Sketch by Adhimoolam |
ஜனவரி 2025 காலச்சுவடு இதழில் வெளிவந்த கட்டுரை
முன்னூறு இதழ்கள் கடந்திருக்கும் காலச்சுவடிற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். தமிழ் சூழலில் காந்தியம் குறித்த உரையாடலில் காலச்சுவடின் பங்களிப்பை இந்த தருணத்தில் மதிப்பிடுவதே என் கட்டுரையின் நோக்கம். இதன் பொருட்டு சில நாட்களாக பழைய இதழ்களை புரட்டிக்கொண்டிருந்தேன். காலச்சுவடில் என் எழுத்துக்கள் முதல் முறையாக வெளியானது காந்தியின் பொருட்டுதான். ஏப்ரல் 2014 இதழில் அருந்ததி ராய் அம்பேத்கரின் ‘சாதி அழித்தொழிப்பு’ நூலுக்கு எழுதிய ‘முனைவரும் புனிதரும்’ எனும் விரிவான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியிடப்பட்டது. அந்த முன்னுரை அம்பேத்கரின் பங்களிப்பையும் அவரது சிந்தனையின் முக்கியத்துவத்தையும் எடுத்து காட்டுவதைவிட காந்தியை அவருக்கு எதிரியாக கட்டமைப்பதிலும் மேற்கோள்களை திரித்து காந்தியின் மீது
அவதூறு செய்வதிலும் அதிக கவனம் எடுத்துக்கொண்டதாக விமர்சிக்கப்பட்டது. அருந்ததிராய்க்கு ராஜ்மோகன் காந்தி எழுதிய விரிவான மறுப்பு ‘சுதந்திரமும் சமூகநீதியும்’ எனும் தலைப்பில் சிறு பிரசுரமாக சர்வோதயத்தில் வெளியானது. பி. ஏ கிருஷ்ணன் கோரிக்கொண்டதின் பேரில் ராஜ்மோகன் காந்தியின் பதிலில் இருந்து ஒரு பகுதியை காலச்சுவடு பிரசுரித்தது. அதன் பின் 2020 ஆம் ஆண்டு ‘காந்தி 150’ எனும் சிறப்பு பகுதியும் 2023 ஆம் ஆண்டு ‘இன்றும் காந்தி’ எனும் சிறப்பு பகுதியும் வெளியானதில் எனது பங்களிப்பும் உண்டு. திரிதீப் சுஹ்ருத்தின் ‘சத்திய சோதனை’ நூலுக்கான முன்னுரையிலிருந்து ஒரு பகுதி வெளியானது. ‘காந்தியும் ஆயுர்வேதமும்’ கட்டுரை பரவலாக கவனம் பெற்றது. ஆயுர்வேதம் எனும் பேசு பொருளைக் கொண்டு காந்தி மரபை எவ்விதம் அனுகினார் என காண முயற்சித்தது. ‘காந்தி சாதியவாதியா?’ என்னும் கேள்விக்கு காந்தியின் எழுத்துக்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அவரது வாழ்க்கை தருணங்களையும் கருத்தில் கொண்டு புதிய கோணத்தில் தனது வாதங்களை நிஷிகாந்த் கோல்கேயின் நூல் முன்வைக்கிறது. அண்மை காலத்தில் வெளிவந்த இவ்விறு சிறப்பிதழ்களில் த. கண்ணன், விஷ்ணு வரதராஜன், சித்ரா பாலசுப்பிரமணியம், சுரேஷ் பிரதீப், அரவிந்தன் கண்ணையன், பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் போன்றவர்கள் எழுதியுள்ளார்கள். இவை அண்மைய காலத்தில் வெளிவந்தவை என்பதால் இந்த கட்டுரையில் இவற்றை குறித்து பேசுவதை தவிர்க்க விரும்புகிறேன். இதற்கு முன் 2005, 2008 ஆண்டுகளில் காலச்சுவடு காந்தி சிறப்பு பகுதிகள் வெளிவந்துள்ளன. அவற்றுக்கும் இவற்றுக்கும் இடையே என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை அவதானிப்பது சுவாரசியமாக இருக்கக்கூடும்.பெரும்பாலான இந்தியர்களுக்கு இருப்பது போலவே எனக்கும் காந்தியின் மீது மதிப்போ வெறுப்போ ஆர்வமோ இல்லாத உறவு தான் இருந்தது. இதன் பொருள் என் அன்றாட வாழ்வில் அவருக்கு எந்த இடமும் இல்லை என்பதுதான். இது மாறியதற்கு இரு முக்கிய காரணிகளை என்னால் சுட்ட முடியும். ஒன்று, ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ இரண்டு ‘இறுதி கட்ட ஈழப்போர்.’ காந்தியை போன்றே ஈழ அரசியல் குறித்தும் எனக்கு பெரிய அறிதலோ ஆர்வமோ கிடையாது. ஆனால் அதன் இறுதி தருணங்கள் மனதில் ஒருவித பதைப்பை உண்டாக்கியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் இன்றைய காந்தியும் வெளியானதாக நினைவு. ஒரு வரலாற்று ஆளுமைக்கு சரிநிகராக அமர்ந்து உரையாடும் வாய்ப்பு நமக்கு வெகு சிலரிடம் மட்டுமே கிடைக்கும். காந்தியை அத்தகையவராக அவரது அத்தனை முரண்பாடுகளோடும் கண்டுகொண்டேன். ‘காந்தி- இன்று’ என்று இணையதளத்திற்கு பெயரிட இரண்டு காரணங்கள். ஜெயமோகனின் நூலும், சுந்தர ராமசாமியின் கட்டுரையும். 1986 ஆம் ஆண்டு ஞானரதம் இதழில் வெளியான ‘காந்தி இன்று’ கட்டுரையில் காந்தியை எப்படி அணுக வேண்டும் என அறிவுறுத்துகிறார். “நேர்மையான மறுபரிசீலனைக்கான காலம் இப்போது தோன்றுகிறதோ என மகிழ்வு கொள்வதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த மறுபரிசீலனை செம்மைப்பட நாம் காந்தியுடன் எந்தவிதமான உறவுகொள்ள வேண்டும்? இதுதான் மிக முக்கியமான விஷயம். நாம் சேர்த்து வைத்துக்கொண்டிருக்கும் எண்ணங்களிலிருந்து விடுதலை பெறவேண்டும். மேற்கத்திய சித்தாந்தங்கள் எவற்றிலும் சிறைப்பட்டு நிற்காமல், மதக் கோட்பாடுகள் எவற்றிலும் சிக்குண்டு கிடக்காமல் நாம் அவரைப் பார்க்க வேண்டும். எவ்விதமான முடிவுக்கும் வர நாம் இயற்கையாகப் பெற்றிருக்கும் சுதந்திரத்தை, எந்த அமைப்புக்காகவும் விட்டுக்கொடுக்கப் பிடிவாதமாக மறுத்து, திறந்த மனத்துடன் நாம் அவரைப் பார்க்க வேண்டும்.” சு ராவின் காந்தி குறித்த பார்வையின் நீட்சி காலச்சுவடில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்று எண்ணுகிறேன்.
