குணா கந்தசாமி எனக்கு பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். புதிய நாவலான “டாங்கோவை” அவரது இரு இலக்கிய நண்பர்களான கே. என். செந்திலும் பாலாவும் வரைவு வடிவத்தில் வாசித்தார்கள் என்பது அவரை புரிந்து கொள்ள உதவும். பாலாவும் செந்திலும் ஒரு கிடைமட்ட கோட்டின் இரு எல்லைகள் என்று வைத்துக்கொண்டால் குணா இவர்கள் இருவருக்குமான நடுப்புள்ளி. அவரால் சுக்கிலம் போன்ற முற்றிலும் நவீன வாழ்வின் சிடுக்கை பேசும் கதையை எழுத முடியும் திரிவேணி போன்ற மண்ணில் காலூன்றிய கதையையும் எழுத முடியும். இந்த வீச்சு அவரை எனக்கு முக்கியமான எழுத்தாளராக ஆக்குகிறது.
குணாவிடம் சம்பத் கோபிகிருஷ்ணன் போன்ற இருத்தலியல் எழுத்தாளர்களின் சாயல் உண்டு. வெறுமையும் தனிமையும் அவர்களுக்குள் உள்ள ஒற்றுமை. ஆனால் அக்காலகட்டத்து எழுத்துக்களில் இருந்து குணா வேறுபடும் புள்ளியை தொட்டு காட்ட வேண்டும். முந்தைய காலகட்டத்து வெறுமை பொருளியல் பற்றாக்குறையுடன் நெருங்கிய தொடர்புடையது. சுராவின் உருவகத்தை கடன்வாங்குவதென்றால் எதனாலும் நிறையாத ஒரு பள்ளம். “டாங்கோவின்” ஆனந்துக்கு என்ன தான் பிரச்சினை? அவனுக்கு என்ன தான் வேண்டும்? இன்று அவன் நல்ல வேலையில் இருக்கிறான். அவனால் எதையும் துய்க்க முடியும். பற்றாகுறை மட்டுமே நிலவிய கடந்தகாலத்தை கடந்துவிட்டான். ஆனாலும் ஓரு பெரும் வெறுமை அவனை சூழ்கிறது. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள அவனுக்கு முடியவில்லை. சுயேச்சையை கொண்டு அவன் செல்வது தன்னழிவின் பாதையை. அவனது வெறுமையும் தனிமையும் நுகர்வால் நிறையாதது. அவனுக்கு பெண் உடல் தான் வேண்டுமா? அதை அடைகிறான். ஆனால் அவனுக்கு அது நிறைவை தரவில்லை. அவன் வளரும் போது உடனிருக்காத தந்தையையும் தாயையும் தேடுகிறான். ஒரு குடும்பத்தை ஈட்டிக்கொள்ள முனைகிறான். பள்ளி கால தமிழ் ஆசிரியர் ராகவன், கல்லூரி ஆசிரியர், ஸ்பானிய பத்தி எழுத்தாளர் மத்தியாஸ், அடுக்கக உரிமையாளர் கிரிஸ்டோப் என வயதில் மூத்த அத்தனை பேரிடமும் தந்தையை கண்டடைய முற்படுகிறான். இந்திய முகமே தென்படாத சிறிய கடற்கரை நகரமான உருகுவே நாட்டின் மாண்டி வீடியோவில் அவன் காணும் காந்தி சிலை கூட அவனுக்கு தந்தையின் வடிவமாக தான் இருக்கிறார். அவர் முன்னால் லாகிரி பயன்படுத்தியதற்காக கூசுவான். அவரது இருப்பு அவனுக்கு ஆறுதலாக இருக்கிறது. காந்தி அவனுக்கு வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ள தூண்டுகிறார். தன்னழிவின் பாதையிலிருந்து மீண்டு வர அவரது இருப்பும் உதவுகிறது.
நாவல் ஒரு தளத்தில் உறவின் கூடலையும் பிரிவையும் பேசும் காதல் கதை. இன்னொரு தளத்தில் குடும்ப அமைப்பை பற்றிய உரையாடல் நிகழ்கிறது. அதுவே இந்த நாவலின் சமூக தளம். இதற்கடுத்து மூன்றாவதாக ஒரு ஆன்மிக அடுக்கும் உள்ளது. இருத்தல் குறித்த விசாரணை ஒரு சரடாக நாவல் முழுக்க வருகிறது. இருத்தலியல் பிரதிகள் போல சூனியத்திற்குள் சென்று முட்டிக்கொள்ளாமல் மேலெழுகிறது. ஆன்மிகம் என்பது தன்னை கண்டடைதல் தான். தன்னை கண்டடைய தனக்குள்ளிருக்கும் இருளை எதிர்கொண்டு கடக்க வேண்டும்.
