர்வையும் இடுபொருளாக கொண்டு சமைத்த இலக்கியத்தின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்.
“பெரும்பாலானவர்களுக்கு சுயநலமாய் இருப்பதற்கு காரணம் தேவைப்படுகிறது, அதை அவர்கள் தவறிழைக்கப்பட்டதான - நிஜமான - எண்ணத்திலிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.” தனது நீதியுணர்வு,அறவுணர்வு போலியானது. வஞ்சத்தால் உருவானது என்பதை ஒருவாறு புரிந்துகொள்கிறார் விஸ்வநாத். “ஒழுக்கவாதத்தினடிப்படையிலான கோபங்கள் ஒருவகையில் நியாயமற்றவை: உண்மையிலேயே நீங்கள் சரியான பக்கத்தில்தான் நிற்கிறீர்களா என உங்களை நீங்களே கேட்டுக் கொள்வதில் இருந்தும், ஒரு விஷயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட நியாயங்கள் இருக்கக்கூடும் என நீங்கள் உணர்வதிலிருந்தும் அவை உங்களைத் தடுத்து விடுகின்றன” என்று எழுதுகிறார். இந்த நாவலும் கடிதங்களும் அவரது வயோதிகத்தில், மகனை இழந்த பிறகு எழுதப்படுபவை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மகனின் மரணம் ‘நான் என்னை சரியானவனாக காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று’ என உணர்த்தியதன் விளைவே இவை. விஸ்வநாத் செய்த ஆய்வை திருடி பதிப்பித்த பேராசிரியருக்கு சீற்றம் கொண்டு பாதியில் கைவிடுகிறார். பின்னர் அரசு ஊழியராக தேர்வு பெறுகிறார். இவை பிழையான முடிவுகளாக அவருக்கு தோன்றின. “ஆனால் அவ்வப்போது என்னை கிளர்த்திய அந்த இறுமாப்புணர்வையும் ஒரு துரோகியை துரோகி என தைரியமாக அழைத்ததாக பிறர் என்னை புகழ்ந்தபோது நான் உணர்ந்த நீதியுணர்வையும் தாண்டி எனக்கு என்ன கிடைத்துவிட்டது?” எனும் கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொள்கிறார். “உலகின் தீமைகளை வெளிப்படுத்துவதுதான் இலக்கியம் என எவ்வாறு நம்ப முடிந்தது? நான் எப்படி அப்படி ஒரு குருடாக இருந்தேன்?” என தனது நம்பிக்கையை உடைத்து பார்க்கிறார். “வெறுப்பின் பிரதிகள் ஒருபோதும் மக்களின் இதயத்தை தொடமுடியாது. அன்பின் பிரதிகளால் மட்டும் தானே அதைச் செய்ய முடியும்.” எனும் முடிவுக்கு வருகிறார். எழுத்தாளராக பெயரும் புகழும் பெற்றிருந்தாலும் தன் வாழ்வின் மீது அவருக்கு தீராத வருத்தங்கள் இருந்தன. விஸ்வநாத் தனது வெளிநாட்டு மருமகளுக்கு எழுதும் கடிதத்தில் குர் அதுல்ஜன் ஹைதரின் நாவலில் இருந்து ஒரு பகுதியை சொல்கிறார். நபிகள் சூபிக்களின் தலைவரை தேர்ந்தெடுக்க வைக்கும் தேர்வில் ‘தனிமனிதர்களின் வெட்கக்கேடான குறைபாடுகளை அவர்களது சகமனிதர்களிடமிருந்து மறைப்பேன்’ எனும் பதிலை சொன்ன அலியை தலைவராக ஆக்குகிறார். இதுதான் இந்த நாவலின் மையமும் கூட. சாமானியர்களின் வாழ்வை, அவர்களது பலவீனங்கள் மீது தீர்ப்பெழுதாமல் பரிவுடன் அணுகுகிறது. ‘ஒரு சிறந்த எழுத்தாளராக இருக்க வேண்டுமெனில் அடிப்படையில் நான் ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேண்டும்’ எனும் செய்தியை தான் விஸ்வநாத் வந்தடைகிறார்.