2000 க்கு மத்தியில் காந்தி மீதான கவனம் மீண்டும் துளிர்க்க தொடங்கியதற்கு என்ன காரணம் என ஆராய வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டமும் தனக்கான சிக்கல்களை கொண்டிருப்பது போல அவற்றுக்கான முறை மருந்துகளையும் கொண்டிருக்கும் என நம்புகிறேன். உலகமயமாக்கல் வாசல்களை திறந்துவிட்டது. ஒருவகையில் உலகமயமாக்கல் முதலில் கோரும் பலியாக காந்தி தான் இருப்பார் என்பது பரவலான நம்பிக்கையாக இருந்தது. ஆனால் ரிலையன்ஸ் மால்களில் சிகார் பிடிக்கும் சேகுவேரா டி ஷர்டுகளை விற்பனை செய்வது போல உலகமயமாக்கல் எதிர்பாராத விளைவுகளையும் ஏற்படுத்தியது. நுகர்வின் உச்சத்தில் திளைத்து பொருளின்மையை உணரும் ஒரு நகர்ப்புற / படித்த மேல் நடுத்தர வர்க்கம் 2000 களின் மத்தியில் உருவானது.
அக்டோபர் 2005 காலச்சுவடு இதழில் எஸ். பிரசன்னா எழுதிய ‘‘காந்தியும் நானும்’ இந்த புதிய தலைமுறையின் பிரதிநிதி என சொல்லலாம். புதிய குரல்கள் கேட்க தொடங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் காலச்சுவடு இதழ்களில் பங்காற்றிய சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம் போன்றோரின் குரல்கள் இதே மரபின் தொடர்ச்சி என தோன்றுகிறது. கண்ணன் தண்டபாணி தொடங்கி இன்று முனைப்புடன் செயலாற்றி வரும் குக்கூ சிவராஜ் குழுவினர் வரை இந்த சரடு இன்றுவரை உயிர்ப்புடன் உள்ளது. ‘அரசியல் காந்தி’ மீது இவர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. களச் செயல்பாட்டிற்கு காந்தியிடமிருந்து ஊக்கத்தைப் பெற்றுக்கொண்டவர்கள். பிரசன்னாவின் ‘காந்தியும் நானும்’ கட்டுரை அரசியல் நீக்கம் செய்யப்பட அந்தரங்கமான காந்தியை முன்வைக்கிறது. “காந்தியுடன் என்னால் தனிப்பட்ட முறையில் உறவுகொள்ள முடிகிறது. தனிப்பட்ட பிரச்சினைகளைப் பேச முடிகிறது. இந்த உலகுடன் உறவுகொள்ள, இந்த உலகைப் புரிந்துகொள்ள அவரால் எனக்கு உதவி செய்ய முடிந்தால் அதுவே போதுமானது. உலகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க என்னால் வழி கூற முடியாது. உலகமயமாக்கல் நல்லதா, கெட்டதா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல முடியாது. பொருளாதாரம், தொழில்நுட்பம், வளர்ச்சி பற்றிய கேள்விகள் முடிவில்லாத விவாதத்திற்குரியவை. காந்தியாலும் இதற்கெல்லாம் விடைகூற முடியுமா என்பதும் சந்தேகம்தான். உலகம் தற்போது எதிர்கொள்ளும் தீவிர வாதத்தைக் காந்திய வழிப்படி எதிர்கொள்ள முடியுமா என்பதற்குப் பதில் கூறுவதும் எளிதல்ல. ஆனால் என்னால் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிமை என்ற கருத்தைப் புரிந்துகொள்ள முடியும். அடுத்த வீட்டில் இருப்பவருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான நெறிகளை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அதுதான் இப்போதைக்குச் சாத்தியம். நமது தனிப்பட்ட வாழ்க்கையில் காந்தி ஏற்படுத்தும் மாற்றம் நம்முடைய ஆத்ம சத்தியால் நாளை அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியலாம். காந்தி போன்றவர்கள் ஒட்டு மொத்தச் சமுதாயத்தின் நீடித்ததவத்தின் விளைவாய்த் தோன்றுபவர்கள். ஒரு சமுதாயத்தின் சராசரித் தரத்தைத் தாண்டிய மாபெரும் பாய்ச்சலை அச்சமுதாயத்தினுள் இருக்கும் ஒருவரால் நிகழ்த்த முடியாது. காந்தி, அவர் வாழ்ந்த சமூகத்தின் கூட்டுப் பிரக்ஞையின் லட்சிய வடிவம்.”