ஆனந்த் வாழ்வில் சந்தியா வருகிறாள். திருமண முறிவிலிருந்து மீண்டவள் இன்னொரு உறவுக்குள் வர தயாராக இல்லை. எந்த உறுதியும் கோராத, எந்த பிணைப்பையும் ஏற்காத உறவே அவளுடைய தேர்வு. குடும்பம் எனும் அமைப்பினால் பாதிக்கப்பட்டவள். சந்தியாவால் தன் வாழ்வு பொருளுடையதாக ஆவதை உணர்கிறான். அவளது அண்மையில் தன்னை ஒழுங்குக்குள் கொணர்ந்து பேணி கொள்கிறான். அவனை விட்டு சென்ற பிறகு திரும்பவும் இருளில் மூழ்குகிறான். இயல்பான நட்புடன் பழகி வந்த வேசையின் மீது திடிரென்று நாட்டம் கொள்கிறான். அவனது பள்ளத்தை உடலால் நிறைக்க முயல்கிறான். உடல் நலம் குன்றிய ஓரிரவில் அவன் வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்து செல்லும் இடம் நாவலின் மிக முக்கியமான தருணம். அவள் இரு குழந்தைகளுக்கு தாய் என்பதை அறிந்து கொள்கிறான். அதற்கு பின் அவளை நாடவில்லை. பல வகைகளில் பொருள் படதக்கது. அதுவரை பெண்ணாக தெரிந்தவள் தாயாக தன்னை வெளிப்படுத்துகிறாள். பிரபஞ்சத்தை தனது தோழமையாக வழிகாட்டியாக உணரும் புள்ளியில் நாவல் நிறைவடைகிறது.
“டாங்கோ” இருவர் ஒன்றாகும் ஒருவித நடனம். மரபான குடும்ப அமைப்புக்கு மாற்றான புதிய அமைப்பிற்கான உருவகமாக வாசிக்க முடியும். ஆன்மிக தளத்தில் இருமையொழிந்த நடனம் என்பதையும் குறிக்கிறது. நாவலின் முற்பகுதிகளில் வரும் கிறிஸ்டோப் மத்தியாஸ் ராகவன் எம்கே போன்ற பாத்திரங்கள் வழியாக குடும்ப அமைப்பின் மாறிவரும் இயங்குதளம் குறித்த ஒரு உரையாடல் நடக்கிறது. என்னளவில் அந்த பாத்திரங்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இந்த உரையாடலை முன்னெடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறார்கள். கிறிஸ்டோப் குடும்பம் என்பது பாலியல் அமைப்பு அல்ல சமூக அமைப்பு என சொல்கிறார். பாலியல் சுதந்திரத்தை அனுமதிக்கும் சமூக அமைப்பாக குடும்பம் உருமாற முடியுமா என்றொரு கேள்வி எழுகிறது. ஏறத்தாழ ஆனந்தை போலவே தனியனாக இருப்பவர் மத்தியாஸ். இறந்து போன சகோதரியின் மகளை பேணும் பொறுப்பு அவரிடம் வந்ததும் பொறுப்புடன் நடந்து கொள்ள தொடங்குகிறார். கிறிஸ்டோபின் கூற்றை வலுப்படுத்தும் சித்திரமாக இதை காண முடியும்.
நாவலில் நிலம் முக்கிய பங்காற்றுகிறது. இரவு விளக்கில் மின்னும் நீர்பரப்பின் சித்திரம் அபாரமாக உள்ளது. றாம்பாலா காந்தியை கண்ணில் காண முடிகிறது. நாவலுக்குள் காந்தியின் இருப்பு ஆனந்துக்கு வாழ்வை பொருளுடையதாக ஆக்கிக்கொள்ள உந்துகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற சுயகூராய்வு நாவல் என்பதே இந்த நாவலின் வடிவம். அதுவே இதன் எல்லையும் கூட. அஜிதனின் ‘மைத்ரியுடன்’ பலவகையிலும் ஒப்பிடலாம். இரண்டு நாவல்களும் அபாரமான நிலைக்காட்சி விவரணை கொண்டவை. ஒரு பெண் வழியாக தன்னை கண்டடைவது என்பதை முன்வைப்பவை. மைத்ரி கொந்தளிப்பான மொழியில் உறவையும் பிரிவையும் சொல்கிறது என்றால் ‘டாங்கோ’ ஆர்பாட்டமற்ற அடங்கிய மொழியில் விலகிய தொனியில் அணுகுகிறது. வலுவான மைய முடிச்சு அற்ற தன்னை நோக்கும் நாவல்கள் தான் இரண்டுமே. வேறுபடும் புள்ளிகளும் உண்டு. சமகாலத்தின் வெறுமையை இருவிதமாக அணுகியுள்ளார்கள் என்று சொல்ல முடியும். விமர்சனம் என்பது பிரதியில் எது இல்லையோ அதை சுட்டுவது அல்ல. அதே போல் நான் எழுதி இருந்தால் என்ன எழுதி இருப்பேன் என்று சொல்வதும் அல்ல. அப்படி சொல்லும்போது அது என்னுடைய பிரதியாகும். அவனது மீட்சி வலுவாக சித்தரிக்கப்படவில்லை என்பதை வேண்டுமானால் ஒரு விமர்சனமாக வைக்க முடியும். நல்ல நாவல் அளித்த குணாவிற்கு வாழ்த்துகள்.
No comments:
Post a Comment