எழுத்தாளர்களுக்கும், அறிவுத்தள செயல்பாட்டார்களுக்கும் எப்போதும் தாங்கள் செயல் வீரர்களாய் இருக்க முடியவில்லை எனும் குற்ற உணர்வு உண்டு. தனது எழுத்தின் சமூக பெறுமதி என்ன என்றொரு கேள்வி அவர்களை அலைக்கழிக்கும். இத்தகைய கேள்வியை எதிர்கொண்டு விடைகாணும் முயற்சியாக விஸ்வநாத் எழுதும் நாவல் அன்பின், மன்னிப்பின், அரவணைப்பின் செய்தியை தாங்கி வருகிறது. துளசி தாஸரின் ராமாயணம் எழுப்பிய உணர்வின் நீட்சியாய் திகழ்கிறது. ராமனையும், லட்சுமணனையும் அனுமனையும் லட்சியங்களாக கொள்கிறது. இந்நாவல் தனது ஆழத்தில் ஒரு லட்சியவாத, கற்பனாவாத நாவல். ஜெயமோகன் தனது உரையில் குறிப்பிடும் லட்சியவாதத்தின் மீள் வருகையை குறிக்கும் பின்னை பின்நவீனத்துவ கூறுகளுக்கு இந்த நாவலை உதாரணமாக கொள்ள முடியுமா என்று யோசிக்கிறேன். எழுத்தாளரின் வாழ்வும் அவர் எழுதும் நாவலும் இணை வைக்கப்படுகிறது. தினாநாத் - திவான்சந்த் சகோதரர்கள் உறவும் விஸ்வநாத் ஜெகன்நாத் உறவும் ஏறத்தாழ ஒரே மாதிரியானவை. விஸ்வநாத் தன்முனைப்பும், சுயநலமும் கொண்ட எழுத்தாளராக, தனது பிற கடமைகளை சரிவர ஆற்றாதவராக தன்னை உணர்கிறார். தனது மனைவியாகவும் வாசகியாகவும் இருந்தவர் மகனுடைய அம்மாவாக ஆகும்போது எழும் இடைவெளியை நுட்பமாக பதிவு செய்கிறார்.
விஸ்வநாத் எழுதும் நாவல் குதா பக்ஷ் மாங்கே ராமை ரகசியமாக மல்யுத்த வீரராக பயிற்றுவிக்கும் பகுதியிலிருந்து தொடங்குகிறது. நவாபின் ஆஸ்தான பயில்வானாக பல ஆண்டுகளாக இருந்தவர் தனது சீடன் யூசுப் முகம்மதிடம் தோல்வி அடைந்தார். மாங்கே ராமை தயார் செய்வதன் வழி அவனை வென்றுவிட வேண்டும் எனும் முனைப்பு வெளிப்படுகிறது. அதேசமயம் மாங்கே ராம் தோற்றுவிடுவானோ எனும் அச்சமும் இருக்கிறது. ஆகவே அவனை போட்டிகளுக்கு அனுப்பாமல் பதுக்கி வைத்திருக்கிறார். போட்டியில் தோப்புக்கரணமும் தண்டாலும் தான் வழிமுறை. யார் இறுதிவரை தொடர்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். யூசுப்பை மாங்கே ராம் வெற்றிகொள்கிறான். தோல்வி அடைந்த யூசுப் மாங்கே ராமின் ஆசிரியராக ஆகிறான். வெற்றி என்பது எதிராளியின் வீழ்ச்சி அல்ல, மாறாக நீட்சி எனும் பார்வையை முன்வைக்கிறது.
நவாபிற்கு கடன் கொடுத்த லாலா மோதிசந்த் மல்யுத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவன். அவனோடு நவாபின் ஆஸ்தான பயில்வான் மாங்கே ராம் மோதுவதாக முடிவாகிறது. மாங்கே ராம் தோற்க வேண்டும் என்பதே நவாபின் விருப்பமாக இருந்தது. அதன்வழி கடன் சுமை கொஞ்சம் குறையும் என்று நம்பினார். ஆனால் நோஞ்சானாக இருந்த லாலாவை ஒரே அடியில் வீழ்த்துகிறான். நவாப்புகளும் மன்னர்களும் பின்னுக்கு சென்று புதிய அதிகார மையமாக வணிகர்கள் உருவாகிவரும் சித்திரத்தை நாவல் அளிக்கிறது. வென்றவன் தோற்றவனை தன்னோடு வருமாறு டெல்லிக்கு அழைக்கிறான். மல்யுத்த வீரன் மெல்ல மெல்ல லாலாவின் அணுக்க வேலைக்காரனாக மாறிப் போகிறான். அவனது வித்தைக்கு நகரத்தில் எந்த பொருளும் இல்லை. மல்யுத்த வீரனாக அனுமன் அவனுக்கு வலிமையின் சின்னமாக இருந்தார். ஆனால் லாலாவிடம் சேர்ந்த பிறகு சேவகத்தின், பக்தியின், பணிவின் சின்னமாக ஆகிறார். லாலா மற்றும் மாங்கே ராம் குடும்பங்களின் கதைதான் நாவல்.
லாலாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் தினாநாத். லாலாவின் வணிகத்திற்கு சரியான வாரிசு. இளையவன் திவான்சந்த் தத்தளிக்கும் கவியுள்ளம் கொண்டவன். லாலாவின் மகள் முக்கியமான பாத்திரமாக துலங்கவில்லை. லாலாவிற்கும் லஜ்வந்தி எனும் பெண்னின் வழி திருமண உறவிற்கு வெளியே மக்கன்லால் என்றொரு மகனும் பிறக்கிறான். மக்கன்லால் தந்தையின் மீது அன்பு கொண்டவனாக வளர்கிறான். காலப்போக்கில் தந்தை குறித்து உண்மையை அறியும்போது அவரை வெறுக்கிறான். மார்க்சியம் அவனை ஈர்க்கிறது. ஆனால் களத்தில் போராடும் அளவு துணிவும் அவனிடம் இல்லை. திவான்சந்த் ராம சரித மானசில் தன்னை தொலைக்கிறான். அவனது குருவின் அழைப்பிற்கு செவிமடுத்து மகனையும் மனைவியையும் விட்டுவிட்டு காசிக்கு செல்பவன் தந்தையின் மரணப்படுக்கையின் போது துளசிபிரேம்ஜி எனும் துறவியாக திரும்புகிறான். தன் தாயின் மரணத்திற்கு தம்பி தான் காரணம் எனும் உணர்வு அண்ணனுக்கு கடைசிவரை இருந்தது. தம்பி திவானுக்கோ மூர்ச்சை அடைந்து கையறு நிலையில் கிடக்கும் லக்ஷ்மணனாக தன்னை கற்பனை செய்து கொள்வதை நிறுத்த முடியவில்லை. ராமன் அவனை ஏந்திக் கொள்ள வேண்டும் எனும் ஏக்கம் பீடித்திருந்தது அவனுக்கு. உறவுகளின் ஊடாட்டம் தான் இந்த நாவல். சகோதரர்களுக்கு இடையே பகைமை, சகோதரனின் மனைவி ஸ்வர்ணலதாவிற்கும் திவான்சந்துக்கும் இடையேயான அன்பும் வஞ்சமும் கலந்த உறவு, நிறைவேற வாய்ப்பே இல்லாத கமலாவின் காதல், திவான்சந்தின் இங்கிலாந்து வாசத்தில் அவனோடு உடனிருக்கும் ஆல்ப்ரெட் என பல சரடுகள் கொண்டதாக நாவல் விரிகிறது.
மாங்கே ராமின் கதை இன்னொரு சரடு. முதலாளியின் மீதான விசுவாசம் என்பதை தவிர அவன் விழுவது ஒரு படுகுழியில். சதேயி எனும் பணிப்பெண்ணுடன் சேர்ந்து கொள்கிறான். அதிகாரத்தில் திளைக்கிறான். தன்னை அவமானப்படுத்திய கணேஷியின் பதின்வயது மகளை கர்ப்பமாக்கி வஞ்சம் தீர்க்கிறான். முதிர்ந்து பலவீனமான பிறகு சொந்த மருமகளிடம் தவறாக நடக்கிறான். வெளியூருக்கு சென்று சொத்து குடும்பத்தை உயர்த்தியவர் என்பதால் அவரது மகன் பர்சாதிக்கு தந்தை மாங்கே ராம் ஒரு நாயகனாக தான் தெரிகிறான். தந்தைக்கு பிறகு குடும்பத்துடன் டெல்லிக்கு செல்கிறான். ஆனால் அவனால் தந்தையின் இடத்தை ஈட்ட முடியவில்லை.
இந்திய மைய நிலத்தின் ராம பக்தி நமக்கு சற்று அந்நியமானது. அங்கு ராமன் அடைந்திருக்கும் செல்வாக்கு துளசிதாசரால் உருவாக்கி அளிக்கப்பட்டது. வான்மீகி ராமாயணத்தை மக்கள் மொழியான அவுதி மொழியில் யாத்தவர் துளசிதாசர். ராமனை காந்தி தனக்கானவராக கண்டடைந்தது கூட துளசிதாசர் வழியாகத்தான். சீர்ஷேந்து முகோபாத்யாய ‘ராமன் வனவாசம் சென்ற வழி’ நூலில் துளசிதாஸரின் செல்வாக்கு குறித்து அளிக்கும் சித்திரமும் கூட அவர் அங்கு எப்படி சாமானிய மக்களின் கதைகளில் ஊடுருவியிருக்கிறார் என்பதை காட்டுவதாக இருக்கிறது. சதேயி, லஜ்வந்தி என பலரும் இளமையில் தங்களது எல்லைகளை மீறியவர்கள் ராமனிடம் முழுமையாக சரணடைகிறார்கள். மானஸின் வரிகள், ஆங்காங்கு மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் இந்த நாவலுக்கு அடர்த்தியை சேர்க்கிறது.
உதாரணமாக இரண்டு கவிதைகளை சுட்ட வேண்டும். விஸ்வநாத் மேற்கோள் காட்டும் முநீர் நியாஜின் கவிதை, திவான்சந்த் வாசிக்கும் மாத்யூ அர்னால்டின் கவிதை..