எண்பதுகளிலும் தொன்னூறுகளிலும் ‘அரசியல் காந்தியே’ அதிகமும் விவாதிக்கப்பட்டார். இடதுசாரி எழுச்சி, தலித் அமைப்புகளின் வளர்ச்சி காந்தியை முழுக்க எதிர்மறையாக அணுகின. ஆகவே ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்திற்குள் அவரை நுணுகி ஆராயும் மயிர்பிளக்கும் விவாதங்கள் அதிகமும் நிகழ்ந்தன. அறிவு சூழலுக்கு வெளியே காந்தி பரவலடைவார் என்பதை எவரும் கணித்திருக்க முடியாது. மரபான காந்திய அமைப்புகளும் ஆசிரமங்களை அதை தோற்றுவித்தவர் மறைந்ததும் வலுவிழந்து போவதை தான் நாம் காண்கிறோம். உதாரணமாக ஏப்ரல் 2006 இதழில் தியோடர் பாஸ்கரன் எழுதிய ‘காந்தியும் கிறிஸ்துவும்’ எனும் கட்டுரை வேலூர்- திருப்பத்தூரில் ஆசிரமம் அமைத்து தொண்டாற்றிய மருத்துவர் சவுரிராயன் யேசுதாசனை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தேசிய கண்ணோட்டம் கொண்ட கிறிஸ்தவர்கள் காந்தியால் ஈர்க்கப்பட்டு காலனிய காலகட்டத்து கிறிஸ்தவ மைய நீரோட்டத்திலிருந்து விலகி இத்தகைய ஆசிரமங்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் அமைத்திருக்கிறார்கள். பெரும்பாலும் அவற்றை தோற்றுவித்தவர் மரணமடையும் போது அந்த அமைப்பும் செயலற்று போகின்றன. உலகமயமாக்கலுக்கு பிறகு ஒருவகையில் காந்தியும் ‘பிராண்ட்’ ஆக ஆனார். காந்தி இப்படி புதிய தலைமுறையினரிடம் பரவலாவதை அவரை எதிர்க்கும் அரசியல் தரப்புகள் எரிச்சலுடன் எதிர்கொண்டிருக்க வேண்டும். ஆகவே காந்தியை அரசியல் ரீதியாக நிராகரிக்க வேண்டிய காரணங்களையும் விமர்சனங்களையும் அவர்கள் முன்வைத்தார்கள். அவை ஏற்கனவே அறுதி உண்மைகளாக அவர்களால் கருதப்பட்டவை. 2005 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் நெய்தல் கிருஷ்ணனும் பிரசன்னாவும் எழுதிய கட்டுரைகளுக்கு வந்த எதிர்வினைகள் இதை காட்டுகின்றன. இரா. முருகானந்தம் பிரசன்னாவின் கட்டுரையை சிலாகித்து எழுதியிருக்கிறார். ஜனவரி 2006 இதழில் காந்தியை மதிப்பிடுவது சார்ந்த விவாதத்தில் பிரசன்னா எழுதுகிறார் ‘அவர் பெரிதும் பாராட்டப்படுவது அவர் குறையற்றவர் என்பதால் அல்ல, ஒரு சாதாரண மனிதன், ஏசுவைப் போன்றோ புத்தரைப் போன்றோ ஐன்ஸ்டைனைப் போலவோ கடவுளின் குழந்தையாகவோ பிறவி மேதாவியாகவோ பிறக்காமல், தன் முயற்சி மற்றும் ஆத்மசக்தியால் மட்டுமே உயர்ந்த நிலையடைந்தார் என்பதால்.’ காந்தி மீதான அரசியல் விமர்சனங்கள் இந்த தலைமுறைக்கு பெரிய விஷயமாக இல்லை. அவரை காபந்து செய்ய வேண்டும் எனும் ஏதுமற்றவர்கள். அரசியல் வரம்பிற்குள் அவரை விமர்சித்து நிராகரிக்கும் தலைமுறைக்கும் அரசியல் நீக்கம் செய்யப்பட காந்தியிடமிருந்து ஊக்கம் பெறும் தலைமுறையினருக்கும் இடையேயான உரையாடலாக இதை காண முடியும். தி. அ. ஸ்ரீனிவாசன் திருச்சி கருப்பையாவிற்கு எழுதிய மறுப்பில் ‘போயர்’ என்பது ஆப்பிரிக்க பூர்வகுடி எனும் நம்பிக்கை வெளிப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அது அப்படி அல்ல என்பதை விளங்கியதை வாசிக்கும்போது வேடிக்கையாக இருந்தது. காந்தியை விமர்சிப்பதில் நமக்கு இருக்கும் முன்முடிவுகளும் அவசரங்களும் எத்தகையது என்பதற்கு சிறந்த உதாரணம் . அருந்ததி ராய் காந்தி வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கும் அதே எண்பதுகளின் திரைக்கதையை மீள கொண்டுவருகிறார். அன்னா ஹசாரே இயக்கம் உட்பட மத்திய வர்க்கத்தினரின் எழுச்சிகளை எளிதில் புறந்தள்ளுகிறார். காந்திய ஈடுபாடும் அவருக்கு அப்படியான மோஸ்தராக தான் தென்படுகிறது.
இந்த உரையாடலும் நன்மையையே விளைவித்தது. இந்த புதிய தலைமுறை இளைஞர்களில் ஒரு சாரார் என் ஜி ஓ செல்கிறார்கள். சிறிய எண்ணிக்கையிலானவர்கள் காந்தியை ஆழ்ந்து அறிய தொடங்கினார்கள். இதே பிரசன்னா தான் ஆகஸ்ட் 2014 இதழில் ‘அருந்ததி ராயின் காந்தி’ என அவருக்கு வலுவான மறுப்பை எழுதுகிறார். “திரைக்கதை எழுதும் அவருடைய திறமையைப் பயன்படுத்தித் தலித்துகளின் எழுச்சி என்ற வரலாற்றில் காந்தியின் ‘வில்லத்தனமான’ பங்கைப் படிப்படியாக அடுக்குகிறார். இந்தச் செயலில் அவரும் இந்துக்களின் மரபார்ந்த பழக்கமான தொன்ம உருவாக்கலில் தான் ஈடுபடுகிறார். அவருடைய கட்டுரையிலிருந்து அம்பேத்கரைவிட காந்தியைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்கிறோம். அதுவும் ராய் நமக்குக் காட்ட விரும்பும் காந்தியை. ராயின் நாடகத்தில் காந்தி ஒரு துராத்மா. அவர் ஒரு பொய்யர். மனுவாதி. நிற வெறியர். அம்பேத்கருக்கு எதிரான சதிகாரர்.”
பிரசன்னாவை போலவே சங்கீதா ஸ்ரீராம், இரா முருகானந்தம், த. கண்ணன் போன்றோர் காந்தியை அரசியல் ரீதியாகவும் முன்வைக்கும் வலுவான குரல்களாக ஆயினர். காந்தியின் குறைகளை, தளைகளை ஏற்றுக்கொண்டு அவரது ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அதிகம் முன்னிறுத்துபவர்களாக ஆயினர். அசிஷ் நந்தி, ராமச்சந்திர குஹா, மகரந்த் பரஞ்சபே போன்றோர் வழி காந்தியை நெருங்கினர். ‘காலச்சுவடு’ இந்த தலைமுறையை உருவாக்கியது என்று சொல்வதை விட இப்படியான தலைமுறையின் இருப்பை கண்டுகொண்டு அவர்களுக்கான வெளியை அமைத்து கொடுத்தது என்பதை சொல்ல வேண்டும். அரசியல் காந்தியின் முக்கியத்துவத்தை உணர்த்தியதில் காலச்சுவடின் பங்கு முக்கியமானது என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக இந்துத்துவ எழுச்சியின் பின்புலத்தில் அரசியல் காந்தி மறுவாசிப்பு செய்யப்படுகிறார், மீள கண்டடையப்படுகிறார். 2010 முதல் ஏழெட்டு ஆண்டுகள் இணையத்தில் தீவிரமாக செயல்பட்ட இன்னொரு பெயரையும் குறிப்பிட வேண்டும். ராட்டை ரகு சமூக ஊடகங்களில் போகிற போக்கில் காந்தி மீது குவிக்கப்படும் அவதூறுகளுக்கு அயராமல் தரவுகளுடன் பதில் அளித்தார். இன்று அவை கணிசமாக குறைந்ததற்கு அவருடைய பங்களிப்பு முக்கியமானது என்று எண்ணுகிறேன்.
ஒரு சிந்தனை எப்படி சமூகத்தில் ஊடுருவுகிறது என்பதை கவனிப்பது சுவாரசியம். கோட்ஸே என்பவர் தனி மனிதர் அல்ல, அதே விளைவை விரும்பிய திரளின் பிரதிநிதி எனும் பார்வை எனக்கு உண்டு. இந்த பார்வையை நான் வந்தடைய முக்கியமான காரணம் தேவி பாரதியின் ‘பிறகொரு இரவு’ குறுநாவல். காவல்துறையினரும், அரசியலில் அவர் பெயரை சொல்லி ஆதாயம் பெறுபவர்களும் காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் வெளிப்படும். ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ எனும் சிறப்பு பகுதி வெளியாகிறது. தி. அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் அசிஷ் நந்தியின் நீள் கட்டுரை ‘இறுதி சந்திப்பு’ அந்த இதழில் தான் வெளியானது. இக்கட்டுரை வெளியாவதற்கு பதிமூன்று ஆண்டுகள் முன்னர் தி.அ. ஸ்ரீனிவாசன் மொழியாக்கம் செய்த நந்தியின் இன்னொரு கட்டுரை ஏப்ரல்- ஜூன் 1995 காலச்சுவடு இதழில் வெளியானது. இன்று அக்கட்டுரையை வாசிக்கும்போது மனம் உவகை கொள்கிறது. நந்தியை தமிழ் சிந்தனை பரப்பில் அறிமுகப்படுத்தியது காலச்சுவடின் மிக முக்கியமான பங்களிப்பு என்று கருதுகிறேன்.