நான் எல்லாவற்றையும் மிகத் தாமதமாக செய்கிறேன்
முக்கியமாகச் சொல்ல வேண்டிய ஒன்றை, காப்பாற்ற வேண்டிய ஒரு சத்தியத்தை
ஒருவரை அனுப்பி வைப்பதில் அவரைத் திரும்ப அழைத்துக் கொள்வதில்
நான் எப்போதுமே தாமதமாயிருக்கிறேன்
ஒரு நண்பனுக்கு உதவுவதில், அவனுக்கு தைரியம் சொல்வதில்
தொன்மையான பாதைகளில் ஒருவரைச் சந்திக்க செல்வதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
பருவ மாற்றங்களில் மகிழ்ச்சியைக் கண்டடைவதில்
ஒருவரை நினைப்பதில் ஒருவரை மறப்பதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
மரணிப்பதற்கு முன் ஒருவரது துயரங்களிலிருந்து அவரைக் காப்பதில்
அவர்கள் நினைத்துக் கொண்டிருந்ததல்ல உண்மை எனச் சொல்வதில்
நான் எப்போதும் தாமதமாய் இருக்கிறேன்
மாத்யூ அர்னால்டின் கவிதை தனக்குள் ஆழ்வதற்கு திவான்சந்தை தூண்டுகிறது. அப்படித்தான் அவன் துளசிதாசரையும், ராமனையும் கொள்கிறான்.
இப்படியான உன் வருகைகள் ஒருபோதும் பலனளிப்பதில்லை
இப்போது நீ வா, நிஜமாகவே வா.
எனது கூந்தலை விலக்கி என் நெற்றியில் முத்தமிடு
என் கண்ணா- நீ ஏன் துயருறுகிறாய் எனச் சொல்!
சுபத்ரா செறிவாக மொழியாக்கம் செய்திருக்கிறார். ஆங்காங்கு களையப்பட கூடிய சிற்சில கவனப் பிழைகள் உள்ளன என்றாலும் அவை வாசிப்பிற்கு தடையாக மாறவில்லை. சொல்லாதே காட்டு எனும் பொது இலக்கிய விதிக்கு மாறாக, நாவல் ‘சொல்லப்படுகிறது’ என்பதே இந்நாவலின் எல்லை. படைப்பின் மீது படிந்திருக்கும் எதிர்மறை போலித்தனங்களை விட்டொழித்து வாழ்வின் மீதும், படைப்பின் மீதும் நன்னம்பிக்கையை மீட்டெடுத்தல் என்பதே நாவலின் மையமாக உணர்ந்து கொண்டேன். நாவலின் பல தருணங்கள், கதாபாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தேன். விஸ்வநாத் கொள்ளும் அவநம்பிக்கைக்கு பதில் அவர் எழுதும் நாவலில் கிடைப்பதாக எனக்கு தோன்றியது. வாழ்வை பரிவுடன், கருணையுடன், நன்றியுடன், அன்புடன் அணுகி நோக்க முயல்கிறது. மக்கன்லாலுக்கும் உருது ஆசிரியருக்கும் இடையே நிகழும் உரையாடலின் ஒரு பகுதி இது (நாவலினுடைய ஓட்டத்திலிருந்து சற்றே விலகிய பகுதியாக தோன்றியது). “உண்மையில், செயலே பல சமயங்களில் சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் எதிரியாக இருக்கிறது. செயலில் இறங்க விரும்புகிற ஒரு மனிதன் அதற்கு முன்னதாக தனது மூளையை அமைதிப்படுத்த வேண்டும். இல்லையா? படகில் இருந்தபடி பீரங்கியை செலுத்த முடியுமா? சிந்திக்கிற மனிதன் ஒரு படகைப் போன்றவன். இல்லையா?உறுதியாக நின்று பீரங்கியின் அதிர்வை தாங்க முடியாதபடி எப்போதும் அசைந்து கொண்டே இருக்கின்ற ஒரு படகு. செயல் வீரர்கள் செயலில் இறங்கும் முன் தன்னைத்தான் கேள்விக் கேட்டுக் கொள்வதை நிறுத்தியே ஆகவேண்டும். ஆனால் எண்ணங்களின் மனிதன், நிச்சயங்களின் ஆபத்து குறித்து அறிதலும் அச்சமும் உடையவனாய் இருப்பதால் அவனால் கேள்வி கேட்பதை நிறுத்தமுடியவில்லை. ஆனால் செயல் வீரனாய் இருக்க முடியவில்லை என்பதற்காக உங்களை நீங்கள் நிந்தித்துக் கொள்ளத் தேவையில்லை.”
No comments:
Post a Comment