‘காந்தியும் கோட்ஸேயும் இந்தியாவின் எதிர்காலம்’ கட்டுரையில் கோட்ஸேயை தனித்த வெறியனாக சித்தரிக்க முயல்வதற்கு மாறாக அவனை ஒரு தரப்பின் பிரதிநிதியாக நிறுத்தி காட்டுகிறார் நந்தி. கோட்ஸேயுடைய அரசியல் வாழ்க்கை 30 களில் காந்தி தொடங்கிய ஒத்துழையாமையில் தொடங்கி அவரை சுடுவதற்கு முன்பான வணக்கத்துடன் முடிவடைந்தது என்கிறார். காந்தியை கொன்றதற்காக கோட்ஸேவை விமர்சிக்கும் ஆர்தர் கோஸ்லர், ஆர்வல் போன்றோரிடம் கூட கோட்ஸேவுடைய அதே சிந்தனையே வெளிப்படுகிறது என்கிறார். கோட்ஸே பகுத்தறிவுவாதி, அறிவியலை நம்புபவன், சீர்திருத்தவாதி, தயவு தாட்சண்யமற்ற அரசியலை முன்னிறுத்துபவன். அவன் உண்மையான காரண காரிய அறிவு சித்தாந்தத்தின் நவீன பிரதிநிதி. அதிநவீன இந்துவாக பிரகடனப்படுத்திக்கொண்ட அவன் இந்தியா சமய சார்பற்ற இனவேறுபாடாற்ற நாடாக திகழ வேண்டும் என்று விரும்பினான். இன்றுவரை ஆர். எஸ்.எஸ் நிலைப்பாடு அதுவே. காந்தி இவற்றுக்கு நேர் எதிரானவர். அந்த கட்டுரை இப்படி முடிகிறது ‘நவீன உலகின் சார்பாகவும் அதன் ஆர்வல்கள் கோஸ்லர்கள் மற்றும் கிஸ்ஸிங்கர்கள் சார்பாகவும் காந்தியை கொலை செய்வதைத்தவிர கோட்ஸேவிற்கு வேறு வழியில்லை. காந்திக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் கோட்ஸேவை விரட்டி ஓட்டுவதற்கு மரணத்தை ஏற்றுக்கொள்வதைத்தவிர வேறு உகந்த வழி இல்லை.’ ஜி. நாகராஜனின் ‘கிழவனின் வருகை’ சிறுகதை கோட்ஸே குறித்த இத்தகைய பகுப்பாய்வை நந்தி எழுதுவதற்கு பலகாலம் முன்னரே முன்வைக்கிறது. நவீனத்துவம் காந்தியை புரிந்துகொள்வதில் எதிர்கொண்ட சிரமங்களை புரிந்துகொள்ள முடிகிறது. அம்பேத்கர், பெரியார், சாவர்க்கர் உட்பட காந்தியை விமர்சித்த தரப்புகள் நவீனத்துவ தன்மை கொண்டவை என தோன்றுகிறது. இந்த கட்டுரை 1995 ல் என்னவகையான சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்? காலச்சுவடு வெளியிட்ட கோட்ஸே ஆதரவு கட்டுரையாகவே இது பொருள்பட்டிருக்கும். விமர்சனங்களுக்கு பதில் எழுதும் முகமாக தி. அ ஸ்ரீனிவாசன் டிசம்பர் 1995 இதழில் ஒரு குறிப்பு எழுதுகிறார். கோட்ஸே நகர்ப்புற, நவீனமயமான, உயர்சாதி மேற்கத்திய வயப்பட்ட தனியான சலுகைகள் வேண்டும் என கோரும் தரப்பின் பிரதிநிதி எனும் நந்தியின் கூற்றை சுட்டிக் காட்டுகிறார். காந்தியோ கிராமப்புற சாமானியர்களின் தரப்பை சார்ந்தவர். அவர்களது அறியாமையை வளர்ச்சிக்கான தடையாக காணும் மேட்டுக்குடியினரின் தரப்பு தான் கோட்ஸே எனும் நந்தியின் பார்வையை விளக்குகிறார். 2008 ஆம் ஆண்டு இதே கோணத்தை விரிவாக பேசும் நந்தியின் கட்டுரை வெளியானபோது இத்தகைய எதிர்வினைகள் வரவில்லை. நந்தியின் கோணம் அறிவு சமூகத்தில் பொது ஏற்பு பெற்றுவிட்டது என்பதையே இது குறிக்கிறது.
‘இறுதி சந்திப்பு’ கட்டுரையின் பேசுபொருளை மட்டும் முன்வைத்து தனியாக இன்னொரு கட்டுரை எழுத முடியும். “கிருஷ்ணனுக்குக் கம்சன் எப்படியோ அப்படித்தான் காந்திக்குக் கோட்சேயும். ஒருவருக்கொருவர் எதிரானவர்கள் என்றாலும் இருவரும் பிரித்துப்பார்க்க முடியாதவர்கள், கம்சன் கிருஷ்ணனை அறிந்திருந்த அளவுக்கு அர்ஜுனன் கிருஷ்ணனை ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. வெறுப்பு அன்பைக் காட்டிலும் பிணைப்பு மிகுந்தது. அன்பு பார்வையை மழுங்கச் செய்யும்; வெறுப்போ அதைக் கூர்மையாக்கும்.” எனும் டி.கே. மகாதேவன் மேற்கோளோடு தொடங்குகிறது கட்டுரை. “அரசியல் படுகொலைகள் ஒவ்வொன்றும் கொலையாளியும் அவனுக்குப் பலியாகுபவரும் இணைந்து கூட்டாகத் தயாரித்தளிக்கும் ஓர் அறிக்கை.” எனும் வரியொரு தீர்க்க தரிசனம் போல ஒலிக்கிறது. காந்தி எதை மாற்ற முயன்றார் என விவாதிக்கும் பகுதி மிகவும் முக்கியமானது. இந்தியாவின் பாரம்பரிய அதிகார அமைப்புக்குக் காந்திய அரசியல் தரப்பு இரண்டு தளங்களில் ஆபத்து விளைவிப்பவையாக பார்க்கப்பட்டன. இந்தியச் சமூகத்தின் மையமும் விளிம்பும் எவை? அவற்றின் வரையறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் காந்தியின் முயற்சிகள் முதல் ஆபத்து. இரண்டாவது, சமூகத்தின் உள்ளோட்டமாக இருந்த ஆண்மை, பெண்மை பற்றிய கருதுகோள்களின் மீதான அவரது மறுதலிப்பு. அறிவு புனிதமானதாகவும் பிராமணியத்தன்மைகொண்டதாகவும் நம்பவைக்கப்பட்டிருந்த ஒரு கலாச்சாரப் பின்புலத்தில், கருத்துக்குச் செயலினும் மேலான புனிதத் தன்மை அளிக்கப்பட்ட ஒரு சூழலில் அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை ஏற்காமல் அதற்கு மாறாக இந்திய அரசியலை அறிவுஜீவித்தனத்திலிருந்து விடுவிப்பதே அவரது முதல் குறிக்கோளாக இருந்தது என நந்தி எழுதுகிறார்.
காந்தியச் சிந்தனையின் இன்னொரு முக்கிய அம்சமாக நந்தி கவனப்படுத்துவது, மனித சமூகத்தைப் பண்படுத்தும் சக்தியாகப் பெண்மையை அவர் கண்டறிந்ததை தான். ஆள்வோர் ஆளப்படுவோர் ஆகிய இருதரப்பின் ஆண் அடையாளத்திற்குள் பெண்மையின் அம்சங்களான ஆக்கிரமிக்காத தன்மை, அரவணைக்கும் குணம், அஹிம்சை, இயற்கையோடும் சமூகத்தோடும் தன்னை முன்னிலைப்படுத்தாமல் 'கலந்து' செயல்படும் தன்மை போன்றவற்றை விரிவுபடுத்தக் காந்தி முயன்றார் என்கிறார். காந்தி பாலியலைக் கடந்த, இந்து சமய மகாத்மாவாக மட்டுமின்றி, கிறித்தவத்தில் புனித பிரான்ஸிஸ்ஸைப் போலக் கிறித்துவின் மணப்பெண்ணாகவும் இருக்க விரும்பினார் என்று கூறுகிறார். நாதுராம் கோட்ஸே தனக்குள்ளிருந்த பெண் தன்மையை அழித்து ஆண் தன்மையை முன்னிறுத்தியவன். நாதுராம் ஒரு பெண்ணாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு மூக்குக் குத்தப்பட்டு வளையம் (நாத்) இடப்பட்டது. இதனால் ராமச்சந்திரா என்னும் இயற்பெயர் கொண்ட அவன் நாதுராம் என்று அழைக்கப்படலானான். அவனுக்கு சிறுவயதில் குறிசொல்லும் திறன் இருந்து வளர்ந்து அவனது சமூக பார்வை விரிவடையும் போது அது மறைந்துவிடுகிறது. ஒருவகையில் இதை பெண் தன்மையின் அழிவு என கொள்ளலாம். அந்தராத்மாவின் சன்னமான ஆனால் திடமான குரல் காந்திக்கு ஒலித்தபடி இருந்ததை ஒப்பிட்டு நோக்க வேண்டும். ஜெயமோகனின் வெண்முரசு நாவலில் துரியோதனன் தனக்குள்ளிருக்கும் பெண்மையை அழிக்கும் சித்திரம் நந்தியின் மேற்சொன்ன பார்வையின் நீட்சி என கொள்ள முடியும். காந்தி கொலையைப் பற்றி இப்படி எழுதுகிறார். “ஒரு சமூகத்தின் மையமாக இருப்பதை உடைத்தெறிந்து, புதியதொரு சுதந்திரமான சமூகத்தையும் பழமையின் சிதைவுகளிலிருந்து புதியதொரு அதிகார அமைப்பையும் ஏற்படுத்த முயன்றதன் மூலம், அச்சமூகத்தின் அதிகார மரபுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்த சக்தி ஒன்றைக் கட்டுக்குள் வைப்பதற்காக, அந்த மரபுகள் முயன்ற கதை இது என்று கொள்ளலாமல்லவா?” தேவிபாரதியின் ‘பிறகொரு இரவு’ கதைக்கு உந்துதலாக நந்தியின் கட்டுரைகள் இருந்திருக்கக்கூடும் என தோன்றுகிறது. ஜனவரி 2008 காந்தி சிறப்பிதழில் தான் தேவிபாரதியின் கதையும் வெளிவந்தது. நந்தியை வாசிக்காமல் தேவிபாரதியின் வழியே நான் நந்தியின் கூற்றை சென்றடைந்திருக்கிறேன்.
ஜனவரி 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பு பகுதியில் இடம்பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் முக்கியமானது. காந்தி மீது அறிவுஜீவிகளுக்கு இருந்த விலக்கம் பற்றி யு.ஆர். அனந்தமூர்த்தியின் ‘இன்றைக்கு இருக்கும் காந்தி’ கட்டுரை விவாதிக்கிறது. இன்றைய அறிவுஜீவிகளின் சிக்கலையும் காந்தி அவர்களிடமிருந்து வேறுபடும் இடத்தையும் பேசுகிறது. “அறிவு ஜீவிகளான நாம் நாலைந்து அடி முன்னால் எடுத்து வைத்ததுபோலத் தெரிந்தாலும், நாலைந்து அடி பின்னுக்குப் போயிருப்போம். ஆளுகிறவர்கள் யார் என நாம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்படி சற்றாவது பேசியிருப்போம். காந்தி சமூகம் மற்றும் தேசம் பற்றிய கேள்வியை ஒரு சம்சாரியின் நிலையிலிருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.” அனந்தமூர்த்தியின் அவதானிப்புகள் கூர்மையானவை. காந்திக்குத் தொழில்நுட்பவாதியின் குணம் இருந்ததாக குறிப்பிடும் அவர் காந்தியை ராமனுடன் ஒப்பு வைக்கிறார். புனைவு எழுத்தாளராக அனந்தமூர்த்தியின் சொற்கள் கூர்மையானவை. அவதானிப்புகள் துல்லியமானவை. “ஒரு தேசத்தை ஏககாலத்தில் ஒரு சமூகமாகவும் தேசமாகவும் பார்க்கும் வல்லமை காந்திக்கு இருந்தது” என்பது மிக முக்கியமான அவதானிப்பு. நம்மால் தேசமாக பார்க்கும்போது சமூகமாக பார்க்க முடிவதில்லை, சமூகமாக பார்க்கும்போது தேசமாக காண முடிவதில்லை. காந்தி நம் துக்கங்களிலும் சங்கடங்களிலும் நிலைத்திருப்பார் எனும் அனந்தமூர்த்தியின் கூற்று அதன் உண்மையால் நிலைபெறுகிறது. நாதியற்றவர்களுக்குரிய போராட்ட வடிவத்தை கண்டடைந்தவராக காந்தி என்றும் நினைவுகூரப்படுவார்.
சுற்றுச்சூழல், கடவுள் நம்பிக்கை, சத்தியாகிரகம், பொது வாழ்க்கை ஆகிய நான்கு தளங்களில் காந்தியின் தேவை இன்றுமுள்ளதாக அடையாளப்படுத்துகிறார் ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி இன்னும் தேவைப்படுகிறார்’ எனும் கட்டுரையில். ஜி எஸ் ஆர் கிருஷ்ணன் எழுதிய ‘அறியப்படகுட காந்தி’ இந்த சிறப்பிதழில் எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த கட்டுரை. சில அசலான அவதானிப்புகளை கிருஷ்ணன் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். ‘சுதேசியம் என்பது ஒரு சித்தாந்தம். கதர் என்பது சுதேசியத்தின் மையமான, பருண்மையான உண்மை. கதரில்லாத சுதேசியம் என்பது உயிரற்ற உடம்பு போன்றது. புதைப்பதற்கோ அல்லது எரிப்பதற்கோ மட்டுமே அது தகுதியானது.' எனும் காந்தியின் மேற்கோளை கொண்டு காந்தி கொள்கையை உயிர் என்றும் நடைமுறையை உடல் என்றும் காணும் பொதுப்போக்கை எப்படி தலைகீழாக ஆக்குகிறார் என்பதை காட்டுகிறார். ஸ்டாலின் ராஜாங்கம் வழி நான் அறிந்துகொண்ட அயோத்திதாசர் வரலாறு என்பது இறுகிய பாறையல்ல, நெகிழ்வானது, காலந்தோறும் மாறுவது என்பதை எனக்கு கற்றுக்கொடுத்தார். காந்திக்கும் வரலாறு குறித்து இத்தகைய பார்வையிருந்ததை அறியும்போது வியப்பாக இருந்தது. கிப்பனின் ரோம சாம்ராஜ்யம் எனும் வரலாற்று நூலை காட்டிலும் மகாபாரதம் மேலானது என காந்தி கருதியதாக கிருஷ்ணன் எழுதுகிறார். “உண்மைக்கும் புனைகதைக்குமான இடைவெளி மிகவும் குறுகியது. வரலாறே இல்லாத நாடுதான் மகிழ்ச்சியானதென்று தான் கருதுவதாகவும்” காந்தியின் சிந்தனைகளை பற்றி கிருஷ்ணன் எழுதுகிறார். வரலாறு ஆயுதமாக பயன்படக்கூடும் எனும் புரிதல் காந்திக்கு இருந்ததாக தெரிகிறது. கலை குறித்து காந்திக்கும் ராமச்சந்திரனுக்கு இடையே நிகழ்ந்த உரையாடல் இன்றும் விவாதத்திற்கு உரியது. ‘எப்போது மனிதன் சத்தியத்தில் அழகைக் காண முடிகிறதோ அப்போதுதான் உண்மையான கலை உருவாகும்' என்பதே அவர் நோக்கில் கலைக்கான வரையறை. 'சத்தியத்தையும் அழகையும் பிரிக்க முடியாதா?' என்னும் ராமச்சந்திரனின் கேள்விக்குக் காந்தியின் பதில் 'உண்மையைத் தவிர அழகானது ஒன்றுமில்லை. ஆனால், உண்மை பல விதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.’ வி. ராமமூர்த்தி காந்தியின் கடைசி இருநூறு நாட்கள் நூலுக்கு எழுதிய முன்னுரையும் வெளியாகியுள்ளது. சுகுமாரன் மொழியாக்கத்தில் அம்பேத்கர் பார்வையில் காந்தியம் எனும் அப்துல் மஜீதின் கட்டுரை இதே இதழில் வெளியாகியுள்ளது. காந்தியத்தை விமர்சன நோக்கில் அலசுகிறது.
தமிழ் காந்திய எழுத்துக்களில் 2008 ‘அறியப்படாத காந்தி’ சிறப்பிதழுக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்று நம்புகிறேன். ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ நூலில் நந்தி, குஹா போன்றோரின் தாக்கம் வெளிப்படுகிறது. 2008 சிறப்பிதழில் பெரும்பாலான கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்தன. 2020, 2023 சிறப்பிதழ்களில் அணில் நூரியா, திரிதீப் சுஹ்ருத் போன்றோரின் ஒருசில கட்டுரைகள் மட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டன. பிற கட்டுரைகள் அனைத்துமே அசலானவை. காந்தியை பற்றி பேசவும் எழுதவும் சில அசலான குரல்கள் இடைப்பட்ட காலத்தில் உருவாகியுள்ளன என்பதையே இது காட்டுகிறது. இந்த குரல்கள் இங்கு நிலைபெற வேறு பல ஆளுமைகள் காரணிகளுடன் சேர்ந்து காலச்சுவடு இதழும் நிச்சயம் முக்கிய பங்காற்றியுள்ளது என சொல்ல முடியும்.
காந்தி சிறப்பிதழ்களை தவிர கணிசமாக காந்தியை குறித்து எழுதப்பட்டுள்ளன. அவ்வப்போது விமர்சனபூர்வமான எழுத்துக்களும் பதிவாகியுள்ளன. ப்ரேமின் காந்தியை கடந்த காந்தியம் புத்தக பகுதி இரண்டு கட்டுரைகளாக பிரசுரமாகியுள்ளன. நவம்பர் 2018 இதழில் ‘காந்தியால் தொடங்கிய தலித்துகளுக்கான பள்ளிகள்’ எனும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் கட்டுரை காந்தியின் அரசியல் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயல்தளத்தில் அவரை மதிப்பிட முனைகிறது. “மதுரையின் கீழடி போன்ற பண்பாட்டுப் பெருமையோடு இணையும் நம்முடைய உளவியல், சேவாலயம் போன்ற சமூகப் போராட்டப் பெருமையோடு இணைவதில் தயக்கம் கொள்கிறது. ஏனெனில் கட்டமைக்கப்பட்ட முற்போக்குப் பிம்பத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நமக்கு அது தொந்தரவாய் இருப்பதில்லை. வரலாற்றில் நிகழ்ந்துவிட்டதால் மட்டுமல்ல அதை ஆதரிக்கிறோமோ இல்லையோ அவ்வாறு நடந்தது என்ற அளவிலாவது பலவற்றைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்குச் சொல்லப்படும் ‘முற்போக்கு’ வரலாறு முற்றிலும் அரசியல் மயப்பட்டது. இதையெல்லாம் தாண்டி காந்தியர்களும் இக்களத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை வரலாற்று நிலை கருதியாவது தலித்துகள் கவனத்தில் கொள்வார்கள் என்று நம்பலாம்” என எழுதுகிறார். நவம்பர் 2024 இதழில் ஜெ. பாலசுப்பிரமணியம் எழுதிய ‘மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்’ எனும் கட்டுரையில் ‘ஆனால் இன்று தலித்துகள் காந்தியையும் காந்தியர்களையும் ஏற்றுக்கொண்டால் கூட மற்றவர்கள் அதை அனுமதிக்க’த் தயாராக இல்லை என்பதையே இந்த விமர்சனங்கள் காட்டுகின்றன’ என்று எழுதுகிறார். தலித்துக்கள் மதுவிலக்குக்காக நடத்திய பத்திரிக்கைகள், சங்கம் குறித்தும் காந்தி- இராஜாஜி ஆகியோர் மதுவிலக்கு சார்ந்து ஆற்றிய பணிகள் குறித்தும் பேசுகிறது. ஜனவரி 2010 இதழில் அரவிந்தன் ‘காந்தி ஏன் உப்பை எடுத்தார்?’ எனும் கட்டுரையில் உப்பின் குறியீட்டு முக்கியத்துவத்தை விளக்குகிறார். ஆகஸ்ட் 2017 இதழில் ‘ காந்தி கண்ட பாரதி’ கட்டுரையில் ய மணிகண்டன், பாரதி நடத்திய பாலபாரதம் இதழ் பற்றிய அறிவிப்பு காந்தியின் தென்னாபிரிக்க பத்திரிக்கையான இந்தியன் ஒபினியனில் வெளிவந்துள்ளது என்பதை எடுத்து காட்டுகிறார். தற்போது சித்ரா பாலசுப்பிரமணியம் மதிப்புரைகள், காந்தி தொடர்பான கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார்.
காந்தியை பற்றிய கட்டுரைகளைத் தவிர்த்து ராமச்சந்திர குஹா, அசிஷ் நந்தி, கணேஷ் தேவி, ஜி.எஸ். லட்சுமண அய்யர், நிர்மல் வெர்மா போன்ற முக்கியமான காந்திய ஆளுமைகளுடனான நேர்காணல்கள் வெளியாகியுள்ளன. சுந்தர்லால் பகுகுணா, ஈரோடு ஜீவானந்தம், லட்சுமண அய்யர், லாரி பேக்கர், தரம்பால், க.மு நடராஜன், சசி பெருமாள் போன்ற காந்திய ஆளுமைகளுக்கு விரிவான அஞ்சலி குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது தமிழ் அறிவு சூழலில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் காலச்சுவடுக்கு முக்கிய பங்கு உள்ளது. காந்தியும் அம்பேத்கரும் வேறெந்த தலைவர்களை காட்டிலும் இன்று உயிர்ப்புடன் இருக்க முக்கிய காரணம் அவர்கள் இன்றும் நம்மோடு விவாதித்தபடி உள்ளார்கள் என்பதே. வாசிக்கப்படும் வரை, விவாதிக்கப்படும் வரை வரலாற்று ஆளுமைகள் ரத்தமும் சதையுமாக நம்முடன் இருப்பதாகத்தான் பொருள். நமது அன்றாடங்களை தீர்மானிப்பவர்களாக வாழ்க்கை முறைகளை வழிநடத்துபவர்களாக வரலாற்று ஆளுமைகள் உருமாறுவதற்கு அறிவுலகம் முனைப்புடன் செயலாற்ற வேண்டும். அவ்வகையில் காந்தியை உயிர்ப்புடன் வைத்திருக்க காலச்சுவடு மிக முக்கியமான பங்களிப்பை ஆற்றிவருகிறது.
கட்டுரை மிகச் சிறப்பு. ஆனால் பிழைகள் மிகுதி.
ReplyDelete